Language Selection

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இம்முறை மே 18 நினைவு தினத்தை யார் முன்னிறுத்துவது என்ற நாய்ச் சண்டையும், அதை எப்படி - எங்கே கொண்டாடுவது என்ற போட்டியும் நடந்து வருகின்றது. அறிக்கைப் போர் தொடங்கி "தமிழர்" இதிலாவது ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற கூறுகின்ற தரப்புகள் வரை, களமிறங்கி இருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் உறவுகளின் கண்ணீருடன் கூடிய மனித உணர்வுகளை, தத்தம் சுயநலன்களுக்கு ஏற்ப எப்படி பயன்படுத்துவது என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றனர்.

மனித விரோதத்துடன் கூடிய இனவாத யுத்தமானது, மனித அவலத்தை விதைத்து விட்டுச் சென்றுள்ளது. இந்த வாழ்வுடன் மல்லுக்கட்டி வாழ்கின்ற மக்கள், தங்கள் உறவுகளை நினைத்துக் கண்ணீர் விட்டு புலம்பும் நினைவுகள் வாழ்வாகி, அதுவே மனித   அவலமாக மாறி வருகின்றது. இந்த மக்களுக்கு யார் உண்மையில் தலைமை தாங்கி வழிநடத்தும் தகுதி பெற்று இருக்கின்றனர்? இன்று ஏட்டிக்குப் போட்டியாக நிற்பவர்களா? இதை எப்படி நாம் தெரிந்து கொள்வது?

யுத்தத்தின் இழப்பையும், துயரங்களையும் தாங்கி, அன்றாடம் தன்னெழுச்சியாகப் போராடும் மக்களுடன் யார் தங்களை இணைத்துக் கொண்டு இருக்கின்றனரோ அவர்களும், பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை யார் முன்னின்று  முன்னெடுக்கின்றனரோ அவர்களும் தான், உண்மையான மனித உணர்வுகளுடன் மே 18 இனை முன்னெடுத்து வழிநடத்தும் தகுதி பெற்றவர்கள்.

 

தங்கள் உறவுகளை இழந்த மக்கள் போல், தங்கள் உறவுகளின் விடுதலைக்காக போராடுகின்ற உறவுகள், காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு போராட்டம் நடத்தும் உறவுகள், தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்க கோரி நடத்தும் நீண்ட போராட்டங்களுடன்… தங்களை இணைத்துக் கொண்டு போராட தயாரற்றவர்கள், மே 18 இனை நினைவுகொள்வது மட்டும் எப்படி உண்மையான உணர்வாக இருக்க முடியும்? எல்லாவற்றையும் தங்கள் தனிப்பட்ட சுயநலன் சார்ந்து, சடங்குத்தனமான முன்னிறுத்துகின்ற உணர்வுகள் என்பது போலித்தனமானது, போக்கிலித்தனமானது.

நடந்த ஆணாதிக்க இனவாத யுத்தம் பெண்களுக்கு விட்டுச் சென்ற பாலியல் நெருக்கடிகளுக்கும், உளவியல் சிக்கல்களுக்கும் தீர்வைத் தரவில்லை. பெண்களின் நடத்தையில் ஆணாதிக்க "ஒழுக்கத்தைக்" கோருகின்றவர்கள், மே 18 இனை தங்கள் இனவாத ஆணாதிக்க உணர்வில் இருந்துதான் குலைக்க முடிகின்றது. இது தான் எதார்த்தம்.

இப்படி மனித துயரங்களையும், போராட்டங்களையும் கண்டுகொள்ளாத, ஒடுக்கப்பட்ட மக்களைச்  சார்ந்து தங்களை முன்னிறுத்தாதவர்கள் மே 18  பற்றியும், அதற்கு விளக்கும் கொடுப்பதும் நடக்கின்றது. இப்படி இது தான் அது என்பது, மக்களின் கண்ணீர் தங்கள் சுயநலத்துக்கு உதவுகின்றது என்பதால், கண்ணீரையும் வியாபாரமாக்குகின்றனர். முன்பு பிணத்தை வியாபாரமாக்கி பிழைத்தவர்கள் அல்லவா இவர்கள்!?

யாழ் பல்கலைக்கழகம் இதற்கு விதிவிலக்கல்ல. மக்களின் துயரங்களுடன்;;, போராட்டங்களுடன் இணைத்துக் கொண்டு முன்னேற முடியாத மாணவர்கள், மே 18 கண்ணீர் அஞ்சலி என்பது உணர்வற்ற உளுத்துப் போன சடங்குத்தனத்தாலானது. இலங்கையின் பிற பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கல்வி உரிமைகள் சார்ந்தும், மக்களின் பிரச்சனைகள் சார்ந்தும், இனவாத – மதவாதங்களுக்கு எதிராகப் போராடுவதைக் கூட கற்றுக்கொள்ள முடியாத மாணவர்களால், எப்படி எந்த மனித உணர்வுடன் உண்மையான கண்ணீர் அஞ்சலியைச் செலுத்த முடியும்!?

தமிழ் இனவாதம் முன்னிறுத்தும் சடங்குகளைத் தாண்டி சிந்திக்க முடியாத மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை தாங்க முடியாது, குட்டிச் சுவராகவே நீடிப்பது தமிழ் சமூகத்தின் இன்றைய சாபக் கேடுகளில் ஒன்று தான். 

மே 18 "முள்ளிவாய்க்கால்களின்" நினைவு தினமா? 

இம்முறை மே 18 "முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக" குறுக்கிக் காட்டுகின்ற, சமூக அவலமும் நிகழ்ந்து வருகின்றது.

இலங்கை அரசு புலித் தலைவர் பிரபாகரன் இறந்ததை "மே 18" என்று அறிவிக்க, மே 18 புலிகள் தமது இயக்கத்தின் ஒரு நினைவுதினமாக அந்நாளை ஆக்கினர். இனவாத இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் .. உறவினர்கள், புலிக்கு மாறாக இந்த தினத்தை தங்கள் உறவுகளை நினைக்கும் உணர்வை வெளிப்படுத்தும்  தினமாக்கினர். இப்படி எதிரும் புதிருமான முனைகளில் அணுகப்பட்டே வருகின்றது.

புலிகள் தங்கள் இனவாதத் தலைவர்களின் இழப்பையும், ஒடுக்கும் தங்கள் அதிகாரத்தையும் இழந்த நிலையில், அதை மீண்டும் நிலைநாட்டி வியாபாரத்தை தொடருவதற்கான சுயநல  உணர்வுடன், மே 18 நாளை முன்னிறுத்துகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களோ தங்கள் மனித உணர்வுகளுடன் அதை அணுகுகின்றனர். இதுதான் இதன் பின்னுள்ள எதார்த்தம்

இந்த அடிப்படை வேறுபாடுகளுடன் மே 18 நடந்தேறுகின்றது. ஒடுக்குவோர் சமூக பொதுநோக்கமின்றி வெளிப்படையாகவே சடங்குத்தனமானதாக்கி வருகின்ற வேளையில், ஒடுக்கப்பட்ட மக்கள்  தங்கள் வாழ்வின் துயரத்தை முன்னிறுத்தி போராடுகின்ற நடைமுறை  உணர்வுடன் அணுகுகின்றனர். இதை எமது மண்ணில் மக்கள் நடத்தும் போராட்டங்களின் மூலம் காண முடியும்.

போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து மே 18 நாளை அணுகுவதும், அதை அரசியல் முன்நோக்காகக் கொண்டு, ஒடுக்கும் சடங்குத்தனமான வியாபாரத்தனமான மே 18 என்பதை முறியடிப்பதே, மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க முடியும்.