Language Selection

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சாதியை எதிர்ப்பது ஏன்? "முற்போக்காக" முன்னிறுத்திக் கொள்ளவா? சாதி ஒடுக்குமுறையை முன்வைத்து பிழைத்துக் கொள்வதற்காகவா? சாதிய ஒடுக்குமுறை ஒழிப்பது தான், சாதி எதிர்ப்பின் நோக்கமென்றால்!, எப்படி? அதற்கான வழிமுறை என்ன?

ஒடுக்கும் சாதிய சமூகப் படிநிலைகளை முன்னிறுத்தியோ, மேல் இருந்து கீழாக நடக்கும் வன்முறையை எதிரானதாகக் காட்டியோ, சாதியைப் புரிந்துகொள்ள முடியுமா!? இதற்கு எதிராகப் போராடுவதன் மூலம், சாதியை ஒழித்துவிட முடியுமா!?

சாதிக்கு எதிரான கடந்தகால போராட்டங்கள் தொடங்கி இன்றைய சமூக வலைத்தளங்கள் (பேஸ்புக்) வரை, சாதி ஒழிப்பைக் கோருகின்றதா!? காலத்துக்கு காலம் அரங்கேறிய, அரங்கேறும் சாதி ஒடுக்குமுறை வடிவங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் அல்லது போராடுவதன் மூலம், சாதியை ஒழிக்க முடியுமா!? அதாவது சாதிக்கு எதிரான இன்றைய "முற்போக்குச்" சிந்தனைமுறை, சாதிய சிந்தனைமுறையினை எதிர்க்கின்றதா அல்லது ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்க்கின்றதா?

உதாரணமாக கலையில் வடிவத்தை முன்னிறுத்தி உள்ளடக்கத்தை மறுப்பது போல் அல்லது வெளித்தோற்றத்தில் விமர்சனத்தைக் கொண்டு அது தோன்றுவதற்கான சமூக உள்ளடக்கத்தை கேள்விக்குள்ளாக்காது அதை பாதுகாக்கும் கலை வடிவங்கள் போல், சாதி உள்ளடக்கத்தை விடுத்து வெளித்தெரியும் வன்முறை வடிவத்தை மட்டும் எதிர்க்கின்ற அரசியல் கூட சாதி அரசியலே. அதாவது சாதியத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது.

அதாவது சாதியை பாதுகாக்கும் அரசியல் கூட, சாதி எதிர்ப்பை முன்வைக்க முடியும். சாதிய சீர்திருத்தவாதங்களைக் கொண்டு சாதியை தொடர்ந்து முன்னிறுத்துவது கூட, நடக்கத்தான் செய்கின்றது. "சமபந்தி" தொடங்கி உள்ளுராட்சி தேர்தலில் "சாதிய பிரதிநிதித்துவத்தை" வழங்குவதன் மூலம் சாதி சமூக அமைப்புமுறைமையும், சாதியச் சிந்தனைமுறைமையும் பேணப்படுகின்றது. சாதி காலத்துக்கு அவசியமற்ற மரபு என்று கூறும், சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் கூட, சாதியை மறுக்கும் சாதி அரசியலை முன்வைக்கின்றார்.  

இதுபோல் தான் "முற்போக்கு" சாதி எதிர்ப்பும் நடந்தேறுகின்றது.

 

