Language Selection

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்றைய மனிதனின் நடத்தைகள் தொடர்ந்தால், பூமியில் உயிரினம் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். மனித நடத்தைகள் என்றால் அவை எவை? அதை யார் தீர்மானிக்கின்றனர்? அரசுகள் என்ன செய்கின்றது?

பல்லுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் கொள்கை மன்றத்தால் (IPBES) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது, மனிதன் இயற்கை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி எச்சரித்திருக்கின்றது.

அதேநேரம் 2019 மே மாதம் ஐ.நா. வெளியிட்ட அறிக்கை ஓன்று, ஒரு மில்லியன் விலங்கு மற்றும் தாவர இனங்கள், அழிவின் விளிம்பில் இருப்பதைக் சுட்டிக்காட்டியுள்ளது. IPBES மனித இனம் தோன்றுவதற்கும் பல்லாயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே உயிர் வாழ்கின்ற 10 லட்சம் உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போய்விடும் நிலையில் உள்ளதாக கூறுகின்றது.

இதன் பொருள் மனிதன் உயிர் வாழ்வதற்கான அடிப்படைகளை, மனிதன் இழந்துவிடுவான் என்பதுதான். மனிதர்கள் இல்லாதிருந்தால் சாதாரணமாக நடைபெறும் தாவர இனங்களின் அழிவின் வேகத்தைக் காட்டிலும், 500 மடங்கு அதிக வேகத்தில் உயிரின அழிப்பு நடப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி நடக்கும் இயற்கையின் அழிவை, எந்த தொழில்நுட்பத்தினையும் கொண்டும் ஈடு செய்ய முடியாது. இதன் பொருள் இயற்கை மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது.

மூலதனக் குவிப்பாக (மனிதர்கள்) இயற்கை அமைப்பில் ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் மிகப்பெரிய மாற்றங்களால், 75 சதவீத நிலப்பரப்பு அதன் இயற்கைத் தன்மையினை இழந்து விட்டது. 66 சதவீத கடல் பகுதி பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றது. 85 சதவீத ஏரி, குளம் போன்ற நீராதாரங்கள் தொலைந்து போய்விட்டன. இயற்கை இயற்கையாக இல்லை, அதாவது உயிர் வாழக்கூடிய தகுதியை இயற்கை இழந்துள்ளது. குறிப்பாக மனிதன் அல்லாத பிற உயிரினங்களின் அழிவு தொடங்கிவிட்டது என்பதே இதன் பொருள்.

10 லட்சம் மரங்கள் உள்ளிட்ட உயிரினத் தொகுதியின் அழிவை உருவாக்கும் சிலர் ஒரு பக்கம் இயற்கை அழிவை வாழ்க்கை முறையாகக் கொண்டாட, 200 கோடி மக்கள் தங்களது முதன்மை ஆற்றல் தேவைக்காக (எரிபொருள்) இந்த மரங்களை நம்பியுள்ளனர்.

400 கோடி மக்களின் மருத்துவத் தேவையை, இந்த இயற்கை தான் நிறைவு செய்கின்றது. உதாரணமாக புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் 70 சதவீத மருந்துகள் இயற்கையாக கிடைப்பவை, அல்லது இயற்கை மூலப்பொருளைக் கொண்டு உருவாக்கப்படுபவையே.

இன்று 75 சதவீதத்திற்கும் மேலான உணவுப் பயிர்களின் மகரந்த சேர்க்கை, பறவைகள் மற்றும் விலங்குகளின் உதவியோடுதான் நடைபெறுகின்றது. இதுதான் இயற்கை. மனிதன் உண்ணும் உணவு பிற உயிர் வாழும் தொகுகளில் கூட்டுச் செயலில் அடங்கி இருக்கின்றது. அது நின்று போனால், அழிந்து போனால், மனிதன் உயிர் வாழ முடியாது.

மூலதனத்தின் வரம்பில்லாத செயற்பாடுகளால் உமிழப்படும் கரியமில வாயுவினை உட்கிரகித்துக் கொள்வது இயற்கையான நிலப்பரப்பும், கடலும் தான். இந்தக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. 90 சதவீதமான காபனீர் ஓக்சைட்டை உறிஞ்சும் கடல் வெப்பமடைவதால் மரணித்து வருகின்றது. காற்று நஞ்சாகி வருகின்றது.

