Language Selection

புதிய ஜனநாயகம் 2006

10_2006.jpg

மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தில் கடன்சுமை தாளாமல் பருத்தி விவசாயிகள் அன்றாடம் தற்கொலை செய்து கொண்டு வரும் கொடுமை தொடரும் அதேவேளையில், அண்மைக்காலமாக ஆந்திராவிலும் இதேபோல கடன்சுமை தாளாமல் விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு

 வருகிறார்கள். கடந்த 3 மாதங்களில் மட்டும் குண்டூர், பிரகாசம், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் சுமையாலும் அநியாய வட்டிக் கொடுமையாலும் மாண்டு போயுள்ளார்கள். இது இன்னும் பல மாவட்டங்களுக்குப் பரவுமோ என்ற மரணபயம் ஆந்திரத்தைப் பிடித்தாட்டுகிறது.

 

தாராளமயத்தால் வாழ்விழந்த விதர்பா விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி வட்டிக் கொடுமை தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆந்திர விவசாயிகளோ, சுயஉதவிக் குழுக்கள் மூலம் நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் வாங்கி வட்டிக் கொடுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். விதர்பாவில் கந்து வட்டிக்காரர்களின் கொள்ளை. ஆந்திராவில் தன்னார்வத் "தொண்டு' நிறுவனங்களின் கொள்ளை. பலியாவதோ ஏழைநடுத்தர விவசாயிகள்!

 

இந்தியாவிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண்நிதி நிறுவனங்களில் ஆகப் பெரும்பாலானவை தன்னார்வக் குழுக்களால் (NGOs) நடத்தப்படுகின்றன. பாதுகாப்புத் தொகையாக கணிசமான சேமிப்பைக் கொண்டுள்ள சுயஉதவிக் குழுக்களைக் கண்டறிந்து, அக்குழுக்களுக்கு வங்கிகளிலிருந்து இத்தன்னார்வக் குழுக்கள் கடன் வாங்கித் தருகின்றன. வங்கிகளுக்கும் சுயஉதவிக் குழுக்களுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் விவகாரங்களை ஒருங்கிணைத்து முறைப்படுத்தும் கங்காணி வேலையையும் இத்தன்னார்வக் குழுக்கள் செய்கின்றன.

 

சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கிடைக்கும் கடனுதவியை நுண்கடன் என்றழைக்கின்றனர். இக்கடனை வைத்து ஊறுகாய், அப்பளம், மசாலா பொடி, சோப்பு, கைவினைப் பொருட்கள், வீட்டு உள் அலங்கார பொருட்கள், ஊதுபத்தி, கவரிங் நகைகள் முதலான தொழில்களில் சுய உதவிக் குழுக்கள் முதலீடு செய்கின்றன. இத்தகைய தொழில்களே நுண்தொழில்கள் எனப்படுகிறது. இதுதவிர மலர்ப்பண்ணை, மூலிகைப் பண்ணை, கால்நடை வளர்ப்பு முதலான சற்று விரிவான அளவிலும் இக்கடன்கள் சுய உதவிக் குழுக்களால் முதலீடு செய்யப்படுகின்றன.

 

""போண்டியாகிப் போன விவசாயிகள், சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள ஏழைஎளிய மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் இத்தகைய நுண்கடன் நுண்தொழில் மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும்; சொந்தக் காலில் நிற்க முடியும். வறுமையை விரட்ட முடியும்; எழுத்தறிவின்மை, பெண்ணடிமை, சாதிய ஒடுக்குமுறை முதலான சமூக பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும். தன்னம்பிக்கை, தொழில் முனைப்பு, கூட்டுறவு, நிர்வாகத் திறன் முதலானவை ஒடுக்கப்பட்ட மக்களிடம் வளரும்'' என்றெல்லாம் சர்வரோக நிவாரணியாக இந்த நுண்கடன் நுண்தொழிலை ஆட்சியாளர்களும் தன்னார்வக் குழுக்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தன. ஐ.நா. மன்றத்தின் ஆலோசனைப்படி 2005ஆம் ஆண்டை நுண்கடன் ஆண்டாக அறிவித்து நாடெங்கும் பல கருத்தரங்குகளும் விழாக்களும் கொண்டாடப்பட்டன. கடந்த 2005ஆம் ஆண்டில் நுண்கடன் திட்டத்துக்காக நிதியமைச்சரால் வளர்ச்சி நிதியும் சிறப்புக் கமிட்டிகளும் அமைக்கப்பட்டன.

