எனது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ மருந்தில்லை. ஒட்சிசனை வழங்கி போராட்டத்தை வீரியமாக்கும் இடத்தில் அரசு இல்லை. வைரஸ்சுக்கு எதிராக யுத்தம், ஆயத்தம் என்று கொக்கரித்த அரசியல் பின்னணியில், அவையின்றி மரணங்கள் தொடருகின்றது. நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர். நாளை எனக்கு – உனக்கு இதுவே கதியாகலாம்!
என் வீட்டுக்குள்ளும் வரும், மரணம் என்னைச் சுற்றியும் நிகழும் என்பது கற்பனையல்ல – கடந்த நான்கு நாட்களாக என்னைக் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மெதுவாக தின்று வருகின்றது. இன்று கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்று என்று, மருத்துவரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது வயது மற்றும் வைரஸ் இலகுவாக பலியெடுக்கும் நோய்களைக் கொண்ட எனது உடல், இந்தச் சூழலில் எனக்கான சுயபலம் - கடந்த 40 வருடமாக நான் நேசித்த சமூகத்தைக் குறித்து தொடர்ந்து அக்கறையோடு எழுதுவது மட்டும் தான். அண்மையில் பொதுவில் கொரோனா குறித்த 20க்கும் மேற்பட்ட கட்டுரையில் எதை பேசினேனோ, அதை என்னிலையில் இருந்து எழுதுகின்றேன்.
மனிதனாக மனிதனை மதிக்காத சிந்தனைகள், கோட்பாடுகள் - அனைத்தையும் தன்னிலையில் இருந்து தன்னை முன்னிலைப்படுத்திச் சிந்திக்கின்ற தனிமனித வாதங்கள், ஒட்டுமொத்த சமூகம் குறித்தோ, இயற்கையைப் பற்றியோ, இயற்கையின் பிற உயிர்கள் குறித்தோ அக்கறையற்ற வரட்டுவாதங்கள் - இன்று எத்தனை மனிதர்களை பலியெடுத்துக் கொண்டு இருக்கின்றது. சமூகம் என்ற வகையில் நாங்கள் எல்லாம் குற்றவாளிகள். சமூகத்தை மாற்ற என்ன செய்தோம்!? இதை வரட்டுவாதம் என்று சொல்லி நகரும் உங்கள் உளவியலில், மனிதர்கள் உயிர்வாழ முடியாது மரணிக்கின்றனர். இன்று அல்ல அன்று முதல்.. யார் இதற்காக அக்கறைப்படுகின்றீர்கள்?
அரசுகள் முன்னெடுத்த வைரஸ் நடவடிக்கை, மருத்துவ அறிவியல், வைரஸ் பரவல் பற்றி அரசு மக்கள் முன் வைத்த வாதங்கள், நாட்டுக்கு நாடு வேறுபட்டன. அதற்கு அமைவாக மரணங்கள், மனித துயரங்கள் எங்குமாக இருக்கின்றது. தங்கள் கொள்கை முடிவுகளை மக்களில் இருந்து எடுக்கவில்லை, பொய்கள், புனைவுகள்.. இதை இனங்கண்டு இருந்த எனக்கு – என் வீட்டுக்குள், அரசு வைரசை வலிந்து கொண்டு வந்தது.
நான் 15.03.2020 முதல் (24 நாள்), என்னைத் தனிமைப்படுத்தி இருந்த காலம். அதற்கு முதல் ஒரு மாதமாகவே எச்சரிக்கை உணர்வோடு சூழலை எதிர்கொள்ளும் எச்சரிக்கை போராட்டத்தை நடத்தியவன். பிரஞ்சு அரசு வெளியில் செல்ல அனுமதித்த வடிவத்தில் கூட, அது தவறானது என்பதால் வெளியில் செல்லவில்லை. வீட்டில் என்னுடன் இருக்கும் இரு பிள்ளைகள் (20 வயதுக்கு கூட) வெளியில் செல்லவில்லை.
எனது துணைவியார் கட்டாயம் வேலை செய்ய வேண்டி இருந்தது. சுப்பர்மாக்கற் விற்பனையாளர். இந்தியாவில் ஊரடங்கு அறிவித்த பின் மக்கள் வீதியில் நடந்தது போல், இங்கு சுப்பர்மாக்கற் வைரஸ்சை பரப்பும் இலாப வேட்டையில் இறங்கியது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை என்ற பெயரில் எந்த ஒழுங்குவிதியையும் முன்வைக்காது அரசு, மூடிய கட்டடத்தில் ஒரு சதுர மீற்றருக்கு எத்தனை பேர் என்ற வரப்பைக் கூட போடாது கொள்ளை அடிக்கத் திறந்துவிட்டது. ஒரு விற்பனையாளர் செயின் அறுபடும் அளவுக்கு 2,3 நிமிடத்துக்கு பொருட்களை வாங்குவோர் விற்பனையாளரை கடந்து சென்றனர். இந்தளவுக்கும் துணைவியார் வேலை செய்த இடத்தில் அண்ணளவாக ஐந்து விற்பனையாளர்கள். வழமையான திறந்திருக்கும் நேரமும் கூட. விற்பனையோ முன்பை விட அதிகம். வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகம். அரசு அறிவித்த தனிமைப்படுத்தல் 17.03.2020 முதல் துணைவியார் மருத்துவ விடுப்பெடுத்த 31.03.2020 வரையும் இது தான் நிலை. 31.03.2020 எனது துணைவியார் மருத்துவ வீவு எடுத்தார். அடுத்த நாள் அவருக்கு காய்ச்சல்.
