கொரோனாவைக் கண்டு பயந்த மக்கள், மந்தைகள் போல் தப்பித்து ஓடுகின்றனர். பணமுள்ள தரப்பினர் விடுமுறையாக மாற்றி கும்மாளம் குத்துகின்றனர். அன்றாடம் கஞ்சிக்கு உழைக்கும் உதிரி உழைப்பாள வர்க்கம் கூட்டம் கூட்டமாக அலைகின்றது. இளைஞர்கள் தம்மை கொரோனா பாதிக்காது என, கூறி ஊர் சுற்றுகின்றனர். மதவாதிகள் கடவுள் கொரோனாவை எம்மிடம் அண்ட விடமாட்டார் என்று கூறி, கூடிக் கும்மி அடிக்கின்றது. இப்படி ஆயிரம் விதமாக, அறிவிழந்த மனிதச் செயற்பாடுகள். இது உருவாக்கும் சிந்தனைகள். சமூக வலைத்தளங்களில் வைரஸ்சாகி வருவதால், அறிவிழந்து போன மனித நடத்தைகளால் வைரஸ் சுதந்திரமாக பரவுகின்றது.
இடதுசாரியம் எதைக் கற்றுக் கொண்டுள்ளது? எதைக் கற்றுக் கொடுக்கின்றது? இடதுசாரியம் இதை வால் பிடிக்கின்றது. தன்னியல்பு இன்றி பின்னால் ஓடுகின்றது. தன் அரசியல் நடத்தையை சமூக சேவையாக மட்டும் குறுக்கி விடுகின்றது. முன்னோக்கி மக்களை அறிவியல் ரீதியாக வழிநடத்த வேண்டிய அரசியல் பாத்திரத்தை முன்னெடுக்க வேண்டியவர்கள், கொரோனா குறித்து புரிதலேயின்றி - முதலாளித்துவத்தின் கால் தடங்களின் பின்னால் ஓடுகின்றது.
கொரோனா குறித்து முதலாளித்துவம் தடுமாறிய அணுகுமுறைகளின் பின்னுள்ள அடிப்படை உண்மைகளைக் கூட புரிந்து கொள்ளவில்லை. முதலாளித்துவமானது பொருளாதார கண்ணோட்டத்தில் கொரோனாவை அணுகி அலட்சியப்படுத்தியது போன்று, இடதுசாரியமும் அதே பொருளாதார அடிப்படையின் கீழ் இருந்து அணுகுவதன் மூலம் - மக்களை வழிநடத்தத் தவறிவிட்டனர்.
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அணுகிய முதலாளித்துவம் மருத்துவ கண்ணோட்டத்தில் ஏற்படும் சமூக விளைவை இனம் கண்டவுடன், பொருளாதார அணுகுமுறையில் (ஏற்றதாழ்வான) இருந்து கையாள்வதை கைவிட்டுள்ளது. இது முழுமையாக அல்ல. அதாவது வர்க்க அடிப்படையில் வைரசை அணுகுவதை கைவிட்டுள்ளது. வர்க்க அடிப்படையில் முடிவுகளை எடுத்தால், வர்க்க அமைப்பையே தகர்த்துவிடும் என்ற உண்மையை முதலாளித்துவம் விளங்கி இருக்கின்றது. ஆனால் இடதுசாரியம் வர்க்க அடிப்படையில் கொரொனாவை அணுகுகின்ற குண்டுசட்டிக்குள் சுருண்டு படுத்துக் கிடக்கின்றது என்பது மிகையல்ல.
முதவாளித்துவம் தனது வர்க்க அணுகுமுறையில் இருந்து சுதாகரித்துக் கொண்டு கொரோனாவை புரிந்துகொண்ட அளவுக்கு, இடதுசாரியம் இதை கடுகளவும் கூட இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை.
கொரோனாவின் விளைவு என்ன? வைரஸ் தொற்றுக்குரிய கோவிட் 19 மிகச் சுதந்திரமாக சுதந்திரமான மனிதன் மூலம் எந்தக் கட்டுப்பாடுமின்றி பரவுமாயின், 100 கோடிக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்படுவார்கள். இதை இடதுசாரிகள், அறிவுஐPவிகள் புரிந்து கொள்ளவேயில்லை. ஆனால் இதை முதலாளித்துவம் புரிந்து இருக்கின்றது. அதாவது கோவிட் 19 வைரஸ் சுதந்திரமாக, சுதந்திரமான மனிதன் காவிச் செல்வானாயின் - அதன் சமுதாய விளைவு கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள்.
