Language Selection

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எங்கேயோ தொடக்கி வேறு எங்கேயோ முடித்த நினைவுக்கு குறிப்பொன்று 

 

"இலக்கியத்தை அடிப்படையில் சமூக விளைபொருளாகக் கொண்டு, அதனை உரிய வரலாற்றுச் சூழலில் வைத்து நோக்கி, அதன் உயிராற்றல் காலத்துக்குக் கட்டுப்பட்டும்- காலத்தை வென்றும் நிற்கும் தன்மையை விளக்குவதே சமூகவியல் அணுகுமுறையின் பிரதான அம்சங்களாகும்"  

- கலாநிதி க. கைலாசபதி (1958)

-"  ஐயா, சுவாமி அம்பது ரூபா வாங்கிட்டு வரட்டாம்"

-"  ஏன், .... எதுக்கடா " ?

- " இல்ல, போன கிழமை நடந்த பவுணட புத்தகவிழாவுக்கு கோயில் ஸ்பீக்கர் பூட்டின காசாம் "

- "அது கோயில் செலவில செய்கிறது என்றுதானே முடிவெடுத்தனாங்கள்?."

- "இல்லையாம், நீங்க தானாம் முடிவெடுத்ததாம். கோயில் கமிட்டி பெரும்பான்மைக்கு உடன்பாடு இல்லையாம். மற்றது, சக்கர மாமா சொல்கிறார், பவுணோட புத்தகத்திற்கு தேசியம் காணாதாம் எண்டு.  அதனால, அந்த புத்தகம் EPRLF இயக்கப்பிரச்சாரம் புத்தகம் எண்டு சொல்லுறார்." 

-"அவன் சர்க்கரை, என்னட்ட அடி வேண்ட போறான். அவன் வால் புடிக்கிற இயக்கத்தட  செத்தவீட்டுக்கு ஸ்பீக்கர் கொண்டு போனா பிரச்சினை இல்லை. ஊர் பிறந்தவன்ர  புத்தகவெளியீட்டுக்கு ஸ்பீக்கர் போட்டாதானா அவனுக்கு பிரச்சனை.? சரி நீ போ..."  

- "அப்பா காசு அம்பது ரூபா?"

- "நீ போ, நான் சாமியோட கதைக்கிறன் "

இந்த சம்பாசனை கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன், எனக்கும் என் தந்தைக்கும் இடையில்; ஒரு   ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் நடந்ததாக ஞாபகம்.

எனது சிற்றூர் பாட்டுக்கும் கூத்துக்கும் பிரபலமானது. ஆனால், நவீனத்துவ இலக்கியங்கள் என கூறப்படும் கவிதை, புனைகதைகள், நாவல்கள், சிறுகதைகள் எழுதும் எவரும் எனது ஊரில்  இருக்கவில்லை. ஆனாலும், அன்று எட்டாம் வகுப்பில் கல்வி கற்ற நான் உட்பட கைவிட்டு எண்ணக் கூடிய சிலர் வாசிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களாகவிருந்தோம். ஊர்காவற்துறை பிரதேசசபை நூல்நிலையத்தில் எமக்கு புத்தகம் இரவல் தர மறுத்துவிட்டார், எமது அயல் கிராமத்தைச் சேர்ந்த   சாதியவெறி பிடித்த நூலகர். அவரைப் பொறுத்தளவில் கல்வியறிவற்ற மீன்பிடித்து சீவியம்    நடத்துகிற எமக்கு எதற்கு இலக்கிய அறிவு என்று நினைத்தார். அதை பகிரங்கமாவே கூறினார். "உங்களுக்கு எதுக்கடா புத்தகம். நீங்கள் போய் கூத்து பழகுங்கடா. அது தானடா உங்களுக்கு சரிவரும்.....". 

