பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற தினமாக 1948 பெப்ரவரி 4ம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைத்தாகக் கூறப்படும் அந்த சுதந்திரம் இந்த பெப். 4ம் திகதி 70 வருடங்களை நிறைவு செய்கின்றது. அன்றிலிருந்து கடந்த ஒவ்வொரு வருடத்திலும் இதனை பெருமையுடன் நினைவு கூர அரசாங்கம் தவறவில்லை. இம்முறையும் பூரண அரச அனுசரணையுடன் சுதந்திரத்தை நினைவு கூர அரசாங்கம் தயாராகி வருகின்றது. மறுபுறம், இலங்கையானது ஜனநாயக நாடென்ற ரீதியில் குடிமகனுக்குரிய ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாகவும் பரவலாக பேசப்படுகின்றது. மனித உரிமைகள் சம்பந்தமாக நிறைவேற்றிக் கொண்ட பிரகடனங்களும் அவற்றில் அடங்குகின்றன. பேசும் மொழி, வழிபடும் மதம், ஆண் பெண் என்ற ரீதியில் பாகுபாடு காட்டமாட்டாதென அரசாங்கம் உறுதி செய்துள்ளது. சட்டப் புத்தகத்தில் எப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இலங்கையின் ஏனைய குடிமக்கள் நடைமுறையில் அனுபவிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள் கூட பறிக்கப்பட்ட மக்கள் மலையகத்தில் வாழ்கிறார்கள். இது விடயம் பெரும்பாலானோரின் கவனத்திற்கு வருவதில்லை என்பதோடு அநேகமானோருக்கு இந்த விடயம் தெரியாது.
மலையகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாத, இலங்கையின் சனத்தொகையில் தோட்டத்தை அண்டி வாழும் சுமார் 10 இலட்சம் மக்கள் 145 சதுர அடிக்கும் குறைந்த வரிசை வீடுகளின் வாழ்கிறார்கள். இலங்கை மண்ணில் ஒரு அங்குல நிலத்திற்குக் கூட உரிமையில்லாத அவர்களுக்கு தமக்கான வீடோ, கடிதங்கள் நேரடியாகக் கிடைக்கக்கூடிய விலாசமோ கிடையாது. பெயரளவில் பிரஜாவுரிமை கிடைத்திருந்தாலும் அரசாங்கத்தின் எந்தவொரு நிர்வாக நிறுவனத்திலும் நேரடியாக தொடர்பு கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கில்லை. அரசியல் விஞ்ஞான அகராதியின்படி சிவில் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களாக அவர்களைக் கருத முடியும். ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் குறித்த சரியான அர்த்தத்துடன் உலக சமூகத்தில் அவர்கள் தோட்டக் கம்பனிகளின் கீழ் தோட்டத் துரைமாரின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டு தேயிலைத் தோட்டத்தோடு கட்டப்பட்டு பாதி அடிமைகளாக, பாதி சம்பள உழைப்பாளிகளாக வாழ்கிறார்கள். அரசாங்கம் 70 வதாவது சுதந்திரத் தினத்தை நினைவுகூர தயாராகும் இத்தருணத்தில் தோட்டத் தொழிலாளருக்கு குறைந்தபட்சம் முழுமையான குடியுரிமை கிடைத்திருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 70வது சுதந்திரத் தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் அரசாங்கம் இத்தருணத்தில் தோட்டத் தொழிலாளருக்கு குடிமக்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளாவது கிடைத்திருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தோட்ட மக்களின் குடியுரிமை உட்பட அரசியல் உரிமைகள் தொடர்பில் குரலெழுப்பும்போது அக்கோரிக்கைகளுக்கு எதிராக அவர்களது வம்சாவழி சம்பந்தமான பிரச்சினைகள் தோன்றுகின்றன. அதனூடு மேற்படி உரிமைகள் மறுக்கப்பட்டமையை நியாயப்படுத்தவும் முயற்சி எடுக்கப்படுகின்றன. ஆனால், இலங்கையில் நிலவும் முதலாளித்துவ சமூக பொருளாதார முறையின் தொடக்கத்திலிருந்தே அவர்கள் இலங்கையில் வாழ்கின்றனர். அது 200 வருட வரலாறாகும். இலங்கையின் தேசிய செல்வத்தை கட்டியெழுப்புவதில் அவர்களது உழைப்பு உதிரம், வியர்வை, கண்ணீர் மாத்திரமல்ல அவர்களது முந்தைய பரம்பரை தமது உயிரையும் தியாகம் செய்துள்ளது. என்றாலும், தோட்டத்துறையை சார்ந்த மக்கள் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்களென்பதை எங்களில் யாரும் நிராகரிக்கப் போவதில்லை.
