Language Selection

மணலைமைந்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனவாத முரண்பாடுகளை வளர்த்து அதில் குளிர்காயும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும், சில முஸ்லீம் அரசியல்வாதிகளும், மஹிந்த காலத்து யாழ்ப்பாணத்து அமைச்சர் பெருமகனாரும்  இணைந்து நடத்திய அரசியலினால் தற்போது வடபகுதியின் மீன்வளம், மற்றும் கடல்வளம் அழிவுக்கு உட்படுத்தப்படுகிறது.

மஹிந்த காலத்தில் கடலடி வளங்களான கடல் அட்டை மற்றும் சங்கு குளிக்கும் அனுமதிப்பத்திரம் சிங்கள மற்றும் முசுலீம் பெரும் பணமுதலைகளுக்கு வழங்கப்பட்டது. இம் முதலைகள் மஹிந்த காலத்து அமைச்சரின் ஆதரவுடனும், கடற்படையின் ஆதரவுடனும் வடமராட்சி தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிரதேசத்தில், 2009 பின்னான காலத்திற் சிறிது சிறிதாக கடலடி வளங்களை சுரண்டும் வேலையை ஆரம்பித்தனர். தற்போது இவர்களின் ஆதிக்கம் மண்டைதீவு வரை விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடல்வள அழிவு

கடல்வளத்தை சமுக அக்கறையுடன் பகிர்வதில் எந்த முரண்பாடுமில்லை. ஆனால், இன்று தமிழ் பிரதேசத்தில் நடைபெறுவது படுபயங்கரமான முறையில் கடல்சார் வளங்களை அழிவுக்குள்ளாக்கும்  செயற்பாடுகளாகும். பல நூற்றுக்கணக்கான படகுகளில் வந்து வடக்கின் கரையோரங்களில் தாணையம் அமைக்கும் மேற்படி முதலாளிகள், தமது கடற்தொழில் கூலியாட்களின் உதவியுடன் பகலின் Dynamite டைனமைட் பாவித்து மீன்வளத்தின் மீதான கொலையை - வள அழிவை மேற்கொள்கின்றனர்.

 

இரவில் பாரிய மின்சார இயந்திரங்களின் உதவியுடன் கடலை வெளிச்சமூட்டி, கடற்சங்கு மற்றும் கடல் அட்டைகளைப் பிடிக்கின்றனர். இரவில் கடலை இவ்வாறு வெளிச்சமூட்டுவதனால், பாரம்பரிய வடக்கின் தமிழ் பேசும் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. காரணம், வெளிச்சமூட்டுதலினால் கடல் வெள்ளம் பெருக்கு ஏற்படும்போது கரையோரத்துக்கு மேய்ச்சலுக்கு வரும் மீன்கள் வராமல் வேறு பிரதேசத்துக்கு புலம்பெயர்கின்றன. மீன்களின் இப்புலப்பெயர்வானது கடலின் இயற்கையான சூழலியலை பாதிக்கின்றது. இப்பாதிப்பு ஒட்டுமொத்தமான கடல்வளத்தையும்  நீண்டகாலப்போக்கில் நாசமாக்கி விடும். Blacksea - கருங்கடல் நிலை வடகடலில் உருவாகும். அதாவது, -சீவராசிகள் வாழ வளமிழந்த கடலாக வடக்கின் இன்றைய மீன்வளப்பிரதேசம் (Fishbank) மாற்றமடையும்.

மக்கள் போராட்டங்கள்

தற்போது சிறிது சிறிதாக வடகடலின் பாரம்பரிய மீனவ சமூகமானது, முஸ்லீம்- தென்னிலங்கை பெருமுதலாளிகளின் கடல்வள அழிவு நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வருகின்றது. மண்டைதீவு மீனவர்கள் சில மாதங்களுக்கு முன் தாணயமிட்ட மேற்படி முதலாளிகளின் செயற்பாடுகளை போராட்டத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். தற்போது தொடர்ச்சியான போராட்டங்கள் வடமராட்சிக் கரையோரம் தொடக்கம் முல்லைத்தீவு வரை நடைபெற்று வருகிறது.

