Language Selection

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனவாதத்தை முன்னிறுத்தும் தமிழ் தேசியம் முதல் போலிப் பெரியாரிஸ்ட்டுகள் வரை, சின்மயி, வைரமுத்துவின் சாதி என்ன என்ற அளவுகோலில் இருந்து,  சின்மயி மீ ரூவானது தமிழனுக்கு எதிரான "பார்ப்பனச்" சதி என்று கூறி, "சூத்திரனின்" ஆணாதிக்கத்துக்கு வக்காலத்து வாங்குகின்றனர். மற்றொரு தரப்பு 14 வருடத்துக்கு முந்தையது, இன்று இது எப்படி சாத்தியம் என்று கேட்டு, ஆணாதிக்க வக்கிரங்களுக்கு வாலாட்டுகின்றனர். இன்னொரு தரப்பு மீ ரூவை சொல்லக் கூடிய பெண், சம்பவத்தின் பின்னான காலத்தில் குறித்த நபருடன் கொண்டு இருந்த உறவைக் காட்டி, பெண்ணின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கிவிட முனைகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட விடையங்களைக் கொண்டு, "நடத்தை" குறித்த ஆணாதிக்க வக்கிரங்களைக் கொண்டு அளவெடுக்க முனைகின்றனர். தமிழை இழுக்குப்படுத்த "பார்ப்பனச்" சதி என்று கூறி, வைரமுத்துவின் ஆணாதிக்கத் தமிழையே தமிழனின் தமிழாக, ஓட்டுமொத்த பெண்களுக்கு எதிராக நிலைநிறுத்த முனைகின்றனர். கவிஞர்கள் என்று கூறிக்கொள்வோர் – தங்கள் சோரத்தை மூடிமறைக்க வைரமுத்துவுக்கு கவசமிடுகின்றனர்.

இப்படி சமூக  வலைத்தளங்களில் ஆணாதிக்கத்தை முன்வைக்கும் தமிழ் இனவாதிகள், போலிப் பெரியாரிஸ்;ட்டுகள், போலித் தலித்திய வாதிகள், போலிப் பெண்ணியவாதிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கவிஞர்கள் …. ஆணாதிக்கத்துக்கு கும்மி அடிக்க, வைரமுத்து தனது வர்க்க – ஆணாதிக்க நிலையில் இருந்து தன்நிலை விளக்கம் கொடுக்கின்றார்.

"அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று" இப்படி தன்னையும், தன்னைப் போன்ற பாலியல் நடத்தை கொண்ட பலரையும் சேர்த்து காப்பாற்றி விட முனைகின்றார்.

 

சின்மயி குற்றச்சாட்டுக்குப் பின் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி தன் மீதான பாலியல் வன்முறை குறித்த குற்றச்சாட்டை, பா.ஜ.க மத்திய அமைச்சரும், முன்னாள் தி ஏசியன் ஏஜ் மற்றும் தி டெலிகிராஃப் ஆகிய நாளிதழ்களின் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.ஜே.அக்பர் மீது சுமத்தியுள்ளார். வைரமுத்து பா.ஜ.க மத்திய அமைச்சரையும் சேர்த்து, தன்னைக் கரையேற்ற முனைகின்றார் என்பதே, அவரின் மறுப்பின் பொதுச் சாரமாகும். அமெரிக்கா, பிரான்ஸ்சில் 20, 30 வருடம் கடந்த பின், முன்வைக்கப்பட்ட மீ ரூ குற்றச்சாட்டை அடுத்து கைது செய்யப்பட்டு சிறைகளிலும் விசாரணைகள் நடக்கின்ற இன்றைய பின்னணியில் - தமிழ்நாட்டு ஆணாதிக்கவாதிகள் வைரமுத்துக்கு சாமரம் வீசுகின்றனர். சுவிஸ் புலிகள் லைற் பிடித்து பார்த்த மாதிரி, வைரமுத்துக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.         

மீ.ரூ (Me Too) என்பது என்ன?       

