Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனிதர்களை விட, மனிதர்களின் கடவுள்களை விட, மனிதர்கள் கண்டு பிடித்த ஆயுதங்களை விட, மனிதர்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை விட வலிமை வாய்ந்ததே இயற்கை. இந்த இயற்கையின் சீற்றமானது இந்தப் பூமியில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போதெல்லாம் அது பூமியின் எங்கோ ஒரு முலையில் தானே என அதை நாம் மௌனமாக தாண்டி சென்று விடுகிறோம். மக்கள் அழிவும் மரணங்களும் நமது நெஞ்சினை பாதித்தாலும் நமக்கு இல்லைத் தானே என்று அமைதியடைந்து விடுகிறோம். இன்று மரணம் ஒவ்வொருவருடைய வீட்டுக் கதவினை தட்டும் சூழ்நிலையில், கதவினை திறந்து வெளியில் கால் வைத்து விட்டால் மரணம் நம்மை பற்றிக் கொண்டு விடுமென்ற பயத்தில் மாதக் கணக்கில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல மனிதர்களோடு வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள்.., இப்படி அனைத்தும் முடக்கப்பட்டு விட்டது. இந்த ஓர் மாதகாலம் தான் இயற்கை சுதந்திரமாக குளிர்மையான சுத்தக்காற்றினை சுவாசித்து சுகத்தினை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறது. இயற்கையின் நீண்ட கால வேதனை இன்று சற்று தணிக்கப்பட்டுள்ளது. இயற்கை வெப்பத்தின் கொடூரத்தினை தாங்க முடியாமல் ஒவ்வொரு நாட்டு வாசலிலும் கையேந்தி நின்ற போது எதுவும் பண்ண முடியாது என்று திமிரோடு கதவை மூடிவிட்ட அமெரிக்காவும், ஏதோ பிச்சை போடுவது போல் சில்லறையினை காட்டி காதுகளை இறுகப் பொத்திக் கொண்ட உலக நாடுகளும் இன்று தன் காலில் வீழ்ந்து கிடப்பதை பார்த்து இயற்கை கம்பீரமாக நெஞ்சினை நிமிர்த்தி நிற்கிறது. இது இயற்கையின் நியாயமான உணர்வு தான்.


என்னை யாரும் எதுவும் பண்ணிவிட முடியாது, என் அதிகாரத்தினையும் படைப்பலத்தினையும் பணப்பலத்தினையும் கொண்டு அனைத்தையும் அடக்கிக் காட்டுவேன் என்ற அகங்காரம் கொண்ட ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தும் இன்று கொரோனாவிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றன. தன் கையிலுள்ள அதிகாரத்தினால் ஆயுதத்தினால் மக்களை அடக்கி மக்களின் உரிமைகளை அழித்து விடுவது போல் இயற்கையோடு சவால் விட முடியாது என்பதை கொரோனா நிரூபித்துக் காட்டிவிட்டது. அதிகாரம் பதவி பறிபோய்விடுமோ நாட்டின் பொருளாதாரம் முற்றாக அழிந்து போய்விடுமோ என்ற அச்சமும் பயமும் அனைத்து அரசையும் ஆட்டிப் படைக்கிறது. நாட்டின் பொருளாதாரம் அனைத்தும் எங்கே முடங்கிவிட்டது..? மக்களை பாதுகாக்க முடியாமல், மக்களின் மருத்துவத்திற்குப் பயன்படாமல், சமூகநலன்களுக்குப் பயன்படாமல் மக்களின் உழைப்பும் நாட்டின் பொருளாதாரமும் மொத்தமாக தனியார் கணக்கிலே முடங்கிக் கிடக்கிறது. இந்த அவலநிலையிலும் கூட அனைத்து அரசுகளும் மக்களைப் பற்றி சிந்திக்காமல் முதலாளிகளின் நலனையே சிந்திக்கிறது. மக்களைப் பாதுகாப்பதை விட முதலாளிகளை பாதுகாப்பதே அரசின் முக்கியமான நோக்கமாயுள்ளது. இன்று மனிதனின் மரணம் பற்றி இந்த முதலாளித்துவ அரசு விடுவது வெறும் முதலைக் கண்ணீர் தான். செத்து மடிவது ஏழை மக்களும், தொழிலாளர்களும், வயோதிபர்களும் தானே, அவர்களுக்காக பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற நினைப்பிலேலே முதலாளிகளின் கைக்கூலிகளான அரசுகள் அனைத்தும் செயற்படுகின்றன. இந்த அரசானது மனித உயிர்களை பரீட்சிக்க முடிவு செய்துவிட்டது. நீ வேலைக்குப் போக வேண்டும், பாடசாலைக்குப் போக வேண்டும், குழந்தைகளை பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும், ஆனால் சமூக ஒழுங்கினைக் கடைப் பிடித்து கையினைக் கழுவி இடைவெளி விட்டு உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பதே அரசு எடுத்துள்ள முடிவு. இந்த முடிவு சரியா, தப்பா என்பது விவாதத்திற்குரியது. மக்களின் நலன் கொண்டு பார்ப்பது மட்டுமே இங்கு சரியானதாகும்.


