Language Selection

பி.இரயாகரன் -2025
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாரெல்லாம் தனது உழைப்பிலான பணத்தைக் கொண்டும், தனது நேரத்தையும் கொண்டு மக்களுக்கான சமூக பணியில் ஈடுபடவில்லையோ, அவர்கள் உதவி செய்வதாகக் கூறுவதும் மோசடியானது. பணம் கொடுப்பவனையும் - பணம் வாங்குபவனையும் ஏமாற்றுவதற்கான பொது உள்ளடக்கமாகும். இந்த உதவி இடைத்தரகர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்கும் முன்னுதாரணத்தைக் காணவும் - காட்டவும் முடியாதவர்கள், மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம்.

தங்கள் சமூகப் பொது நடத்தைகள் மூலம் மக்களுடன் வாழாதவர்களின் உதவிக் கோரிக்கை என்பது, வலிந்து உதவியைக் கோருவதற்கான புறச்சூழலை உருவாக்கி, அதைக் காட்சியாக்குவதே.

ஒடுக்கப்பட்ட மக்களை மய்யப்படுத்தி மக்களுக்கான சமூகப் பணியை முன்னெடுக்காத ஒருவன், மக்கள் பற்றியும் - உதவி பற்றியும் பேசுகின்றான் என்றால், அவன் மோசடிக்காரனே. இப்படி உதவி கோருகின்றவர்கள், தங்கள் சொந்த வாழ்வுக்காக உழைத்து வாழ தயாரற்ற தற்குறிகள்.

தங்கள் சுய திறமையை, சமூக அறிவை, ஒடுக்கப்பட்ட சமூக அறத்தை சமூக அக்கறையுடன் முன்வைத்து மக்களுடன் உரையாடாத யூ-ரியூப் சமூக வலைத்தளத்தின் பொது நோக்கம், எந்த வகையிலான குறுக்கு வழியிலும் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது தான். பண அதிகாரம் மூலம் பாலியல் துஸ்பிரயோகம் செய்வது, தன்னை கதாநாயகனாகக் காட்டி சமூகத்தை சுரண்டுவது, இது தான் இதன் சாரமும், உண்மையுமாகும்.

உதவிகள் பெயரில் யூ-ரியூப்கள்        

கட்டாக்காலித் தெரு மாடுகள் போல், தெருநாய்கள் போல்.. உதவியின் பெயரில் பற்பல வேசங்களும், வேடங்களும். தங்கள் சொந்த வேசங்கள் வெளுக்காமல் இருக்கவும், காட்சிகள்.

புலம்பெயர் தமிழனின் பணத்தைப் பெறுவதற்கேற்ற கதைகள், கண்ணீர்க் காவியங்கள். இப்படி யூ-ரியூப் சமூக வலைத்தளங்களில் கதைகளையும், கண்ணீர்களையும் கொண்ட மனித அவலங்களை காட்சிப்படுத்தியே பணம் திரட்டப்படுகின்றது. இதை அன்றாடம் காட்சியாக காட்டினால் தான், யூ-ரியூப் மூலம் அதிக பார்வையாளரைக் கவர்ந்து பண வருவாய் தொடங்கி அனைத்துவிதமான மோசடிகளையும் செய்யமுடியும். இது தான் யூ-ரியூப்களின் அறம். இதற்காக எதையும் செய்வார்கள்.      

முடிச்சுமாற்றித்தனம் தொடங்கி வன்முறை வரை கையாளுவார்கள். தனது வியாபாரத்தை விரிவாக்க போட்டியாளரை அரங்கில் இருந்து அகற்றுவதற்கு அனைத்தையும் செய்வார்கள். போட்டியாளர் சட்டத்தின் பிடியில் சிக்கிவிடும் போது, அவரின் யூ-ரியூப் பார்வையாளர்களை தம் பக்கம் கவர்ந்திழுக்க, கற்பனையில் அவதூறுகiP அள்ளி வீசிவிடுகின்றனர். மறுதரப்பு அவரின் மக்கள் சேவை பற்றி மறுவகுப்பெடுக்கின்றனர்.

எந்த அவதூறுகளுக்கும், செய்திகளுக்கும் சாட்சியங்கள் இருப்பதில்லை. பெண்கள் என்றால் பாலியல் ரீதியாக இலக்கு வைக்கின்றனர். படுக்கை அறைக்குள் எட்டி பார்த்தும், கமரா பூட்டிய காட்சிகளுடன் கற்பனைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். இங்கு பணமே ஒரே இலக்கும் - குறிக்கோளுமாகும்.   

உதவி என்ற பெயரில், ஏழை எளிய மக்களின் குடிசையைக் கண்டால் கட்டாக்காலி மாடுகள் போல் புகுந்து விடுகின்றனர். ஏழை எளிய குழந்தைகளை கண்டால் கமராவுடன் சூழ்ந்து கொள்கின்றனர். 

யூ-ரியூப் பார்வையாளர்கள் மூலம் பணத்தைப் பெறுவதுடன் இடைத் தரகராக மாறி ஏழை எளிய மக்களின் மீதான அதிகாரத்தை, துஸ்பிரயோகத்தையும் செய்வதுடன், நிதி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

ஏழை எளிய மக்களின் வாழ்வும் - காட்சியும், சமூக அக்கறையுடன் செயற்படாத யூ-ரியூப்பருக்கான பொது மூலதனம். இதை அறியாது உதவியின் பெயரில் பொறுக்கிகளுக்கு உதவும் அப்பாவிகள்.

துன்ப துயரங்களையும், மனித அவலங்களையும் சமூகத்தில் இல்லாதாக்க விரும்பும் மக்களையே குறிவைத்து, ஏமாற்றிப் பிழைக்கும் யூ-ரியூப் பொறுக்கித்தனங்களை இனம் காணுங்கள், விலகியிருங்கள்.  

மக்களுக்கு உதவி தேவைப்படுகின்றதா? அதை எப்படி இனம் காண்பது? எப்படி உதவுவது? அடுத்த கட்டுரையில்.   

23.03.2025