Language Selection

இதழ் 34
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக சொகுசாக வாழும் பணக்கார பெண்கள் முதல் உழைக்கும் பெண்கள் வரை பேசுகின்றனர்; போராடுகின்றனர். மேற்தட்டு முதல் அடித்தட்டு வரை உள்ள பெண்கள் லேடிஸ் கிளப்புகள், மாதர் சங்கங்கள், மகளிர் குழுக்கள், உழைக்கும் பெண்களுக்கான புரட்சிகர பெண்கள் அமைப்புகள் என பல அமைப்புகளில் பங்கெடுத்து அவர்களின் உரிமைகளை பற்றி பேசுகின்றனர். பெண்களின் அமைப்புகளிலும் உரிமைகள் கோருவதிலும் கூட நாம் வர்க்க வேறுபாடுகளை தெளிவாக பார்க்கமுடிகிறது.

லேடிஸ்கிளப்பில் பெண்ணடிமைத்தனத்திற்கெதிராக பேசும் பணக்கார பெண்களின் உரிமை என்பது அவர்கள் அணியும் ஆடை மற்றும் அழகைப் பராமரிப்பது என்கிற எல்லையை தாண்டி வேறெந்த உரிமைகளைப் பற்றி பேசப் போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை பெண்ணுரிமை என்றாலே அது உடைகளைப் பற்றியும் அழகைப்பற்றியுமே மட்டுமே.

இவர்கள் அதற்காக போராடவும் செய்கின்றனர். இவர்களின் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் வைத்துத்தான் மதவாதிகள் “பெண்கள் ஆபாசமாக உடையலங்காரம் செய்துகொள்ள உரிமைக்கோருகிறார்கள். பெண்ணுரிமை என்பது முட்டாள்தனம். பெண்களை அம்மணமாக பார்க்க ஆசைப்படுபவர்களே பெண்ணுரிமைப்பற்றி பேசுவார்கள்” என்று ஒரே போடாய் போட்டு பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பேசும் உழைக்கும் பெண்களின் சார்பாக பேசுவோரையும் சேர்த்து விமர்சிக்கின்றனர்.

 

அதாவது ஒன்றை வைத்து எல்லாமும் அப்படித்தான் என்கிற முடிவு.

பெண்ணடிமைத்தனத்தைப்பற்றி பேசுவது என்பது என்ன? அவர்களின் உடைகளைப் பற்றி மட்டும் பேசுவது தான் பெண்ணடிமைத்தனத்திற்கெதிராக பேசுவதா என்றால் நிச்சயம் இல்லை.

நாள்தோறும் வீடுகளில், நடமாடும் தெருக்களில், பணிபுரியும் அலுவலகத்தில் எனப் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் அடிமையாகவே நடத்தப்படுகின்றனர். அதாவது ஒரு சதைப்பிண்டமாகவும் போகப்பொருளாகவுமே நடத்தப்படுகின்றனர்.

ஆச்சரியப்படுகிறீர்களா? உதாரணமாக ஒரு பெண் சாலையில் நடமாடும் போது எத்தனை ஆண்கள் அவளை கண்களாலே பலாத்காரம் செய்கிறார்கள் என்பது சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை. ஒரு நாய் எப்படி மோப்பம் பிடிக்கிறதோ அதே போல ஒரு பெண் சாலையில் செல்லும் போது உற்றுப்பார்ப்பதும் மோப்பமே. குறிப்பாக சொல்லவேண்டுமானால் நாயைவிட கேவலமான மோப்பமே. இதைத் தான் ஆங்கிலத்தில் Male Gaze என்பர்.

பெண்கள்சமூகம், திரைப்படங்களின் மூலமும் விளம்பரம் மற்றும் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளின் மூலமும் ஆணாதிக்க சமூகத்தால் எவ்வாறு ஒரு பண்டப்பொருளாக போகப்பொருளாக சித்தரிக்கப்படுகின்றனர் என்பதும், மதங்களும் பெண்களை எப்படி நடத்துகின்றன என்பதையும் காணலாம்.

ஆணாதிக்க சமூகம் காலங்காலமாய் பெண்ணை கட்டியிருக்கும் விலங்கை உடைக்கும் ஆயுதம் எது? இதற்கான விடையை சொல்லும் போது தான் பெண்கள் அமைப்புகளில் யார் ஆணாதிக்கத்திற்கெதிராகவும் பெண்ணடிமைத்தனத்திற்கெதிராகவும் உண்மையாக பேசுகின்றனர் என்பதை வேறுபடுத்தி காட்டுகின்றது.

பெண்ணின் விடுதலைக்கான பாதையை இப்போது பரிசீலிப்போம்.