மரத்தை அழிப்பதோ 45 சதவீதம் அதிகரித்துள்ளது, மகரந்த சேர்க்கையினை நிகழ்த்தும் தேனீ உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து வருகின்றது. நிலப் பயன்பாடு மாற்றத்தால், பயிர்கள் உற்பத்தி பெரிய அளவில் குறைந்து வருகின்றது. இது மிகப்பெரிய உணவுப் பஞ்சத்திற்கு காரணமாக மாறப்போகின்றது.

இன்று உணவு உற்பத்திக்கு பயன்படும் விதைகளை நான்கு பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. இப்படி கட்டுப்படுத்தியதன் பின்பாக, மனித உணவிற்கு பயன்பட்ட 75 சதவீதமான பல்லுயிர் தொகுதி மனித உணவு தொகுதியில் இருந்தே அழிக்கப்பட்டு இருக்கின்றது. சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட விதைகள் தவிர்ந்த பிற விதைகளையோ, அதன் உற்பத்தியோ சந்தைப்படுத்த முடியாத பன்னாட்டு மூலதனச் சட்டங்கள் மூலம், பல்லுயிரின உணவு தொகுதியை திட்டமிட்டு அழித்து வருகின்றனர். இதன் மூலம் பாரம்பரியமான மனித அறிவியல் கண்டறிந்த விதைகளில், 75 சதவீதமான உற்பத்தியில் இருந்து அகற்றி அழித்திருக்கின்றது.

கடலோரப் பகுதிகளில், கடற்கரை சோலைகளும், பவளப்பாறைகளும் அழிக்கப்படுவதால் புயல்களின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. 100 மில்லியன் - 300 மில்லியன் மக்கள் புயல் மையங்களுக்குள் வாழ்வதுடன், கடலோரத்தில் நடக்கும் சூழலியல் சிதைவுகளால் அந்த மக்களின் அடிப்படை வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

2016ம் ஆண்டில், உணவிற்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்படுத்தப்பட்ட 6,190 வகையான வளர்ப்பு விலங்கினங்களில் 55 வகையான நாட்டு ரக விலங்கினங்கள் 2019 இல் அழிந்து விட்டன, 1000 க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் அழியும் நிலையில் உள்ளது.

கடந்த 250 ஆண்டுகளில் காடுகளில் இருந்த சுமார் 600 தாவர இனங்கள் அழிந்து போயிருப்பது தெரிய வந்துள்ளது. உண்மையிலேயே அழிந்து போன இனங்களின் எண்ணிக்கையே தவிர, முழுமையானதல்ல. பறவைகள், பாலூட்டிகள் மற்றும் நீர் நில வாழ் உயிரினங்களில் ஒட்டுமொத்தமாக அழிந்து போன எண்ணிக்கையைவிட, இது இரு மடங்கு அதிகம்.

மூலதனத்தின் வரைமுறையற்ற சூறையாடலால் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள், சுத்திகரிக்கப்படாத ஊரக - நகர்ப்புற கழிவுகள், தொழிற்சாலை மாசுகள், சுரங்கங்கள் தோண்டுதலால், விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், எண்ணெய் கசிவுகள், நச்சு கழிவுகள் குவிப்பு ஆகிய சிக்கல்களால், மண்ணும், நீரும், காற்றும் இயற்கைத் தன்மையை இழந்துள்ளது.

இவை மனிதனை வாழ வைக்கவோ, மனித தேவையை பூர்த்தி செய்யவோ எனின் இல்லை. என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். உண்மையில் உலக உணவுத் தேவையினை திருப்தி செய்யுமளவிற்கு உணவு உற்பத்தி நடைபெறுகின்றது. ஆனால் உலகில் 11 சதவீதமானவர்கள் உண்ண உணவின்றி இருக்கின்றனர். உலகில் 20 சதவீத இளவயது மரணங்கள், உணவு இன்றி தான் நிகழ்கின்றது. உண்மையில் 1970க்கு பிறகு உணவு உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்த போது, உணவு பற்றாக்குறை ஏற்படுவதன் காரணம் சனத்தொகையோ இயற்கையோ அல்ல, சூறையாடும் ஏகாதிபத்திய மூலதனக் கொள்கையே காரணம்.

