Language Selection

சீவுளிச்சித்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் அந்நிய ஆட்சியாளர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை ஒரு குறிப்பிட்ட “மேற்குடி மக்கள்” கூட்டத்தினரே அவர்களை அரசியல் பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர்.

1931ல் அந்நியர்கள் அமுலாக்க முயன்ற ‘சர்வஜன வாக்குரிமையை’ சாதியையும், படிப்பையும், பெண்(பால்)களையும் முன்னிறுத்தி எதிர்த்து நின்றவர்கள்-அவர்களின் வழித்தோன்றல்கள்-வாரிசுகள்-சீடர்கள் தான் இன்றும் எமது தலைவிதியை நிர்ணயிக்கும் ஆதிக்க அரசியல் பிரதிநிதிகளாக எம்மால் தெரிவு செய்யப்பட்டு ராஜ(தந்திர அந்தஸ்து) பவனி வந்தபடி உள்ளனர்.

ஆங்கிலேயரிடம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது (50மூ) வீதப் பிரதிநிதித்துவம் கோரிய ஜி.ஜி.பொன்னம்பலம் 1939ல் நாவலப்பிட்டியில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிங்கள மக்களின் பிறப்பையும் பௌத்த மதத்தையும் பற்றி மிகவும் இழிவுபடுத்தி பேசியதால் நாவலப்பிட்டி, பாசற, மஸ்கெலிய ஆகிய ஊர்களில் தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குல்கள் இடம்பெற்றன. அது யாழ்ப்பாணத்திலும் எதிரொலித்தது. அக் காலப்பகுதியில் ‘சிங்கள மகா சபையை’ ஆரம்பித்து இயக்கி வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க இனவாதப் பேச்சு மூலம் தனது ‘சபை’யின் வளர்ச்சியை அதிகரித்தமைக்காக திரு பொன்னம்பலத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.(பொன்னம்பலத்தின் பேச்சு ‘சிங்கள மகா சபை’க்கு புதிய பல கிளைகளை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அமைப்பதற்கு வழி வகுத்தது).

 

1948 ஆவணி 20ல் பாராளுமன்றத்தில் ‘இலங்கைப் பிரசாவுரிமைச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக வாக்களித்த பொன்னம்பலம் அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவை ‘இனவாதி’எனக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அப்படிப் பேசியவர் இரண்டு வாரங்கள் கழித்து(1948 செப்டம்பர் 3ல்) அதே பிரதமரின் அரசாங்கத்தில் ‘கைத்தொழில்கள், கைத்தொழில் ஆராய்ச்சி, மீன்பிடித்துறை’ அமைச்சரானார்.

திரு பொன்னம்பலம் இலங்கை அரசாங்கத்தில் அமைச்சராக(1948-1956) இருந்த காலப்பகுதியில் வட கிழக்கு அபிவிருத்தி கருதி செயற்பட்டதால் உருவானவையே வாழைச்சேனை காகித உற்பத்தி சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஆகியனவாகும். இவை தவிர வட கிழக்கில் இன்று வரை வேறெந்த தொழிற்சாலைகளும் நிறுவப்படவில்லை. 1965ல் திரு பொன்னம்பலத்திற்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட போது அதனை அவர் ஏற்கவில்லை.

1983 வரை பல ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கி வந்த இந்த தொழிற்சாலைகள் பின்னர் தொடர்ந்த யுத்தம் காரணமாக மூடப்பட்டன. யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கழிந்த பின்னரும் இந்த தொழிற்சாலைகளை மறுபடி இயங்க வைப்பதற்கான முயற்சிகள் எமது வட கிழக்கு பாராளுமன்றப் பிரதிநிதிகளின் மிகக் குறுகிய சுயநலப் பார்வை கொண்ட அரசியல் போக்கு காரணமாக இழுத்தடிக்கப்பட்டு முடக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று முழக்கமிட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று வருபவர்கள் எவரும் இன்று வரை மக்களின் வாழ்வாதாரங்களை உருவாக்குவதற்கு அல்லது அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அல்லது அவர்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு முன்வந்ததாக வரலாறே கிடையாது. மாறாக மக்கள் நலன் பெறக்கூடிய திட்டங்களை முறியடித்த வரலாறு தான் காணப்படுகிறது.