அண்மைக்காலங்களில் வெள்ளாளிய "இந்து" மதக் கோரிக்கைகளின் பெயரில், நாட்டின் பொது சட்ட திட்டங்களுக்கு முரணாக நீதிமன்றம் வேள்வியைத் தடை செய்திருக்கின்றது. "இந்துகள்" மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்று கூறி, மாட்டு இறைச்சிக்கு தடை கோரப்படுகின்றது. மாடு உண்பது சமூகத்தால் கண்காணிப்படுவதும், தீட்டுக்குரியதாகவும் காட்டி மனிதர்களை தனிமைப்படுத்துவதும் நடக்கின்றது. சுடலையின் வெள்ளாளிய  பாரம்பரியத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசப்படுகின்றது. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் வழிபட்ட கோயில்கள், ஒடுக்கும் வெள்ளாளிய சாதிய வழிபாட்டு முறைமைக்கு மடைமாறிச் செல்லுகின்றது. இப்படி நடந்தேறுகின்ற பல நிகழ்வுக்கு எதிரான "முற்போக்கு" விமர்சனங்கள், யாரை எதிரியாக காட்ட முடிகின்றது? எதற்கு எதிராக என்றால், மொட்டையாக, முள்ளந்தண்டற்ற 'சாதி எதிர்ப்பு"  பார்வையைத் தான் முன்வைக்க முடிகின்றது. இன்றைய சாதிய சமூகத்தில் எதிரி யார்?

மறுபக்கத்தில் 1960 களில் சாதி எதிர்ப்பு போராட்டத்தின் உள்ளடக்கமானது, வெளிப்படையான தீண்டாமையையும் – அதற்காக கையாண்ட வன்முறை வடிவங்களையும் எதிர்ப்பதன் மூலம் அணிதிரட்டப்பட்டது. அன்றும் கூட சாதியின் வேரை இனம் காட்டாததுடன், அதற்கு எதிரான போராட்டத்தையும் மறுதளித்தனர் என்பதே உண்மை. இதன் விளைவு என்ன?

தீண்டாமைக்கு எதிராக போராடிய தலைவர்கள் - தொண்டர்களும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதியை தங்களளவில் கடைப்பிடிக்கப்படுவதை எதிர்க்கவில்லை. பலர் சாதி அடிப்படையில் வாழ்ந்ததையும், வாழ்வதையும் காணமுடியும். குறிப்பாக சாதி கடந்த திருணமணங்களை, முன்னின்று எதிர்த்தனர். 1960 களில் தீண்டாமைக்கு எதிரான இயக்கம், சாதி கடந்த திருமணத்தை அங்கீகரிக்க மறுத்ததுடன், அதை எதிர்ப்பதற்கு சாதிய சிந்தனையிலான சுய விளக்கத்தைக் கொடுத்து தற்காத்துக் கொண்டது.

இந்த வரலாற்றுப் பின்னணியில் இருந்து தான், இன்று வரை சாதிய ஒடுக்குமுறையை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சமூகமும், அதை விளக்க முடியாத அளவுக்கு "முற்போக்கு"வாதிகளும் இருக்கின்றனர் என்பதே உண்மை. இதன் பொருள் சாதிய சமூகத்தில், அனைவரும் சாதிய சிந்தனையில் வாழ்ந்தபடி இருக்கின்றனர் என்பதே அர்த்தம்.

"நாங்கள் சாதி பார்ப்பதில்லை" என்று கூறுகின்றவர்களும், சாதி காலத்துக்கு அவசியமற்ற மரபு என்று கூறும் சிவசேனையும், "ஒடுக்குமுறைக்கு" ஊடாக சாதியை அடையாளம் காட்டும் "முற்போக்குவாதிகளும்".. சாதிய சிந்தனையிலான ஒடுக்குமுறையானது நவீன நவதாராளவாதமாக இயங்குவதை காண்பதுமில்லை, காண முடிவதுமில்லை.

உதாரணமாக முதலாளித்துவச் சிந்தனை என்பது, முதலாளிக்கு மட்டுமான சிந்தனையல்ல. இந்த சமூகத்தில் வாழும் அனைவரதும் சிந்தனைமுறையாக இருக்கின்றது. முதலாளித்துவச் சிந்தனைமுறைக்கு எதிராக, அதாவது எமக்கு எதிராக நாம் போராடுவதில் தொடங்கித்தான், முதலாளித்துவத்தை ஓழிக்க முடியும்.