கடந்த 50 வருடங்களில் மக்கள்தொகை இரண்டு மடங்காக உயர்ந்த போது, உலகப் பொருளாதாரமோ நான்கு மடங்கு அதிகரித்தது. உலக வணிகச் சந்தை 10 மடங்காக அதிகரித்துள்ளது, அதாவது செல்வம் சில நாடுகளை நோக்கியும், தனிநபர்களை நோக்கியும் பயணிக்கின்றது. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களோ அடிப்படை வசதிகளை இழந்து, உயிர் வாழப் போராடுகின்றனர்.

செல்வக் குவிப்பிற்கான மூலதனத்தின் நடத்தைக்கு ஒருங்கிணைந்த ஆற்றல் தேவைகள் அதிகரித்ததன் மூலம், இயற்கையோ சுடுகாடாகி வருகின்றது. மனிதர்களுக்கு தேவையான வளங்களை இயற்கை நிலையாக வழங்கிய போதும், இயற்கையை பகிர்ந்து கொள்வதில் நிலவும் சமத்துவமின்மைதான், இன்றைய ஓடுக்குமுறைகள் தொடங்கி இயற்கை சிதைவுக்கும் காரணமாக இருக்கின்றது. இயற்கையை குறிப்பிட்ட சிலரும், சில நாடுகளுக்கு சுரண்டிச் சூறையாடி நுகர, பலருக்கு, பல நாடுகளுக்கும் எதுவும் கிடைப்பதில்லை. மாறாக அதை பறித்துச் செல்லுகின்றனர்.

மனிதனுக்கு எதிராக மட்டும் மூலதனம் செயற்படவில்லை. இயற்கையையே அழிக்கின்றது. இயற்கையின் அழிவு, உயிரின தொகுதியின் அழிவாக மாறியிருக்கின்றது. இயற்கை தானாக தன் போக்கில் இதைச் செய்யவில்லை. மூலதனத்தின் நலன்களே, இயற்கையை அழிக்கின்றது. மூலதனத்தின் நலன்களே மனித நடத்தையாக, அதை அரசு சட்டரீதியாக பாதுகாக்கின்றது. சட்டம் வன்முறை அடிப்படையில் நிறுவப்பட்ட சர்வாதிகாரம்.

மூலதனத்தைக் குவிப்பதை குறிக்கோளாகக் கொண்ட நுகர்வு முறையிலான தனியுடமை உற்பத்தி முறை இயற்கையை பாதுகாப்பதில்லை. இயற்கையை சந்தைப் பொருளாக்கி அழிக்கின்றது.

இப்படி உயிர் வாழ முடியாத இயற்கையின் அழிவை மார்க்சின் மூலதனமோ, வர்க்கப் போராட்டமோ சொல்லவில்லை, இயற்கை குறித்த இன்றைய அறிவியல் தகவல்களே கூறுகின்றது. அடுத்த தலைமுறை உயிர் வாழ தகுதியற்ற சூழலை உருவாக்குவது, இந்த தலைமுறையின் வாழ்க்கை முறையாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது. மார்க்சியத்தின் பொருளாதாரக் கொள்கை இயற்கை விதியைக் கோருவதுடன், அது மட்டுமே இயற்கை அழிவை தடுக்கும் தீர்வாக இருப்பதை, இயற்கை அழிவு குறித்த அறிவியல் எடுத்துக் காட்டுகின்றது. தனியுடமை பொருளாதார கட்டமைப்பு இயற்கையை அழிப்பதாகவும், பொதுவுடமை பொருளாதாரம் மட்டுமே இயற்கையை பாதுகாக்கும். இதை தான் இயற்கையின் அழிவு அடித்துக் கூறுகின்றது. தனியுடமை முறைக்கு எதிரான வர்க்கப்போராட்டம் இன்றி, இயற்கையை பாதுகாக்க முடியாது.

பரம்பரை சொத்துடமையை பாதுகாத்தும், பெருப்பித்தும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் தனியுடமை முறையால், அடுத்த தலைமுறை உயிர் வாழத் தகுதியான இயற்கையை பாதுகாத்துக் கொடுக்க முடியாது. இது ஒன்றுக்கொன்று முரணானது.