ஊடகங்களுக்கான செய்தி கட்சியின் 40வது ஆண்டு நினைவு உரை
சி.கா.செந்திவேல்
பொதுச் செயளாளர்.
நாட்டின் அனைத்து மக்களும் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். அதேவேளை, அதிகார துஸ்பிரயோகங்களும் ஊழல்களும் பெருகிநிற்கின்றன. பழைய திருடர்களைக் காட்டிப் பதவிக்கு வந்தோர் புதிய திருடர்களாக இன்று உருவாகி நிற்கின்றனர். போதைப் பொருட்களின் பரம்பலும் பாவனையும் அதிகரித்து தெற்கே பாதாள உலகக் குழுக்களும் வடக்கே வாள்வெட்டுக் கோஸ்டிகளும் மக்களின் அன்றாட வாழ்வை அச்சுறுத்தியும் சீரழித்தும் வருகின்றன.
இவ்வாறு கடந்த 03.07.2018 அன்று யாழ்ப்பாணம் கொக்குவிலில் இடம்பெற்ற புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் 40 ஆவது ஆண்டையொட்டிய விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் அவர் தனது உரையில், எழுபது வருடங்களுக்கு மேலான தேசிய இனப் பிரச்சினைக்குரிய தீர்வு எனப்படுவது ஏட்டுச்சுரக்காயாகவே இருந்து வருகின்றது. அதேவேளை, இப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட முப்பது வருட போர் விளைவித்த அழிவுகள், உயிரிழப்புக்கள், பாதிப்புக்களுக்கு உள்ளான வடக்குக் கிழக்கு மக்களுக்கு இதுவரை நியாயமோ, நிவாரணங்களோ வழங்கப்படவில்லை. இவை யாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் 1978 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டுவரும் தாராளமயம், தனியார்மயம் என்பவற்றை இலக்காகக் கொண்ட நவதாராள ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சிநிரலேயாகும்.
நாட்டிற்கும் மக்களுக்கும் கேடுகளையும் நாசங்களையும் கொண்டுவந்துள்ள மேற்படி திட்டங்களை மாற்றியமைக்கக்கூடிய தேசிய பொருளாதார திட்டங்களை முன்னெடுப்பதற்கும் ஆளும் வர்க்கக் கட்சிகளோ அல்லது எதிரணிக் கூட்டுக் கட்சிகளோ தயாராக இல்லை. இவை பற்றி இன்று எதிர்க்கட்சி என்ற பெயரில் இணக்க அரசியல் நடாத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அக்கறை கொஞ்சமும் இல்லை. மக்களின் பிரச்சினைகள் எதையுமே காதுகளில் வாங்கிக்கொள்ளாத மேற்படி கட்சிகள் அடுத்த மாகாணசபை, பாராளுமன்றம், ஜனாதிபதி தேர்தல்களைப் பற்றி மாத்திரமே கரிசனைகொண்டுள்ளன. இந்நிலையில் நாட்டின் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து தமது கரங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதையே எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி இவ் வேளை வலியுறுத்தி நிற்கின்றது.
இன்றைய பொருளாதாரக் கட்டமைப்பும் அதனோடு இணைந்த தேசிய இனப்பிரச்சினையும் கடந்த 40 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களையும் தமிழ், முஸ்லீம், மலையகத்தமிழர் ஆகிய சிறுபான்மைத் தேசிய இனங்களையும் பல நிலைகளிலும் சின்னாபின்னப்படுத்தி வந்துள்ளன. உழைக்கும் மக்கள் மத்தியில் வறுமை, வேலையின்மை அதிகரித்துள்ளதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் அன்றாடப் பாவனைப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மக்களின் தலைகளில் வரிகளும் கடன்சுமையும் சுமத்தப்படுகின்றன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலன்களில் தாராளமயமும் தனியார்மயமும் புகுத்தப்படுவதால் அத்துறைகள் தொடர்ந்து சீரழிக்கப்படுகின்றன. இவற்றுடன் கூடவே பண்பாட்டம்சங்கள் திட்டமிட்ட சமூக விரோதச் செயற்பாடுகளால் சீர்குலைக்கப்படுகின்றன. தெற்கே பாதாள உலகக் குழுக்களும், வடக்கே வாள்வெட்டுக் குழுக்களும் இச் சீரழிவுகளை அரங்கேற்றும் கருவிகளாக உள்ளன.
அதேவேளை, நாட்டின் தேசிய இனப் பிரச்சினை வளர்க்கப்பட்டு, கொடிய போராக மாற்றப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக வடக்குக் கிழக்கை மையப்படுத்தி உள்நாட்டுப் போராக முன்னெடுக்கப்பட்டது. இக் கொடிய போரினால் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேலான மக்கள் படுகொலைசெய்யப்பட்டனர். பலகோடி ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சிறைச்சாலைகளும் அகதிமுகாம்களும் நிரம்பி வழிந்தன. அகதிகளாக லட்சக்கணக்கானோர் சொந்த மண்ணையும், சொந்தங்களையும் விட்டுப் புலம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. இன்றுவரை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் எவையும் மத்திய அரசினாலோ, மாகாண ஆட்சிகளினாலோ மேற்கொள்ளப்படவில்லை. கணவன்மாரைப் போரில் இழந்த பெண்கள் வடக்குக் கிழக்கில் மட்டும் எண்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் விதவை என்ற பெயரைச் சுமந்தபடி தமது பிள்ளைகளுடன் வயதான பெற்றோருடன் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொண்டு கண்ணீர் வாழ்வு வாழ்ந்துவருகின்றார்கள். இதேபோன்று மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு இன்றியும், வாழ்க்கைத்தரத்தில் அபிவிருத்தியின்றியும், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அடிப்படை தேவைகளான காணி வீடு இன்றி வாழ்ந்து வருகின்றனர். ஏனைய தொழிலாளர், விவசாயிகள், மீனவர்கள், அரச, தனியார் துறை ஊழியர்களும், சேவைத்துறைகளைச் சேர்ந்தவர்களும் இதே நெருக்கடிகளைப் வெவ்வேறு அளவுகளில் எதிர்கொண்டு நிற்கின்றனர்.
எனவே, கடந்த 40 வருட காலப் பாராளுமன்ற – நிறைவேற்று அதிகார ஆட்சிமுறையே மேற்கூறிய கேடுகளுக்கு வழிகோலி வந்துள்ளது. 1978 இல் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பும், அதன் கீழான உலகமயமாதல் நிகழ்ச்சிநிரலில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட தாராளமயம், தனியார்மயம் என்பனவும் நாட்டையும் மக்களையும் பெரு நாசத்துக்குள் தள்ளிவிட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்தவே முப்பது வருடப் போர் மூட்டப்பட்டு கொடூரமாக முன்னெடுக்கப்பட்டது. இவற்றுக்கு நாட்டின் ஆளும் வர்க்க அதிகார சக்திகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தலைமைதாங்கி வந்துள்ளன. இவர்களைத் தாங்கியும் அரவணைத்தும் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளும், சீனா போன்ற வல்லரசு சக்திகளும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்கள். உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவும் முன்னின்று கடுமையான வட்டியும் கடும் நிபந்தனைகளும் கொண்ட கடன்களை வழங்கி வருகின்றன. அவற்றுடன் சீனாவிடமும் பெருந்தொகையான கடன் பெறப்பட்டுள்ளது. இவை அனைத்தினதும் மோசமான எதிர்விளைவுகளையே இன்று நாடும் மக்களும் பாரிய பிரச்சினைகளாக அனுபவித்து வருகின்றனர்
இவற்றுக்கு எதிராக நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து வெகுஜன எழுச்சியிலும் போராட்டங்களிலும் அணிதிரளாது விட்டால், கடந்த நாற்பது ஆண்டுகளில் அனுபவித்தவற்றை விடவும், மோசமான பிரச்சினைகளையும் அவலங்களையும் எதிர்கொள்ள வேண்டியே ஏற்டும். எனவும் தெரிவித்தார்.