Language Selection

மணலைமைந்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2009-போர் முடிவின் பின், எமது தேசத்தின் விடுதலை பாராளுமன்றவாதிகளினாலும், அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய அரசுகளினாலும் பெற்றுத்தரப்படும் எனும் நம்பிக்கை மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் முன்னணி, புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் புலிகளின் அமைப்புகள் என கூறிக்கொண்டவர்கள் எனப் பலர் இந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்த்தனர். இவர்களின் இந்த நம்பிக்கையூட்டல், அவர்களின் சொந்த இருப்பை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே பயன்பட்டுள்ளதென்பது இங்கு கூறித்தான், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடையமல்ல.


அதேவேளை, புலிகளுக்குப் பின்னான காலத்தில் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மை கூறிக்கொண்டவர்களுக்கு அரசியல்ரீதியாக வேறு எந்த வழியும்-தெரிவும் இருக்கவில்லை. போருக்குப் பின், போரை நடத்தி முடித்த மஹிந்த அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளின் பார்வையிலேயே இவர்களும் அரசியல் செய்யும் சூழல் இருந்தது. அந்த நிலையானது 2015 இல் மைத்ரி பதவி ஏற்கும் வரை தொடர்ந்தது.


2015- ற்கு பின் வந்த மைத்ரி-ரணில் ஆட்சியில், ஒப்பீட்டளவில் ஒடுக்குமுறைகள் குறைந்து காணப்பட்டிருந்தது. அதேவேளை:


- தமிழ் தேசத்தில் எல்லைகளும், நிலங்களும், பாரம்பரிய பூமியும் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக பவுத்த-சிங்கள மேலாதிக்க சக்திகள் தமது உடைமையாக்கிக் கொண்டனர்.


- சில மாதங்களுக்கு முன் ஒரு பிக்குவின் உடல், தமிழ் பாரம்பரிய பூமியின், பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்ட சைவமத ஆலயத்தின் முற்றலில் வைத்துத் தகனம் செய்யப்பட்டது.
-கன்னியா வெந்நீரூற்று, தந்திரிமலை என தமிழ் வாழ்வியல் எச்சங்களும், குறியீடுகளும் கபளீகரம் செய்யப்பட்டது.


- சிங்கள முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தாலும், அதன் தமிழ்-முஸ்லீம் அடிவருடிகளாலும் மஹிந்த ஆட்சியில் கிழக்கின் அம்பாறை, மற்றும் திருகோணமலை மீனவர்களின் பாரம்பரிய கடற்கரை பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டன. அவற்றில் ரணில்-மைத்ரி காலத்தில் உல்லாச விடுதிகள் அமைக்கப்பட்டன. வடக்கின் கிழக்கு மற்றும் மேற்கு கரையோரமும் -கடலும் தென்னிலங்கை மீனவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது.


- பல பத்து வருடங்களுக்கு முன்னமே கொஞ்சம் கொஞ்சமாக, தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்கில், வெலி ஓயா என அழைக்கப்படும் மணலாற்றில் சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது. போரின் காரணமாக கொஞ்சமேனும் தடுக்கப்பட்ட இக் குடியேற்றம், 2009 க்குப் பின் அதி வீச்சில் இன்றும் தொடர்கிறது. இது வடக்கு கிழக்கு தமிழர் வாழ்விடங்களை நிரந்தரமாக பிரித்து விடும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றம் ஆகும். இன்று 18 கிராமங்களைக் கொண்டிருக்கின்றது வெலிஓயா.


இப்படியாக தமிழர் தாயகம் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து -அழிக்கப்படும் நிலை ரணில்-மைத்ரி காலத்தில் தொடர்ந்த போதும் கூட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்ட பாராளுமன்றவாதிகள், கட்சிகள் எவற்றாலும் அவற்றைத் தடுக்க முடியவில்லை.


மைத்ரி-ரணில் ஆட்சியில் புதிய அரசியல் யாப்பை உருவாக்கி, அதன்மூலம் தமிழ் தேசத்துக்கு உரிமைகளை பெற்றுக்கொடுப்பதாக சிலர் கூவித் திரிந்தனர். இந்த முயற்சி சிலவேளை உண்மையாகவே பயனளித்து விடுமோவென்று பயந்துபோய், தமிழ்தேசிய பாராளுமன்றவாதிகளில் ஒரு பகுதியினர்(பெரும்பாலும் பாராளுமன்ற தேர்தலில் தோற்றவர்கள்), ஒரு நாடு- ஒற்றைநாடு- ஏக்கராஸியா-ஏக்க ராசியை, ஈக்கடராஜ்யம் என்றால் என்னவென்று மக்களுக்கு வகுப்பெடுத்தார்கள். கூட்டமைப்பு தலைவர்களை துரோகிகள் என்கிறார்கள். இப்போ புதிய அரசியல் யாப்பும் வரவில்லை. அதை உருவாக்க முயற்சித்தோரும் மறந்து விட்டனர். எதிர்த்தோருக்கும் அது பற்றி நினைவில்லை.