இதன்பின், காவலூர் இலக்கிய வட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டேன். அந்தக் காவலூர் இலக்கிய வட்டம், எமது ஊரில் புத்தக விமர்சனம் நடத்துவதாக உறுப்பினர்களுக்கு அறிவித்தல் வழங்கியது. அந்நிகழ்வில், அவர்கள் விமர்சிக்க எடுத்துக்கொண்ட புத்தகம் எமது ஊரின் ஒரே ஒரு கவிஞனான, எனது ஒன்றுவிட்ட மச்சானின் சாம்பல் பூத்த மேட்டில் என்ற புத்தகமாகும். அவன் இயக்கத்துக்கு போனது தெரியும். ஆனால், அவன் புத்தகமெழுதியது காவலூர் இலக்கிய வட்ட செயலாளர், முருகமூர்த்தி கோவில் அய்யர் சொல்லும் வரை எங்களுக்கு தெரியாது.

புத்தக நிகழ்வு, எமது ஊரின் பாடசாலையில் நடைபெற்றது. அக்காலம், எனது ஊர் விடுதலை இயக்கங்கள் சார்ந்த ஆதரவாளர்களிடையே பிரிவினைகள்-முரண்பாடுகள் தலையெடுக்க ஆரம்பித்த காலம். எனது தந்தையார் அனேகமாக எல்லா இயக்கத்துடனும் சுமுகமான உறவை வைத்திருந்தார்.  அதற்கப்பால், எமது ஊரின் கவிஞனான பவுண், அவரின் உற்ற நண்பனும், சொந்த மச்சானுமான சைமனின் மகன். பவுண் கவிஞனான விடயமும், இயக்க அரசியலில் இயங்கிய விடயமும்    ஊருக்கு பெருமை சேர்க்கும் விடயமாகவே பெரும்பாலும் கருதப்பட்டது. 

ஆனாலும், அன்று புலிகளுடன் இயங்குவதும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும் தான்  பிரபலமான விடயமாக கருதப்பட்டது. இப்பின்னணியில், ஊரில் நடைபெற்ற புத்தகவிழாவுக்கு  இலவசமாக ஸ்பீக்கர் வழங்குவதற்கு எனது தந்தையார் உட்பட கோயில் சபை முடிவெடுத்தது. விழா நடந்து அடுத்த நாள், புலிகளுக்கு ஆதரவாக இருந்த சர்க்கரைமாமா உட்பட்ட சிலர் அந்த முடிவை எதிர்த்தனர். ஊரில் கொஞ்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி, சுவாமியிடம் கொடுத்து விழாவுக்கு  ஸ்பீக்கர் சேவை வழங்கியதற்கான கூலியாக 50 ரூபாய் எனது தந்தையிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

அந்தக் கோரிக்கைக்கு அவர்கள் முன்வைத்த காரணங்களில் ஒன்று, சாம்பல் பூத்த மேட்டில் என்ற புத்தகத்திற்கு தேசியம் போதாமையாக இருந்தது என்பதாகும்.

இந்த தேசிய பற்றாக்குறையை, எமது  ஊரில் இருந்தவர்கள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள்  கண்டுபிடிக்கவில்லை. புத்தக விழாவில் பேசிய NLFT இயக்கத்தைச் சேர்ந்த விமர்சகர் ஒருவரே  இதை கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.

அன்று தமிழ் இலக்கியம் பற்றி -ஏன் இன்றும்தான் எதுவுமே தெரியாத- அரசியல் பற்றி எதுவுமே தெரியாத எனக்கே விளங்கி இருந்தது, சாம்பல் பூத்த மேட்டில் என்ற புத்தகத்தின் உள்ளடக்கம்  தமிழ்தேசியவாதத்தை அடிப்படையாக- பேசுபொருளாக கொண்டதென்று. 

புலிகள் அனுராதபுரத்தில் சிங்கள மக்களை தாக்கி படுகொலை செய்தமை, பல இராணுவ -போலீஸ் நிலைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் 83 கலவரம் ஏற்படுத்திய சமூக- இனம் சார்ந்த காயங்களால்  தமிழ்தேசிய உணர்வு என்பதற்கப்பால் தமிழ் இனவாதமே மேல் நோக்கி நின்றது. பெரும்பான்மையாக எல்லா இயக்கங்களும் தமிழ்இனவாத அடிப்படையையே பிரச்சார முன்னெடுப்புக்கு உபயோகித்தனர். சிங்கள ராணுவத்தை தாக்குவது, சிங்கள மக்களை தாக்குவது, தெற்கில் அழிவை ஏற்படுத்துவது  போன்ற ஆயுத நடவடிக்கைகள் மேற்கொள்வது மட்டுமே தமிழீழத்தை அல்லது தமிழர் நிலத்தை விடுவிப்பதற்கான ஒரேவழி என்ற இராணுவ சாகசவாத அரசியலை நம்பிய காலம். இதனடிப்படையில், இடதுசாரி இயக்கம் எனக் கூறிக்கொண்ட NLFT போன்ற இயக்கங்கள் கூட, தங்களை அதிதீவிர தேசியவாதிகளாக வாயளவிலேனும் நிலைநிறுத்த முயன்றார்கள். இதனாலேயே, சாம்பல் பூத்த  மேட்டில் என்ற தேசியவாத கவிதைப் புத்தகம்- தேசிய  வரட்சி உள்ள புத்தகம் என, அதன் வெளியீட்டு விழாவில் நிறுவ முயற்சி செய்யப்பட்டது. 