சாதிய சமூகத்தில் வாழும் நாம் அனைவரும் சாதிய சிந்தனைமுறையில் தான் வாழ்கின்றோம். இதை விளங்கிக் கொண்டால் தான், அந்த சிந்தனைமுறை என்ன என்ற கேள்வியை எழுப்பவும், சாதிய சிந்தனை எப்படி எம்முள் இயங்குகின்றது என்பதை இனம் காணவும், அதை ஒழிக்கவும் முடியும்.

இன்று இலங்கையில் சாதி குறித்து பேசியவர்கள் - பேசுகின்றவர்கள், சாதியச் சிந்தனை குறித்து பேச மறுக்கின்றவராகவே இருந்தனர் - இருக்கின்றனர். அதாவது சாதி ஒடுக்குமுறை பேச தயாராக இருக்கின்றவர்கள், சாதிய சிந்தனை குறித்து பேச மறுக்கின்றனர். இதன் பொருள் தீண்டாமையிலான வன்முறையை எதிர்க்கின்றவராக இருக்கின்றனரே ஒழிய, சாதிய சிந்தனையிலான சாதியை ஒழிக்கத் தயாராகவில்லை.

அந்த வகையில் எமக்குள்ளும் இருக்கும் சாதிய சிந்தனையினை விடுத்து, வெளித்தெரியும் வெறும் சாதி முண்டத்தைப் (வன்முறையை) பேசுவதாக இருக்கின்றது. "முற்போக்காக" முன்னிறுத்தப்படும் இன்றைய "மார்க்சியம் முதல் இலக்கியங்கள் வரை", சாதிய சிந்தனை குறித்து பேசாததாகவும், பேசுவதை தீண்டத்தகாத பொருளாகவும் மாற்றி இருக்கின்றது. சாதி குறித்து பேசி புகழ்பெற்ற இலக்கியங்களுக்கும் இது பொருந்தும். இந்த வகையில் இலங்கை தமிழ் சமூகத்தின் எதிர்ப்பரசியல் தொடங்கி இலக்கியம் வரை, சமூக விஞ்ஞான வகைப்பட்டதல்ல.

முக்கியமாக சாதியொரு சிந்தனைமுறை என்பதை மறுப்பதே, எதிர்ப்பரசியலாக இருக்கின்றது, இருந்து வந்திருக்கின்றது. இதுவே இலக்கிய – கலை முயற்சிகளின் உள்ளடக்கமாகவும் இருக்கின்றது. தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் பங்குகொண்டபடி சாதிக்கு எதிராக எழுதிய டானியல் எழுத்துக்கள் கூட, சாதிய சிந்தனைமுறைக்கு எதிரானது அல்ல. மாறாக  ஒடுக்கும் சாதிக்கு (தீண்டாமைக்கு) எதிரானதாக, சாதிய சிந்தனைமுறையில் இருந்து எழுதப்பட்டது. டானியல் நாவல்களின் இரண்டு விடையங்களை எடுப்போம்.

1.ஒடுக்கப்படும் சாதிக்கு எதிரான போராட்டத்துக்கு ஒடுக்கும் சாதியைச் சேர்ந்தவர்களே  தலைமை தாங்குகின்றவராகவும் அல்லது அதை வழிநடத்துபவராகவும் முன்னிறுத்தும் டானியலின் சிந்தனைமுறை எந்த வகைப்பட்டது.

2.ஒடுக்கும் சாதியில் பிறந்த பெண்களின் பாலியல் "நடத்தையைக்" கொண்டு, ஒடுக்கும் சாதிய ஆண்களை எதிரியாக வருணிக்கும் சிந்தனைமுறை.