மனிதன் குறித்த சமூக அக்கறையில் இருந்து இதை தடுக்க முதலாளித்துவம் முனைகின்றதா எனின் இல்லை, கோடிக்கணக்கான மரணங்கள் கொரோனா மூலம் நிகழுமாயின், முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பையே தகர்ந்துவிடும் என்ற வர்க்க அடிப்படையில் தான் - கொரோனாவுக்கு எதிராக முதலாளித்துவம் போராடத் தொடங்கி இருக்கின்றது. தன் வர்க்க எதிரியிடம் இருந்தல்ல, தன் வர்க்க அடித்தளத்தை தகர்த்துவிடக் கூடிய வைரஸ்சை எதிர்த்துப் போராடத் தொடங்கி இருக்கின்றது. இதை முதலாளித்துவத்துக்கு எதிரான வர்க்கம், இன்னமும் புரிந்துகொள்ளத் தவறி இருக்கின்றது.
100 கோடிக்கு மேற்பட்ட மரணங்கள் என்பது கற்பனையல்ல. தொற்று ஏற்பட்டு மரணித்தவர்கள், அதில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு இடையிலான விகிதாசாரம் 1 க்கு 5 – 1 க்கு 7 இடையில் மாறிக் கொண்டு இருக்கின்றது. அதாலது 5 இல் ஒருவர் - ஏழில் ஒருவர் இறக்கின்றார். நோய்த் தொற்று ஏற்பட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டு இருப்பவர்கள் விகிதாசாரம் அண்ணளவாக 20 க்கு 1 என்ற வீதத்தில் இருக்கின்றது. 780 கோடி உலக மக்கள் தொகைக்குள், இதைப் பொருத்திப் பாருங்கள். எத்தனை மரணங்கள் நிகழுமென்று.
இந்த மரண விகிதாசாரம், நோய் தொற்று ஏற்பட்டு உயிருக்காக போராடுகின்றவர்களின் விகிதாசாரம் என்பனவற்றை வைத்துப் பார்க்கின்றபோது, சுதந்திரமாக நோய் பரவுமாயின் எத்தனை கோடி மரணங்கள் நிகழும் என்பது கற்பனையல்ல, அறிவியல்பூர்வமானது.
இந்த விகிதாசார புள்ளிவிபரங்கள் அனைத்தும் அடிப்படை மருத்துவ உதவின்றிய சூழலில் தொடங்கி அடிப்படை மருத்துவம் உருவாக்கப்பட்ட பின்னணியில் நடந்தவை, நடக்கின்றவை. சுதந்திரமாக வைரஸ் பரவுமாயின், மேற்கில் கூட எந்த மருத்துவக் கட்டமைப்பும் போதியதாக இருக்கப் போவதில்லை. இப்பவே மூச்சு முட்டி சேடமிழுக்கும் மேற்கின் மருத்துவமனைகள், தொற்று ஒரு சில மடங்காக அதிகரித்தாலே தகர்ந்துவிடும்.
சுதந்திரமாக வைரஸ் இயங்குமாயின் மரணம் வீதம் இன்று இருப்பதை விட அதிக விகிதத்தில் நிகழும். மருத்துவம், உணவு, இருப்பிடம், நீர்.. என்ற மனித அடிப்படை தேவைக்கான சங்கிலித் தொடர் அறுந்துவிடும். இதனால் மரணங்கள் வெவ்வேறு வடிவங்களில் உருவாகும். உற்பத்தி மற்றும் உழைப்பில் இருந்து மக்கள் தப்பி ஓடுவார்கள். முதலாளித்துவ சமூக கட்டமைப்பின் அடிக்கட்டுமான உற்பத்தி, நுகர்வு, விநியோகம் என்று எதுவும், எஞ்சப் போவதில்;லை. காகிதப் பணங்கள், வெறும் பேப்பராகிவிடும்.
இதை முதலாளித்துவம் மிகத் தெளிவாக புரிந்து இருக்கின்றது. ஆட்சித் தலைவர்களின் முட்டாள்தனங்களையும், மூடத்தனங்களையும் கடந்து முதலாளித்துவ வர்க்கம் இதில் இருந்து தப்ப என்ன செய்ய வேண்டுமோ, அதைத் தொடங்கி இருக்கின்றது.
இதை மார்க்சிய இயக்கங்கள் புரிந்து கொள்ளவேயில்லை. வைரஸ் தொற்றின் வடிவங்களைக் கூட, மருத்துவ ரீதியாகக் கூட புரிந்து கொள்ளவில்லை.