இந்த இடைக் கட்டத்தில் விற்பனையாளர்களின் அச்சத்தைப் போக்க, விற்பனையாளர் முன் கண்ணாடியை போட்டதன் மூலம் வைரஸ் தொற்றாது என்ற பிரமையை உருவாக்கினர். இதன் மூலம் வைரஸ் காற்றில் அதிகம் நேரம் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். மக்கள் கூட்டத்தின் சுவாசம் விற்பனையாளரின் கண்ணாடியில் பட்டு, எதிரில் இருக்கும் மற்றைய விற்பனையாளரின் கண்ணாடியில் தெறித்து முகத்திற்கு நேராக கீழ் இறங்கி சுவாசிக்க விட்டனர். காற்றோட்டமற்ற மூடிய கட்டிடம், நெருக்கமாக மக்கள் .. எந்த சுகாதார ஒழுங்கும் கிடையாது, சந்தைக்கு ஏற்ப வைரஸ் பரவல் கொள்கை. இப்படித்தான் வைரஸ் என் வீட்டுக்குள் வந்து சேர்ந்துள்ளது. எம் வீட்டில் உள்ள நால்வருக்கும் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்றுக்குரிய அடையாளங்கள் காணப்பட்டுள்ளது.
எனது உடல்நிலை தீவிரம் காரணமாக மருத்துவரை சந்திப்பதற்காகவும், கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்று பரிசோதனைக்காகவும் (07.04.2020) 6 கி.மீ நடந்து (இரண்டு மணி நேரம்) வெளியே சென்றேன். 500க்கு மேற்பட்ட மக்களை வீதிகளில் காண முடிந்தது. எந்தப் பரிசோதனையம் கிடையாது. இதன் பொருள் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் பரவுகின்றது என்பது தான். எனக்கு வைரைஸ் தொற்று சந்தேகம் - உறுதிப்படுத்தப்பட்ட சூழல், மற்றவர்களுக்கு பரவலைத் தடுக்க முகத் தடுப்பு கிடையாது. வைத்தியர் அதை எனக்கு கொடுக்கும்படி கூறிய போதும், அதைப் பெற முடியவில்லை. தொற்று என் வீட்டில் உறுதியான நி;லையில், காய்ச்சல் மருந்து வாங்க நாங்களே செல்ல வேண்டும். இதன் பொருள் நோய் காவியாக இருக்கும் நாங்கள், இதை விட மாற்று எம்முன் கிடையாது.
எனக்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன் வரண்ட இருமல். தலையிடி, தலைப்பாரம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் உதறல், இருமி துப்பும் போது இரத்தம் கலந்த சளி , உடம்பெங்கும் உளைவு, காய்ச்சல், கண் எரிவு, கண் நோவு, கண்ணீர் வெளியேறல், மூட்டு நோ .. இவை கடந்த 5 நாட்களாக கூடிக் குறைந்தளவில் வெவ்வேறளவில் காணப்பட்டது, காணப்படுகின்றது.
மருத்துவர் இனி வரும் நாட்கள் தான் கவனம், சுவாசப்பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவமனைக்கு தொடர்பு கொள்ள கூறி உள்ளார். ஒருவர் மரணித்தால் தான், இடம் கிடைக்கும் என்ற நிலை. மருத்துவமனைகள் முட்டி வழிகின்றது. மருத்துவ உதவி அலட்சியப்படுத்தப்படுகின்றது. முதியோர் இல்லங்களில் நோய்த் தொற்றைக் கண்டுகொள்ளாமல் மரணிக்க விடப்படுகின்றனர். இது தான் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் கதை.
அரசின் கொள்கையால் வைரஸ் தொற்று தொடர்ந்து பரவிக் கொண்டு இருக்கின்றது. என் வீட்டுக்குள் நாலு பேருக்கு தொற்று ஏற்பட்டது போல்.
குறிப்பு : யாரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த மருந்து, இந்த மருந்து என, யாருக்கும் - யாரும் உபதேசம் செய்யாதீர்கள். சமூகத்தை முதன்மைப்படுத்திச் சிந்தியுங்கள். இயற்கை குறித்தும், பிற உயிரினங்கள் குறித்தும் அக்கறை கொள்ளுங்கள். நாளைய சமூகத்திற்கு எதை கற்றுக் கொடுக்கப் போகின்றீர்கள் என்பதைப் பற்றி அக்கறைப்படுங்கள். வதந்திகளை, வாந்திகளை, நம்பிக்கைகளை கைவிட்டு, பகுத்தறிவோடு மனிதனாக சிந்திக்கவும் - வாழவும் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் நாளைய வாழ்க்கையைக் கட்டியெழுப்பும். என்னுடன் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், இந்த எதார்த்தம் கடந்து யாரும் வாழவில்லை.