இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த செய்திகள் அனைத்திலும் அடிக்கட்டுமானத் துறை என்ற வார்த்தை அடிக்கடி தென்படுவதைக் காணலாம். ""அடிக்கட்டுமானத்துறை வளர்ச்சி அடையாமல், இந்தியப் பொருளாதாரம் துரித வளர்ச்சி காண்பது சாத்தியம் அல்ல'' என நாடாளுமன்றத்திலேயே நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார்.
நெடுஞ்சாலைகள் போடுவது; மின்சார நிலையங்கள் அமைப்பது; கனிமச் சுரங்கங்களை நிர்மாணிப்பது; போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது போன்ற அடிக்கட்டுமானத் தொழில்களை 1991க்கு முன்புவரை மத்திய மாநில அரசுகள்தான் செயல்படுத்தி, நிர்வகித்து வந்தன. தாராளமயத்திற்குப் பின், அடிக்கட்டுமானத் தொழில்களிலும் தனியார் முதலாளிகள் நுழையத் தொடங்கிவிட்டனர்.
பெங்களூர் மைசூர் இடையே விரைவு நெடுஞ்சாலையை (்தூ) அமைத்து வரும் ""நைஸ்'' என்ற தனியார் நிறுவனத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், ""எதையுமே கொடுக்காமல், சமூகம் இந்நிறுவனத்திடமிருந்து பயன் அடையப் போவதாக''க் குறிப்பிட்டுள்ளது. அடிக்கட்டுமானத் துறையில் தனியார் முதலாளிகள் நுழைவதை ஆளுங்கும்பல் எந்தளவிற்கு மண்டியிட்டு வரவேற்கிறது என்பதை இத்தீர்ப்புப் புட்டு வைக்கிறது.
""நைஸ்'' நிறுவனத்திற்கு ஆதரவாகத் தரப்பட்ட உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி பார்த்தால், அடிக்கட்டுமானத் தொழில்களில் நுழையும் தனியார் நிறுவனங்கள் எவ்விதக் கைமாறும் எதிர்பாராமல், சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவதாகச் சொல்ல முடியுமா? உண்மையில், ""நைஸ்'' போன்ற இந்தத் தனியார் நிறுவனங்கள், தங்களின் சொந்தக் கைக் காசை மூலதனமாகப் போட்டுத்தான் தொழில்களை நடத்தி வருகின்றனவா? என்ற கேள்விகளைக் கேட்க முடியும். இதற்கான விடையை, அடிக்கட்டுமானத் துறையில் நுழைந்துள்ள நிறுவனங்களின் நடத்தையில் இருந்து பரிசீலிப்பதுதான் நேர்மையானதாக இருக்க முடியும்.
பத்தாண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க நிறுவனமான என்ரான் மகாராஷ்டிராவில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் மின்நிலையம் அமைத்ததை தனியார்மயத்தின் சாதனையாக ஆளுங்கும்பல் பீற்றிக் கொண்டது. ஆனால், என்ரான் மின்சாரம் தயாரித்து விற்கத் தொடங்கிய ஓரிரு ஆண்டுகளிலேயே, மகாராஷ்டிர மாநில மின்வாரியம் போண்டியாகிவிடும் அபாயம் எழுந்ததால், மகாராஷ்டிர மாநில அரசு என்ரானிடம் இருந்து மின்சாரம் வாங்குவதைக் கைகழுவியது. என்ரான் நிறுவனம் இழுத்து மூடப்பட்ட பொழுது, அத்தனியார் நிறுவனம், பொதுத்துறை வங்கிகள் முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கியிருந்த 3,600 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல், நாமம் போட்டது அம்பலமானது. அடிக்கட்டுமானத் துறையில் நுழையும் தனியார் நிறுவனங்கள் இப்படிப்பட்ட மோசடித்தனத்திலும், நாணயமற்ற வர்த்தக பேரத்திலும் ஈடுபடுவது என்ரானோடு முடிந்துவிடவில்லை.