ஜனநாயக இயக்கங்கள் முதல் மார்க்சிய மக்கள் இயக்கங்கள் வரை பொருளாதார தொண்டு நிறுவனங்களாக செயற்படுகின்றன. அதைக் கூட தொற்றுக்கு எதிரான மருத்துவ அடிப்படையில் புரிந்து கொள்ளவேயில்லை. உணவு விநியோகம், மாஸ்க் விநியோகம் .. என்ற அனைத்தும், மருத்துவ ரீதியாக தொற்றுக்கு எதிரான எச்சரிக்கைகளுடன் அணுகவில்லை.
இவ் விநியோகங்களில் ஈடுபடுகின்ற நபருக்கு நோய் தொற்று இருந்தால், நோயை மக்களுக்கு கொடுக்கும் “சமூகத் தொண்டாகவே” மாறிவிடும். மருத்துவரீதியாக எதை செய்யக் கூடாதோ அதைச் செய்கின்றனர். மாஸ்க்கை தைக்கின்றவருக்கு கொரோனா தொற்று இருந்தால், மாஸ்க்; மூலம் வைரஸ் பரவும். தைத்த மாஸ்க்குகளை கொரோனா வைரஸ்சுக்கு எதிரான கிருமி நீக்கம் செய்தே கொடுக்க வேண்டும். மாஸ்க் விநியோகிக்கும் நபர் தன் கையை தொற்று நீக்கி கொண்டு சுத்தம் செய்த பின் தான், அதை மற்றவருக்கு கொடுக்க வேண்டும்;. அதேநேரம் கையை முகத்தில் வைக்கக் கூடாது, மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். முகத்தில் அல்லது தன் முகத்தில் உள்ள மாஸ்கில் கை வைத்தால், கையை மீள தொற்று நீக்க கை கழுவ வேண்டும்;.
இப்படி உணவு விநியோகம் தொடங்கி அனைத்தும் தொற்றை உருவாக்கும் நிகழ்தகவுக்குள் நடக்கின்றது. இப்படி பல இருக்க இதில் ஈடுபடுகின்றவர்களே அறிவுபூர்மான விளக்கமின்றி இருக்கும் போது, மக்களை அறிவூட்டுவது யார்? மக்கள் எதை, எங்கிருந்து, எப்படிக் கற்றுக்கொள்வது?
அறிவு என்ற பெயரில், சீனா உருவாக்கினதா - அமெரிக்கா உருவாக்கினதா என்று தர்க்கங்கள், அறிவியல் வாதங்கள், வைரஸ்சுகள் குறித்த அறிவியல் விளக்கங்களுக்கும் சமூகத்தை முடக்குவது. இயற்கை பின்பற்றாத மனித நடத்தைகளை அறிவாக குறுக்குவது. பண்பாட்டுக் கூறுகள் சார்ந்து அதற்குள் அறிவைக் காட்டி முடக்குவது, பாரம்பரிய மருத்துவத்தை முன்வைத்து அறிவை அதற்குள் சிந்திக்க வைப்பது. மதங்கள் குறித்து, அதன் பிழைப்புவாதங்கள் குறித்த விவாதத்துக்குள் சமூகத்தை வழிநடத்துவது. வைரஸ்சுக்கு எதிரான கண்காணிப்பின் அதிகாரங்கள் குறித்த மயிர்புடுங்கும் விவாதங்களை முன்நகர்த்துவது, முதலாளித்துவம் அனாதையாக கைவிட்ட மக்கள் குறித்தும், அவர்களின் பொருளாதார விளைவுகளுக்குள் அறிவை குறுக்கி விடுவது .. இப்படி அறிவு குறுக்கப்படுகின்றது.
மருத்துவரீதியாக இதுதான் நடக்கின்றது. முதியவர்களையே கொல்லும், மூன்று பேருக்கே பரவும், பொதுமைப்படுத்தி பார்க்காத, குறிப்பான புள்ளிவிபரத்தைக் கொண்டு மருத்துவத்தையும் - நோய்த் தொற்றையும் - மரணத்தையும் அணுகுவதை அறிவியலாக்குகின்றனர்.
முதலாளித்துவத்தின் தடுமாற்றத்தில் தொடங்கி முதலாளித்துவம் விழித்துக்கொண்ட அதன் செயற்பாடுகளின் பின்னுள்ள எதார்த்தத்தை முன்னிறுத்தி யாரும் அறிவையும், மக்களையும் முன்நகர்த்தவில்லை. இந்த உண்மை மனிதகுலத்தின் அறியாமையாக – மனித அவலமாகியிருக்கின்றது