Language Selection

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பா.ஜ.கவுக்கும் பிற கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்;? பா.ஜ.கவுக்கும் போலி கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வேறுபாடு?

இனம், மதம், சாதியை… முன்வைத்து செயற்படும் பாசிசக் கட்சிகளின் செயற்பாடுகளை, எதிர்த்துப் போராடும் ஒரு கட்சி தோற்று இருந்தால் மட்டுமே, ஏன் தோற்றனர் என்ற கேள்வியை எழுப்பமுடியும். அதேநேரம் பிரகாஷ் ராஜ், கன்னையா குமார்.. போன்றோர் தோற்றது ஏன் என்று கேள்வி எழுகின்றது.

கட்சி அரசியலை எடுத்தால் இந்துத்துவ பார்ப்பனிய பாசிசத்தை முன்வைக்கும் பா.ஜ.கவை எதிர்த்து, எந்தக் கட்சியும் மக்களை அணிதிரட்டவில்லை. மாறாக எல்லாத் தேர்தல் கட்சிகளும், அதே கொள்கையை கொண்டு இருக்கின்றது என்பதே உண்மை. வெற்றி பெற்ற தி.முக கூட இதற்கு விதிவிலக்கல்ல.

பொருளாதாரக் கொள்கையை எடுத்தால், நவதாராளவாதத்தை முன்னெடுப்பதையே அனைத்து தேர்தல் கட்சிகளும் முன்வைக்கின்றது.

ஆக தேர்தல் கட்சிகளிடையே எந்த வேறுபாடுகளும் கிடையாது. ஆனால் இன, மத, சாதி, நவதாராளவாதத்தை முன்னெடுப்பதில் தீவிரவாத, மிதவாத அடிப்படையிலான அளவு வேறுபாடுகள் மட்டுமே உண்டு. இது மட்டும் முகமாற்றத்துக்கு வாக்களிப்பதை தீர்மானிப்பதில்லை.

முகமாற்றதுக்கு வாக்களிப்பு நடக்கவேண்டுமாயின், தீவிரமான மக்கள் திரள் போராட்டங்கள் சமூகத்தில் நடந்து இருக்கவேண்டும். தமிழகத்தில் தேர்தல் அரசியலை முன்வைக்காத கட்சிகளின் மக்கள் திரள் போராட்டங்கள் தான், திமுகவின் வெற்றியே ஒழிய திமுகவின் கொள்கையோ நடைமுறையோ அதை தீர்மானிக்கவில்லை. மக்கள் திரள் போராட்டமல்லாத பிரதேசங்களில் பாசிசம் இயல்பான மனித வாழ்வாகி விடுகின்றது.

இந்தியாவில் பாசிசம் என்பது இயல்பானதாகவும், பழக்கப்பட்டதாகியும் இருக்கின்றது. ஒடுக்குமுறை தனக்கல்ல, தான் ஒடுக்கக்கூடிய பிறிதொரு தரப்புக்கு என்பதால், ஒடுக்கும் அதிகாரம் கொண்ட ஒருவராக இயல்பிலேயே மாறி, ஒவ்வொருவரும் தன்னளவில் பாசிட்டாகி விடுகின்றனர்.

இந்த அடிப்படையில் தான் பாசிசம் வெற்றி பெறுகின்றது. பாசிட்டுகள் மக்கள் ஆதரவு பெறாமல் அதிகாரத்துக்கு வருவதில்லை. ஒடுக்குமுறைகள் மூலமும், சமூகத்தை அச்சமூட்டுவதன் மூலமும் அதிகாரத்தை பெறுவதில்லை. மாறாக கிடைத்த அதிகாரத்தை தக்க வைக்கவே அச்சமூட்டுகின்றது. கிட்லரின் தலைமையிலான நாசிகள் முதல் பிரபாகரனின் புலிகள் வரை, மக்கள் ஆதரவு பெற்றுதான் பாசிசத்தை சமூகத்தில் நிலைநாட்டினார்கள்.

இன்று மோடி, சீமான்.. போன்ற எல்லாவகையான பாசிட்டுகளும், இந்த வகையில் தான் தங்களை முன்னிறுத்துகின்றனர். இன, மத, சாதியை.. முன்னிறுத்தி பேசும் தேசியவாத பாசிசமெல்லாம் மக்களை தன் பின்னால் திரட்டுகின்றது என்பதுதான் உண்மை. அறிவு மற்றும் வாழ்வில் போராட்டங்கள் மூலமல்ல. அறிவுக்குப் புறம்பான நம்பிக்கைகள், பிரமைகள், உணர்ச்சிகள் மூலமும், நிலவும் சமூக ஒடுக்குமுறைகளை அளவுரீதியாக வன்முறை கூறாக சமூகத்தில் இயல்பாக்குவதன் மூலமே பாசிசம் மக்களை தன் பின்னால் அணிதிரட்டுகின்றது. அதாவது சமூகத்தில் நிலவும் பிற்போக்கான ஒடுக்கும் கூறுகளை முன்னிறுத்தி, அதை நடைமுறைக்கு கொண்டு வந்து, மக்களை தனக்கு வாக்களிக்குமாறு கோருகின்றது.

