11_2006.jpg

தியாகத் தோழர் பகத்சிங்கின் நூற்றாண்டு பிறந்தநாளில் புரட்சிகர அமைப்புகளின் சூளுரை!

கால் நூற்றாண்டு காலமே வாழ்ந்த ஒரு இளைஞனின் நினைவு, நூறாண்டுகளுக்குப் பின்னரும் நாட்டு மக்களால் போற்றப்படுகிறது என்றால் அந்தப் புரட்சியாளர்தான் பகத்சிங்! ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் தியாகத் தோழர் பகத்சிங்கின் நூறாம் ஆண்டு பிறந்த

 நாளை செப்.28 அன்று தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில், அம்மாவீரனின் நினைவை நெஞ்சிலேந்தி வீரவணக்கம் செலுத்தியதோடு, மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்தி நாட்டை விடுதலை செய்ய உறுதியேற்று ஆர்ப்பாட்டம் அரங்கக்கூட்டம் கவியரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடத்தின. நாட்டு விடுதலையின் மீது மாளாக் காதல் கொண்டு, காலனியாதிக்கவாதிகளைக் கதிகலங்க வைத்த போராளி பகத்சிங்கின் உருவப்படம் கொண்ட துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் மூலம் தோழர் பகத்சிங்கின் மாவீரத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் மக்களின் நெஞ்சங்களில் விதைத்தன.

 

போராட்டமே வாழ்க்கையாகக் கொண்ட போராளி பகத்சிங்கின் நூறாவது பிறந்தநாளில், அரசியல் ஆர்ப்பாட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்ட பு.ஜ.தொ.மு. அத்தியாகத் தோழருக்கு வீரவணக்கம் செலுத்தியது. ""ஆகஸ்டு 15 போலி சுதந்திரத்தைத் திரைகிழிப்போம்! நாடு மீண்டும் காலனியாவதை முறியடிப்போம்!'' என்ற முழக்கத்துடன் செப். 28 அன்று மாலை விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பு.ஜ.தொ.மு. தோழர் ராஜு தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.வி.மு. தோழர்கள் அகிலன், சிறீரங்கன் ஆகியோர் காந்தி காங்கிரசின் துரோகத்தையும், பகத்சிங்கின் வீரத்தையும், போலி சுதந்திரத்தின் பின்னணியையும், இன்று நாடு மீண்டும் காலனியாக்கப்பட்டு வரும் சூழலில் விடுதலைப் போருக்கு அணிதிரள வேண்டிய அவசியத்தையும் விளக்கி உரையாற்றினர்.

 

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் நூறாவது பிறந்தநாளையொட்டி, கோவில்பட்டி, சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் பகத்சிங் உருவப்படத்துடன் மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க அறைகூவி பு.ஜ.தொ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் விரிவாக சுவரொட்டிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஓட்டுக் கட்சிகளும் போலி கம்யூனிஸ்டுகளும் பகத்சிங்கை ஓரங்கட்டி வைத்துவிட்டு, உள்ளாட்சி தேர்தலில் பொறுக்கித் தின்ன போட்டி போட்டுக் கொண்டிருந்த தருணத்தில், பகத்சிங்கின் உண்மையான வாரிசுகள் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள்தான் என்பதை மீண்டும் நிரூபிப்பதாக இது அமைந்திருந்தது.

 

செப். 28 அன்று சென்னை, திருச்சி, தஞ்சை, கோவில்பட்டி, ஓசூர் ஆகிய பகுதிகளில் நடந்த அரங்கக்கூட்டம் கவியரங்க நிகழ்ச்சிகளில், பகத்சிங்கின் போர்க்குணம், மதச்சார்பின்மை, விஞ்ஞான சோசலிசத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை, நாட்டுப்பற்று ஆகியவைதான் அவரது அடையாளம் என்பதையும், காந்தி காங்கிரசின் துரோகத்தைத் திரைகிழித்தும் முன்னணித் தோழர்கள் சிறப்புரையாற்றினர். காலனியாதிக்கத்தைவிட கொடிய மறுகாலனியாதிக்கம் நம்மை அடிமைப்படுத்திவரும் இன்றைய சூழலில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை போர்க்குணத்தோடு முன்னெடுத்துச் செல்வதுதான், போராளி பகத்சிங்கிற்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாக இருக்க முடியும் என்பதை இந்நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டின. மாணவர்களும் இளைஞர்களும் உழைக்கும் மக்களும் திரளாகப் பங்கேற்ற இக்கூட்டங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத் தீயை மூட்டுவதாக அமைந்தன.

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், செப். 29 அன்று பகத்சிங்புரத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகளோடு பகத்சிங்கின் நூற்றாண்டு பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடந்தன. பஞ்சாப் என்றதுமே பகத்சிங் நினைவுக்கு வருவதைப் போல, தருமபுரி என்றாலே நக்சல்பாரி புரட்சியாளர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள் என்ற முன்னுரையோடு கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கிய ம.க.இ.க. தோழர் துரை. சண்முகம், மறுகாலனியாக்கத்தின் கொடிய விளைவுகளையும் நாம் பகத்சிங் வழியில் போராட வேண்டிய அவசியத்தையும் தனது கனல் மணக்கும் கவிதையில் குறிப்பிட்டார். இக்கவியரங்கமும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கமும் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் வீரமரபை உயர்த்திப் பிடித்து, மீண்டும் ஒரு விடுதலைப் போருக்கு அறைகூவுவதாக அமைந்தன. மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு தனது வீரத்தையும் மரணத்தையும் அமைத்துக் கொண்ட அந்த பகத்சிங் இன்னும் சாகவில்லை; தியாகம் என்றும் மடிவதில்லை என்று தொடங்கும் புரட்சிகரப் பாடலுடன் ம.க.இ.க. மையக் கலைக்குழு நடத்திய கலைநிகழ்ச்சியின் உணர்ச்சிப் பெருக்கால், நாங்கள் பகத்சிங்கின் உண்மையான வாரிசுகள் என்ற பெருமிதத்துடன் பார்வையாளர்களின் நெஞ்சங்கள் விம்மித் தணிந்தன.

 

உடுமலையில், 23.10.06 அன்று நடந்த அரங்கக் கூட்டத்தில் பகத்சிங் வழியில் போராட சூளுரைத்த இளஞ்சிறுவர்களின் உரையும் ம.க.இ.க. தோழர் மணிவண்ணன் ஆற்றிய சிறப்புரையும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட உணர்வூட்டுவதாகவும், காந்திகாங்கிரசின் துரோகத்தைத் திரைகிழித்துக் காட்டுவதாகவும் அமைந்தன.

 

ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் புரட்சிகர அரசியலை பகத்சிங்கிடமிருந்து நீக்கிவிட்டு, அப்போராளியைப் பூசையறைப் படமாக மாற்றிவிட முயலும் ஓட்டுப் பொறுக்கி துரோகிகளின் எத்தணிப்புகளை முறியடித்து, பகத்சிங்கின் உண்மையான வாரிசுகள் நக்சல்பாரி புரட்சிகர அமைப்பினர்தான் என்பதை இந்நிகழ்ச்சிகள் நிரூபித்துக் காட்டின.