இந்தியாவின் மிகவும் பிரபலமான தரகு முதலாளித்துவ நிறுவனங்களுள் ""எஸ்.குமார்ஸ்'' நிறுவனமும் ஒன்று. ஜவுளி, டயர் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவை, மின்சார உற்பத்தி எனப் பல்வேறு விதமான தொழில்களை எஸ்.குமார்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது.
இத்தொழில்கள் ஒருபுறமிருக்க, ம.பி. மாநிலத்தின் கர்கோன் மாவட்டத்திலுள்ள மண்ட்லேஷ்வர் என்ற ஊருக்கு அருகே, நர்மதை ஆற்றின் குறுக்கே அணையொன்றைக் கட்டி, (நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டத் திட்டமிடப்பட்டுள்ள 30 பெரிய அணைகளுள் இதுவும் ஒன்று) அதிலிருந்து நீர் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திலும் எஸ்.குமார்ஸ் குழுமம் இறங்கியிருக்கிறது.
""மகேஷ்வர் திட்டம்'' என அழைக்கப்படும் இந்தத் திட்டத்திற்கான ஒப்புதல் 1994ஆம் ஆண்டே மைய அரசால் எஸ்.குமார்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. 1997ஆம் ஆண்டிலேயே இத்திட்டத்தைத் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டாலும், இன்றும் கூட அணைக்கட்டு கட்டும் பணிகூட முழுமையாக நிறைவடையவில்லை. நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்தும் போராட்டங்களால்தான் மகேஷ்வர் திட்டம் தடைப்பட்டு நிற்பதாகக் குற்றஞ் சுமத்துகிறது எஸ்.குமார்ஸ் நிறுவனம்.
மகேஷ்வர் அணைக்கட்டும், நீர் மின்சாரத் திட்டமும் முழுமையாக நிறைவடையும்பொழுது, இப்பகுதியிலுள்ள 81 கிராமங்கள் முழுமையாகத் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். விவசாயிகள், மீனவர்கள், படகு ஓட்டுபவர்கள், மணல் அள்ளும் கூலித் தொழிலாளிகள் என ஏறத்தாழ ஒரு இலட்சம் உழைக்கும் மக்கள், தாங்கள் வாழ்ந்த கிராமங்களில் இருந்து இடம் பெயர வேண்டும்.
மகேஷ்வர் திட்டத்தால் இடம் பெயர வேண்டிய அனைவருக்கும் மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை திட்டத்தைத்தான் 1998க்குள் எஸ்.குமார்ஸ் நிறுவனம் அளித்து விடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான், அணைக்கட்டைக் கட்டுவதற்கான ஒப்புதல் மைய அரசால் 1994ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில், பாதிக்கப்படும் மக்களின் மறுவாழ்விற்கான திட்டத்தைக் கூட எஸ்.குமார்ஸ் தயாரித்திருக்கவில்லை என்பதுதான் கேவலமான உண்மை.
பாதிக்கப்படப் போகும் மக்களின் மறுவாழ்வு குறித்து 1998இல் ஆய்வு நடத்திய ம.பி. அரசும்; 2000இல் ஆய்வு செய்த ஜெர்மன் நாட்டின் சமூக வளர்ச்சி அமைச்சகமும் இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளன. மறுவாழ்வுக்கான திட்டத்தை 1998க்குள் தயாரித்து அளிக்க வேண்டும் என்ற காலக் கெடுநிலை 2001ஆம் ஆண்டு வரை நீட்டித்து, மைய அரசு சலுகை வழங்கியது. எனினும், 2006 வரையில் கூட மறுவாழ்வுக்கான திட்டத்தை எஸ்.குமார்ஸ் நிறுவனம் தயாரித்துக் கொடுக்கவில்லை. இதனால்தான், எஸ்.குமார்ஸோடு கூட்டுச் சேர்ந்திருந்த அமெரிக்காவையும், ஜெர்மனியையும் சேர்ந்த மூன்று பன்னாட்டு நிறுவனங்கள், இத்திட்டத்தில் இருந்து விலகிக் கொண்டு விட்டன.
