சீனாவை மிஞ்சும் மரணங்கள் - பல மடங்காக மாறுவதை மேற்குலகம் தவிர்க்க முடியாது. மருத்துவரீதியாக மக்களைக் கைவிடும் அறிவுரைகளும், "ஜனநாயக" வக்கிரங்களுக்கும் எள்ளளவும் குறைச்சல் இல்லை. கொரோனோவுக்கு எதிராக, மேற்கில் அரங்கேறி வருவது ஏகாதிபத்திய வக்கிரங்கள் தான்.
வைரஸ் தொற்று தொடங்கியது முதல் அதன் பரவலை கட்டுப்படுத்தும் கொள்கை எதையும் மேற்கு கையாளவில்லை. எந்த மருத்துவ தயார்படுத்தலையும் செய்யவில்லை. தொற்று இனம் காணப்பட்டவுடன் நேரத்துக்கு நேரம் தங்கள் முந்தைய திட்டத்தை மாற்றுவது – தடுமாறுவதுமாக காலத்தைக் கடத்திய பின்னணியில், மூடிமறைத்த "ஜனநாயக" வக்கிரங்களை காறி உழிழ்ந்தனர். ஊதிப் பம்மி பிணமாகக் கிடக்கும் மேற்கத்தைய நவதாராளவாத மருத்துவ முறையையும் - கொள்கையையும் கொண்டு, எதையும் செய்ய முடியாது என்ற உண்மையை மூடிமறைக்க, எத்தனை "ஜனநாயக வேசங்கள் - நாடகங்கள். கண்ணை மூடிக் கிடக்கும் பூனை போல், முதலாளிகளின் மடியில் படுத்துக்கிடந்து உலகைக் கனவு கண்டவர்கள், விழித்தெழுந்து பார்த்தால் ஒன்றுமே இருக்கவில்லை. உலகை கொள்ளை அடித்த பணத்தை குவித்து வைத்துக் கொண்டு, உலகை மேய்கின்ற வக்கிரத்துடன் வைரஸ்சை ஒழிக்கக் கனவு கண்டவர்கள், காற்றுப்போன பலூன் போல் பம்மிப் பம்மி கையை விரிக்கின்றனர்.
மேற்கு குறித்த கற்பனைகளை தங்கள் இயலாமையால் தகர்த்துக் கொண்டு இருக்கின்றனர். தங்கள் நாட்டின் வலிமை குறித்த மேற்கத்தைய போலி பிரமைகளையும் - பிம்பங்களையும், கொரொனோ தவிடுபொடியாக்கிக் கொண்டு இருக்கின்றது.
கொரொனோ வைரஸ் மக்களைக் கொல்வதுடன், மக்களை அரசியல் மயப்படுத்துகின்றது. தாராளவாத தனியார் மருத்துவக் கொள்கையை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.
மேற்கு மருத்துவமானது தனது இயலாமையால் கோவிட் 19 நோய் தொற்றை உறுதி செய்யும் மருத்துவ முறையை கைவிட்டு உள்ளனர். நோய் அறிகுறி இருந்தால் நீங்களே உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறுமளவுக்கு, சிறப்பு மருத்துவ உதவியை கைவிட்டு இருக்கின்றது. நோய் தொற்றை உறுதி செய்யும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொண்டதன் மூலம், நோய் குறித்த அதிகாரபூர்வ புள்ளிவிபரத் தகவல்கள் எல்லாம் பொய்களாக மாறி வருகின்றது. சுவாசப் பிரச்சனை இருந்தால் மட்டும் மருத்துவ ரீதியாக அரசின் சிறப்பு உதவியை பெற முடியும், மற்றப்படி இந்த நோய் தொற்று உண்டா என்பது குறித்து அரசு அக்கறைப்படாது. இதைத்தான் பிராஞ்சு அரசு அறிவித்திருக்கும் கோவிட் 19க்கு எதிரான மருத்துவக் கொள்கை. இதுதான் பெரும்பாலான ஐரோப்ப்pய நாடுகளின் கொள்கையும் கூட, அமெரிக்கா கூட இதற்கு விதிவிலக்கல்ல.
நோயை கண்டறியும் மருத்துவ உபகரணங்கள் போதியளவில் இல்லை. நோயைத் தடுக்கும் மாஸ்க் மருத்துவமனைகளுக்கே போதுமானளவு இல்லை. தொற்று நீக்கி பெற முடியாது. சுவாசத்தை பாதுகாக்கும் இயந்;திரம் போதியளவில் இல்லை. மருத்துவர்கள், தாதிகள்… போதுமான அளவில் இல்லை. தனியார் தாராளமயத்தின் விளைவு இது. மருத்துவத்தை இலாபமாக – தொழிலாக பார்க்கும் தனியார் தொழிலாக்கியதன் பின், இலாபம் தருவது மட்டும் மருத்துவமாகியது. அத்தியாவசியமான மருத்துவ அடிப்படைகள் காணாமல் போய்விட்டது. மருத்துவம் சமூக சேவை என்பதை தாராளமயம் மறுதளித்து நீண்ட நாளாகிவிட்டது.
சீனா, தென் கொரியா கோவிட் 19 இனை எதிர்கொண்ட விதம், விமர்சனங்களைக் கடந்து மருத்துவ உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது. முன்கூட்டியே கொரேனாவை கண்டறியும் முயற்சி தொடங்கியது முதல் கொரோனோ வைரஸ்சை எதிர்கொண்ட மனித ஆற்றல்; வியக்கத்தக்கது. வீதிவீதியாக வைரஸ்சைக் கண்டறியும் பரிசோதனைகள், நோய் பரவுவதை மட்டுப்படுத்தியது.
முதலில் கொரோனோ வைரஸ் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் இருக்காத சூழலில், புதிய வைரஸ் குறித்து அலட்சியப்படுத்திய சீனா, கொரோனோ வைரஸ் பரவலை இனம் கண்டவுடன் மிகவேகமாக முடிவெடுத்து – அதைக் கட்டுப்படுத்த அதில் தலையிட்டது.
800 பேருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பை அடையாளம் கண்டவுடனேயே சீன அரசு, குறித்த பிராந்தியத்தை முடக்க முடிவெடுக்கின்றது. இத்தாலி, பிரான்ஸ்.. அளவு மக்கள் தொகை கொண்ட பிராந்தியத்தின் உழைப்பை முற்றாக முடக்கி, மனித நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியதன் மூலம்;, சீனா முழுவதும் பரவுதையும், உலகெங்கும் வைரஸ் செல்வதையும் தடுத்து நிறுத்தியதுடன், சீனா எங்கும் தீவிர கண்காணிப்பில் இறங்கியது. இதன் மூலம் தன் பிராந்தியத்தில் மேலும் பரவுவதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது.
800 கோவிட் 19 நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட காலத்தில் தொடங்கிய இந்த தனிமைப்படுத்தல் முறை, ஜரோப்பாவில் தொற்று எண்ணிக்கை 5000 தாண்டிய போதும் கூட முன்னெடுக்கப்படவில்லை. இந்த 5000 கூட சீனா போல் நோய் கண்டறியும் பரிசோதனையின்றி எடுக்கப்பட்ட ஒரு எண்ணிக்கை என்பதால், நோய் பரவல் பலமடங்காக இருக்கும் என்று மருத்துவ உலகம் எதிர்வு கூறுகின்றது. சீனாவை விட பரவல் அதிகமாகவும், மரணங்கள் சீனாவை விட பல மடங்காகவும் மாறும் என்று, மனித நேயம் கொண்ட மருத்துவ உலகம் கருதுகின்றது.
முதலாளிகளின் மடியில் படுத்துக் கிடந்தபடி வைரஸ் பரவலை தடுக்கவும் - வைரஸ்சை கண்காணிக்க எதையும் செய்யவில்லை. சர்வதேச விமானங்கள் மூலம் வைரஸ்சை இறக்குமதி செய்தனர்.
சீனா தீவிர கண்காணிப்பு மற்றும் மருத்துவ ரீதியாக முன்னேறிய நிலையில் இருந்து இதை கையாண்ட அளவுக்கு, மேற்கில் எதுவும் கிடையாது. சீனாவை மிஞ்சிய பலியிடலைத் தொடங்கி வைத்திருக்கின்றது. இன்னும் பத்து நாளில் மனிதப் பிணங்களின் மேல் ஐரோப்பிய முதலாளித்துவமும், அதற்கு தலைமை தாங்கும் "ஜனநாயகவாதிகள்" குதூகலிக்கும் தங்கள் கொள்கை முடிவுகளுடன், மனிதர்களை மிதித்து பயணித்த உண்மையை யாரும் மூடிமறைக்க முடியாது