அடிப்படையில் இப் போராட்டங்களை எந்த அரசியல்வாதியும் கண்டுகொள்ளவில்லை. கடந்த வாரம், கடல்வள அழிவு நடவடிக்கையில் ஈடுபடும் "தென்னிலங்கை" மீனவர்களை சிவாஜிலிங்கம் அவர்கள்  நேரடியாக சந்தித்து பார்வையிட்ட பின்பு தான், மக்களின் போராட்டம் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக தென்னிலங்கை ஊடகங்கள் இப் பிரச்சனை பற்றிப் பேசின. தமிழ் ஊடகங்களில் சிலவும், சிங்கள ஊடகங்கள் பலவும், "தமிழ் முற்போக்காளர்" "இலக்கிய வாதிகள்", புலியெதிர்ப்பாளர்கள், "பிரபல மார்ஸ்சிச வாதிகள்" எனத் தம்மை அடையாளப்படுத்துவோரும் பாரம்பரிய தமிழ் மீனவர்களின் போராட்டங்களை இனவாத போராட்டங்கள் என வர்ணித்தனர். ஆனாலும், பிறந்ததிலிருந்தே இயற்கையுடன் போராடப் பழகிய கடலின் பிள்ளைகளுக்கு இந்த இனவாத முத்திரை குத்தும் சதி ஒரு பொருட்டல்ல.

அரசியல்வாதிகளின் நாடகங்கள்

பல பிரதேசங்களில் நடைபெறும் போராட்டங்களின் தொடர்ச்சியாக 08.06.2018 - சர்வதேச கடல்சார் சூழலியல் தினம் அன்று, யாழ்.மாவட்ட கடல்-மற்றும் நீரியல் திணைக்களத்துக்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுத்தனர். திணைக்களத்தின் வாயில்கள் பூட்டுப் போட்டு மூடப்பட்டது. அலுவலர்கள் உள்ளே செல்லவிடாது தடுக்கப்பட்டனர். ஒரு அடையாளப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் சூடுபிடித்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் சுமந்திரன், புளொட் சித்தார்த்தன் மற்றும் பல கூட்டமைப்பு அரசியல்வாதிகள் போராட்டக் களத்துக்கு வந்து மக்களோடு சேர்ந்து கொண்டனர். சில மணிநேரத்தில் பின் (குதிரை) கஜேந்திரன் தனியே அங்கு வந்தார். ஒரு ஓரமாக நின்று தொடர்ச்சியான தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டார். சில பத்து  நிமிடங்களின் பின் அவரின் ஆதரவாளர் சிலர் வந்தனர். அப்போ, கூட்டமைப்பு அரசியல்வாதிகள் எதற்கு வந்தார்களோ அதை நிறைவேற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். அதாவது, ஊடகங்களுக்கு போஸ்  கொடுப்பதும், பேட்டி கொடுப்பதுமாக படு "பிசியா" க இருந்தனர். கூட்;டமைப்பு அரசியல்வாதிகளிடம், பொதுமக்கள் என்ற போர்வையில் "கேள்வி" கேட்டு - குழப்பத்தை உருவாக்கி தம் மீது ஊடக வெளிச்சம் பட கஜேந்திரனின் ஆதரவுக் கைத்தடிகள் சிலர் படாத பாடுபட்டனர்.  

இதெல்லாம் ஒருபக்கம் நடக்க மக்கள் தம் பாட்டுக்கு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கட்டுரையின் தொடர்ச்சி படங்களுக்கு கீழே 

படங்களின் மேல் அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்

போராட்டத்தின் எதிர்காலம்

பாரிய அழிவைத் தடுக்கவேண்டிய வேலையை தமது நண்பர்களான ரணில்-மைத்ரியுடன் கதைத்து முன்னெடுக்க வக்கில்லாத சுமந்திரன் போன்றவர்கள் மக்களுடன் சேர்ந்து "போராட" வருவதென்பது வெறும் நாடகமே ஒழிய வேறொன்றும் இல்லை. அதேவேளை, தமிழ் தேசியம் கதைக்கும் கஜேந்திரகுமார் (குதிரை) கொம்பனி கூட்டமைப்பை எதிர்ப்பதற்காக மட்டுமே இப்போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

இன்றுள்ள அரசியற் சூழ்நிலையில் மக்களுக்காக போராடும் சக்திகள் இப்போராட்டத்தை வழிநடத்த வேண்டும். போலித் தேசியவாதிகளையும், இனவாதிகளையும் களத்திலிருந்து அகற்ற வேண்டும். இன  ஒருமைக்காக போராடுபவர்கள் எனத் தம்மை காட்டிக் கொள்வோர், தமிழ் மக்கள் மீதான தேசிய ஒடுக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது- இதன் அடிப்படையில் அம் மக்களின் வாழ்வாதாரமும், இயற்கை வளங்களும் கொள்ளையிடப்படுகிறதென்பதை அங்கீகரித்து ஏற்றுகொள்ள வேண்டும். இவ்வாறான அரசியல் மாற்றங்கள் மூலம் மட்டுமே இன முரண்பாடுகளைக் களைய முடியும். இதனடிப்படையில் அனைவரும் ஒடுக்கப்படும் வடகரை தமிழ் மக்களுக்காகவும்- வடகடல் வளங்களைக் காப்பதற்கும் போராட முன்வரவேண்டும்.