மீ. ரூ என்பது என்ன? அதிகாரத்தைக் கொண்டும் - பணப் பலத்தைக் கொண்டும், சமூகத்தின் உச்சத்தில் இருந்தபடி, பெண்களை பாலியல்ரீதியாக ஒடுக்கியவர்களுக்கு எதிரான குரல் தான் மீ. ரூ. வர்க்க ரீதியாக உயர் தகுதி பெற்ற ஆணாதிக்க பாலியல் வன்முறைக்கு எதிரான, பொதுப் போராட்ட வடிவமாகி இருக்கின்றது மீ. ரூ. சமூக மேலடுக்குகளில் இருக்கின்ற நபர்களை, காலம் கடந்து கேள்விக்குள்ளாக்குகின்றதன் மூலம், அவர்களின் பொறுக்கித்தனமான போலியான விம்பங்களை தகர்க்கின்றளவுக்கு – அதற்கு தண்டனை கொடுக்குமளவுக்கு, உலகெங்குமான சமூக மேலடுக்குகளை மீ. ரூ அதிர வைக்கின்றது. இது பொய்யானதுமல்ல – புனைவுமல்ல. அதாவது பொய்யையும் - புனைவையும் பொதுமைப்படுத்த முடியாது. அப்படியானவை விதிவிலக்கானவை.

சமூக உச்சத்தில் இருக்கின்ற ஆண்கள் பெண்களைப் பொருளாகப் பார்ப்பதும், தன் அதிகாரத்துக்கும் - பணத்திற்;கும் பெண்ணை அடிமையாக கருதுவதும் என்பது, வர்க்க கண்ணோட்டமாகவே இருக்கின்றது. இதைக் கடந்த சிந்தனை முறை என்பது, அந்த வர்க்கக் கண்ணோட்டத்தில் கிடையாது.

பாதிக்கப்பட்ட பெண்கள் ஆணாதிக்க உலகில் ஆணுக்கு நிகராக மேலே வர – பாலியல் ரீதியான வன்முறைக்கு இணங்க வேண்டும் என்பது ஆணாதிக்க தனியுடமை சமூக அமைப்பு முறையில் உள்ளார்ந்த சமூக விதியாக இருக்கின்றது. அவள் வன்முறைக்கு உள்ளாகும் போது, தொடர்ந்து இணங்கி வாழ்வதன் மூலம் ஆணாதிக்க உலகில் மேலே வரமுடியம் என்ற விதி, பொதுவானதாக இருக்கின்றது. இதனால் தான் காலம் கடந்த மீ.ரூ வாக வெளிவருகின்றது. இது சின்மயிக்கு பொருந்தும்.

இதுதான் அமெரிக்கா முதல் உலகெங்கும் நடந்தது, நடக்கின்றது. சமூக அடுக்கில் புகழ் பெற்ற ஆணுக்கு எதிரான அவதூறு என்ற வைரமுத்துவின் கூற்று என்பது, பொது விதிக்கு முரணானது. திட்டமிட்டு தனக்கு எதிரான ஒரு சதி என்றால், பெண்ணுக்கு இது போன்ற குற்றங்கள் நடப்பதை பொதுவாக எற்றுக் கொண்டாக வேண்டும். தனக்கு எதிராக சின்மயி ஏன் குற்றம் சாட்ட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

வைரமுத்து கவிதைகள் முதல் பாடல்கள் வரை, ஆணாதிக்க பாலியல் ஆபாசத்தாலானது. கடந்த சில பத்தாண்டுகளில் மக்களிடம் சென்ற சினிமா பாடல்கள், ஆணாதிக்க ஆபாசத்தால் நிறைந்து கிடக்கின்றது என்றால், வைரமுத்துவின் ஆணாதிக்க ஆபாசச் சிந்தனை முக்கிய பங்கை வகித்து இருக்கின்றது. பெரியாரின் பகுத்தறிவுவாத சிந்தனை மேலோங்கி பகுத்தறிவுவாத பாடல்கள் வெளிவந்த பொது, அதைத் தகர்த்து பெண்ணை உடல் சார்ந்த  பாலியல் உறுப்பு ஊடாக காட்டிய பொறுக்கி வைரமுத்து. பாலியல் பொறுக்கி எழுதிய பாடல் வரிகளைக் கொண்ட வைரமுத்து, அதன் அடிப்படையில் தான் பெண்ணை அணுகியிருக்க முடியுமே ஒழிய, வேறு எந்த விதத்திலுமல்ல. ஒரு ஆணாதிக்க பொறுக்கிக்குரிய எல்லாக் கூறும், அவரின் பாடல் வரிகளில் குவிந்து கிடக்கின்றது.

இப்படி இருக்க தமிழனுக்கு எதிரான "பாப்பாத்தியின்" அவதூறு என்று கூறுகின்ற ஆணாதிக்க மரமண்டைகள், சமூக உயர் அடுக்கில் உள்ள தமிழன் இது போல் செய்யமாட்டான் என்று கூறுவதும் சரி,  "பார்ப்பனிய" பெண் என்றால் இது நடக்காது என்று கூறுவது எல்லாம், வெட்கக்கேடான ஆணாதிக்க சாதிய மனப்பாங்காகும்.

தமிழ் இனவாதம் தொடங்கி போலி பெரியாரிஸ்ட்கள் வரை, சாதிய ஆணாதிக்க தன்மை கொண்டது என்பதையே, சின்மயி விவகாரம் அம்பலமாக்கி இருக்கின்றது. இலக்கியம் பேசிய ஈழத் தமிழர்கள் தொடங்கி தமிழீழம் கேட்ட இயக்க தலைவர்கள் வரை, பெண்களை பாலியல் ரீதியாக வன்முறைக்குள்ளாக்கியதுடன் - அது குறித்து வெளிவராத பற்பல வரலாறுகள் உண்டு.

சின்மயி மீ ரூ வை தமிழ் ஊடகங்கள் முதல் சினிமா உலகம் இருட்டடிப்பு செய்வது, மவுனம் காப்பது கூட வைரமுத்துக்கு இருக்கும் ஆணாதிக்க உயர் தகுதி தான்.  தங்கள் ஆணாதிக்க ஊடக – சினிமா பிழைப்புக்கு, வைரமுத்து தேவை. ஆணாதிக்க விபச்சாரத்தையே ஊடகங்கள் முதல் சினிமா வரை செய்கின்றது. இப்படி இருக்க சின்மயி தன் 18 வயதில் இதைக் கூறியிருந்தால் என்ன நடந்து இருக்கும், முகம் தெரியாத ஆணாதிக்க அதிகாரத்தின் இருட்டு அறையில் போட்டு, அன்றே சின்மயியை புதைத்து இருப்பார்கள். இன்றைய ஆணாதிக்க தீர்ப்புகள் அதைத்தான் இன்று செய்கின்றது.

தமிழகத்தை உலுக்கி வரும் நிர்மலாதேவி விவகாரமும் இதற்கு ஒத்தது தான். மாணவிகளை செற் பண்ணியதும் கூட, இது போன்ற சமூகத்தில் உயரத்தில் இருக்கின்ற ஆணாதிக்க மனிதர்களுக்கு தான். நவதாராள வாதத்தின் நவீன வடிவம் இது. புகழ் பெற்ற மனிதர்களுக்கு புரோக்கர்கள் மூலம் பெண்களை கட்டாயப்படுத்தி ஒழுங்குபடுத்துவது - ஆணாதிக்க வன்முறைக்கு ஏற்ப இளம் பெண்களை அழைத்து வருவது நவீன வடிவம்;. இன்று சின்மயிக்கு எதிராக வைரமுத்துவை முன்னிறுத்தி குத்தி முறிவது கூட – நவதாராளவாத சிந்தனை வடிவமாக இருக்கின்றது.