“ஆளும் அதிகாரத்தை எங்களுக்குத் தா” என்று போராடும் ‘ஆண்ட பரம்பரையினர் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் மீது கொண்டிருக்கும் கரிசனையின் அளவை-தாற்பரியத்தை 'மகாவலி கங்கை நீரை வடக்குக்கு கொண்டு வரும் திட்டத்தை' முறியடித்த சாதனை மூலம் நாம் நன்கு புரிந்து கொள்ளலாம். இத் திட்டத்தினுள் 'யாழ்நகர் கழிவுநீர் வடிகால் அமைப்பு' மறு சீரமைக்கப்பட்டு 'யாழ் நிலத்தடி நீர் மாசடைவதைத் தடுக்கும்' ஒரு பிரிவும் உள்ளடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்திட்டத்தை அவர்கள் முறியடித்தமைக்கு அவர்களால் முன்வைக்கப்படும் வாதம் “ஆற்றுத் திட்டத்துடன் சிங்களவர்களும் வந்து குடியேறி விடுவார்கள்” என்பதாகும். இலங்கையில் ‘குடியேற்றத் திட்டம்’ என்பது ஆங்கிலேயர் ஆட்சியின் போதே 1931ல் ஆரம்பிக்கப்பட்டது. ‘திட்டமிட்ட சிங்கள குடியேற்றத் திட்டம்’ என்பது 1949ல் ‘கல்லோயா அபிவிருத்தி’ என்ற பெயரில் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டது. அது முதல் இன்று வரை பலவிதமான திட்டங்களின் கீழ் இலங்கை அரசாங்கம் சிங்கள மக்களை வட கிழக்கில் குடியேற்றி வருகிறது. 70 வருடங்களாக ‘ஆளும் அதிகாரம்’ கோரும் எமது பிரதிநிதிகளால் இதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அத்துடன் நடந்து முடிந்த யுத்தம் வட கிழக்கில் இராணுவ  முகாம்கள் அவர்கள் குடும்பங்கள் வந்து குடியேறி வாழ வழி சமைத்து விட்டுள்ளது.

ஆண்ட பரம்பரையினரின் ஆளும் அதிகாரப் போராட்ட அரசியல் மக்களின் அபிவிருத்தியை பின்தள்ளி தங்களது நலன்களை மட்டும் கருத்தில் வைத்தே செயற்படுகிறது. வட கிழக்கு அபிவிருத்தியின்மை காரணமாக 1960களிலேயே எமது இளைஞர்கள் வேலை தேடி கப்பல்களில் ஏறவும் - வெளிநாடுகள் செல்லவும் தொடங்கி விட்டனர். இன்றும் அது தொடருகிறது. 

“பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்………….’ எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட தன்னாட்சிப் போராட்டம் பின்னர் “நூறு பேர் மிஞ்சி சுடுகாடானாலும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்” என்று உச்சக் கட்டம் சென்று இறுதி யுத்தம் காணும் வரை அதற்கு அனுசரணையாக இருந்தவர்கள் தான் மறுபடியும் அதே பல்லவி பாடத் தொடங்கியுள்ளனர்.