இலங்கையில் முதலாளித்துவ முறையை பிரித்தானியர்களே அறிமுகப்படுத்தினர். 1815ல் அதுவரை காலனித்துவத்திற்கு அடிமையாகாது எஞ்சியிருந்த மலைநாட்டு இராசதானியையும் ஒப்பந்தமொன்றின் மூலம் பிரித்தானியர்கள் கைப்பற்றிக் கொண்டனர். அன்றிலிருந்து இலங்கை முழுமையான பிரித்தானிய காலனித்துவ நாடாகியது. பிரித்தானிய ஆட்சியாளர்களின் தேவையின் மீது இலங்கையில் முதலாளித்துவ பொருளாதாரமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. மிகப்பெரிய தோட்டப் பயிர்ச்செய்கை அப்பொருளாதாரத்தில் முன்னிலை வசித்தது. 1833ல் முன்வைக்கப்பட்ட கோல்புரூக் கமரன் சீர்த்திருத்தத்தில் அது தொடர்பிலான பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டன. மேற்படி பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரச காணிகளை அனுமதியின்றி கைப்பற்றுவதற்கு எதிராக 1840 இலக்கம் 12 கட்டளைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனூடு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்குத் தேவையான காணிகளை பாரியளவில் பிரித்தானிய அரசாங்கம் கையகப்படுத்திக் கொண்டதுடன் பின்னர் அவை தனியார் பெருந்தோட்ட பயிர்ச் செய்கையாளர்களுக்கு விற்கப்பட்டன. ஜோர்ஜ் பர்ட் என்ற பிரித்தானிய பெருந்தோட்ட பயிர்ச்செய்கையாளரினால் கண்டி பிரதேசத்தில் பயிரிடப்பட்ட 400 ஏக்கர் கோப்பி பயிர்செய்கையானது மேற்படி தோட்டப் பயிர்ச் செய்கையின் ஆரம்பமாகும். 1833 – 43 பத்து வருடத்திற்குள் மாத்திரம் இரண்டு லட்சத்து ஐம்பத்தெட்டாயிரம் ஏக்கர் காணி ஏக்கரொன்று ஐந்து சிலிங் பணத்திற்கு தனியார் பெருந்தோட்ட பயிர்ச் செய்கையாளர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் விற்றுத்தள்ளியது. 1889 ஆகும்போது இலங்கையின் மொத்த சதுர அளவில் சுமார் 10 வீத பரப்பளவில் பெருந்தோட்ட பயிர்ச் செய்கை செய்யப்பட்டிருந்தது.
கோல்புரூக் கமரன் மறுசீரமைப்பின் மூலம் அரசகரும முறையானது சட்டத்தினால் தடை செய்யப்பட்டு சம்பள உழைப்பு முறை கொண்டுவரப்பட்டமை முற்போக்கானதும் முதலாளித்துவ பொருளாதார முறையொன்றை நிறுவுவதற்கு அத்தியாவசிய மறுசீரமைப்பாகவும் இருந்தது.
அப்போதைய இலங்கையில் சாதியப் படிநிலைகளின் அடிப்படையில் வாழ்க்கைத் தொழில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அது பிறப்பிலேயே குலத்தொழிலாக இருந்ததோடு மரணிக்கும்வரை அதுவே அவர்களது தலைவிதியாகவும் இருந்தது. சாதிய ஒடுக்குமுறை இலங்கை சமூகத்தில் தொடர்ந்து நிலவிய போதிலும் அதனை சட்டத்தினால் தடை செய்தமை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் முற்போக்கான நடவடிக்கையாகும். ஆனால், அச்சட்டத்தை முதலாளித்துவ பொருளாதாரமுறைக்கு தேவையான வரையறைக்குள் மாத்திரம் செயற்படுத்துவதில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் கவனமாக இருந்ததை குறிப்பிட வேண்டும்.
இலங்கையில் அரசகருமமுறை ரத்துச் செய்யப்பட்டாலும், பெருந்தோட்ட பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்குத் தேவையாக இருந்த மிகக் கஷ்டமானதும் ஆபத்தானதுமான வேலையில் ஈடுபடுத்தக் கூடிய தொழிலாளர்களை பிரித்தானிய பயிர்ச் செய்கையாளர்களால் இலங்கையில் தேடிக் கொள்ள முடியவில்;லை. இதன் காரணமாக இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகவும் அதற்குத் தேவையான நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள் போன்ற அடிப்படை வசதிகளை அமைப்பதற்காகவும் தென்னிந்தியாவின் ராமேஸ்வரம், மலபார், மதுரை, தஞ்சாவூர் போன்ற பிரதேசங்களிலிருந்து வறிய மக்கள் இந்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.
1880களின் பிற்பகுதியில் இலங்கையின் முதல் பயிர்ச் செய்கையான கோப்பி பயிர்ச் செய்கையானது பூஞ்சை நோயினால் முற்றாக அழிந்தது. பின்னர் தேயிலை பயிர் செய்யப்பட்டது. கோப்பி பயிர்ச் செய்கையோடு ஒப்பிடும்போது தேயிலை பயிர்ச் செய்கை நாளாந்தம் பராமரிக்க வேண்டியிருந்ததுடன் அதற்கு பாரியளவிலான உழைப்பு தேவைப்பட்டதோடு, பெரிய மூலதனமும் தேவைப்பட்டது. இதன் காரணமாக தேயிலைப் பயிர்ச் செய்கையானது ஆரம்பத்திலிருந்தே மிகப் பெரிய கம்பனிகளுக்கு சொந்தமாக இருந்ததுடன் அதற்குத் தேவையான இடம், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 1891ல் இரண்டு லட்சத்தி முப்பத்தையாயிரமாக காணப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் அடர்த்தி 1917 ஆகும்போது நான்கு லட்சமாகவும், 1921 ஆகும்போது ஐந்து லட்சமாகவும் அதிகரித்தது.
இவ்வாறாக தோட்டத் தொழிலாளர்கள் இந்திய வம்சாவழியினராக இருந்த போதிலும், இலங்கையின் ஆரம்ப தொழிலாளர்; பிரஜைகளாகவும் இலங்கை பொருளாதாரத்தின் ஆணி வேராக இருந்தது அவர்கள்தான். விசேடமாக கொழும்பிலிருந்து மலைநாட்டிற்கான நெடுஞ்சாலைகள், புகையிரத பாதைகள் அனைத்தும் அவர்களது உழைப்பால் உருவானதோடு, சமீபகாலம்வரை இலங்கைக்கான வெளிநாட்டுச் செலாவணியில் பெரும் பகுதியை பெற்றுத் தந்ததும் அவர்களது உழைப்புதான். இன்றுகூட ஏற்றுமதி பொருளாதாரத்தில் சுமார் 20 வீதத்திற்கு உரிமை கோருவது பெருந்தோட்டத் துறைதான்.
இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் அவ்வாறு பங்களிப்பு செய்தபோதிலும், அவர்களது வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே சோகமயமானதாகும். அவர்களை இந்தியாவிலிருந்து அழைத்து வரும்போது 150 மைல்களுக்கு மேல் கரடுமுரடான பாதையில் நடந்துவர நேர்ந்தது. நடந்து வர முடியாமல் பலவீனமடைந்தவர்களை இடைநடுவில் கைவிட்டு வந்தமையால் அவர்கள் மரணமடைந்தனர். அணிவதற்காக ஒரு உடை, ஒரு தகரப் பீங்கான், கோப்பை போன்ற அத்தியாவசியப் பொருட்களை மாத்திரமே அவர்கள் எடுத்து வந்திருந்தனர். காட்டுக் காய்ச்சல் அல்லது மலேரியாவினாலும், இலங்கை மலைநாட்டில் நிலவிய கடும் குளிர் காரணமாகவும் நோய் நொடிகளாலும் அநேகமானோர் மரணிக்க நேர்ந்தது. மறுபுறம் மலைநாடு வரை நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரதப் பாதைகள் அமைக்கப்படும்போதும் அடர்ந்த காடுகள் வெட்டப்பட்டு தோட்டப் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டபோதும் மிக ஆபத்தான வேலைகளில அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்போது விபத்துகளினால் இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்றுவரை கணக்கிடப்படவில்லை.
ஆரம்பத்திலிருந்தே கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களை அடிமைகள் போன்றே நடத்தின. அதற்காக அடக்குமுறை சட்டங்களை அமுல்படுத்தியதோடு கங்காணிகளின் கீழ் நாள் சம்பளத்திற்கு அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இதனால், தோட்டத்தில் வேலை செய்வதற்காக அதிகாலையிலேயே பெரட்டுக்கு வரும் ஒவ்வொரு தொழிலாளிக்காகவும் நாளாந்த போனஸ் கொடுப்பனவொன்று கங்காணிமாருக்கு கொடுக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகித்தல், அவர்களது குடும்பப் பிரச்சினைகளை தீர்த்தல், தோட்டங்களில் சில்லரை வியாபாரம் செய்தல் போன்றவை கங்காணிமார்களினாலேயே மேற்கொள்ளப்பட்டன. இதன்போது தோட்ட முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்குமிடையே இடைத்தரகர்களாக கங்காணிமார் செயற்பட்டனர். தொழிலாளர்களின் சம்பளமும், அடுத்த மாதத்திற்கான உணவிற்கு ஒதுக்கப்பட்ட முன்கொடுப்பனவும் கங்காணிமாரின் ஊடாகவே வழங்கப்பட்டன. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் கடன்காரர்களாக ஆக்கப்பட்டனர். பற்றுச்சீட்டு என்ற பெயரிலான வெளியேறும் சான்றிதழ் இல்லாமல் வேறு தொழில்களுக்குச் செல்வதிலிருந்து தொழிலாளர்கள் தடுக்கப்பட்டனர். கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இல்லாமையால் தோட்டத்தை விட்டு வெளியேறி வேறு வேலைக்குச் செல்ல முடியவில்லை.
வரலாற்று நிலைமைகள் அவ்வாறிருந்த போதிலும் இலங்கை சுதந்திரமடைந்த பின்பும் கூட தோட்டத் தொழிலாளர்களின் சிவில் உரிமைகள், அரசியல் உரிமைகள் மட்டுமல்ல அவர்களின் குடியுரிமை சம்பந்தமான பிரச்சினைக்கு இன்றுவரை முழுமையான தீர்வு காணப்படவில்லை.
இலங்கையின் தேசிய இயக்கமானது ஆரம்பத்திலிருந்தே அவர்களது குடியுரிமையை கவனத்தில் எடுக்காமலேயே செயற்பட்டது. இலங்கை தேசிய இயக்கத்தின் ஆரம்பகால தலைவர்களான அருணாசலம் பொன்னம்பலம் போன்ற தமிழ் தலைவர்கள் கூட சாதியம் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் உரிமை சம்பந்தமாக உதாசீனமாக செயற்பட்டதோடு, தமிழ் தேசியவாத கருத்துக்களை கொண்ட, பொதுவாக, அரசியல் அமைப்புகள் இந்திய தமிழ் வம்சாவழி தோட்ட மக்களின் உரிமைகளை தமது அரசியல் வேலைத்திட்டத்தில் உள்ளடக்குவதிலேயே இன்றுவரை கவனமாக செயற்படுகின்றன. இதற்கிடையே, இதுவரை இந்நாட்டை ஆண்ட ஒவ்வொரு அரசாங்கமும் இனவாத அடிப்படையில் அவர்களது உரிமைகளை இல்லாமலாக்கியுள்ளன. விசேடமாக சமீபகாலமாக தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்குச் சென்ற தோட்டப்பகுதி அரசியல் கட்சிகள் அரசாங்கங்களில் பிரபல அமைச்சர்களாக இருந்தும் கூட இந்த நிலையில் எந்த மாற்றமும் நடக்கவில்லை. 1947ல் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமையும், 1964 சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களி;ல் ஒரு பகுதியினர் வலுக்கட்டாயமாக இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டமையானது சுதந்திரத்திற்குப் பின்னர் அவர்களது பிரஜாவுரிமை சம்பந்தமான பிரச்சினை மேலும் அதிகரிக்க காரணமாக இருந்தது. 2012 சனத்தொகை கணக்கெடுப்பின் இறுதி அறிக்கையின்படி இலங்கையில் வீடுகள் வகைப்படுத்தலில் தனி அலகு வீடுகள் தேசிய மட்டத்தில் 92 வீதத்தை பிரதிநிதித்துவம் செய்தாலும் தோட்டப்பகுதி வீடுகளில் 67.8 வீதம் வரிசை வீடுகள் வகையை சேர்ந்ததாகும். 2015 அரசாங்கத்தின் மதிப்பீட்டிற்கு ஏற்ப தோட்டப்பகுதி வீடுகளில் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வீடுகள் திருத்தியமைக்க முடியாத நிலையில் சிதைந்து காணப்படுகின்றன. இது தோட்டப்பகுதி வீடுகளில் 65 வீதமாகும். இதற்குக் காரணம் இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் எந்தவிதமான வீடமைப்பு திட்டங்களின்போதும் தோட்டப்பகுதி வீட்டுப் பிரச்சினையை நாட்டின் ஒட்டுமொத்த வீட்டுப் பிரச்சினைகளிலிருந்து பிரித்து கவனியாது விட்டமைதான். பிரச்சினையின்போது மட்டுமல்ல எந்தவொரு அமைச்சும் நாடுபூராவும் செயற்படுத்தும் அபிவிருத்தி திட்டங்களின்போதுகூட தோட்டப்பகுதிகளை எடுத்துக் கொள்வதில்லை. தபால் திணைக்களம் தபால் விநியோகத்தில் கூட தோட்டத் தொழிலாளர்களுக்கு நேரடியாக கடிதங்களை ஒப்படைக்காததுடன் தோட்ட அதிகாரியின் ஊடாகவே கடிதங்களை ஒப்படைக்கின்றன. சமுர்த்;தி போன்ற நிவாரணங்கள் வழங்கும்போது அதற்குத் தேவையான முழுத்தகுதியும் தோட்டத் தொழிலாளருக்கு உள்ள போதிலும் அவர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படாமையும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவி தோட்டப்பகுதி பிள்ளைகளுக்கு கிடைக்காமையும், தோட்டப்பகுதி பாதைகள் பிரதேச சபையின் திட்டங்களுக்கு உள்வாங்கப்படாமையும் உட்பட பல உதாரணங்கள் உள்ளன. இலங்கையின் தோட்டப்பகுதி மக்களின் முழுமையான பிரஜாவுரிமையோடு பிணைந்த சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை கவனியாது அவர்களை இரண்டாம்தர பிரஜைகளாக கவனிப்பது கடுமையான குற்றமாகும். இன்றும் கூட 530 ரூபா சம்பளத்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்வதற்குக் காரணம் தமக்கென ஒரு இடம் இல்லாமைதான். குடும்பத்தில் ஒரு உறுப்பினராவது தோட்டத்தில் வேலைக்கு செல்லவில்லையென்றால் லைன் காம்பராக்களிலிருந்து அவர்களை வெளியேற்றப் போவதாக தோட்டத் துரைமார் அச்சுறுத்துகின்றனர். இதனால்; தாம் விரும்;பும் ஒரு தொழிலை செய்யும் உரிமை அவர்களுக்கில்லை. தோட்டப்பகுதி மக்களை தோட்டத்திற்கு வெளியே காணி வீடு மற்றும் நிரந்தர விலாசத்துடன் மீள் குடியமர்த்தும் வரை அவர்களது சிவில் உரிமைகள் முழுமையாகாது என்பதை இறுதியாக குறிப்பட முடியும்.
தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம்