Language Selection

சீவுளிச்சித்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1983 யூலை 25-27ல் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் அன்றைய ஆட்சியாளர்களால் நன்கு திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அதே நாட்களில் நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரமும் அன்றைய அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டதேயாகும்.

இக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இதற்கு முன்னரும் கலவரங்கள் இடம் பெற்றிருந்தன. கொலைகள் இடம் பெற்றிருக்கின்றன. 1977 ம் ஆண்டுக் கலவரத்திலும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழர்களின் அரசியல் பயணம் வன்முறை வடிவத்தை அடையத் தொடங்கியிருந்த அன்றைய காலகட்டத்தில் வன்முறையானது தனியே இளைஞர்கள் மத்தியிலேயே முனைப்புக் கொண்டிருந்தது. மக்கள் இளைஞர்களின் வன்முறைகளை வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருந்தனர். ஏற்கனவே கலவரங்களுக்குப் பழக்கப்பட்டிருந்த சாதாரண பொதுமக்கள் 1983 கலவரத்தையும் வழமை போலவே சாதாரணமாகக் கடந்து போயிருப்பார்கள்.

 

ஆனால் 1983ல் தமிழ்ப் பேசும் மக்களை வன்முறையின் பக்கம் நாட்டம் கொள்ள வைத்தது,  அந்தக் கலவரத்தின் போது அன்றைய ஆட்சியில் இருந்தவர்களால் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட இந்த 53 அரசியல் கைதிகளின் படுகொலைகளே. இலங்கை அரச கட்டமைப்பின் நீதித்துறையின் பாதுகாப்பின் கீழ் அதியுயர்ந்த பாதுகாப்புச் சிறைக் கட்டுப்பாடுகளுடன் விசாரணக் கைதிகளாக வெலிக்கடைச் சிறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் அரசாங்க ஆதரவுடன் திட்டமிடப்பட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டதும் மக்கள் சற்று விழிப்படைந்தனர். அரசு-அரசாங்கம் இரண்டின் மீதும் நம்பிக்கை இழந்தனர். இலங்கை அரசின் கீழ் எமக்கு நீதி கிடைக்காது என்று உணர்ந்தனர். தமது இளைஞர்களின் வன்முறை ஒன்றே தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்கும் எனச் சிந்திக்கத் தலைப்பட்டனர். சனநாயக அரசியலில் நமக்கு சாவுதான் கிடைக்கும் என்று முடிவு செய்தனர்.

அரசியல் வானில் உணர்ச்சி பொங்கும் உரைகள் மிதந்தன. சிறு சிறு குழுக்களாக செயற்பட்டுக் கொண்டிருந்த ஆயுத இயக்கங்களில் சேருவதற்கு இளைஞர்கள் தாமாகவே முன்வந்தனர். அரசியல் புரியாமலேயே பொதுமக்களும் அதனை ஆதரித்தனர். தமிழ் பேசும் மக்களின் இந்த அரசியல் பரிணாம வளர்ச்சியின் போது ஆத்திரம் - பகை - வெறுப்பு ஆகியவையே முன்னிலைப்படுத்தப்பட்டன. பழிக்குப் பழி உணர்வு மேலோங்கியது. இதற்கு “உந்து சக்தியாக” அமைந்த ஒரேயொரு விடயம் வெலிக்கடைச் சிறைப் படுகொலையாகும்.

கட்டுக்கடங்காமல் பாய்ந்து ஓடும் காட்டாற்றை கட்டுப்படுத்தி நாட்டை வளம்படுத்துவது போல எமது இளைஞர்களின்-மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்தி அறிவுக்கு இடம் கொடுத்து செயற்பட எமது ‘தமிழ்த் தேசியம்’ அனுமதிக்கவில்லை. அது 53 பேரின் சிறைப் படுகொலையை பயன்படுத்தி இளைஞர்களின் சிந்தனையை மழுங்கடிக்க வைத்து “விடுதலை” என்பது ‘தமிழனைத் தமிழன் ஆளுவதே’ என அவர்களை நம்ப வைத்தது. ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு “மக்களின் அரசியல் விழிப்புணர்வு” ஒரு அடிப்படையான முக்கியமான அவசியம் என்பதனை உணர்ந்திருந்தும் சுயநலத் தேசியம் அதனை உதாசீனப்படுத்தியது. அது மாபெரும் தவறு என்பதனை இன்று எமக்கு ‘முள்ளிவாய்க்கால்’ நிரூபித்துக் காட்டிவிட்டுச் சென்றுள்ளது.

ஆனால் அன்றைய உலக அரசியல் சூழலில் இந்தச் சிறைப் படுகொலையை இலங்கை அரசுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய சாதகமான நிலைமைகள் இருந்தும் அதனை சாதித்துக் காட்டத் தவறி விட்டோம். சாதித் தேசியங்களின் சுயநல அரசியல் போக்குகளால் அன்று தொட்டு இன்று வரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வதைபட்டுக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்குக் கூட இலங்கை அரசியல் சட்ட வரைவின் கீழ் இந்த 53 தமிழ் கைதிகளின் கொலைக்கு வழக்குத் தொடர முடியும். நீதி கிடைக்காவிட்டாலும் இந்தப் படுகொலைக்கும் அன்றைய இலங்கை ஆட்சியாளர்களுக்கும் உள்ள தொடர்பை ஆதாரங்கள் மூலம் நிறுவ முடியும்.

இந்த ஆதாரங்களை நாம் தென்னிலங்கை மக்களுடனான பரஸ்பர நட்புறவு ஊடாகவே அடைய முடியும். இந்தப் படுகொலைக்கான நேரடி சாட்சியங்கள் அவர்கள் மத்தியில்தான் உள்ளன. 2001ல் சனாதிபதி சந்திரிகாவினால் நியமிக்கப்பட்ட “இன வன்செயல்கள் பற்றிய மெய் அறியும் சனாதிபதி ஆணைக்குழு” செப்டம்பர் 2002ல் வெளியிட்ட அறிக்கையில் அவற்றிற்கான ஆதாரங்கள் உள்ளன.

9-10 நவம்பர் 2012ல் இடம்பெற்ற 27 வெலிக்கடைச் சிறைக்கைதிகளின் படுகொலைக்கு முன்னாள் சக கைதி ஒருவரால் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

12 நவம்பர் 1989ல் கைது செய்யப்பட்டு 13 நவம்பர் 1989ல் கொல்லப்பட்டதாக கூறப்படும் “மக்கள் விடுதலை முன்னணித்”(ஜே.வி.பி.)தலைவர் ரோகண விஜயவீர எங்கே எனக் கேட்டு அவரது மனைவி அண்மையில் ஆட்கொணர்வு மனு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மக்களின் பெயரால் இலங்கை அரச யாப்பின் கீழ் சத்தியப் பிரமாணம் செய்து சம்பளம் பெறுவோர் சலுகைகளை அனுபவிப்போர்,  தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இன்று கம்பு சுழற்றி - வீர வசனங்கள் பேசி - கொம்பு சீவி - கொடி பிடிப்போர் எவராவது 1983 வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைக்கு நியாயம் கேட்பார்களா?

“வீரம் விலைபோகாது விவேகம் துணைக்கு வராவிட்டால்”

 -சோக்கிரட்டீஸ்