இவ்வாறு, தேசியப் பற்றாக்குறை சார்ந்து நிராகரிக்க முயற்சி செய்யப்பட்ட சாம்பல் மேட்டில் புத்தக விழாவிலேயே கார்த்திகேசு சிவத்தம்பி மற்றும் கைலாசபதியின் பெயர்கள் முதன்முதலாக எனக்குத்  தெரியவந்தது. இந்த இருவரின் இலக்கிய ஆய்வுகளை முன்நிறுத்தியே; மேற்படி விமர்சகர் சாம்பல் பூத்த மேட்டில் என்ற அந்தப் புத்தகத்தை நிராகரிக்க முயன்றார். மார்க்சிய அடிப்படையில்;  ஒடுக்கப்பட்ட தேசிய இனமான தமிழ் இனவிடுதலைக்காக கவிதை எழுதுவது என்றால், அது தமிழ் தேசியத்தை- ஒடுக்கப்பட்ட மக்களை எழுச்சிகொள்ள வைக்க எழுத வேண்டும். தேசிய உணர்வை தட்டி எழுப்ப வேண்டும், என்றெல்லாம் விமர்சனம் விழாவில் கூறப்பட்டது. பலர் அந்த விமர்சன கூட்டத்தில் உரையாற்றி இருந்தாலும், இந்த "தேசிய பற்றாக்குறை"  பற்றிய உரையே எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது.

2009-போருக்குப் பின்னான இக்காலத்தில்- முன்னொரு காலத்தில், ஆதிக்கம் சார்ந்த கலைஇலக்கிய- அரசியல்- சமூக நீரோட்டத்திற்கு புறம்பாக-அதற்கு வெளியில் நடைபெற்ற கலை இலக்கிய அரசியல்  செயல்பாடுகளை மட்டம் தட்டி, ஒதுக்குவதற்கு உபயோகப்படுத்தப்பட்ட சிவத்தம்பியும்- கைலாசபதியும்   இன்று- ஆதிக்கத்துக்கு வந்து கொண்டிருக்கும் சைவ-சனாதன -சாதிய ஆதிக்க சக்திகளால்  நிராகரிக்கப்படுகின்றனர். இவர்கள் இருவரின் சமூக, அரசியல், இலக்கிய, செயற்பாடுகள்  ஒட்டுமொத்தமாக இலக்கிய வரலாற்றில் இருந்து- சமூக வரலாற்றில் இருந்து வரலாற்று குப்பையில்  வீசும் வேலையை, யுத்தம் காரணமாக பதுங்கியிருந்த- முன்பு தோற்றுப்போன ஆதிக்க சிந்தனை கொண்ட சக்திகள் வேகமாக வேகமாக முன்னெடுக்கின்றன.

குறைகள், நிறைகள், தனிமனித குறைபாடுகள் சார்ந்து சிவத்தம்பி மற்றும் கைலாசபதி மீது  விமர்சனங்கள் இருப்பினும், அவர்கள் விட்டுச்சென்ற மக்கள்நலன் சார்ந்த இலக்கியபாரம்பரியம் - இலக்கிய ஆய்வுமுறை என்பது வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு, மனித விடுதலை சார்ந்து  இலக்கியம் படைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும்- மனிதகுல விடுதலைக்காக அரசியல் செயற்பாட்டில்   ஈடுபடும் எல்லோருக்கும் உண்டு.