நூவலின் சாரம் தீண்டாமையையும் - அது கொண்டிருந்த வன்முறையையும் முன்னிறுத்தியதே தவிர, வெள்ளாளிய சிந்தனையை எதிர்க்கவில்லை. இந்த சிந்தனைமுறை தான், ஒடுக்கும் சாதியில் இருந்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்ட முடியும் என்ற அரசியலை (நபர்களை) முன்மொழியவும், ஒடுக்கும் சாதியின் வன்முறையாளரின் (குடும்பப்) பெண்களின் பாலியல் நடத்தைக்க எதிராக காட்டும் வெள்ளாளியச் சிந்தனையிலான, அரசியலை முன்வைக்க முடிகின்றது. இந்த வெள்ளாளியச் சிந்தனைமுறை "வெள்ளாளர்" என்ற சாதியை முன்னிறுத்தியதே ஒழிய, வெள்ளாளியச் சிந்தனைமுறை தனக்குள்ளும், முழு சமூகத்திலும் புரையோடி இருப்பதைக் காணவுமில்லை, காட்டவுமில்லை.

டானியல் நாவல் மீதான விமர்சனங்கள், டானியலின் சாதியச் சிந்தனைமுறையை விமர்சிக்கவில்லை. மாறாக குறித்த சாதிப் பெண்கள் மீதான அவதூறாகக் காட்டி, சாதிய சிந்தனையை முன்னிறுத்தியது.

சாதிக்கு எதிரான கடந்தகால இடதுசாரிய அரசியல், சாதி சிந்தனைக்கு எதிராக மக்களை அணிதிரட்டாது, அதற்குள் ஒரு கூறாக இருந்த தீண்டாமையை மட்டும் எதிர்த்துப் போராடியது. இதன் மூலம் தீண்டாமையிலான வன்முறை  - வெளிப்படையான ஒடுக்குமுறை வடிவத்தை மட்டும் சாதியாகக் காட்டி எதிர்த்ததன்  மூலம், சாதியொரு சிந்தனைமுறையாக இருப்பதை மறுதளிப்பதற்கு இட்டுச்சென்றது. இதைத்தான் இன்று இலங்கை சிவசேனா கோருகின்றது. இந்த வகையில் சாதிக்கு எதிரான அன்றைய போராட்டம் கூட, சாதிய சிந்தனைக்கு உட்பட்டு தான் நடந்தேறியது.

டானியல் இலக்கியம் மீதான விமர்சனம், அவரின் சாதிய சிந்தனை மீதானதாக இருக்க, அதற்கு பதில் விமர்சனம் சாதி சிந்தனைக்குட்பட்டதாக முன்வைக்கப்பட்டது. டானியல் முதல் அதற்கு எதிரான விமர்சகர்கள் வரை, சாதிய சிந்தனைக்கு எதிரான அரசியலை முன்னோக்காக கொண்டிருக்கவில்லை. அன்று தீண்டாமைக்கு அப்பால் சாதிய சிந்தனை கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. இன்று வரை அதுதான் தொடருகின்றது. சாதி கடந்த திருமணங்களை மறுக்கும் அளவுக்கு, தீண்டாமை இயக்கத்தின் கொள்கையும், அதை வழிநடத்திய கட்சிக் கொள்கையும் இருந்தது.

இதை நுட்பமாக விளங்கிக் கொள்ள, லெனின் எது புரட்சிகரமானது என்பது குறித்து முன்வைத்த கூற்றைக் கொண்டு, சாதியத்துக்கு எதிரான அன்றைய - இன்றைய நிலையை ஒப்பிட்டு பார்க்க முடியும். "..பாட்டாளி அடிமை முறையை எதிர்த்துக் கலகம் புரிந்தெழுந்துவிட்ட அடிமையானவன், தமது வர்க்கம் தலைவனாய் இருக்க வேண்டுமென்ற கருத்தை உணராத அல்லது இக்கருத்ததை நிராகரிக்கும் பாட்டாளி, தனது அடிமை நிலையை உணராத அடிமையாவான். அதிகம் போனால், அடிமை என்கிற அளவில் தனது நிலைமையை மேம்படுத்திக் கொள்ளப் போராடும் அடிமையாவனே அன்றி அடிமை முறையை வீழ்த்தப் போராடுகிறவனல்ல"

இதை சாதி எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பொருத்திப் பார்த்தால், சாதி எதிர்ப்பு கூட சாதிய சிந்தனையை கடந்து செல்லவில்லை என்பது புரியும். டானியனால் ஒடுக்கப்பட்ட சமூகமே சாதி ஒழிப்புக்கு தலைமை தாங்க வேண்டியவராக இருப்பதை முன்வைக்காது, ஒடுக்கும் சமூகத்தில் இருந்து தலைமை தாங்க வருபவராகவே காணவும் - காட்டவும் முடிகின்றது. லெனின் சுட்டிக் காட்டுவது போல் தீண்டாமையில் இருந்து விடுபடுவதைத் தாண்டி, சாதியை ஒழிக்க சாதிய சிந்தனையை ஒழிக்கக் கோரும் போராட்டத்தை முன்வைக்கவில்லை. இது தனிப்பட்ட டானியல் மீதான விமர்சனமல்ல. சாதி குறித்து, அன்றைய -இன்றைய அரசியல் போக்குகள் மீதான விமர்சனம்.

அடிமை எப்படி தன் விடுதலைக்காக தன் அடிமை நிலையை புரிந்து கொள்ளாத அடிமையாக இருக்கின்றானோ, அதேபோல் சாதி ஒடுக்குமுறையை புரிந்து கொள்ளாத சாதி சிந்தனைக்குள் சாதிய போராட்டங்கள் குறுகி வரம்பிட்டுக் கொண்டன.

வெள்ளாளியச் சிந்தனைமுறைதான், இலங்கையில் தமிழரின் சிந்தனைமுறை. இதை அன்றைய சண்முகதாசனின் தலைமையிலான கட்சி முதல் இன்று "முற்போக்குகள்" வரை முன்வைக்கவில்லை, முன்வைக்கக் தயாராகவுமில்லை. இதுதான் இன்றைய உண்மை. இன்று சாதி மீள கொழுப்பெடுப்பதும், இந்த அரசியல் பின்னணியில் தான்.

வெள்ளாளர் சாதியாக, சாதியைக் குறுக்கிக் காட்டியவர்கள் - காட்டுகின்றவர்கள் இருக்கின்றனர். வெள்ளாளச் சிந்தனையே சாதிய சமூகம் என்பதையும், அது எங்கும் எதிலும் இருப்பதையும் காண மறுக்கின்றனர். இதனால் தான் "நான் சாதி பார்ப்பதில்லை" என கூறுவதும், "எங்கே சாதி இருக்கின்றது" என்று கேட்பவர்களும், சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் வழிபட்ட கோயிகள் வெள்ளாளிய சிந்தனைக்கு உள்ளாகுவதும் கண்கூடாக நடந்து வருகின்றது.

சாதிக்கு எதிரான "சிந்தனை" பிறரை ஒடுக்கும் நேரடி வடிவம் ஊடாக (தீண்டாமை வன்முறை வடிவத்தைக்) காட்டி சாதியை குறுக்குவது, நேரடியாக ஒடுக்காத சூழலினாலான சாதியத்தைப் பாதுகாப்பது நடந்தேறுகின்றது. மேல் இருந்து கீழாக சாதியைச் சொல்லி ஒடுக்குவது குறித்து பேசுவதற்கு அப்பால், சாதிய சிந்தனையிலான சமூக அமைப்பு குறித்து பேசுவதில்லை. "வெள்ளாளர்" என்ற சாதியை, பிறப்பின் அடிப்படையைக் கொண்டு எதிராக முன்நிறுத்துபவர்கள் கூட, தங்கள் சாதி சிந்தனையில் இருந்து தான் அதை அணுகுகின்றனர் என்பதை காண்பதில்லை என்பதே உண்மை.

சாதி என்பது சிந்தனைமுறை. அது இந்தியாவில் பார்ப்பனியச் சிந்தனைமுறையாக இருப்பது போல், இலங்கையில் வெள்ளாளியச் சிந்தனைமுறை. இது இந்தியாவில் பிறப்பால் பிறந்த பார்ப்பனரைக் குறிக்காதது போல், இலங்கையில் பிறப்பால் வெள்ளாளராக பிறந்த வெள்ளாளரைக் குறிப்பதல்;ல. சிந்தனைமுறைக்கு, சாதி அடையாளம் கிடையாது.

சாதிய சமூகத்தில் வாழ்கின்றவர்கள், சாதிய சிந்தனைக்குள் வாழ்கின்றனர். இந்த சாதிய வாழ்க்கை முறைமையையும் பண்பாடுகளையும் பின்பற்றுகின்ற, சடங்குகள் சம்பிரதாயங்களை முன்னிறுத்துகின்ற அனைவரும், வெள்ளாளியச் சிந்தனை முறைக்குள் வாழ்கின்றனர். இதற்கு எந்த சாதி என்ற அடையாளமும் கிடையாது.

வெள்ளாளிய சிந்தனை முறைமைக்குள், "தமிழரின்" கடவுள் வழிபாடுகள் கூட நடக்கின்றது. இந்த வெள்ளாளிய சிந்தனையிலான வழிபாட்டுமுறை இந்து மதத்துக்குரியது மட்டுமல்ல,  தமிழ் கிறிஸ்துவ மதத்துக்குரியதாகவும் இருக்கின்றது. வெள்ளாளியச் சிந்தனையிலான சடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாடுகளை கடைப்பிடிக்கின்ற அனைவரும் சாதிய வாழ்க்கை முறையுடன் பயணிக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட இனத்தை முன்னிறுத்தி இனவாதம், தேசியவாதம், தமிழ் சிந்தனைமுறை கோரும் "சுயநிர்ணய" அரசியல் என அனைத்தும், வெள்ளாளிய சிந்தனைமுறைக்குள் இருந்து தான் புளுக்கின்றது.

யுத்தத்தின் பின்னர் மீள்கட்டுமானங்கள் தொடங்கி தனிநபர்களின் தனிப்பட்ட உதவிகள் வரை, வெள்ளாளிய சாதி சிந்தனை வகைப்பட்டதாகவே இருக்கின்றது. உதாரணமாக உதவி செய்யும் தனிப்பட்ட புலம்பெயர்ந்த தமிழன், தன் மகன்(ள்)க்கு சாதி பார்த்து திருமணம் செய்கின்றவனாக இருக்கும் போது, அவன்(ள்) கொண்டு இருக்கும் மனித உணர்வு என்பது ஒடுக்குமுறையிலானது. அந்த வெள்ளாளியச் சிந்தனையைக் கொண்ட மனிதன் பிறருக்கு செய்யும்  உதவி கூட, சாதியச் சிந்தனைக்கு அப்பாற்பட்டதல்ல.

சாதிய சிந்தனை முறைமைக்கு சாதி அடையாளம் கிடையாது. மத அடையாளம் கிடையாது. அதாவது பிறப்பிலான சாதி அடையாளத்தைக் கொண்டோ, பின்பற்றும் மதத்தைக் கொண்டோ, சாதிய சிந்தனையிலான சமூகம் இயங்குவதில்லை. சாதிய சமூகத்தின் எல்லாக் கூறிலும், சாதிய சிந்தனையைக் காண முடியும்.

இன்றைய அரசியல் - சமூகப் போக்குகளை விளங்கிக் கொள்ளவும், சாதிய சிந்தனை குறித்த அறிவும், அதற்கு எதிரான உலகப் பார்வையும் அவசியமானது. இதன் மூலம் மட்டும் சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.