பீற்றிக் கொள்ளப்படும் இந்தத் தனியார் அணைக்கட்டு நீர் மின்சாரத் திட்டம் தடைப்பட்டு நிற்பதற்கு, எஸ்.குமார்ஸ் குழுமம் மறுவாழ்வு திட்டத்தை 2006 வரை தயாரிக்கவில்லை என்பதுகூட முழுமையான, உண்மையான காரணம் கிடையாது. மகேஷ்வர் திட்டத்தைத் தொடங்குவதற்காக, 1998ஆம் ஆண்டு எஸ்.குமார்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 330 கோடி ரூபாய் அரசுக் கடனை, இந்த நிறுவனம் ஏப்பம் விட்டுவிட்டது; அதனால்தான் இந்தத் திட்டம் படுத்துக் கிடக்கிறது என்பதுதான் உண்மை. எஸ்.குமார்ஸ் குழுமம், தனது திருட்டுத்தனத்தை மூடி மறைப்பதற்காகவே, நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் மீது வீண்பழி சுமத்துகிறது. எஸ்.குமார்ஸின் இந்த மோசடிக்கு மையமாநில அரசுகள் துணையாக நிற்கின்றன.
மத்தியப்பிரதேச அரசு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு, மூன்று கோடி ரூபாய் வரைதான் (தொழில் தொடங்க) கடன் கொடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டள்ளது. இந்த விதி அப்பட்டமாக மீறப்பட்டு, அத்தொழில் வளர்ச்சி நிறுவனம் எஸ்.குமார்ஸ் குழுமத்துக்கு ஒரே தவணையில் 380 கோடி ரூபாய் வரை கடனாக வழங்கியது. இதற்காகவே, எஸ்.குமார்ஸ் நிறுவனத்தோடும், மகேஷ்வர் திட்டத்தோடும் தொடர்புடையவை என்ற பெயரில் 42 பெயர்ப் பலகை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த 380 கோடி ரூபாயும், அரசிடமிருந்த தொழிலாளர்களின் ஓய்வூதிய சேமிப்பு, சேமநல நிதிபிடித்தம், அரசு ஊழியர்களுக்குத் தரப்பட வேண்டிய ஓய்வூதியத் தொகை, கூட்டுறவு வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பு ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டு, எஸ்.குமார்ஸ் நிறுவனத்திற்கு மடைமாற்றப்பட்டது.
இந்தக் கடன் வட்டியும், முதலுமாகச் சேர்ந்து இன்று 800 கோடி ரூபாயாக வளர்ந்துவிட்டது. ஆனால், மகேஷ்வர் திட்டமோ இன்னும் காகிதத் திட்டமாகத்தான் இருக்கிறது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு, இம்மோசடியைப் பற்றி விசாரித்த, மத்தியப்பிரதேச மாநில அரசின் பொருளாதாரக் குற்றப்பிரிவு, எஸ்.குமார்ஸ் நிறுவனம், அதனுடன் "தொடர்புடைய' 42 நிறுவனங்கள் மற்றும் அரசு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் அதிகாரிகள் மீது சதி செய்தல், ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. மேலும் இந்தத் திட்டம் தொடர்புடைய, அந்நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் இந்தக் கடனுக்கு ஈடாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
எஸ்.குமார்ஸ் நிறுவனத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இந்தச் சட்டபூர்வ நடவடிக்கைகள் இன்று பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாக முடிந்துவிட்டது. ம.பி. அரசால் கைப்பற்றப்பட்ட எஸ்.குமார்ஸ் குழுமத்தின் சொத்துக்கள் அந்நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருப்பதோடு, அந்நிறுவனம் அரசு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு உடனடியாகச் செலுத்த வேண்டிய 103 கோடி ரூபாய் கடன் நிலுவைத் தொகையில் 30 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், இக்கடனுக்கான வட்டி 14 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதோடு, எஸ்.குமார்ஸ் குழுமம் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மையமாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து மேலும் கடன் வாங்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் சலுகைகளால் திக்குமுக்காடிப் போன எஸ்.குமார்ஸ் குழுமம், ""இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கியும், எல்.ஐ.சி. நிறுவனமும் 90 கோடி ரூபாய் அளவிற்கும்; பாரத மிகுமின் நிறுவனம் 70 கோடி ரூபாய் அளவிற்கும் மகேஷ்வர் திட்டப் பங்குகளை வாங்கிக் கொள்ள வேண்டும்; இந்தியத் தொழில் முதலீட்டு நிறுவனத்திற்கு எஸ்.குமார்ஸ் குழுமம் தரவேண்டிய 19.5 கோடி ரூபாய் கடனைப் பங்குகளாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்'' எனக் கோரியுள்ளது.