அனைத்தும் முடங்கிவிட்டால் அரசு என்ன செய்யலாம் என்ற கேள்வி எழலாம்…


இன்னமும் நோய்த் தொற்றோடு பலர் பொது இடங்களில் நடமாடுகிறார்கள். கடைகளில், தொழிற்சாலைகளில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் பலருக்கு தொற்று வர வாய்ப்புண்டு. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஒருவரால் வீட்டிலுள்ள குழந்தைகள், வயோதிபர்களுக்கு தொற்றிவிடலாம். தொற்றுள்ளவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தி மருத்துவம் செய்யும் நடவடிக்கைகள் அரசிடமோ தொழிற்சாலைகளிலோ இல்லை. தொழிலாளர்கள் தினமும் பயந்து கொண்டே தொழிலுக்கு சென்று பயத்தோடே வீடு திரும்ப வேண்டியுள்ளது. தொழிற்சாலை, பொது இடங்களில் நோய்த்தொற்று பரிசோதனைக்கான ஏற்பாடுகள் இன்று மிக அவசியமானது. இதற்கான தயாரிப்பு எதுவுமே அரசிடமில்லை. அதைவிட, நோய்த்தொற்று ஏற்படும் மக்களுக்களைப் பாதுகாக்க மருத்துவம் சீராகவில்லை, நோயாளர்களை பராமரித்து பாதுகாக்கப் போதுமான இடவசதியில்லை, மருத்துவர்களுக்கு, தாதிமார்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதியளவு தரமான பாதுகாப்பு கவசங்கள் இல்லை இந்நிலையில் எப்படி மக்களைப் பாதுகாக்க முடியும். செத்தவன் செத்து, இருப்பவன் இரு என்பது தான் இன்று அரசுகளின் போக்காவுள்ளது. முதலாளித்துவம் முதலாளித்துவ அரசுகளும் என்றும் மக்களுக்கானதல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டிய வண்ணமுள்ளது.


உலகில் கொரோனா முதல் மனித அழிவல்ல. பற்பல நோய்களால் பல கோடிக்கணக்கான மக்கள் உலகம் பூராவும் இறந்திருக்கிறார்கள். 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளத்தில் ஆரம்பித்த காலரா நோய் கிட்டத்தட்ட ஓர் நூற்றாண்டு காலமாக உலக நாடுகள் முழுவதும் பலகோடிக் கணக்கான உயிர்களைப் பலியெடுத்தது. அடுத்து பெரியம்மை நோயினால் 20ம் நூற்றாண்டில் 300-500 மில்லியன் மக்கள் இறந்தனர். இது போன்று பல நோய்கள் உலக வரலாற்றில் நாம் கண்டவை தான். ஆனால் இந்த வரலாறு எமக்கு எதனைக் கற்றுக் கொடுத்துள்ளது என்று பார்த்தால் எதுவுமேயில்லை. அழிவையும் இழப்பையும் மனிதர்கள் குறுகிய காலத்திலேயே மறந்து போகிறார்கள். மீண்டும் வழமையான பழக்க வழக்கங்களுக்கு திரும்பிவிடுகிறார்கள். மனிதன் பொதுமை என்ற சிந்தனையில் இருந்து விலகி நான் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறான். எமது அறியாமையினை, சுயநலத்தினை, முரண்பாடுகளை முதலாளித்துவம் தன் வளர்ச்சிக்கு சாதகமாக்கிக் கொள்கிறது. இந்த முதலாளித்துவம் இயற்கையினை பற்றியோ, மக்கள் அழிவினைப் பற்றியோ ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை. மக்களின் மரணத்திலும் சுயலாபத்தினை தேடுவதே முதலாளித்துவ சிந்தனையாகும். கொரோனாவால் இந்த சிந்தனைப் போக்கினை மாற்றி விட முடியாது. கொரோனா எதையும் மாற்றி விடப்போவதில்லை. மக்களின் சிந்தனையாலும் பகுத்தறிவாலும் தான் உலகில் எதையும் மாற்ற முடியும்.


ஆயினும் கொரோனா மீண்டும் எங்களுக்கு ஒன்றினை நினைவுபடுத்தியுள்ளது. மனிதம் இன்னும் முற்றாக சாகவில்லை அது ஆங்காங்கே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதை எம் கண் முன் காட்டியுள்ளது. மனிதம் எந்தவித ஆர்ப்பாட்டமோ எதிர்பார்ப்போ இல்லாமல் மௌனமாக செயலாற்றிக் கொண்டு இருக்கின்றது. மருத்துவர்களாக, தாதிகளாக, சமூக சேவலர்களாக, பசித்த மனிதன் மேல் இரக்கம் கொண்ட மனிதர்களாக உலகின் ஒவ்வொரு மூலைகளில் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மனிதம் தான் உலகை இன்னமும் தாங்கிப் பிடித்துள்ளது. இப்படி நேயம் நிறைந்த மனிதர்களாக ஒவ்வொரு மனிதர்களும் தங்களை மாற்றிவிட்டால் எத்தனை சந்தோசம். பேதங்களற்ற, மகிழ்ச்சி பொங்கும் வாழ்வினை வாழ உலகில் அனைத்து மனிதர்களும் தங்களை பழக்கப்படுத்திக் கொண்டால் எப்படியிருக்கும்..,


மனிதன் கற்பனையில் காணத் துடிக்கும் சொர்க்கம் பூமியிலேயே படைக்கப்பட்டுவிடும்.