இப்போது, ஜனாதிபதி தேர்தல் நடந்து, மஹிந்த குடும்பம் பதவியேற்றுள்ளது. வழமையாக, தாம் ஆட்சிக்கு வந்தால் "இனப் பிரச்சனைக்கு" தீர்வு காணப்போவதாக இலங்கையில் 77 ஆம் ஆண்டுக்கு பின் நடந்த எல்லாத் தேர்தலிலும் பிரதான கட்சிகளால் வாக்குறுதி அளிக்கப்படுவது வழமை. அது ஒரு சம்பிரதாய நிகழ்வு. ஏன், ஒருமுறை தேர்தலில் போட்டியிட்ட ஜே.வி.பியின் சார்பில், ரோகண விஜயவீர கூட தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டென்று யாழ்ப்பாணத்தில் அறிவித்தார். ஆனால், 2019-ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் நடந்த காலத்தில் வேட்பாளர்கள் எவரும் மறந்தும் கூட, தமிழ் தேசத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு தீர்வை முன்வைக்கப்போவதாக கூறவில்லை.


ஆனால், தேர்தலில் மேலாதிக்க பவுத்த-சிங்கள கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் பெருந்தொகையில் வாக்களித்தாலும் கூட - அவர்கள் தமிழ் தேசத்தை மிக கொடூரமாக ஒடுக்கும் மஹிந்த குடும்பத்தவருக்கும் - அவர் சார்ந்த கட்சிகளுக்கும் எதிராகவே வாக்களித்தனர். சஜித் பிரேமதாசவுக்கான வாக்கு அவர் மீதான அரசியல் விருப்பில் தமிழ் மக்களால் அளிக்கப்படவில்லை. மாறாக, ஓரளவுக்கேனும் தமிழ் தேசத்தின் மீதான ஒடுக்குமுறை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் என்ற நப்பாசையிலேயே சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தனர். இவ் வாக்களிப்பின் மூலம் மக்கள் இன, மத, மொழிரீதியாக - தம் தேசத்தின் மீதான ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தியுள்ளனர்.


இலங்கை என்ற நாடு ஒன்றுபட்ட நாடல்ல. அது இரு தேசங்களாக, மொழி, புவியியல், இன, மத, கலாச்சார அடிப்படையில் பிளவுபட்டுக் கிடக்கிறதென்பதே நடந்து முடிந்த தேர்தலை முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட தமிழ்தேச மக்கள் சொல்லும் செய்தியாகும்! இதையே தான் மலையக மற்றும் முஸ்லீம் தேசிய இனங்களும் செய்துள்ளார்கள்.


பவுத்த-சிங்கள அதிகாரத்துக்கு சாமரம் வீசுவோரும், அந்த அதிகாரபீடங்களின் அடியில் கொட்டிக் கிடக்கும் எச்சங்களை பொறுக்குவோரும், "தமிழ் சிறுபான்மையினம்" தற்போது அதிகாரத்துக்கு வந்துள்ள அரசுக்கு வாக்களிக்கவில்லையே என "கவலை" கொள்கின்றனர். ஆட்சியைக் கைப்பற்றியுள்ள மஹிந்த குடும்பக் கனவான்களுக்கு வாக்களிக்க மறுத்ததன் மூலம், அவர்களின் கருணையை-சகாயத்தை, "வடக்கு -கிழக்கு தமிழர்கள் உட்பட சிறுபான்மையினங்கள்" பெறத் தவறிய குற்றத்தைப் புரிந்ததாக கூக்குரலிடுகின்றனர்.


கொடுங்கோன்மை, அரசாட்சியை கைப்பற்றியதற்காக, நாங்கள் அவர்களிடம் கையேந்த வேண்டுமென விரும்புவோரும், அரசியற் பச்சோந்திகளும் எம்மை "சிறுபான்மை" என விளிக்கின்றனர். இப்போலிகள், திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தை இருட்டடிப்புச் செய்கின்றனர்!


நாங்கள், இலங்கை-ஸ்ரீலங்கா என்ற நாட்டின் சிறுபான்மை இனமல்ல !!!!!!!!
நாம் தமிழ் தேசத்தவர் !!!!!!!!!


ஒரு ஒடுக்கப்பட்ட தேசத்தின் மக்கள்.


அனைத்து ஆட்சியதிகார உரிமைகளுக்கும் உரித்துடையவர்கள் !!!!!!!!!!!!!!


அவ் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள்.

 

இந்நிலையில்:


தமிழ் முற்போக்கு தேசிய சக்திகளின் வளர்ச்சியென்பது தவிர்க்கப்பட முடியாததொன்று. அவ் வளர்ச்சி தவறுகள் களைந்து- குறைந்தது முதலாளித்துவ ஜனநாயகப் பண்புகளைக் கொண்டதாகவாகுதல் இருக்கவேண்டும். இதன் அர்த்தம் பன்மைத்துவம் Pluralism - ஜனநாயகம் democracy - சமத்துவம் Equality போன்ற குறைந்த பட்ச உள்ளடக்கத்தையாவது ஒரு முற்போக்குத் தமிழ் தேசியம் கொண்டிருக்கவேண்டும். பெண்விடுதலைக்கான செயற்பாடு, இனவாத எதிர்ப்பு, பிரதேசவாத எதிர்ப்பு, அரசியற் பன்மைத்துவத்தை ஏற்றுகொள்ளல்- அதை வளர்த்தல், சர்வதேசியத்துவம் போன்ற நடைமுறைகளை கொண்டிருக்கவேண்டும்.


இவ்வாறான முற்போக்கு இயக்கத்தை வளர்க்க உண்மையான தேச விடுதலைக்கான சக்திகள் பங்களிக்க வேண்டும். இதுவே இன்றுள்ள அரசியற் சூழலில், தமிழ் தேசம் தன்மீதான ஒடுக்குமுறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான - முன்னெடுத்தலுக்கு வழிவகுக்கும் நடைமுறை வேலைகளில் மிக முக்கியமானவற்றுள் ஒன்றாகும்.