நாம் இப்படி ஒரு கேள்வி எழுப்பும் போது, இதை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்ற உண்மை எதார்த்தமாகிவிடுகின்றது. இந்த உண்மை உங்கள் மனதிலும் தோன்றி இருக்கும்; என்பதும் உண்மையல்லவா! அது என்ன?
இதை தடுக்கத் தவறியதற்கு யார் காரணம்? எதற்காக கொரோனா வைரஸை தடுக்கவேண்டியவர்கள் அக்கறைப்படவில்லை?
வைரஸ் பரவலும், மரணங்களும் நிகழ அரசுகள் காரணமாக இருக்கின்றது. இது யாரும் மறுக்க முடியாத உண்மை. எப்படி, எதற்காக, ஏன் அரசுகள் வைரஸ் பரவலை அலட்சியப்படுத்தின? மீள திடீரென ஏன் கட்டுப்படுத்துவதற்கு அக்கறைப்படுகின்றன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எம்முன் எழுகின்றது. நாம் கேள்விகளை எழுப்பி பதிலைத் தேடுவது தவிர்க்கப்பட முடியாதது. இது மட்டுமே நாம் சிந்திக்கவும் - செயற்படுவதற்கான அடித்தளம்.
மக்களின் மருத்துவத்தை முதன்மைப்படுத்தி, முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் அரசுகள் இருக்கின்றது. அரசுகள் மக்கள் சார்ந்து முடிவெடுக்க மறுக்கும் போது, மக்கள் போராடுகின்றனர். இது தான் உலகெங்கும் நடந்து வருகின்ற உண்மை. இந்த உண்மை இங்கும் பொருந்தும்.
அதாவது அரசுகள் மக்களை முன்னிறுத்தி முடிவுகளை எடுப்பதில்லை. அரசுகள் மக்களுக்கு எதிராக இயங்குகின்றது. மக்கள் சார்ந்து முடிவுகளை எடுக்க மக்கள் கோரும் போது, அதை ஒடுக்குகின்றது. இந்த உண்மை தான் இங்கும் இயங்கியது. மக்களைச் சார்ந்து முடிவுகளை எடுப்பதை அரசுகள் மறுதளித்தன. கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்தின.
அப்படியாயின் அரசுகள் யாரை முன்னிலைப்படுத்தி முடிவுகளை எடுக்கின்றனர்? ஆம் அவர்கள் முதலாளிகளை (மூலதனத்தை) முன்னிலைப்படுத்தியே முடிவுகளை எடுக்கின்றனர். அதாவது மக்களைச் சுரண்டுகின்ற, உழைக்கும் மக்களை வர்க்க எதிரியாக கருதுகின்ற வர்க்கத்தை (முதலாளிகளைச்) சார்ந்து முடிவுகளை எடுக்கின்றனர். இதைத்தான் வைரஸ் பரவிய போது அரசுகள் செய்தனர்.
முதலாளிகளின் நலன் முதன்மை பெற்றதால் கொரோனா வைரஸ் பரவலை அலட்சியப்படுத்தியது. வைரஸ் தொற்று சீனாவில் இனம் காணப்பட்டு அதற்கு எதிராக உழைப்பை முடக்கிய முடிவுகளை சீனா எடுத்த போது, அது எல்லை கடந்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக எல்லைகள் தோறும் மருத்துவ கண்காணிப்புகளைத் தொடங்கி இருக்க வேண்டும். அதற்காக மருத்துவ உபகரணங்களையும், போதுமான உழைப்பு சக்தியையும் பயன்படுத்த பணத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். உதாரணமாக தென்கொரியா எடுத்துக்காட்டு. அதற்கான பணத்தை ஒதுக்குவதற்கு முதலாளித்துவ அரசுகள் தவறின.
வைரஸ் மிகச் சுதந்திரமாக உலகெங்கும் பரவியது. அப்படி பரவிய போது, ஆரம்பத்திலேயே உழைப்பை முடக்கி கண்காணிப்பை தீவிரமாக்கி இருக்கவேண்டும். சீனா போல், ஆனால் முதலாளிகள் பணம் குவிக்கும் உழைப்புச் செயற்பாட்டை நிறுத்த மறுத்து, வைரஸ்சை வீரியமடைய வைத்தனர். வீரியமடைந்து வரும் வைரஸ் கட்டுப்படுத்த முடியாத மனிதப் பேரழிவாக மாறும் நிலை நோக்கி வைரஸ்சின் பயணம், உழைப்பில் இருந்து மக்கள் தாமாகவே தப்பி ஓடி ஒழியும் நிலைக்கு இட்டுச் செல்லும் அபாயத்தை வைரஸ் உணர்த்த தொடங்கியவுடன் - மூலதனத்தை நடுநடுங்க வைத்துள்ளது.
வைரஸ்சை கட்டுப்படுத்தத் தவறினால் உழைப்பு நீண்ட காலத்திற்கு முடங்கிவிடும் என்ற அபாயத்தை மூலதனம் உணரத் தொடங்கிவுடன், வைரஸ்சை கட்டுப்படுத்துவதற்கான உழைப்பில் இருந்து மனிதனை தனிமைப்படுத்தும் முறையை அரசுகள் கையில் எடுத்துள்ளது. அதேநேரம் ஒரு பகுதி கூலியை வழங்கி, உழைப்பு ஆற்றலை தக்கவைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இவை எதுவும் மக்களின் மீதான அக்கறையில் இருந்தல்ல. எத்தனை மனிதர் செத்தாலும் அரசுகள் அலட்டிக் கொள்ளாது. உழைப்பு முடங்கி மூலதனம் செத்துப் போவதை, அரசுகளால் தாங்கிக் கொள்ள முடியாது என்ற உண்மை வைரஸ்சைக் கட்டுப்படுத்தும் வடிவமாக மாற்றியது. மூலதனத்துக்கு அள்ளிக் கொடுத்து மூலதனத்தின் மரணத்தை தடுக்கும் அரசுகள், மருத்துவமின்றி மக்கள் சாவதை ஒப்புக்கே அலட்டிக் கொள்கின்றன. மருந்தில்லை, மருத்துவ உபகரணங்கள் இ;லை, மருத்துவ ஊழியர்கள் இல்லை, ஆனால் மூலதனத்தை பாதுகாக்க எடுக்கும் அக்கறை மருத்துவ துறையில் இல்லை. மூலதனத்துக்கு அள்ளிக் கொடுக்கும் நிதியை, மருத்துவத்துறைக்கு கொடுக்கவும் - வளர்க்கவும் கடுகளவு கூட அக்கறை கொள்ளவில்லை. மருத்துவம் மக்களின் அடிப்படையான மனிதவுரிமையாக அங்கீகரித்து, அதை அரசு தன் சமூகக் கடமையாக பொறுப்பேற்று செயல்படத் தயாராக இல்லை. மருத்துவம் அரசின் பொறுப்பு என்பதை மறுக்கின்ற பின்னணியில் மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.
இரண்டாவது வைரஸ் பரவல் தொடங்கிய நிலையில், உழைப்பை முற்றாக முடக்குவதை முதலாளிகள் அனுமதிக்கவில்லை. உற்பத்தியை நிறுத்த அரசுகள் தயாராக இருக்கவில்லை.