 

அத்தனையும் மிகப் பெரிய மோசடி, ஏழை விவசாயிகளைக் கொள்ளையிடுவதற்கான இன்னுமொரு ஏகாதிபத்திய சதி என்பதை ஆந்திர விவசாயிகளின் சாவுகள் மீண்டும் நிரூபித்துக் காட்டி விட்டன. சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினராகச் சேர்ந்து நுண்கடன் பெற்ற விவசாயிகள், அநியாய வட்டியால் அவதிப்பட்டு, அவமானப்பட்டு, விரக்தியுற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். நுண்கடன் மூலம் வறுமையிலிருந்து விடுபடலாம் என்ற தன்னார்வக் குழுக்களின் வஞ்சக வார்த்தைகளை நம்பி ஏமாந்த விவசாயிகள், மேலும் வறுமைக்கும் கடன்சுமைக்கும் தள்ளப்பட்டு வாழ்விழந்து நிற்கிறார்கள்.

 

தன்னார்வக் குழுக்களின் நுண்நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் 8.5 முதல் 15 சதவீத வட்டிக்குக் கடன் கொடுக்கின்றன. நுண்நிதி நிறுவனங்களோ இக்கடனை வாங்கி 20 முதல் 36 சதவீத வட்டிக்கு சுயஉதவிக் குழுக்களுக்குக் கொடுக்கின்றன. சுயஉதவிக் குழுக்களோ, மேலும் கணிசமான வட்டி வைத்து தமது குழு உறுப்பினர்களுக்குக் கடனாகக் கொடுக்கின்றன. வங்கிகளிடமிருந்து புதிய கடன் வாங்க வேண்டுமானால், வாங்கிய கடனை இச்சுய உதவிக் குழுக்கள் முறையாக வட்டியுடன் திருப்பி அடைக்க வேண்டும். இதனால் கடன் வாங்கிய உறுப்பினர்களைக் கண்காணிப்பதும், கடன் தவணையை வட்டியுடன் முறையாகச் செலுத்த நிர்பந்திப்பதுமாக சுயஉதவிக் குழுக்கள் மாறி விட்டன. கடனை அடைக்கத் தவறிய உறுப்பினர்களின் வீட்டிலுள்ள பொருட்களை ஜப்தி செய்யும் கொள்ளையர்களாக தன்னார்வக் குழுக்கள் வளர்ந்து விட்டன.

 

இத்தன்னார்வக் குழுக்கள், சுயஉதவிக் குழுக்கள் மூலம் கறாராக வட்டியை வசூலித்து முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதால், வங்கிகளுக்கு உத்தரவாதமான இலாபம் கிடைக்கிறது. வங்கிகள் தரும் இதர கிராமப்புற கடன்களைவிட, நுண்கடன் மூலம் கூடுதலாக இலாபமும் முறையாக கடன் திருப்பிச் செலுத்தப்படுவதும் நடப்பதால், அரசு வங்கிகள் மட்டுமின்றி பன்னாட்டு ஏகபோக வங்கிகளும் நிதிநிறுவனங்களும் கிராமப்புற ஏழைகளைக் கொள்ளையிட களத்தில் குதித்துள்ளன. 1992ல் ஊரக மற்றும் விவசாய வளர்ச்சி வங்கி ஆதரவுடன் 225 சுய உதவிக் குழுக்களுடன் தொடங்கப்பட்ட நுண்கடன் நுண்தொழில் திட்டம் இன்று பூதாகரமாக விரிவடைந்துள்ளது. ஏறத்தாழ ரூ. 50,000 கோடி அளவுக்குப் புரளும் இந்திய நுண்கடன் நுண்தொழில் எனப்படும் கந்துவட்டி தொழிலில், நூற்றுக்கணக்கான வங்கிகளும் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.