சீமான்.. போன்ற பாசிட்டுகள் அதிகாரத்தை பெற சமூகத்தில் இயங்குகின்ற உதிரி நபர்களின் தனித்துவமான சமூகப் பாத்திரத்தை உள்வாங்கி அவர்களை இனவெறி கொண்ட கும்பலாக்கிக் கொள்வதன் மூலம் தங்கள் பாசிச அதிகாரத்தை நிலைநாட்ட முனைகின்றனர். இன, மத, சாதியை.. முன்வைக்கும் இந்துத்துவ பார்ப்பனிய காப்பரேட் பாசிசத்தை எதிர்த்தல்ல. மாறாக பாசிசம் இயல்பாகவே மறைமுகமான கூட்டணியை அமைக்கின்றது.

இங்கு பிரகாஷ் ராஜ், கன்னையா குமார்.. போன்றவர்கள் பாசிசம் குறித்த சிறந்த உரைகள் மூலம் மாற்றத்தையும், அதற்கான நம்பிக்கையையும் முன்வைத்தனர். ஆனால் தோற்கடிக்கப்பட்டனர்.

கன்னையா குமார் என்ன சிறப்பான உரையை முன்வைத்தாலும், அவர் சார்ந்து நின்ற கட்சி போலியான கம்யூனிசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவ பார்ப்பனிய காப்பரேட் மயத்தையே தன் பங்குக்கு முன்வைத்துள்ளதுடன், அதிகாரத்தில் இருக்கும் போது ஒடுக்குமுறைகளை கையாண்டு வந்திருக்கின்றது. மக்களின் தலைமையாக நடைமுறையில் இருந்ததில்லை, இருக்கப்போவதுமில்லை;. கன்னையா குமார் வெற்று அறிவு புரட்சியாகி விடுவதில்லை. எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமிக்க நடைமுறை தேவை. இதுதான் பிரகாஷ் ராஜ்க்கும் நடந்தது.

இந்தியாவில் சாதியம், மதம், இனம்.. என்று மனிதனை மனிதன் ஒடுக்குகின்ற சமூகக் கூறுகளின் மீது தான், தேர்தல் வெற்றிகள் பெறப்படுகின்றது. இதன் பொருள் தோற்றவர்கள் அதை திறம்பட முன்வைக்கவும், நடைமுறைப்படுத்தவும் முடியாதவராக இருக்கின்றனர் என்பது தான். இந்தியாவில் தேர்தல் கட்சிகள் இனம், மதம், சாதி கடந்து, மனிதத்தை முன்வைத்து வாக்கு கேட்கின்ற கட்சிகளேயல்ல.

தேர்தல் வழியை முன்வைக்கும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, இன-மத-சாதியை முன்னிறுத்தும் கட்சிகளாகவே இருக்கின்றது. இனம், மதம், சாதியை முன்னிறுத்தி பாசிசத்தை பிரச்சாரமாகவும், அதையே வன்முறையாகாவும் முன்னெடுக்கும் கட்சிக்கு நிகராக, அதை தங்கள் கட்சிக் கொள்கையாகக் கொண்ட மிதவாதக் கட்சிகள் எப்படி பெற்றி பெற முடியும்? அது தேர்தலில் அம்மணமாகி, தோற்று இருக்கின்றது.

பாசிசம் சமூகத்தின் சிறுசிறு முரண்பாடுகளைக் கூட அரசியல் மயமாக்குகின்ற நடைமுறைக் களத்தில் இருந்து தான் தன்னை அமைப்பாக்கி வளருகின்றது. தேர்தல் வழியை முன்வைக்காத கட்சிகள் இதை செய்வதில்லை என்ற உண்மைதான், பாசிசத்தின் பின்னால் மக்களை அணிதிரட்டுவதற்கான காரணமாகி விடுகின்றது.

தேர்தல் மூலம் பாசிச அதிகாரத்தைக் கோரும் தரங்கெட்ட இந்திய தேர்தல் அரசியலானது, வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் பொருளாக்கிவிட்டது. அரசியல் என்பது சுய விளம்பரமாகிவிட்டது. தேர்தல் கமிசன் பாசிட்டுகளின் எடுபிடியாகிவிட்டது. அரசு உறுப்புகள் பாசிசத்தை தூக்கி கொண்டாடும் காவடியாகிவிட்டது. தேர்தல் முடிவை தீர்மானிக்கும் வாக்கு முதல் அதை போடும் இயந்திரம் வரை .. எல்லாம் நம்பிக்கையற்ற உறுப்பாகி, சமூகத்தின் முன் பொய்யாகிவிட்டது. தேர்தல் மூலம் (முக) மாற்றம் என்பது கானல் நீராகிவிட்டது. சமூகத்தில் எஞ்சி இருப்பது, தேர்தல் வழியை முன்வைக்காத கட்சிகளும் - மக்கள் திரள் பாதை மட்டும் தான். இது மட்டும் தான் பாசிசத்தையும், காவிமயமாக்கத்தையும், காப்பரேட் மயமாவதையும் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டதாக, இன்னமும் சமூகத்தில் எஞ்சி இருக்கின்றது.