அரசின் கொடுப்பனவுகளை மாதா மாதம் பெற்றுக் கொண்டு அரசு வழங்கும் சிறப்புரிமைகளை அனுபவிப்பவர்கள் நாட்டு மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அபிவிருத்தி திட்டங்களை வேண்டாம் என்று அடம் பிடிப்பது குறித்து குடிமக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ரயில் போக்குவரத்தை வடக்கு வரை விஸ்தரித்த போது வேண்டாம் என எதிர்ப்புக் காட்டிய பரம்பரையினர் நாம். பல்கலைக்கழகம் வேண்டாம் என கூறியவர்களின் வழித்தோன்றல்கள் நாம். அதனால் தான் இன்று அபிவிருத்தி வேண்டாம் என்கிறோம். சாதாரண மக்கள் பயன் பெறக் கூடிய எந்த திட்டங்களையும் எம்மை ஆள விரும்புவோர் ஏற்றுக் கொள்ள மாட்டார். ஏனெனில் அபிவிருத்தி மக்களை தங்கள் சொந்தக் கால்களில் நின்று வாழ வழி வகுத்து விடும். அப்படி சுயமாக சுயாதீனமாக வாழும் மக்கள் அடுத்தவரிடம் கையேந்தி நிற்கமாட்டார். அந்த மக்கள் மத்தியில் அரசியல் என்பது உழைப்பாகுமே ஒழிய வழமைபோல (ஏமாற்றும்) பிழைப்பாகாது. எனவே மக்கள் மத்தியில் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்தால் தங்களின் ஏமாற்று அரசியல் பிழைப்பை தொடர முடியாது என்பதனாலேயே “அதிகாரம் முதல் அபிவிருத்தி பின்” என ஆர்ப்பரிக்கிறார்கள்.

இலங்கையில் 1947 முதல் இது வரை 15 பாராளுமன்றப் பொதுத் தேர்தல்கள் இடம் பெற்றுள்ளன. இத் தேர்தல்களில் எமது வாக்குகளால் தெரிந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற சனநாயகப் பிரதிநிதிகள் மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்? 

தங்கள் சொந்த வீட்டுக் காணிக் கிணற்றில் அச்சமின்றி ஆடிப்பாடி சுதந்திரமாக குளித்துக் குடிநீர் எடுத்துக் குடித்து வாழ்ந்து வந்த எம்மை இன்று பணம் கொடுத்து பிளாஸ்டிக் போத்தல் தண்ணீர் வாங்கவும் வரிசையில் நின்று தண்ணீர் பிச்சை எடுக்கவும் வைத்தது தான் இவர்களது ஒரேயொரு சாதனையாகும். 

அன்று ஊர்களில் அடக்கி ஒடுக்கப்பட்டு ஓட்டுக் கூரை போடத் தடை விதிக்கப்பட்டிருந்த பல கோயில்கள் இன்று கும்பாபிஷேசம் செய்யப்படும் கோபுரங்களாக கிளர்ந்தெழுந்து நின்று கொடி பிடித்து சாதியத்தை அதன் வைராக்கியத்தை வெளிப்படுத்த வைத்தது இன்னொரு சாதனையாகும்.

லட்சக் கணக்கில் மக்களை நாடு விட்டு ஓட வைத்து நாட்டில் எஞ்சி வாழும் மக்களை வெளிநாட்டவரைக் கெஞ்சி வாழவும் அரசுக்கு அஞ்சி வாழவும் வைத்துள்ளமை அடுத்த சாதனையாகும்.

உணவுக்காக-உழைப்புக்காக-உழைக்கும் உரிமைக்காக-அதற்கு அடித்தளமான உடைமைக்காக நாடு பூராவும் போராடும் மக்கள், 

ஒரு வேளை கஞ்சிக்கு தினமும் நாள் பூராவும் உழைத்து மடிபவர்கள், 

இழப்பதற்கு உயிரைத் தவிர எதுவுமே அற்றவர்கள்,

இவர்கள் எவரையும் பற்றிய பிரக்ஞை இன்றி ‘அதிகாரம் முதலில் அபிவிருத்தி பின்னர்’ என்ற கோஷம் போடுவோர்  குறித்து 

அடக்கப்பட்டோர், 

ஒடுக்கப்பட்டோர், 

பாதிக்கப்பட்டோர், 

சிறைபிடிக்கப்பட்டோர், 

கடத்தப்பட்டோர், 

காணாமலாக்கப்பட்டோர்,

காணி பறிக்கப்பட்டோர்,,,,

கவனிப்பாரற்றோர், 

கைவிடப்பட்டோர் 

இவர்கள்  பற்றிய கரிசனை உள்ளவர்கள் அனைவரும் ஓரணி திரளாவிடின் நாட்டின் அடுத்த பிரளயமொன்றுக்கு ஆராத்தி எடுத்தவர்களாவோம்.