பொதுவெளியில் செயற்படும் பெண்களுக்கு எதிரான, பாலியல் தாக்குதல்களைச் செய்பவர்கள் யார்? இந்தப் பாலியல் தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் பெண்களும், அவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்போரும், ஏன் பாலியல் தாக்குதலை நடத்துபவர்களின் அரசியல் என்ன என்று ஏன் அடையாளப்படுத்துவதில்லை.? மாறாக தோழர் நியூட்டன் "பெண்ணிய - மார்க்சிச - இடதுசாரிய போராளிகளும் உளவியல் குறைபாடுகளும்" என்ற கட்டுரையில் கூறியது போல், கூறுவது ஏன்? இங்கு இதன் பின்னாலும் அரசியலிருக்கின்றது.
பொது வெளியில் கலை, இலக்கியம் தொடங்கி பெண்ணியத்தையும், அரசியலையும் வெளிப்படையாக முன்வைக்கக் கூடிய பெண்களுடனான முரண்பாடுகளின் போது, பாலியல்ரீதியாக குறிவைத்து தாக்குகின்றனர். இலங்கையைச் சேர்ந்த பெண்கள் அண்மையில் இதை எதிர்கொண்டனர். இதேபோன்றே தமிழகத்திலும் அரங்கேறுகின்றது. இப்படி நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறுகளைச் சுமந்து கொண்டிருக்கும் சமூகங்கள் எங்குமாக, பொது வெளியியில் இயங்குகின்ற பெண்களின் நிலையிதுவாகும். இந்தத் தாக்குதலானது, ஆணாதிக்க சமூக அரசியல் அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கின்றது.
இப்படி பெண்ணை பாலியல்ரீதியாக அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தும் ஆணாதிக்க ஒடுக்குமுறையானது, சமூகத்தின் பொதுவான ஆணாதிக்க ஒடுக்குமுறைப் பண்பில் இருந்தே வேறுபட்டது. இந்த ஆணாதிக்கமென்பது சமூகத்தில் முனைப்புப்பெற்றுள்ள பிற்போக்கான ஒடுக்குமுறைக் கூறுகளை முன்னிறுத்தியே இயங்குகின்றது. அதாவது மதவாத, இனவாத, சாதியவாத, தனியுடமைவாதங்களையே தங்கள் அரசியலாகவும், கொள்கையாகவும் கொண்டியங்கும் கூட்டத்தின், தனிச் சிறப்பான முனைப்புப்பெற்ற அரசியல் கூறாகும். அதாவது பெண்ணை பாலியல் சார்ந்து தாக்கும் நபர்களின், அரசியல் உள்ளடக்கம் இதுவாகவே இருக்கும். இது மனிதவிரோத தன்மையை அடிப்படையாகக் கொண்டதும், அரசியல் செயலூக்கமுள்ள ஒன்றாக இயங்குகின்றது. இந்த அரசியலானது மதவாதமாக, சாதியவாதமாக, தனியுடமைவாதமாக, இனவாதமாக, ஆணாதிக்கவாதமாக .., அதாவது சமூகத்தில் முனைப்புப்பெற்ற ஒடுக்குமுறைகளில் எந்தக் கூறாகவும் தன்னை வெளிப்படுத்தலாம்.
இப்படி செயலூக்கமுள்ள இந்த ஆணாதிக்கமானது அமைப்புரீதியாக ஒருங்கிணைந்ததாகவும், கருத்தியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும். இதற்கு அமைவாகவே சமூகத்தின் பொதுவான ஆணாதிக்கம் முதல் சமூக ஒடுக்குமுறைகள் இருப்பதால், உதிரி வர்க்கங்களின் செயலூக்கமுள்ள தன்னியல்பான கூறாகவும் இயங்குகின்றது. சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் விரோதக் கருத்துகள் பரவும் இன்றைய காலத்தில், வீரியம் பெற்று இயங்குகின்றது.
இப்படி செயலூக்கமுள்ள ஒடுக்குமுறைகளுடன் இணைந்தே ஆணாதிக்கக் கூறுகள் இயங்குகின்றது. அதேநேரம் அரசியல் ரீதியான சமூக நடைமுறைகளில் ஈடுபடாத "பெண்ணியம் மற்றும் இடதுசாரியமானது", இவர்களுடன் எந்தவகையான உறவைக் கொண்டு இருக்கின்றது என்றால், நகமும் சதையுமாகவே இயங்குகின்றதே என்பதே வெளிப்படையான உண்மை. நடைமுறையில் சமூக மாற்றங்களையும், தன்னளவில் தான் சொல்லும் கருத்துடன் வாழ மறுத்து பொதுவெளியில் கருத்துச் சொல்லுபவர்கள், இனம் மதம் சாதி, ஆணாதிக்கம், தனியுடமையை முன்னிறுத்திக் கொண்டு செயற்படும் தரப்போடு, ஒருங்கிணைந்த அரசியல் உள்ளடகத்திலேயே பயணிக்கின்றனர். அதாவது பெண்ணை பாலியல் தாக்குதல் மூலம் வசைபாடும் செயலூக்குமுள்ள அரசியல் கூறுகளுடன், இவர்களும் முரண்படுவதில்லை.
