அமெரிக்கத் தேர்தல் முடிவு குறித்து ஒற்றைவரியில் கூறுவதென்றால், உலக யுத்தமானது நான்கு வருடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. தீவிர வலதுசாரியாகக் கருதப்படும், கூறப்படும் டிரம்மின் வெற்றியானது, உலக மேலாதிக்கத்தை எந்தப் பாதை வழியாக எடுத்துச் செல்வதென்பதில், ஜனாதிபதி வேட்பாளருக்கிடையில் அடிப்படையில் வேறுபாடுகளுண்டு.
உலக மேலாதிக்கமென்பது, பொருளாதாரம் மீதான ஏகாபத்தியங்களின் மேலாதிக்கமாகும். ஏகாதிபத்தியங்களின் பொருளாதார மேலாதிக்கமென்பது, தனித்தனி ஏகாதிபத்திய நாடுகளின் மேலாதிக்கமாகும். ஏகாதிபத்திய் நாடுகளின் மேலாதிக்கமென்பது, தேசம் கடந்த முதலாளிய வர்க்கத்தின் மேலாதிக்கமாகும்.
இதற்கமையவே ஏகாதிபத்திய இராணுவ மேலாதிக்கம் தொடங்கி ஜனநாயகம் வரை கட்டமைக்கப்படுகின்றது.
1990 களில் திறந்த சந்தைப் பொருளாதாரம் மூலம் தேசங்கடந்த மூலதனம் கொழுக்கும் கொள்கை கொண்டு வரப்பட்டது. தேசம் கடந்த மூலதனங்களுக்காக தேசங்களின் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டது. அன்னிய மூலதனத்துக்கு வரைமுறையற்ற சுதந்திரமும், சந்தையும் திறந்துவிடப்பட்டது.
இந்தத் திறந்த பொருளாதாரமானது, ஏகாதிபத்திய நாடுகளின் முரண்பாட்டை பின்தள்ளியது. இது ஏகாதிபத்தியங்களின் தனித்தனி மூலதனத்தை அழித்துவிடவில்லை. தனித்தனி மூலதனங்களில் விரிவாக்கமானது, மீண்டும் நாடுகளின் முரண்பாட்டைக் கூர்மையாக்கியது. சீனாவினுள்; புகுந்து அன்னிய மூலதனமானது கொழுத்த அதேநேரம், சீனாவிலிருந்து உருவான மூலதனம் உலகச் சந்தையை ஆக்கிரமித்தது.
தேசங்கடந்த மூலதனங்களின் முரண்பாடானது, ஏகாதிபத்திய நாடுகளின் முரண்பாடாகியுள்ளது. மூன்றாவது உலக யுத்தம் மூலம் நாடுகளைப் பங்கிடவும், தீர்வுகாணவும் முனைகின்ற சமகால முரண்பாடுகள் கூர்மையாகி வருகின்றது.
இந்த வகையில் மூன்றாம் உலக யுத்தம் ஏன், எதற்காக.. என்ற அடிப்படைக் கேள்வியே, மூன்றாம் உலக யுத்தம் நோக்கி எப்படி பயணிக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளும் அடிப்படையாகும்.
இங்கு மூன்றாவது உலக யுத்தத்தின் நோக்கம் என்பது, தத்தம் நாடுகளின் மூலதனத்தை (முதலாளித்துவ) பெருக்குவதும், அதை பாதுகாப்பதும் தான்.
இந்த வகையில் உலக மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்கத் தேர்தல், இரு வேறு வழிமுறைகளை முன்வைத்துள்ளது.
1.கமலா காரிஸ் இன் ஜனநாயகக்கட்சியானது அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் கூட்டாக இணைந்து உலகை யுத்தம் மூலம் பங்கிடுவதை முன்மொழிகின்றது. இதன் மூலம், சந்தையை விரிவாக்கும் நோக்கில், மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கிப் பயணித்து வருகின்றது. இந்த யுத்தம் மூலம், தாம் அல்லாத சக்திகளை அழித்து, உலகத்தைப் பங்கிடும் வழிமுறையை முன்வைக்கின்றது. இதைத்தான் மேற்குநாடுகள் விரும்பின. டிரம் வருவதை விரும்பவில்லை.
2.டிரம்பின் குடியரசுக்கட்சியானது வரிகள் மூலம் மேலாதிக்கத்தை நிறுவவும் தக்கவைக்கவும் முனைகின்றது. மேற்குநாடுகள் உள்ளிட சீனா, இந்தியா.. நாடுகளின் மூலதனங்களின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வரிகள் மூலம், உலகைத் தொடர்ந்து மேலாதிக்கம் செய்வதே டிரம்ப்பின் குடியரசுக்கட்சியின் வழிமுறையாக முன்வைக்கின்றது. இதன் மூலம் இராணுவ மூலதனத்தைக் கட்டுப்படுத்தி, ஐரோப்பிய இராணுவ மயமாக்கத்துக்கு அமெரிக்க வரிகளைச் செலவு செய்வதை நிறுத்திவிடவும், அமெரிக்க மூலதனத்தைப் பலப்படுத்தவும் முனைகின்றது.
