Language Selection

பி.இரயாகரன் -2025
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1970 களில் தேர்தலில் தங்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்களைத் துரோகியென்று கூறி சுட்டுக் கொன்றது போன்று, 1980 களில் சமூக விரோத ஒழிப்பென்ற பெயரில் இயக்கங்களால் தூண்களில் கட்டிச்  சுட்டுக்கொன்றது போன்று, இன்று ஊழல் ஒழிப்பின் பெயரில் புலிப் பாசிட்டுகள் களமிறங்கியிருக்கின்றனர்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமென்று சொல்லி, தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணமான புலிப் பாசிசத்தை, இந்த ஊழல் ஒழிப்புவாதிகள் கொண்டாடுகின்றனர். பெண்களின் ஒழுக்கம் குறித்தும் - நடத்தை குறித்தும் தங்கள் ஆணாதிக்கப் பாசிச முகத்தை மூடிமறைத்துக் கொண்டு, பூதக் கண்ணாடியோடு அலைகின்றனர். இந்தப் புலிப் பாசிசக் கும்பலின் எடுபிடியாக டொக்டர் அருச்சுனா களமிறங்கியிருக்கின்றார். அறிவு நாணயமற்ற – பகுத்தறிவற்ற புலிப் பாசிச நிழலில் குளிர்காயும் இந்த ஊழல் ஒழிப்பு வேசமானது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

ஊழல் என்பது நிதி – அதிகார மோசடியிலானதுமட்டுமல்ல. அரசியல் மோசடியிலுமானது. சமூக ஒடுக்குமுறைகளாலானது. ஆணாதிக்கத்தை, சாதியத்தை, பிரதேசவாதத்தை, இனவாதத்தை, மதவாதத்தை, நிறவாதத்தை.. தூக்கிப்பிடிப்பதும், அவற்றை மூடிமறைப்பதுமான ஊழல் ஒழிப்பு என்பது, போலியானது. தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்ற சொந்த வக்கிரங்களைப் பாதுகாக்க முனையும் அரசியலுக்குப் போட்ட முகமூடியே  இவர்களின் ஊழல் ஒழிப்பு.           

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான எந்த அரசியலுமற்ற அருச்சுனா, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கிய ஒடுக்கும் தமிழரின் புலிப் பாசிச அரசியலுடன் பாராளுமன்றத்தில் கொக்கரிக்கத் தொடங்கியுள்ளார். தமிழினவாதத்தை காக்கத் தொடங்கியுள்ளார். கடந்த தமிழினவாத பாசிச வரலாற்றை திரித்தும் புரட்டியும், பொய்களைக் கொண்டு பாராளுமன்றத்திலும், தனது அன்றாட யூரியூப்பிலும் உளறத் தொடஙகியுள்ளார்.   

முஸ்லீம் மக்களின் உடைமைகளைப் பறித்துவிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்திய தமிழினவெறிப் பாசிசக் கும்பலுக்கு வக்காலத்து வாங்குகின்றார். காத்தான்குடி பள்ளிவாசல் தொடங்கி பல முஸ்லிம் கிராமங்களில் புகுந்து சுட்டுக் கொன்ற பாசிசக் கும்பலின் மனித விரோத நடத்தைக்கு - விடுதலைப் போராட்டம் என்று கம்பளம் விரிக்கின்றார். 1985 அனுராதபுர நகரத்தில் 150க்கு மேற்பட்ட மக்களை வேட்டையாடிய புலிப் பாசிச வெறியாட்டம் தொடங்கி சிங்கள மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்த புலிப்பாசிசச் செயலை தமிழ் மக்களின் பழிவாங்கும் தேசிய உணர்வு என்று கூறி கும்மியடிக்கின்றார். மனிதவிரோத பாசிச கூச்சல் மூலம் உசுப்பேற்றுகின்றார்.     
      
ஊழல் ஒழிப்புக்கு எதிராக மககளை அணிதிரட்டாத இந்த பாசிசக் கூட்டுக் களவாணிக் கும்பல், மக்களைப் பார்வையாளராக - விசிலடிக்கும் மந்தைக் கூட்டமாக, தம் பின் தமிழ் அடிமைகளாக வழிநடத்த முனைகின்றனர்.

பாலியல் ஒழுக்கம் குறித்து ஊழல் ஒழிப்பு ஆணாதிக்கப் புலிப் பன்னாடைகளின் கண்ணோட்டம் 

முகமூடிபோட்ட ஆணாதிக்க வன்னி ஊழல் ஒழிப்புக் கும்பல் முன்வைக்கும் தமிழ் கலாச்சாரமானது, பெண்களைக் கேவலமாக்கும் ஆணாதிக்க அகங்காரக் கூச்சல். இதைத் தாண்டி இந்தக் கலாச்சார ஊழல் ஒழிப்புக் காவலரிடம் எந்த அளவுகோலும் கிடையாது. 

பெண்ணின் பாலியல் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த ஆணாதிக்க ஊழல் ஒழிப்புக் கும்பல், பெண்ணுடனான தங்கள் ஆணாதிக்க நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை. 

ஆண்களை ஒழுக்க சீலராக்கி பாதுகாக்கின்ற இந்த ஆணாதிக்க புலிப் பாசிச ஊழல் ஒழிப்பு வன்னிக் கும்பல், தங்களை மூடிமறைக்கும் ஊழல் ஒழிப்பு முகமூடிகளுக்குள் ஒழித்துக்கொண்டு நடமாடுகின்றனர். இதற்கு அருச்சுனா தனது பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி, தனதும் - முகமூடி போட்ட கூட்டுக் களவாணிகளினதும் கூட்டு ஆணாதிக்க வக்கிரத்தைக் கொட்டித் தீர்க்கின்றார்.

பெண்களின் தனிப்பட்ட படங்களை – நடத்தையை போட்டு ஊழல் ஒழிப்பு என்று கூறுகின்ற சட்டவிரோத ஆணாதிக்க நடத்தையே ஊழல் தான். புருசனுடன் வெளியில் வா என்பது, ஆணாதிக்க அதிகாரம். பெண்ணின் சுதந்திரத்தை மறுக்கும் ஆணாதிக்க அதிகாரத்தின் வக்கிரம். இவை ஊடக விபச்சாரம். இந்த ஊடக வக்கிரத்தை பாராளுமன்றத்தில் பேசாத ஊழல் ஒழிப்பு கூட்டுக் களவாணிகளின் - ஒழுக்கம் பற்றிய ஆணாதிக்க விபச்சாரம்.  

விபச்சாரம் தொடங்கி பாலியல் ஒழுக்கக் கேடுகள் வரை, ஆணாதிக்க சமூகத்தின் பொது விளைவு. தனியுடமைச் சமூகத்தில் பெண் போகப் பொருளாக முன்னிறுத்தப்படுவதின் பொது விளைவு. எந்தப் பெண்ணும் விபச்சாரத்தை விரும்பிச் செய்வதில்லை. விபச்சாரம் என்பது ஆணாதிக்க சமூகத்தின் பொது விளைவு. ஆணாதிக்க விபச்சாரத்தை மூடிமறைத்து, ஆணாதிக்க சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்காத ஒழுக்கவாதிகளின் ஆணாதிக்க ஒழுக்கக்கேடுகள் தான் விபச்சாரம். 

யுத்தத்துக்குப் பிந்தைய சமூகத்தில் விபச்சாரமானது, தவறாக வழிநடத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் பொது சமூக விளைவு.

வாழ்க்கைத் துணையையிழந்த பெண்கள், வாழ்க்கைத் துணைகளால் கைவிடப்பட்ட பெண்கள், யுத்தகாலத்தில் சாதி கடந்த திருமணங்கள் சாதியைக் காட்டி கைவிடப்பட்ட பெண்கள், புலிகளின் ஆள்பிடிப்புக்கு எதிரான இளம் வயது திருமணங்களால் சிதைந்த பெண்கள், புலிப் பாசிசத்தால் சமூக வாழ்வியல் தன்மையை இழந்த லும்பன்தனத்தால் வாழ்விழந்த பெண்கள், சமூகத் தன்மையற்ற ஆண்களின் போதைப் பழக்கத்தால் பெண்களின் வாழ்க்கை சிதைவுகளில் இருந்து மீள … எதை பெண்களுக்கு சமூகம் வழி காட்டியிருக்கின்றது? ஊழல் ஒழிப்பின் பெயரில் தங்கள் ஆணாதிக்க உறுப்புகளை தூக்கிகொண்டு, பெண்களின் ஒழுக்கம் குறித்து பூதக்கண்ணாடியுடன் அலையும் - ஆணாதிக்க பாலியல் ஆபாசங்கள் நிறைந்த பின்னோட்டங்களுடன் ஊழல் ஒழிப்பு அணி அணிதிரண்டிருக்கின்றது.

