Language Selection

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எமது இந்துக் கல்லூரியில் சேலை (சாறி) அணிவதே பாரம்பரியம் என்கின்றார், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன். இந்த வகையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் பாரம்பரியம், பேணப்பட வேண்டும் என்கின்றார்.

பத்திரிகை "ஜனநாயகம்" குறித்து, ஊடக "தர்மம்" குறித்தும் சுயதம்பட்டம் அடிக்கும் ஊடகங்கள் (குறிப்பாக தினக்குரல்), முஸ்லிம்-இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இனமதவாதத்தைக் கக்கியிருக்கின்றது. செய்திகளை திரித்தும் புரட்டியும் ஒரு பக்கச் சார்பாகவும், இன-மத வாதத்தை தூண்டிவிட்டும் வியாபாரத்தை நடத்தியிருக்;கின்றது.

பொதுபலசேன தன் பங்குக்கு முஸ்லிம்களின் உடை குறித்து இன-மத வெறியை கக்கத் தொடங்கி இருக்கின்றது.

எதிர்காலத்தில் மக்களை இன-மத ரீதியாக பிளக்கும் விவகாரமாக, பாடசாலைகளின் உடை குறித்த பிரச்சனையே அரசியல் அரங்குக்கு கொண்டு வரப்படுகின்றது.

இலங்கையின் எல்லாப் பாடசாலைகளும் மதப் பாடசாலைகளாக, தன்னைத்தான் வரையறுத்து  அடையாளப்படுத்துவதையே இந்த விவகாரம் கோருகின்றது. இனமதவாத கலாச்சாரத்தை திணிக்கும் இடமாக, பாடசாலையை தேர்ந்தெடுக்க கோருகின்றது. மதம்-சாதி-இனமற்று பழகிய மாணவப் பருவம் இனி இலங்கையில் கிடையாது என்பதும், ஒவ்வொருவரும் மத அடையாளங்கள் மூலம் தம்மை முன்னிறுத்துமாறும் இந்த விவகாரம் கோருகின்றது.

இதற்கேற்ப திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி பிரச்சனைக்கு தீர்வாக, மத -இன அடிப்படையில் இடமாற்றம் நடந்து இருக்கின்றது. இதன் மூலம் மனிதவிரோத  இனமதவாத இழிசெயலை அங்கீகரித்திருக்கின்றது. இனி இலங்கையில் இன-மத அடிப்படையில் அரச நியமனங்கள் என்ற புதிய இன-மதவாத அகராதியை தொடக்கி இருக்கின்றது. இலங்கையில் இனமத ரீதியான பிளவுகள், மேலும் ஆழமாக்கப்பட்டு வருகின்றது.

"இந்து" உடைப் பாரம்பரியம் என்பது வெள்ளாளியச் சாதிய அமைப்பின் பித்தலாட்டம்

அண்மையில் புத்தூரில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் வாழ்விடத்தில் பிணத்தை எதிர்ப்பதே எங்கள் பாரம்பரியம் என்று கூறிய அதே வெள்ளாளியச் சிந்தனையில் இருந்து தான், 150 வருட உடைப் பாரம்பரியம் குறித்து பேச முடிந்திருக்கின்றது. பழமைவாதச் சிந்தனையின் தொடர்ச்சிதான் இது.

தமிழர்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தும் எதிர்க்கட்சி தலைவர் சம்மந்தன் 150 வருடங்களுக்கு முந்தைய பாரம்பரிய கோவணத்துடன் பாராளுமன்றம் சென்று தன் தமிழன் அடையாளத்தைக் காக்க அதே கோவணத்துடன் அமெரிக்கா வரை விமானம் ஏறிச் சென்று இருந்தால், அவரின் "தூய" 150 வருட உடைப் பாரம்பரியம் குறித்த கூற்றை கேள்விக்கு உள்ளாக்க முடியாது.

150 வருடத்து பாரம்பரிய தமிழன் கோவணத்தை (பேரினவாதம் பிரபாகரனை கொன்ற பின்  கட்டிய அதே கோவணம் தான்) தனது உள்ளாடையாகக் கூட அணியாத சம்மந்தன், பாரம்பரிய உடைபற்றி பேசுவதன் மூலம், 150 வருடத்துக்கு முந்தைய ஆறுமுகநாவலர் வழிவந்த வெள்ளாளிய சாதிய மதச் சமூக அமைப்பினை பெண்களை ஒடுக்குவதன் மூலம் தாங்கிப் பிடிக்க முனைகின்றார்.

 

பிறரை ஒடுக்கியதன் மூலம் சமூக மேலாண்மைக்கு வந்த வெள்ளாளிய சமூக அமைப்பு, அதன் வழிவந்த ஆண்கள் தங்கள் உடைகளை நவீன ஐரோப்பிய வகையாக மாற்றிவிட்டனர். அதேநேரம் பார்ப்பனிய சாதிய வழிவரும் வட இந்திய உடையை கொண்டாட்டங்களுக்கு  உடுத்துகின்றனர். இப்படி ஆண்களின் வாழ்வியல் எதார்த்தம் இருக்க, பெண்கள் மேல் பாரம்பரிய கட்டுப்பாடுகளை விதிக்கும் கலாச்சாரம் என்பது, ஆணாதிக்கத்தின் 150 வருட பாரம்பரியத்தையே மீறாதிருக்கக் கோருகின்றது.

எல்லா பாரம்பரிய "தமிழ் கலாச்சார" உடைகளையும் கைவிட்டுவிட்ட ஆண்கள், ஐரோப்பிய வகை உடையை அணிகின்ற பின்னணியில், பெண்களை அனுமதிப்பதில்லை. ஐரோப்பியப் பெண்கள் அணியும் உடைகளை இலங்கைப் பெண்கள் அணிவதை, எல்லா மத - இன – சாதிய வாதிகளும் அனுமதிப்பதில்லை. காற்சட்டை தொடங்கி அரைப் பாவாடை அணிவதை, ஆணாதிக்க கலாச்சாரம் பெண்ணின் ஒழுக்ககேடாகப் பார்க்கின்றது. இதை மீறி கொழும்பில் பெண்களில் கணிசமானவர்கள் இதை அணிவது நடக்கின்றது. காற்சட்டை, அரைப் பாவாடை எந்தவகையிலும் பாலியல் கவர்ச்சியை ஏற்படுத்துவதில்லை, மாறாக உழைப்பில் ஈடுபடுவதற்கு இலகுவானதாகவும் - ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணுக்கு பாதுகாப்பும் கூட. ஆனால் ஆணாதிக்க கலாச்சாரம் மறுப்பது, தங்கள் பாரம்பரிய அதிகாரத்தை இது கேள்விக்கு உள்ளாக்குவதானலேயே.

ஆணாதிக்க காட்டுமிராண்டித்தனமான சிந்தனையும் - அதிகாரமும் தான், பெண்களின் உடைகளைத் தீர்மானிக்கின்றது. இங்கு ஆண்களின் அதிகாரமும் - சிந்தனையும் என்பது பெண்ணை 150 வருடத்துக்கு முந்தைய பாரம்பரியத்துக்கு அடிமைப்படுத்துவதன் மூலம், வெள்ளாளிய சாதிய பாரம்பரியத்தை மீட்டு எடுப்பதுதான்.

150 வருடத்துக்கு முன் சேலை அணிந்தது என்பது கூட பொய். மேலாடையின்றி பெண்கள் வாழ்ந்த காலம்.

இன்று பாடசாலைகளில் திணிக்கப்படும் உடை, சப்பாத்து, ரை.. சூழலுக்கு பொருத்தமற்றதாக இருக்கின்ற அதேநேரம், இதன் இலங்கை பாரம்;பரியம்தான் என்ன? வெள்ளைக்காரன் போல்தான் நான் என்று காட்டும் ஏமாற்றுப் பேர்வழிகளும், மக்கள் மேலான தங்கள் அதிகாரத்தின் குறியீடாகவும் கோட்டு சூட்டுடன் கூடிய உடை, சப்பாத்து, ரை.. சமூகத்தில் ஆட்டிப்படைக்கின்றது. அதாவது சமூகத்தின் மேல்மட்ட மனிதனாகக் காட்டி ஏமாற்றுகின்ற சுய வக்கிரத்தில் இருந்து தான், சூழலுக்குப் பொருத்தமில்லாத உடைகள் பாடசாலைகளில் திணிக்கப்பட்டு வருகின்றது. சூழலுக்கு ஏற்ற பாரம்பரிய உடைகள் காணாமல் போகின்றது.

போலியான உடைகள் பாரம்பரியத்தை அழிப்பது, நவதாராள கைக்கூலியான சம்பந்தனுக்கு பிரச்சனை இல்லை. வெள்ளாளிய சாதிய பாரம்பரியத்தை அழிப்பதுதான் பிரச்சனை.

உடைப் பிரச்னைக்கு  தீர்வு என்ன?

இனமத ரீதியாக மக்களை ஒடுக்கும் அரசு, உடை மீதான கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. இந்த வகையில் பாரம்பரிய கலாச்சார உடையை கோரும் இன-மத-சாதிய சிந்தனை மற்றும் அதன் நடைமுறையை விட முன்னேறியதாக இருக்கின்றது. சட்டத்தில் வரம்புக்குள் அவரவர் உடைகளில் கற்கவும் - கற்பிக்கவும் அனுமதிக்கப்பட்ட வேண்டும்;. இதை தடுக்கும்  அதிகாரத்தை, இனம்-மதம்-சாதி சக்திகளிடம் ஒப்படைப்பதை அனுமதிக்க முடியாது.

இடதுசாரியாகிய எம்மைப் பொறுத்தவரையில் மதத்தை அவரவர் சொந்த தனிப்பட்ட விவகாரமாகக் கோருகின்றோம். கல்விக்கூடங்களில் மதக் கல்வியைக் கற்பிப்பதையும், மத அடையாளங்களை புகுத்துவதையும் எதிர்த்து போராடுவதன் மூலம், மதச்சார்பற்ற கல்வியைக் கோருகின்றோம். மத அடையாளங்களை கல்விக்கூடங்களில் புகுத்துவதும், கற்கின்ற - கற்பிக்கின்ற மனிதர்களுக்கு மத அடையாளத்தை புகுத்தி வேறுபடுத்துகின்ற எல்லா மனித விரோத இழிசெயல்களையும் எதிர்த்துப் போராடுவதற்கான அறைகூவல் தான் எமது அரசியல் தீர்வாகும். இன்று எல்லா பாடசாலைகளிலும் மத அடையாளங்கள் புகுத்தப்பட்டு வருவதற்கு எதிராக குரல் கொடுக்கவும், நடைமுறையில் அதற்காக போராடுவதன் மூலமும், எதிர்கால  சமூகத்தை உருவாக்குவதே சமகாலத்தில் எமது தெரிவாக இருக்க முடியும். இதன் மூலம் தீர்வு காண கோருகின்றோம்.