மேலும், கிராமப்புற மின்மயமாக்க நிறுவனத்திடமிருந்து 250 கோடி ரூபாயும்; வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி நிறுவனத்திடமிருந்து 259 கோடி ரூபாயும்; மின்சார முதலீட்டு நிறுவனத்திடமிருந்து 700 கோடி ரூபாயும் கடன் பெற முயன்று வருகிறது. இவை ஒருபுறமிருக்க, பங்குச் சந்தைக ளின் மூலம் பொதுமக்களிடமிருந்து 700 கோடி ரூபாய் திரட்டவும் எஸ்.குமார்ஸ் குழுமம் முயன்று வருகிறது.
கூட்டுறவு வங்கியிலோ / பொதுத்துறை வங்கியிலோ கடன் வாங்கிய விவசாயி எதிர்பாராதவிதமாகக் கடனைக் கட்டத் தவறினால், அவருக்கு மீண்டும் கடன் கொடுப்பது உடனடியாக மறுக்கப்படுகிறது. கடனைக் கட்டத் தவறும் விவசாயிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஒரு சாதாரண விவசாயிக்குப் பொருந்தும் இந்த விதியும், ஜப்தி நடவடிக்கைகளும் தரகு முதலாளி எஸ்.குமார்ஸ் நிறுவனத்திற்குப் பொருந்தாமல் போவதை அரசின், அதிகார வர்க்கத்தின் பாரபட்சமான நடவடிக்கை என்று மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. இதுதான் தனியார்மயம் தாராளமயத்தின் விதி; அரசின் முதலீட்டுக் கொள்கை. இந்தக் கொள்கையின் காரணமாகத்தான் ஒரு காகிதத் திட்டத்தைக் காட்டி ஏற்கெனவே 380 கோடி ரூபாய் கடனை வாங்கி ஏப்பம்விட்ட எஸ்.குமார்ஸ் நிறுவனத்திற்கு, மீண்டும் 1,200 கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் கொடுக்க சலுகைகள் காட்டப்படுகின்றன.
எஸ்.குமார்ஸ் குழுமம் மகேஷ்வர் அணைக்கட்டைக் கட்டி முடித்து, மின்சாரத்தை உற்பத்தி செய்தால், அது இன்னொரு பகற் கொள்ளையாக இருக்கும். ம.பி. மாநில மின்சார வாரியம் 1 கிலோவாட் நீர்மின்சாரத்தை 0.25 பைசாவுக்குத் தயாரித்து வழங்குகிறது. ஆனால், எஸ்.குமார்ஸ் தயாரிக்கும் மின்சாரத்தை, 1 கிலோவாட்டிற்கு ரூ. 3.50லிருந்து ரூ. 4.00 வரை விலை கொடுத்து ம.பி. மாநில மின்சார வாரியம் வாங்க வேண்டியிருக்கும்; ஏனென்றால், எஸ்.குமார்ஸ் நிறுவனத்திற்கு ஆண்டொன்றுக்கு 16 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை இலாபம் கிடைக்கும்படி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. என்ரான் நிறுவனம் மகாராஷ்டிர மாநில மின்வாரியத்தைப் போண்டியாக்கியதைப் போல, எஸ்.குமார்ஸ் ம.பி. மாநில மின்வாரியத்தை மொட்டையடிக்கும் நிலை எதிர்காலத்தில் வரக்கூடும்.