மாறாக இனவாதம், மதவாதம், சாதியவாதம், தனியுடமைவாதங்களுடன் …, "பெண்ணியம் முதல் இடதுசாரியம் வரை" பேசும் நபர்கள், நடைமுறை வாழ்வில் முரண்படுவதில்லை. தங்கள் வாழ்க்கையைச் சுற்றிய மதச்சடங்குகள், இனவாதக் கண்ணோட்டங்கள், தனியுடமைவாத சிந்தனை கொண்ட வாழ்க்கை முறையில் ஒன்றியே பயணிக்கின்றனர். வெள்ளாளியச் சிந்தனையிலான யாழ்மையவாத இந்து கிறிஸ்துவ சாதிய ஆணாதிக்கச் சடங்குகள், பார்ப்பனிய சிந்தனையிலான இந்திய இந்து சாதிய ஆணாதிக்கச் சடங்குகள், இஸ்லாமிய அடிப்படைவாத மத ஆணாதிக்கச் சடங்குகளை .. கடைப்பிடிக்கின்றவர்களாக, ஒரே புள்ளியில் இணைந்தே இருக்கின்றனர். பகுத்தறிவாதியாக தங்களை அடையாளப்படுத்த முடியாதளவுக்கு இருக்கின்றனர்.
இதனாலேயே பெண்கள் பாலியல்ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் போது, தாக்கியவர்களின் அரசியல் பின்னணி குறித்து பேசமுடியாது இருக்கின்றது. இதனால் பேசமறுத்து, அதை "மனநோயாக…." காட்டுகின்றனர். ஆணாதிக்கத்தின் பொதுத்தன்மையை மறுதளிக்கும் வண்ணம், பெண்ணியத்தை "அடையாள" கண்ணோட்டமாக காட்டி குறுக்கி விடுகின்றனர். சமூகத்தின் பொது ஒடுக்குமுறை கூறாகவே அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கிடப்பதையும், அதில் ஒன்று தன்முனைப்போடு முனைப்புப் பெற்று வெளிப்படும் பின்னணியில், பொதுவான பிற்போக்கான அரசியற் தன்மை கொண்டு இருப்பதை மறுதளிக்கின்றனர். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் தங்கள் இருப்பின் அடையாளத்துக்கான "பெண்ணியமாக" குறுக்கிக் காட்டி விடுவதன் மூலம், ஆணாதிக்கத்தின் ஒருங்கிணைந்த பொதுமையையும், அதன் ஒடுக்குமுறையையும் பாதுகாக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களின் இந்த அடையாளமென்பது கூட, பெண்களை பாலியல்ரீதியாக தாக்குகின்ற செயலூக்கமுள்ள கூட்டத்துடனான எந்தக் கூட்டுகளும் இன்றி திடீரென அரங்கேறுவதில்லை. எப்போதும் சமூக வலைதளத்தின் "விருப்புகளை" பெறுவதை மையப்படுத்திய அரசியல் கூட்டுச் செயற்பாட்டின் பொதுப் பின்னணியின்றி, பாலியல்ரீதியான வன்முறை திடீரென தோன்றுவதல்ல. சமூக வலைத்தளங்களில் வெளிப்படையான கருத்துகளை விட 10 மடங்கு அதிகமாகவே, வெளிப்படையற்ற "கடலைபோடல்" என்ற சொல்லால் அழைக்கப்படும் நடைமுறை நடக்கின்றது. இதுவே இருதரப்புக்கும் இடையில் "நட்பாகவும்", சமூக வலைத்தளங்களில் "விருப்புகளாகவும்" பரிணமிக்கின்றது. நடைமுறையில் சமூக மாற்றத்தை முன்வைத்து இயங்காதவர்களின் இந்த நடத்தையே, பிற்போக்கான மனித விரோத சமூக ஒடுக்குமுறைகள் வீரியம் பெற்று இயங்க உதவுகின்றது.
சமூக மாற்றத்துக்கான சமூக நடைமுறைகளில் இயங்கக் கூடியவர்களின் கருத்தே கூட, பாலியல் ரீதியான கூட்டு இயக்க வன்முறையாக மாறுகின்றது. உதாரணமாக புலிகள், புளட், சீமான், பா.ஜ.க தொடங்கி இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ அடிப்படைவாதம் குறித்து பேசும் போது, பாலியல்ரீதியான வன்முறைகள் உச்சத்தை எட்டுகின்றது. ஒரு ஆணாகவிருந்தால், அவனின் தாயையோ, துணையையோ, மகளையோ குறிவைத்து தாக்குகின்றனர்.
இனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்கவாதம், தனியுடமை வாதம் போன்ற, மனித குலத்துக்கு எதிரான எல்லா ஒடுக்குமுறைக்கும் எதிரானவராக இருக்க மறுக்கின்றவர்கள், கண்டும் காணாமல் இருப்பவர்கள், இதில் ஒன்றை ஆதரித்து பிறவற்றை எதிர்ப்பவர்களே மிகமிக ஆபத்தானவர்கள்;. ஏனெனின் ஒடுக்குமுறைகள் என்பது, ஒன்றையொன்று சார்ந்து தான் இயங்க முடியும்;. ஒடுக்குவோரின் ஒடுக்குமுறைகளிலிருந்து தங்களை வேறுபடுத்தாதவர்களாக இருப்பவர்கள், நடைமுறையில் நேர்மையானவராக, பகுத்தறிவுவாதியாக வாழ முடியாதவர்களாகவுள்ளனர். பெண்ணை, ஆணை பாலியல்ரீதியாக தாக்கும் போது, பின்னணியிலுள்ள அரசியலை மறுதளிக்கின்றவராக இருக்கின்றனர். பாலியல் ஒடுக்குமுறையை வெறும் 'அடையாள" பெண்ணியமாக்கி, சமூக வலைத்தளங்களில் தங்களை முன்னிறுத்துவதற்கானதாக குறுக்கிக் கொண்டு, சமூகத்துக்கு எதிரானவராக இருக்கின்றனர். ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணியம் எதுவென்பதை விளங்கிக் கொள்வது, காலத்தின் கட்டயமானதாக இருக்கின்றது.