ஒரு பிரச்சனையின் தீர்வை பற்றி யோசிக்கும் போது அதன் தொடர்ச்சி, இயங்கிய தன்மை இயங்கும் தன்மை ஆகியவற்றை பார்க்க வேண்டும். மார்க்சிய வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இயங்கியல் வழியில் அந்த பிரச்சனையைப் பரிசீலிக்க வேண்டும்.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்றார் வள்ளுவர்.

அதாவது நோய் இன்னென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும். இந்தக் கூற்று சமுதாயத்துக்கும் பொருந்தும். பெண்ணடிமைத்தனத்தை பற்றிப் பேசும் போது அதற்கு தீர்வாக இத்தகைய ஆராய்ச்சியே பெண்ணிற்கான விடுதலையை சரியாக காட்டும்.

வரலாற்றில் பெண் தன் விடுதலையை எங்கே எப்போது தொலைத்தாள் என்பதை நேர்மையுடன் அறிவார்த்தமாக ஆராய்ந்து அறிந்து கொண்டால் தான், பெண் விடுதலைக்கான பாதையை சரியாக தெரிந்து கொள்ளமுடியும்.

ஏனெனில் இந்த உலகம் அடிமைத்தளையுடன் ஆரம்பிக்கவில்லை. அப்படியெனில், பெண்ணும் அடிமையாக இருந்ததில்லை.

எப்போது ஆணுக்கு பெண் அடிமையானாள்?

இதைப்பற்றி அறிந்து கொள்ள நாம் மனிதகுல வரலாற்றை முன்னோக்கி பார்ப்போம்.

மனிதகுல வரலாற்றில் ஆரம்பத்தில் நிலவியது புராதன சமுதாயம். அச்சமுதாயம் ஒரு பொதுவுடைமை சமுதாயமாகவே இருந்தது. மக்கள் கூட்டாக சேர்ந்து வேட்டையாடியதை சமமாக பங்கிட்டு வாழ்ந்தார்கள். வேட்டையாடும் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பெண்ணே அந்த இனக்குழுவின் தலைமை. பெண் கட்டுப்பாட்டிலே தான் அந்த இனக்குழுவே இயங்கும். நம் நாட்டில் உள்ள கிராமங்களில் இன்றும் பெண்களே குலதெய்வமாக இருக்கின்றனர். இதற்கு காரணம் குலதெய்வம் என்று சொல்லப்படும் அந்தப் பெண்ணே அந்தக் குலத்தின் தலைவராக ஒரு காலத்தில் இருந்திருப்பார். இதுவே நம் நாட்டிலும் பல குலங்களுக்கும் இனக்குழுவிற்கும் பெண்ணே ஆட்சிபுரிந்தார் என்பதற்கு சான்று. (ஒரு இனக்குழுவிலிருந்து மகன்கள் மூலமாகவோ மகள்கள் மூலமாகவோ பிரிந்து சென்றது தான் குலம். பல குலங்கள் சேர்ந்தது தான் ஒரு இனக்குழு) புராதன சமூகத்தில் பெண்ணே தலைவியாக இருந்தாள் என்பதால் அந்தக் காலத்தில் ஆணை பெண் அடிமையாக பாவித்தாள் என்று எண்ண முடியாது. பெண்ணே ஆட்சி புரிந்தாலும் ஆணுக்கும் சமமான உரிமை குழுவில் இருந்தது. அங்கே ஆணடிமைத்தனமும் பெண்ணாதிக்கமும் நிலவவில்லை.

ஒருவரை பார்த்து இவர் யாருடைய மகன் என்றால் இவர் இன்னாருடைய மகன் என்று தந்தையின் பெயரை வைத்து அடையாளப்படுத்தி சொல்வது இன்றைய வழக்கம். ஆனால் புராதன பொதுவுடைமை சமுதாயத்தில் ஒருவரை இன்னாருடைய மகன் என்று தாயின் பெயரை வைத்து அடையாளப்படுத்தி சொல்வதே வழக்கமாயிருந்தது.

பாலியல் துணையை கூட பெண்ணே தெரிவு செய்பவளாக இருந்தாள்.

காலப்போக்கில் படிப்படியாக குழுக்களும,; குலங்களும் வளர வளர வேட்டை செய்யும் இடத்தையும் உணவையும் மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் மலைகளிலிருந்து காடுகளிலிருந்து ஆறுகளை நோக்கிய இடப்பெயர்வும் நடந்தது. ஆற்றங்கரைகளில் விவசாயம் நடந்தது. விவசாய உற்பத்தியில் ஆரம்பத்தில் பெண்ணே இடம்பெற்றாள். விவசாய உற்பத்தியும் சமமாக குழுக்களுக்கு பங்கிடப்பட்டு வாழ்ந்து வந்தனர். ஆண்களும் விவசாயத்தில் பங்கெடுத்தனர். விவசாயம் நிரந்தரமான உற்பத்தியானது. பெண்கள் வீடுகளில் கூடைநெய்தல், கைவினைப்பொருள்கள் செய்தல், சமைத்தல் போன்ற வேலைகளில் கவனம் செலுத்தினர். ஆணும் பெண்ணும் சமமாகவே வாழ்வை நடத்தி வந்தனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வேலைப்பிரிவினை என்பது நிர்ணயிக்கப்படவில்லை. விவசாய உற்பத்தி என்பது பெருகப் பெருக உபரிமதிப்பும் பெருக ஆரம்பித்தது. உபரிமதிப்பே செல்வங்களாகக் கிடைத்தன. அந்த செல்வங்களின் அதாவது உபரிமதிப்புக்கான உரிமை என்பது உற்பத்திக்கருவியை சொந்தமாக வைத்திருந்த ஆணையே சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. உபரிமதிப்பு சமுதாயத்தில் ஏழை பணக்காரன் என்னும் வர்க்க வேற்றுமைகளை உருவாக்கியது போல் குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தையும் ஏற்படுத்தியது. ஆணுக்கான வேலை பெண்ணுக்கான வேலையென்னும் வேலைப்பிரிவினை என்பது தோன்றி நிரந்தரமானது. அதாவது ஆண் வேலைக்கு செல்லவேண்டும். பெண் வீட்டு வேலைகளான பெருக்குதல், சமைத்தல், உபசரித்தல் என்னும் நிரந்தரமான வேலைப்பிரிவினை உருவானது. சமூகத்தில் வர்க்க வேறுபாடு என்று உருவானதோ அன்றே பெண்ணடிமைத்தனமும் ஆரம்பமானது.

முதலாளி தொழிலாளி என்கிற வேற்றுமையை சமூகத்தில் பார்ப்பது போல் குடும்பத்திலும் முதலாளி தொழிலாளி வேற்றுமை நிலவுகிறது. சமூகத்தில் நிலவுவது குடும்பத்திலும் பிரதிபலிக்கின்றது. குடும்பத்தில் ஆண் முதலாளியாகவும், பெண் தொழிலாளியாகவுமே நடத்தப்படுகின்றனர். முதலாளிக்கு தேவையானவற்றை ஒரு தொழிலாளி உற்பத்தி செய்து அதற்கு கூலியாகவோ சம்பளமாகவோ சிறு தொகையை பெறுவது போல வீட்டில் பெண்கள் ஆணுக்கு சேவை செய்கின்றனர். வீட்டில் ஆண்களே எஜமானர்கள். பெண்கள் அடிமைகள்.

இதில் வரதட்சணைக் கொடுமை வேறு அவர்களை வாட்டுகின்றது. வரதட்சணை கேட்கும் ஆண்கள் மிருகங்களிலும் கொடியவர்கள்.

ஒரு விடயத்தை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஒரு வீட்டில் சமையல் செய்யும் வேலைக்கு ஒருவரை நியமித்தால் அவருக்கு உணவும் கொடுத்தும் சம்பளம் கொடுக்கிறார்கள்.

துணி துவைக்கும் வேலைக்கு ஒருவரை நியமித்தால் அவருக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள்.

பாத்திரம் தேய்த்து வீட்டை தூய்மைப்படுத்தும் வேலைக்கு ஒருவரை நியமித்தால் அதற்கும் சம்பளம் கொடுக்கிறார்கள்.

விபச்சார விடுதிக்கு சென்றாலும் அங்கே ஆண்களின் வெறியை தீர்த்துக்கொள்வதற்கும் பணம் கொடுக்கிறார்கள்.

மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் ஒரு பெண், மனைவி என்னும் பெயரில் தன் வீட்டில் செய்யும் போது அந்த உழைப்புக்கு ஏதாவது சம்பளமாக கொடுத்திருப்போமா? கொடுக்கவில்லை என்பதை விட இன்னும் கேவலமாக அந்த பெண்ணிடமும் பெண்வீட்டாரிடமும் வரதட்சணை என்னும் பெயரில் பணத்தை சுரண்டுவது மிகக்கேவலம்.

ஒவ்வொரு பெண்ணும் தான் செய்யும் வேலைகளுக்கு வீட்டில் கூலி கேட்டால் இந்த ஆணாதிக்க சமூகம் பொறுத்துக்கொள்ளுமா? நிச்சயமாக பொறுத்துக் கொள்ளாது. அதற்கு மாறாக தான் பெண்களுக்கு சோறு போடுகிறோமே, துணிகள் வாங்கித் தருகிறோமே என்று புத்திசாலித்தனமாய் கூறலாம். ஆனால் பெண்களின் உழைப்புக்கு முன்னால் அவர்களுக்கு கிடைக்கும் இந்த விடயங்கள் எல்லாம் மிகச் சொற்பமே!

முதலாளி ஒரு தொழிலாளியின் உழைப்பை எவ்வாறு சுரண்டுகிறானோ அவ்வாறே ஒரு ஆணும் பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறான்.

குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து பார்த்தால், கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள முரண்பாடு என்பது முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள முரண்பாட்டைப் போன்று இருக்கும். முதலாளிகளுக்கும் தொழிலாளிக்கும் இயல்பிலேயே முரண்பாடு உண்டாகின்றது. ஏனெனில் தொழிலாளி சுரண்டப்படுவதால் முரண்பாடு இயல்பாய் எழுகின்றது. அதேபோல் குடும்பத்தில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை வேலை பார்க்கும் மனைவியின் உழைப்புச்சுரண்டல் இயல்பிலேயே கணவனிடம் முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது. ஆனால் இந்த முரண்பாட்டை பெண்கள் அடையாளம் காணமுடிவதில்லை. அதன் காரணமும் தெரிவதில்லை. உழைப்புச் சுரண்டலினால் ஏற்படும் முரண்பாடுகளின் மறுவடிவங்களாகத்தான் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன.

சில குடும்பங்களில் பெண்கள் ஆண்களுக்கு செய்யும் வேலைகளை தங்கள் கடமைகள் என்றும் இறைவன் காட்டிய வழி என்றும் எண்ணி அதை மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றனர். முரண்பாடு மதத்தால் ஆசுவாசப்படுத்தப்படுகின்றது. மதங்களால் பெண் மீதான சுரண்டல் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அப்படிப்பட்ட குடும்பங்களில் அவ்வப்போது முரண்பாடுகள் வெளிப்படுகின்றன. ஆண்கள் வேலைக்கு போகவேண்டும், பெண் குடும்பத்தை பார்க்கவேண்டும் என்பதற்கு மாறாக, பெண் வேலைக்கு போகவேண்டும், ஆண் குடும்பத்தை பார்க்கவேண்டும் என்று சொன்னால் இந்த ஆணாதிக்க சமூகமும், மதவாதிகளும் சும்மா இருப்பார்களா?

குடும்பங்களில் இம்முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டுமாயின், சமூகத்தில் உள்ள வர்க்க முரண்பாடுகள் தீர்க்கப்படவேண்டும். சமூகத்தில் நிலவும் உறவுகளே குடும்ப உறவுகளில் பிரதிபலிக்கின்றன. பெண் தன் உரிமையை பெற வேண்டுமானால், இந்த பிற்போக்கான சமூகத்துக்கெதிராக போராடவேண்டும். சமூகத்தை எதிர்த்துப் போராடாமல் வெறுமனே குடும்பங்களில் மட்டும் பெண்ணுக்கான உரிமை என்பது சாத்தியமில்லை.

ஒரு நாட்டில் புரட்சி என்பது வெறும் வர்க்கத்தை எதிர்த்து நடப்பது மட்டும் கிடையாது. பெண்ணுரிமையையும் உள்ளடக்கியது தான் உண்மையான புரட்சி.

அதனால் தான் “சமுதாய விடுதலை என்பது பெண் விடுதலையில்லாமல் சாத்தியமில்லை” என்றார் தோழர் லெனின்.

வறுமைக்குக் காரணம் மக்கள் தொகை என்கிறார்கள் சிலர். வறுமைக்குக் காரணம் தொழிலாளர் உழைப்பு போதவில்லை என்கின்றனர் சிலர். எல்லாருக்கும் வேலை கொடுக்க முடியாது, ஆகவே வறுமை இருந்தே தீரும் என்பார் சிலர். ஆனால் உண்மையாகவே நம்மைப்போன்ற காலனிய நாடுகளின் வறுமையின் காரணம் என்னவென்றால், ஏகாதிபத்திய நாடுகளால் காலனிய நாடுகளில் திணிக்கும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் பொருளாதாரமே காரணம். வறுமையை ஒழிக்க ஒரே வழி தான் உள்ளது. அது சுரண்டலை ஒழிப்பதில் தொடங்கி தேவைக்கேற்ப பகிர்வதால் மட்டுமே சாத்தியம். இந்த வழியைத் தவிர மற்றவை அனைத்தும் வாய்ஜாலங்களே. வறுமையை ஒழிக்க தேவை வர்க்கபோராட்டம். அது போல பெண்களுக்கான உரிமை என்பது சமூகக் காரணிகளில் தான் உள்ளது. அதை இனங்கண்டு பெண்கள் போராடாதவரை அவர்களுக்கான உரிமை என்பது சாத்தியமில்லை. பெண்கள் வர்க்கமாய் எழ வேண்டும். சமூக மாற்றத்திற்காக வர்க்கப் போராட்டத்தை நடத்தவேண்டும். சமூக மாற்றத்தின் மூலமே பெண் தன் விடுதலையையும் உரிமைகளையும் அடைய முடியும்.

Nasar Bruno