அமெரிக்காவின் இராணுவமயமாக்கம் என்பது, அமெரிக்காவின் கடனை அதிகரிப்பதுடன் திவலாகும் நிலையை எட்டியுள்ளது. உலக யுத்தம் நோக்கிய அமெரிக்காவின் இராணுவ வழிமுறையானது, முரண்பாடான ஏகாபத்தியங்களின் இராணுவ மயமாக்கல் பாய்ச்சல் நிலையை நோக்கிப் பயணிக்கின்றது.
இந்த வகையில் 2022 இல் இராணுவத்துக்கு அமெரிக்கா 811,6 பில்லியன் அமெரிக்க டொலரை செலவு செய்த போது சீனா இரண்டாவது இடத்தில் 298 பில்லியனைச் செலவு செய்தது. ருசியா 5 வது இடத்திலிருந்து 72 பில்லியனைச் செலவு செய்தது. இந்தியா மூன்றாவது இடத்தில் 81 பில்லியனைச் செலவு செய்தது.
மூன்றாம் உலக யுத்தம் நோக்கிய ஏகாதிபத்திய இராணுவக் கெடுபிடிகள், 2024 இல் அமெரிக்கா 905 பில்லியனைச் செலவு செய்ய வைத்தது. சீனா 408 பில்லியனையும், ருசியா மூன்றாவது இடத்தில் 294 பில்லியனையும் செலவு செய்யும் மதிப்பீடுகள் வெளியாகியுள்ளது..
உலகை மீளப் பங்கிடும் இராணுவக் கெடுபிடிகள், அமெரிக்கா ஈடுகொடுக்க முடியாதளவுக்கு மாறி வருகின்றது. மேற்குநாடுகள் ஒப்பீட்டளவில் பாரியளவுக்கு நிதியை வழங்கவில்லை. சீனா, ருசியா.. இராணுவமயமாக்கமானது, அவர்களின் உள்நாட்டு உற்பத்தி பெறுமதியின் அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காவின் சந்தை உற்பத்தியை விட அதிகமானது. அதாவது அமெரிக்காவில் உற்பத்தி செய்வதை விட சீனாவில் உற்பத்தி செய்வது மலிவானது. இந்தவகையில் இராணுவ உற்பத்தி, பலம் அமெரிக்காவினை மிஞ்சும் அளவுக்கு முன்னேறி இருக்கின்றது. உதாரணமாக இராணுவ வீரர்களின் கூலி, பொருளை உற்பத்தி செய்யும் செலவு.. இரண்டும் ஒன்றல்ல.
மறுபக்கம் இராணுவக் கெடுபிடியானது அமெரிக்கா தொடங்கி மேற்கு நாடுகளில் பொருட்களின் விலையானது, 2022 ஒப்பிடும் போது 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கூலிகள் குறைந்து, வேலையின்மை அதிகரித்து வருகின்றது.
பொது நெருக்கடி என்பது, பாரியதாக மாறிவருகின்றது. அமெரிக்காவின் கடன் என்பது, திவாலை நோக்கிச் செல்லுகின்றது. அமெரிக்காவின் மொத்தத் தேசிய வருவாயில் கடன் 120 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. இந்தக் கடன் 2000 ஆண்டில் தேசிய வருவாயில் 55 சதவீதமாக இருந்து. இன்று வருடாந்த வட்டிக் கடன் கொடுப்பனவு மொத்தக் கடனில் 20 சதவீதமாகியுள்ளது. இந்தத் தொகை அமெரிக்காவின் மொத்த வரியை விடவும் அதிகமாகும்;. மார்ச் 2024 இல் மொத்த அமெரிக்கக் கடன் 315000 பில்லியனாக இருந்ததுடன், இது உலகளாவிய மொத்த தேசிய உற்பத்தின் 33.3 சதவீதத்துக்கு சமமானது.
மார்ச் 2024 நிலவரப்படி, அமெரிக்கா கடனுக்கு ஆண்டுதோறும் 1000 பில்லியன் வட்டியை கட்டும் நிலையானது 2024 மார்கழியில் 1700 பில்லியனாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது.
நெருக்கடியென்பது பலமுனையில் முரண்பாடாக மாறிவருகின்றது. டொலரை கைவிடும் பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை, அமெரிக்காவின் டொலரைத் திவாலடையச் செய்கின்றது. பொருளாதாரத் தடைகள் தமது சந்தையையே இழக்கின்ற சுய அவலமாகியுள்ளது.
இதிலிருந்து மீள டிரம்ப் வரி முறைகள் மூலமான நகர்வும், யுத்த நெருக்கடிகளுக்குத் தீர்வும், பொருளாதாரத் தடைகளை நீக்குதல்.. என்று முன்வைக்கும் தீர்வுகளை நடைமுறையாக்குவதன் மூலம், உலக மேலாதிக்கத்தை தக்கவைக்கும் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.
07.11.2024
டிரம்ப் வெற்றி உலக யுத்தத்தைப் பின்தள்ளியுள்ளதா!? - ஏகாதிபத்தியங்களின் உலக யுத்தம் -001
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode