பனை வளம் குறித்தும் அதன் பயன்பாடு குறித்துமான "சாதிய வாதங்களை வைத்து என்.பி.பி பிழைப்பு நடத்துகிறதா?" என்ற தலைப்பில் டொக்டர் அருச்சுனா, சாதி பற்றி தனது கருத்தை முன்வைத்திருக்கின்றார். பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவர் சகாதேவனுக்கு எதிராக வெளியான ஒரு கட்டுரையைப் பகிர்ந்து தனது யூரியூப்பில் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
இங்கு அருச்சுனா விவாதத்துக்கு முன்வைத்த விடையங்கள், குறிப்பாக அவர் பகிர்ந்த கட்டுரையில் இல்லை. இந்த வகையில்
1. தவறணைகளை மீள அமைப்பது குறித்தும்
2. ஒடுக்கப்பட்ட சாதிகளின் வளர்ச்சிக்கு தவறணை உதவும் என்ற வாதம்
3. பனைகளை வெட்டும் அனுமதி பனை அபிவிருத்தி சபைக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து
இவை பற்றி எந்தக் குறிப்பும் அருச்சுனா பகிர்ந்த கட்டுரையில் இல்லை. இருந்த போதும்
மீளவும் தவறணை அமைப்பதற்கான அனுமதி, பனையை வெட்ட பனை அபிவிருத்தி சபையின் அதிகாரத்தை தரவேண்டும் என்ற கோரிக்கையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வகையில் அருச்சுனாவின் கண்ணோட்டம், இதற்காக அவர் கூறும் காரணங்களைக் கடந்து சரியானது.
1.பழையபடி தவறணை என்பது, முன்னோக்கிப் பயணிக்க வேண்டிய உற்பத்தி மற்றும் பயன்பாட்டு முறையை பின்னோக்கி கொண்டு வருவது. இருக்கின்ற அறிவைக்கொண்டு சமூகத்தையும், உற்பத்தியையும் பின்நோக்கி இழுப்பது. பழைய சாதிய சமூக உற்பத்தி - நுகர்வு வடிவத்துக்குள் சமூகத்தை மீளக் கொண்டு வருவது. சாதிய அடிப்படையில் தவறணை சாதியின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறியிருந்தால், பொருளாதார வாதத்தை முன்வைத்து சாதியைப் பின்னோக்கி நகர்த்துவதாகும். இதைப்பற்றி விரிவாக பலவற்றை விவாதிக்க முடியும்.
2.பனையை வெட்டும் அனுமதியை பனை அபிவிருத்திச் சபையிடம் கோர வேண்டும் என்பது, மக்களை அங்குமிங்குமாக அலைக்கழிக்கின்ற செயற்பாடு மட்டுமின்றி, மக்கள் மீதான பொருளாதாரச் சுமையை மேலதிகமாக திணிப்பதாகும். அரசு நிர்வாகங்கள் இலகுவாக்க வேண்டிய இடத்தில், அதிகாரத்தை பறித்துக் குவித்து மக்களை ஒடுக்கவே இது உதவும். இதைப்பற்றி விரிவாக பலவற்றை விவாதிக்க முடியும்.
3.சாதியம் குறித்த அருச்சுனாவின் பார்வையானது, யாழ்ப்பாண வெள்ளாளிய சிந்தனையிலான ஒடுக்குமுறையை நியாயப்படுத்தியிருக்கின்றது. நான் சாதி பார்ப்பதில்லை, ஆனால் அருச்சுனாவாகிய நான் திருமணத்தில் சாதி பார்ப்பேன். இது எப்படிப்பட்ட தர்க்கமும், சாதியக் கண்ணேட்டமும்?
வெட்கக்கேடான நவீன சாதியக் கண்ணோட்டம். வெள்ளாளிய சாதியக் கண்ணோட்டத்தை இப்படித் தான் முன்வைக்க முடிகின்றது. தமிழ் அரசியல் கட்சிகள் மூடி மறைத்து முன்வைக்கும் இனவொற்றுமை என்ற வெள்ளாளிய அரசியலை, அருச்சுனா வெளிப்படையாக முன்வைத்து, தனது அரசியலாக தனது மத்தியகுழு கண்ணோட்டடமாக முன்வைத்துள்ளார்.
ஒரு தனிமனிதர் என்னவாக இருக்கின்றார் என்பதில் இருந்தோ, ஒரு அமைப்பு என்னவாக இருக்கின்றது என்பதில் இருந்தோ, சமூகம் அப்படி தான் இருக்கின்றது என்று கூறுகின்ற கண்ணோட்டம் குருட்டுத்தனமானது. இது வெள்ளாளிய சாதிய அமைப்பை பாதுகாப்பது.
தமிழ் சமூக அமைப்பு சாதியத்தால் ஆனது. சாதியாகவே சிந்திக்கின்றது, செயற்படுகின்றது. சாதி நலன்களைப் பெற்றுக் கொள்ளுகின்றது. வரலாற்று ரீதியான ஒடுக்குமுறைக்கு என்றைக்கும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டது கிடையாது. வுரலாற்று ரீதியாக ஒடுக்குமுறையால் ஒடுக்கப்பட்ட சாதிகளின் வாழ்க்கை முன்னேற்றும், சமூக பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து செயற்பட்டது, செயற்படுவது கிடையாது. அரச்சுனாவின் கண்ணோட்டத்தில் சொன்னால், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான மாஸ்ரர் பிளான் இந்தச் சமூகத்திடம் கிடையாது. அருச்சுனாவுக்கும் கிடையாது. இது தான் உண்மை.
அருச்சுனா இதைப் பூசி மெழுக முனைகின்றார். நான் சாதி பார்ப்பதில்லை என்றவாறே காதலிக்கும் போது சாதி பார்த்து காதலி என்பது அவரின் கண்ணோட்டம். திருமணத்தை செய்யும் போது, சாதி பார்த்துத் திருமணம் செய் என்கின்றார். திருமண விளம்பரத்தில் சாதியைப் போட்டு விளமபரம் செய் என்கின்றார். இப்படிச் செய்வது, சாதியல்ல என்கின்றார்.
தமிழரின் சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள்… தொடங்கி காதல் வரை சாதிய அடிப்படையில், பிறப்பின் அடிப்படையில் இன்று இயங்குகின்றது. இங்கு இதன் மூலம் ஒடுக்குமுறையானது, சமூக ரீதியாகவே பின்பற்றப்படுகின்றது. இதைத்தான் அருச்சுனா முன்வைக்கிறார். அரசியல் தொடங்கி அதிகாரம் வரை, சாதியக் கண்ணோட்டத்தில் இருந்து அணுகுகின்றது.
நில விற்பனை தொடங்கி வாக்களிக்கும் முறை வரை சாதி பார்க்கப்படுகின்றது. சாதி என்பது, எந்த வடிவத்தில் நீடித்தாலும் அதுவொரு ஒடுக்குமுறை. பிறப்பைக் கொண்டு மனிதத்தை பிளப்பதும் வகைப்படுத்துவதும் என்பது மனிதனுக்கு எதிரான குற்றம். இதை அருச்சுனா வெட்கமின்றி திருமணத்தில் பார்க்கலாம் என்று முன்வைப்பதன் மூலம், சாதிய சமூகத்தை தனது தனிமனித குண்டுச்சட்டிக்குள் குறுக்கிக் காட்டி பாதுகாப்பது என்பது, ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதான வெள்ளாளிய ஒடுக்குமுறையைப் பாதுகாக்கும் அரசியலே.
04.01.2025
சாதி குறித்து டொக்டர் அருச்சுனாவின் வெள்ளாளியக் கண்ணோட்டம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode