பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் எமது பாடசாலையில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்முறை குறித்த செய்தியொன்று, பரபரப்பான கொசிப்புச் செய்தியாக்கப்பட்டு வருகின்றது. மறுபக்கத்தில் பாலியல் வன்முறை குற்றஞ்சாட்டப்பட்டவர் சட்டரீதியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன என்பதை ஆராய்வது எமது நோக்கமல்ல. சமூகத்துக்கு எதிரான இது போன்ற குற்றங்களையும் - அதற்கான தண்டனைகளையும் கோரும் அதேநேரம், சமூகத்தின் (எமது) பொறுப்பற்ற தனமே குற்றங்களின் அடிப்படையாக இருப்பதை புரிந்துகொள்ளுவதன் மூலம், எதிர்காலத்தில் இதை தடுக்கும் அணுகுமுறைiயே எமது எதிர்வினையாக இருக்க முடியும்.
இந்த வகையில் பகுத்தறிவின்றி கண்ணை மூடிக்கொண்டு போற்றும் அதிகார வர்க்க கல்வி முறையையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும், மனிதன் பற்றிய மதிப்பீடுகளையும்.. கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. இன்று இருக்கும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் படிநிலை, பெண் குழந்தைகள் மீது அதிகாரத்தை ஆணுக்கு கொடுக்கின்றது. இந்த அதிகாரம் என்பதே அடிப்படையில் வன்முறையால் கட்டமைக்கப்பட்டது. இந்த அதிகாரமானது சமூகத்தில் பலவீனமான – குரலற்ற பெண்களை பாலியல் ரீதியான வன்முறைக்கான அத்துமீறலை அனுமதிக்கும் அளவுக்கு, அதிகாரம் பலமானதாக இருக்கின்றது. இந்த வகையில் கல்வி நிறுவனங்களின் கல்வி செயற்பாடுகள் குறித்து, சுயபரிசோதனைக்குள்ளாக்குவது அவசியம். இந்த வகையில் சில கேள்விகள்
1.கற்றல் - கற்பித்தல் முறை என்பது அதிகாரத்துக்கு உட்பட்டதா? ஜனநாயகபூர்வமானதாக இருக்க வேண்டுமா?
2.ஒழுக்கம் சட்டத்திலானதா? வெளித் தோற்றத்திலானதா? மனிதத் (சமூகத்) தன்மையிலானதா?
3.மனித உறவுகள் பொருள் வகைப்பட்டதா? அதிகாரத்தால் நிர்ணயிக்கப்படுவதா? சமூக உணர்வுகளாலானதா?
அதிபர், ஆசிரியர், மாணவர்கள் படிமுறை அதிகாரத்துக்கு கட்டுப்படுத்தப்பட்ட கற்றல் - கற்பித்தல் முறையாக இருக்கின்றதே ஒழிய, ஜனநாயகபூர்வமான பரஸ்பர உரையாடல் கொண்ட கல்வி முறையாக இருப்பதில்லை. அதிகார முறையிலான கல்வி முறை, பெண் மீதான அதிகாரத்தை மேலுள்ளவருக்கு இயல்பாகக் கொடுக்கின்றது. இந்த அதிகாரத்தை இலகுவாக பாலியல் வன்முறைக்கு பயன்படுத்துமளவுக்கு, சமூகம் பலவீனமாக இருக்கின்றது. அதாவது சமூக உணர்வு கொண்ட சமூகமாக, எதிர்வினையாற்றும் சமூகம் இல்லை.
மனித ஒழுக்கங்கள் குறித்த மதிப்பீடுகள் போலியானதாக, வெளித் தோற்றம் மூலம் கோரப்படுகின்றது. இந்த வகையில் கற்கை முறையில் மாணவர் ஓழுக்கத்தை செயற்கையாக கட்டமைக்கின்றனரே ஒழிய, உணர்வுபூர்வமானதாக இருப்பதில்லை. அதிகாரத்தைக் கொண்ட சட்டத்தினாலும், வெளித்தோற்றத்தாலும் (உடை, சப்பாத்து, தூய்மை..) உருவாக்கப்படும் ஒழுக்கக் கோட்பாடுகள், மனிதத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டிய அவசியத்தை மறுதளிக்கின்றது. அதாவது கூட்டாக வாழும் மனிதத் (சமூகத்) தன்மை தான், உணர்வுபூர்வமான ஒழுக்கத்தின் சமூக அடித்தளம். இதுவல்லாத அதிகாரம் மூலம் கட்டமைக்கும் ஒழுக்கமானது, அடிமைத்தனத்தையும் - எதிர்ப்பின்றி அடங்கிப் போகும் (பாலியல்) வன்முறை வரை அனுமதிக்க கோருகின்றது.
கற்றல் -கற்பிப்பதில் மனித உறவுகள் பொருள் வகைப்பட்ட உறவாக, அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருப்பதால், பெண்ணை நுகர்பொருளாகவும் - ஆணின் அடிமையாகவுமே அணுகத் தூண்டுகின்றது. இதுதான் இன்றைய சமூக அமைப்பு முறையாகவும் இருக்கின்றது. பெண்ணை மனிதனாக பார்க்க, மனித உறவுகள் ஜனநாயகத் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்.
கல்வி - ஒழுக்கம் - மனித உறவுகளை கட்டமைக்கும் அதிகாரத்துவக் கல்விமுறைக்குப் பதில் ஜனநாயகபூர்வமான அணுகுமுறையுடன் கூடிய கல்விமுறையே, பெண்ணை (மனிதனை) சக மனிதனாக மதிக்க வைக்கின்றது. மனித உணர்வுகளுடன் கூடிய உரையாடல்களே, பெண்ணை பாலியல் பண்டமாக அணுகுவதை இல்லாதாக்குகின்றது. அதாவது கல்வியில் ஜனநாயகச் சூழலானது மனிதத்தன்மை கொண்டதாக மாறும் போது, பாலியல் நோக்கில் பெண்ணை அணுகும் ஜனநாயகவிரோத கூறுகளை இல்லாதாக்குகின்றது. பாலியல் குற்றங்களைத் தடுக்க இதைத்தான் நாம் முன்மொழிவாக்க வேண்டும். ஆனால் சுயநலனை அடிப்படையாகக் கொண்ட தனியுடமையிலான சமூக எதார்த்தமோ எதிர்மறையாக இருப்பதையும் - இயங்குவதையும் காண்கின்றோம்.
பாலியல் வன்முறையானது - நுகர்வாக்க கூறாக வீரியமடைகின்றது
நுகர்வாக்கம் முன்னிலைப்படுத்தப்பட்டு தனியுடமை சமூக அமைப்பின், தனியுடமையை முன்னிறுத்திய "சுய அறங்கள் கூட" சிதைந்து வரும் பின்னணியில், பாலியல் வன்முறைகள் மேலிருந்து கீழாக அதிகரித்து வருகின்றது. இந்த வகையில் கொலிவூட் நடிகைகள் தொடங்கி யாழ்ப்பாண பாடசாலைகள் வரை, விதிவிலக்கின்றி சமூகத்தின் மேல்மட்டத்திலான பாலியல் வன்முறைகள், தங்கள் அதிகாரத்தின் உரிமையாக முன்னிறுத்தி அதற்கு இணங்கிப்போகுமாறு கோருவது நடக்கின்றது. பாலியல் வன்முறையின் ஒரு வடிவமாக, பாலியல் லஞ்சம் கோருவது நடக்கின்றது. அதேநேரம் இவை பரபரப்பான கொசிப்பு செய்திகளாக்கப்படுகின்ற பின்னணியில்
1.பாலியல் வன்முறைச் செய்திகளைப் பரபரப்பாக்க - இட்டுக் கட்டுகின்ற புனைகதைகளை உள்ளடக்கி, பாலியல் குற்றங்களைக் கூட வியாபாரமாக்குகின்ற ஊடகவியலாக, ஊடகங்கள் மாற்றம் பெற்று இருக்கின்றன.
2.பாலியல் வன்முறைகளை முன்னிறுத்தி தத்தம் குறுகிய சுயநல நோக்கங்களை அடைவதற்காக, குற்றம் சாட்டுவதும் நடந்தேறுகின்றது.
3.பெண்ணை பாலியல் பண்டமாக முன்னிறுத்துகின்ற விளம்பரச் சந்தையில், பாலியல் கிசுகிசுப்பு, பாலியல் காட்சிகள் .. இயல்பான ரசனையாக்கப்பட்டு, பெண்ணை பாலியல் ஊடாக அணுக வைக்கின்றது.
இந்த பின்னணியில் பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவது அதிகரிக்கின்றது. மறுபக்கத்தில் இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும் - குற்றவாளிகளுக்கு தண்டனையும் என்பது, பல்வேறு தடைகளை தாண்ட வேண்டியதாக இருக்கின்றது. இந்த வகையில் செல்வ அடுக்குகளையும், அதிகார படிநிலைகளையும், சமூக தகுதிகளையும்.. தாண்டித் தான், குற்றங்கள் குறித்து தகவல்கள் வெளிவர வேண்டியிருக்கின்றது. இதற்கு தண்டனை என்பது, இந்த அமைப்பு முறையில் பல தடைகளை தாண்டினால் தான் கிடைக்கும் என்ற எதார்த்த நிலை.
இந்த சமூக அமைப்பின் "அறங்கள்" அனைத்தும் சொத்துடமை அதிகாரத்துக்கு சீரழிந்து விட்டது. சட்டமும், நீதியும் இதற்கு அடிமைப்பட்டு விட்டது.
இதற்கு தீர்வு என்ன?
மனிதன் சுய ஆளுமை கொண்டவனாக தன்னை உருவாக்கிக் கொள்வது தான். பணத்துக்கு அடிமையாக, அதிகாரத்துக்கு அடிபணிந்த மந்தைகளாக வாழ்வதற்கு பதில், சுய ஆளுமைமிக்க தன்னுணர்வு பெற்றவனாக, கூட்டு சமூக வாழ்க்கையை வாழ்வாக தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வகையில் தன்னையும், தன் சமூகத்தையும் உருவாக்குவதன் மூலமே, மேல் இருந்து வரும் பாலியல் வன்முறையையும் - குற்றங்களையும் தடுத்து நிறுத்தவும், குற்றங்களுக்குத் தீர்வு காணவும் முடியும்.
கல்விக்கூடங்களின் கற்றல் - கற்பித்தல் முறைமையிலுள்ள அதிகார வடிவதிற்கு பதில், ஜனநாயக பூர்வமானதாக்கப்;பட வேண்டும். அதற்காக பரஸ்பரம் கற்கவும், வழிகாட்டவும் வேண்டும்.