உள்ளூர் அளவில் ஆதிக்கம் செலுத்தும் கந்துவட்டிக்காரர்கள், நிலப்பிரபுக்களை போலவே, அதே தன்மையுடன் புதிய வடிவில் கிராமப்புற ஏழை மக்களைச் சுரண்டும் புதிய கொள்ளைக் கூட்டமாக வங்கிகளும், நுண்நிதி நிறுவனங்களும் தன்னார்வக் குழுக்களும் புதிய பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளன. 5 வட்டிக்கும் 10 வட்டிக்கும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன் வாங்கி, வட்டிக்கு வட்டி பெருகி அவமானத்துக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் ஆளாகி அற்ப உடமைகளும் ஜப்தி செய்யப்பட்டு வாழ வழியின்றிப் போகும் விவசாயிகள், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.


தன்னார்வக் குழுக்களை நம்பி மோசம் போன ஆந்திர விவசாயிகள், அடுத்தடுத்து நடக்கும் தற்கொலைச் சாவுகளுக்குப் பிறகு மெதுவாக விழிப்புற்று, மாண்டுபோன விவசாயிகளின் சடலங்களோடு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் கோபத்தையும் போராட்டங்களையும் கண்டு பீதியடைந்துள்ள ஆந்திர அரசு, இரு பெரும் நுண்கடன் நிறுவனங்களின் 50 கிளைகளை உடனடியாக மூடுமாறும், கடன் "சேவை'யை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ""நுண்கடன் நிறுவனங்கள் கந்துவட்டிக்காரர்களைவிட மிக மோசமாக நடந்து கொள்கின்றன. 5060 சதவீத வட்டி வாங்கி ஏழைகளைக் கொள்ளையடிக்கின்றன'' என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைப் பற்றி விசாரிக்கத் தனிச்சிறப்பான விசாரணைக் கமிஷனையும் அவர் நியமித்துள்ளார்.

 

ஆனால், ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்டு சர்வகட்சி ஆட்சியாளர்களின் ஆதரவோடு நடைமுறைப்படுத்தப்படுவதுதான் நுண்கடன் திட்டம். அதற்காகவே ஆந்திராவில் பல லட்சக்கணக்கான சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அரசியல் செல்வாக்கைக் கொண்டு இக்குழுக்களுக்கு நுண்கடன் வழங்கி, அவற்றை எல்லா கட்சிகளும் ஓட்டு வங்கிகளாக மாற்றிக் கொண்டு ஆதாயமடைந்தன. நுண்கடன் நிறுவனங்களின் அநியாய வட்டிக் கொள்ளையையும் சட்டவிரோத கொடுஞ்செயல்களையும் வாய்மூடி அங்கீகரித்து வந்தன. இப்போது நிலைமை விபரீதமானதும், விவசாயிகளின் காவலனாகக் காட்டிக் கொண்டு ஒப்பாரி வைக்கின்றன. இவ்வளவு சாவுகளுக்குப் பின்னரும் நுண்நிதி நிறுவனங்கள் எவ்வளவு வட்டிக்கு கடன் தரவேண்டும் என்பதற்கான வரைமுறையைக் கூட ஆட்சியாளர்கள் அறிவிக்கவில்லை. விவசாயிகளைக் கொள்ளையடித்து தற்கொலைக்குத் தள்ளிய கொலைகார தன்னார்வக் குழுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

 

ஆந்திராவுக்கு அடுத்தபடியாக, அதிகஅளவில் சுயஉதவிக் குழுக்களைக் கொண்டுள்ள மாநிலம் தமிழகம்தான். ஆந்திராவைத் தொடர்ந்து தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நடக்கும் முன்னே, வஞ்சக வலை விரிக்கும் தன்னார்வக் குழுக்களையும் நுண்கடன் நுண்தொழில் என்ற பெயரில் தொடரும் கந்துவட்டிக் கொள்ளையையும் உடனடியாக உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் இன்னும் விரைவாகச் செயல்பட்டு, தமிழகம் இன்னுமொரு மயானபூமியாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

 

மு பாலன்