ஏறத்தாழ 4 இலட்சம் பேர் பொறுக்கித் தின்ன போட்டி போட்ட உள்ளாட்சித் தேர்தலையும், அதிகாரமில்லாத உள்ளாட்சி அமைப்புகளால் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும், அதிகாரத்தில் மக்கள் பங்கேற்பதாகக் காட்டி ஏய்க்கும் மோசடிகளையும் அம்பலப்படுத்தி ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் ""பொறுக்கித் தின்ன
போட்டி போடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!'' என்ற மைய முழக்கத்துடன் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் வீச்சாக அரசியல் பிரச்சார இயக்கத்தை நடத்தின.
உள்ளாட்சித் தேர்தல்கள் நீண்டகாலமாகவே நடப்பவைதான் என்றாலும், இன்றைய மறுகாலனிய சூழலில் இவை புதிய பரிமாணத்தைப் பெற்று வருகின்றன. தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் விளைவாக விவசாயம் மற்றும் சிறுதொழில்களின் அழிவு; ஆறுகள், ஏரிகள், காடுகள், மலைகள், கனிவளங்கள் உள்ளிட்ட இயற்கை மூலாதாரங்கள் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் வெறிகொண்டு ஆக்கிரமித்து வருவதும், இவற்றுக்கு எதிராக மக்கள் எதுவும் செய்ய இயலாத சூழ்நிலையில், இந்த நாடாளுமன்ற அரசியலமைப்பு முறையில் மக்கள் நம்பிக்கை இழந்துவிடாமலிருக்க, ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டு இயங்கி, இந்த அரசியலமைப்பில் தாங்களும் பங்கேற்பதாக மக்களைக் கருதச் செய்கின்றன. அதிகாரப் பரவல், உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கான இடஒதுக்கீடு, தலித்துகளுக்கான இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களைப் பரவலாக்குதல் போன்றவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன. உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள், தரகுப் பெருமுதலாளிகள் மற்றும் இவர்களது எடுபிடிகளான தன்னார்வக் குழுக்கள், உள்ளூராட்சிகள் மீதான தமது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் இந்த ஆளும் வர்க்க அரசியலுக்கான ஏஜெண்டுகளை உருவாக்குகின்றன. இத்தகைய நபர்கள் புரட்சிக்கு எதிரான அரசியல்படையாகவும் ஆள்காட்டிகளாகவும் அடிமட்டத்திலேயே உருவாக்கப்படுகிறார்கள்.
இந்த அரசியல் ரீதியான அபாயம்தான் உள்ளாட்சித் தேர்தல் தோற்றுவிக்கும் மிக முக்கியமான அபாயம். எனவே, தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் என்பது பழைய வகைப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அல்ல. இது, மறுகாலனிய சூழலில் ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரக உள்ளாட்சித் தேர்தல்; சாதிவெறியும் பொறுக்கி அரசியலும் கைகோர்த்துக் கொண்டு, ஊர்ச் சொத்தைக் கொள்ளையிட சட்டபூர்வ ஏற்பாடு செய்துதரும் தேர்தல்.
அயோக்கியத்தனமான இம்மோசடித் தேர்தலைத் தோலுரித்து, மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராட அறைகூவியழைத்து, பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு மக்களிடம் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சாரத்தோடு, தொடர்ச்சியாக தெருமுனைக் கூட்டங்களையும் இப்புரட்சிகர அமைப்புகள் நடத்தின, முழக்கப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், தட்டிகள், வீடுவீடாகப் பிரச்சாரம் எனப் பல வடிவங்களில் நடந்த இப்பிரச்சார இயக்கத்தை உற்சாகத்தோடு உழைக்கும் மக்கள் வரவேற்று ஆதரித்தனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் வட்டார வி.வி.மு. 8.10.06 அன்று நாள் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சைக்கிள் பிரச்சாரப் பேரணியோடு தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது.
இவ்வமைப்பினர், உலகவங்கி ஆசிபெற்ற ""கோவிந்தா'' என்ற வேட்பாளர் ""கன்னக்கோல்'' மற்றும் ""அல்வா'' சின்னத்தில் நிற்பதாகச் சித்தரித்து, ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்க அனுமதிக்குமாறு கோரி அவர் அள்ளி வீசும் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு நையாண்டி பாணியில் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. சிதம்பரத்தில் நடராசர் கோவிலில் தேவாரம் பாடத் தடைவிதித்து தீண்டாமையை நிலைநிறுத்தி வரும் தீட்சத பார்ப்பனர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதையும், அவர்களை ஆதரிக்கும் ஓட்டுக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி வெளியிடப்பட்ட பிரசுரமும் பெருத்த வரவேற்பைப் பெற்றன. திருச்சியில், கல்லூரிகளின் வாயிலருகே நடந்த தெருமுனைக் கூட்டங்களை போலீசு தடுக்க முற்பட்ட போது, மாணவர்களே வெகுண்டெழுந்து தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சாரம் தொடர ஆதரவாக நின்றனர். திருவரங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் நடந்த தெருமுனைக் கூட்டங்களும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவினர் நடத்திய வீதிநாடகம் புரட்சிகரப் பாடல்களும் மக்களிடம் உற்சாகமான வரவேற்பைப் பெற்றன.
உடுமலையில் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சார சுவரொட்டி ஒட்டிய தோழர்களை இழுத்துச் சென்ற போலீசு, அவர்களது பெற்றோரை அழைத்து மிரட்டியது. இன்னும் பல பகுதிகளில் சுவரொட்டிகளைப் போலீசார் கிழித்தெறிந்ததோடு, புரட்சிகர அமைப்புகளால் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சார தட்டிகளைத் திருடிச் சென்றனர். பல பகுதிகளில் போலீசு, தெருமுனைக் கூட்டம் நடத்தக் கூட அனுமதி மறுத்து "ஜனநாயகக் கடமை'யாற்றியது. இச்சட்ட விரோத அச்சுறுத்தல்களைத் துச்சமாக மதித்து, உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சாரத்தை தமக்கே உரித்தான வீரியத்தோடு இப்புரட்சிகர அமைப்புகள் நடத்தியுள்ளன. பணபலம், குண்டர்பலம், சாதிய பலத்தோடு ஓட்டுப் பொறுக்கிகள் நடத்திய ஆரவாரப் பிரச்சாரத்துடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவானதுதான் என்றாலும், மறுகாலனியாக்கத்துக்கு எதிரான இப்புரட்சிகர அரசியல் பிரச்சாரம் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக உயர்வானது.
— பு.ஜ. செய்தியாளர்கள்.