திருச்சியிலுள்ள பி.எஸ்.என்.எல். (BSNL) முதன்மைப் பொதுமேலாளர் (PGM) அலுவலக வளாகத்தின் டிடேக்ஸ் (D-Tax) கட்டிடத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த 5 ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 25.8.06 முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணத்தை விசாரித்தபோது, அதே கட்டிடத்தில் இருக்கும்
ஸ்டோர்சில் பல இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போய் விட்டதாகவும், அது தொடர்பாகவே இந்த ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது. நிர்வாகத் தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமாக உத்தரவு வழங்கப்படாமல், வெறும் வாய்வழி உத்தரவு மூலமாகவே இந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு அதிகாரிகள் ஆணையிட்டுள்ளதாக ஒப்பந்ததாரர் (காண்டிராக்டர்) கூறுகிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவர் கூட, அந்த ஸ்டோர்சில் வேலை செய்யவில்லை. இந்த ஸ்டோர்ஸ், கோட்டப் பொறியாளர் (DE) மற்றும் உதவிப் பொறியாளரின் (AE) நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அந்தக் கட்டிடச் சாவியும் அவர்களிடமே இருக்கும். மேலும், பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் அனைத்திலும் நுழைவாயிலில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் பாதுகாப்பும், உள்ளே நுழையும் எவரையும் சோதனையிடுவதும் உள்ளது. காணாமல் போன பொருட்களும் சட்டைப் பையில் மறைத்து எடுத்துச் செல்லக்கூடிய சிறிய சாதனங்களும் அல்ல. பூட்டி வைக்கப்பட்டுள்ள ஸ்டோர்சிலிருந்து பல இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள், பாதுகாப்பை மீறி வெளியே போனது எப்படி? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், இதற்குத் தொடர்பே இல்லாத 5 தாழ்த்தப்பட்ட ஏழை ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திருடியதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டதாம்! அப்படியானால், அந்த ஆதாரங்களைப் போலீசிடம் கொடுத்து ஏன் புகார் கொடுக்கவில்லை? துறை சார்ந்த விசாரணை நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை?
அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்து விட்டு, அப்பாவி ஊழியர்கள் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்வதென்பது தொலை தொடர்புத் துறையில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. ஒப்பந்த ஊழியர்களுக்காக சங்கம் கட்டி சந்தா வசூலிக்கும் சி.பி.எம். கட்சியின் தொழிற்சங்கவாதிகளோ, அதிகாரிகளின் கொள்ளையை அம்பலப்படுத்தவோ போராடவோ முன்வரவில்லை. வர்க்க ஒற்றுமை பற்றி உபதேசிக்கும் இச்சங்கம், பழிவாங்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்களைப் போராட அணிதிரட்டவுமில்லை. இவற்றை அம்பலப்படுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்களிடம் பிரச்சாரம் செய்து வருவதோடு, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காகப் போராடவும், அதிகார வர்க்கக் கொள்ளையையும் சதியையும் முறியடிக்கவும், புதிய சங்கத்தைக் கட்டியமைக்க புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
பு.ஜ. செய்தியாளர்கள், திருச்சி.