பெண்கள் பொருளாதாரரீதியாக சமூகத்தை எதிர்கொள்ள முடியாத துயரங்கள், சுய பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத ஆணாதிக்க ஒழுக்கவாதிகளின் கலாச்சார அவதூறுகள், பணம், அதிகாரம்,.. கொண்ட கும்பலின் பாலியல் அத்துமீறல்கள், மதவாதிகள், அரசியல்வாதிகள், புலம்பெயர் உதவி செய்பவர்கள், புலம்பெயர் உதவியைச் செய்யும் இடைத்தரகர்;கள் என்ற பலவிதமான கும்பல்கள் …  பெண்களை தங்கள் ஆணாதிக்க வக்கிரத்துக்குப் பயன்படுத்தும் கருவியாக தொடர்ந்து தக்கவைத்துள்ளனர். 

சமூகத்தில் சமூகமாகத் திரளும் எந்த மாற்றமும் நடக்கவிடவில்லை. கலாச்சாரம் சீரழிகிறது என்று கூறுகின்ற ஊழல் ஒழிப்புக் கூட்டம், பாலியல் பொறுக்கிகளின் எடுபிடிகள். அரசியல் ரீதியாக தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்ற கூட்டத்தைப் பாதுகாக்கின்ற பாசிசக் கும்பல்.   

பெண்ணைக் குற்றஞ்சாட்டும் இந்த ஊழல் ஒழிப்பு ஆணாதிக்க விபச்சாரங்கள், தங்கள் முகத்தை மூடிமறைத்துக் கொண்டு ஒழுக்கம் குறித்த ஆணாதிக்க ஒழுக்கக் கேட்டை பெண்களுக்கு உபதேசிக்கின்றனர்.

இன்றைய குற்றங்களின் மூலம்

மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம் பல முகம் கொண்டது. அரசியல்வாதிகளாக, அதிகார வர்க்கமாக, உதவி செய்பவராக, உதவி செய்யும் இடைத் தரகராக, மதவாதிகளாக, சமூக வாதிகளாக  .. பல வேசங்களில் உலாவுகின்றனர்;. இந்த வகையில் தான் வன்னி ஊழல் ஒழிப்பு அணியும். தங்கள் ஊழல் முகத்தை மறைத்துக்கொள்ளும் போதே, மக்களை ஏமாற்றுகின்ற மோசடியே அரங்கேறுகின்றது.
 
1980 களில் சமூக விரோத ஒழிப்பு என்று லைற் போஸ்டுகளில் கட்டி சுட்டுக்கொன்ற இயக்கங்கள் எப்படிப்பட்ட சமூக விரோதிகள் என்பதை வரலாறு காட்டுகின்றது. மக்களின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை துப்பாக்கி முனையில் குழி தோண்டிப் புதைத்தவர்கள். தமிழ் மக்களின் சமூகத்தன்மையை அழித்து லும்பன்களாக, விசிலடிக்கும் மந்தைக் கூட்டமாக மாற்றிய சமூக விரோதிகளின் அரிச்சுவட்டில் பயணிக்கின்றது ஊழல் ஒழிப்பு வன்னிக் கும்பல். 

தங்கள் சுயலாப அரசியலை மூடிமறைத்துக்கொண்டு, தேசியமக்கள் சக்தியின் யாழ்ப்பாண அணியையும், சுமந்திரன் அணியின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கின்ற அரசியல் பின்னணியில் இருக்கும் அரசியல் மோசடியானது. அடிப்படையில்  ஊழலாலானது. அருண் சித்தார்த்தைக் கிண்டல் அடிக்கும் பாசிச அரசியல், புலிப் பாசிசத்தை முன்வைக்கும் புலம்பெயர் கூட்டுக் களவாணிகளோடு கூடிய முகமூடிகளே.                         
 
சொந்தக் காலில் தமிழ் மக்கள் வாழவும் - அணிதிரளாமல் இருக்கும் வண்ணம், விசில் அடிக்கும் அடிமை மந்தைக் கூட்டத்தையே, அருச்சுனா முதல் வன்னி ஊழல் ஒழிப்பு கூட்டுக் களவாணிகள் வரை ஊழல் ஒழிப்பு என்பதன் மூலம் முன்வைக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.

15.03.2025