---
பெங்களூர் மைசூர் இடையே விரைவு நெடுஞ்சாலையை அமைத்துவரும் ""நைஸ்'' நிறுவனம், எஸ்.குமார்ஸைப் போல நிதி மோசடியில் ஈடுபடவில்லையென்றாலும், மிகப்பெரிய நில மோசடியை அரசின் நீதிமன்றத்தின் ஆதரவோடு நடத்திவருவது அம்பலமாகியுள்ளது.
பெங்களூர் மைசூர் இடையே 111 கி.மீ தொலைவுக்கு விரைவு நெடுஞ்சாலை அமைக்கவும்; பெங்களூரில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள பிதாதி கிராமத்தின் அருகே நவீனமான, ஐந்து நட்சத்திரப் புறநகரை அமைக்கவும் நைஸ் நிறுவனத்திற்கு, தொடக்கத்தில் 18,313 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இது பின்னர் எவ்விதக் கணக்கீடும், ஆய்வும் இன்றி 21,000 ஏக்கராகவும்; இறுதியாக 29,258 ஏக்கராகவும் உயர்த்தப்ப்டடது.
கர்நாடக மாநிலப் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சோமசேகர் ரெட்டி என்பவர், ""பெங்களூர் மைசூர் இடையே விரைவு நெடுஞ்சாலை அமைக்க 6,999 ஏக்கர் நிலம் போதுமானது; ரியல் எஸ்டேட் வியாபார நோக்கத்தில்தான் நைஸ் நிறுவனத்திற்குத் தேவையான அளவிற்கும் அதிகமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டு, கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்று போட்டார்.
இந்த வழக்கு விசாரணையில் நைஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக நின்ற கர்நாடக மாநில அரசு, ""சோம்சேகர் ரெட்டி பழைய முறைப்படி நில அளவீடு செய்திருக்கிறார். அவருக்கு நவீன நில அளவீடு பற்றித் தெரியாது'' என வாதாடி, இந்த நிலத் திருட்டை நியாயப்படுத்தியது.
சோமசேகர் ரெட்டியின் வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதி மன்றமும்; இவ்வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றமும், நவீன நில அளவீடின் படி, 111 கி.மீ. தொலைவுள்ள விரைவு நெடுஞ்சாலை அமைப்பதற்கு எவ்வளவு ஏக்கர் நிலம் தேவைப்படும் என்ற அடிப்படையான கேள்வியைக் கூட எழுப்பாமல், நைஸ் நிறுவனத்திற்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்தன.
இத்திட்டத்தின்படி, பெங்களூரில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள பிதாதி கிராமத்தில் இருந்துதான் நைஸ் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த விதி அப்பட்டமாக மீறப்பட்டு, பெங்களூர் நகருக்கு அருகேயும் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பெங்களூர் நகருக்கு அருகே ஒரு ஏக்கர் நிலம் சுமார் 2 கோடி ரூபாய்க்கு விலை போகிறது. ஆனால், நைஸ் நிறுவனத்திற்கோ, விவசாயிகளிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இதனால், 1,600 கோடி ரூபாய் பெறுமான பெங்களூர் மைசூர் விரைவு நெடுஞ்சாலைத் திட்டம் நிறைவு பெறும் முன்பே, நைஸ் நிறுவனம் பெங்களூருக்கு அருகேயுள்ள நிலங்களைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் 700 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிவிடும் என முதலாளித்துவ பத்திரிகைகளே குறிப்பிடுகின்றன.
என்ரான், எஸ்.குமார்ஸ், நைஸ் ஆகிய உதாரணங்கள், அடிக்கட்டுமானத் துறையில் தனியார் நுழைவது என்பது பொதுச் சொத்தை, மக்களின் சேமிப்பை, நாட்டின் மூலவளங்களைத் தனியார் முதலாளிகள் சட்டபூர்வமாகக் கொள்ளையடிப்பதற்கான எளிய வழி என்பதை நிரூபித்து விட்டன. இந்தப் பகற் கொள்ளையின் மூலம் அவர்களின் பணப்பெட்டி வீங்குவதைத்தான், இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் என ப.சிதம்பரம் வகையறாக் கள் கூறி வருகிறார்கள்!
மு ரஹீம்