Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இராமாயணத்தில் கும்பகர்ணன் பிரமதேவரிடம் நித்தியத்தவம் வேண்டும் என கேட்க எண்ணி, நா புரண்டு நித்ரத் தவம் கேட்டதால் வாழ்நாள் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும் தவத்தினை பெற்றான். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சாப்பாட்டிற்கு மட்டும் கண் விழிப்பான். இந்த கூட்டமைப்பு யாரிடம் வரம் பெற்றார்களோ தெரியவில்லை. வருடக் கணக்கில் தூங்கிவிட்டு தேர்தல் காலங்களில் மட்டும் எழுந்திருப்பார்கள். அப்பொழுது தான் அவர்களுக்கு மக்களைப் பற்றிய கருசனை வரும்.., தமிழ்மக்களின் அரசியற் தீர்வு ஒன்று தேவை பற்றிய சிந்தனை ஞாபகத்திற்கு வரும்.., மக்களோடு பேச விருப்பம் வரும்.

இப்போது இடைக்கால வரைபு பற்றி விவாதிக்கிறார்களாம், ஒற்றையாட்சி நாடு தவறு, ஒருமித்த நாட்டிற்குள் சமஷ்டி.., அதிகாரப்பகிர்வு பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றார்களாம். இதைப் பற்றி மக்களோடு பேசவே இவர்களுக்கு பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் தேவைப்பட்டிருக்கு. இனி அடுத்த தேர்தல் வரை இது பற்றி விவாதிப்பார்கள். அடுத்த தேர்தல் நெருங்கியதும் கும்பகர்ணன் சாப்பிட எழுந்தது போல் திடீரென மக்கள் முன் தோன்றி சமஷ்டி வரைபின் இறுதிப் பக்கத்தினை முன்வைப்பார்கள். முதுகெலும்பு இல்லாத ஊடகங்களும் விவாதங்களை நிகழ்த்தி இன்றைய கேள்வியை அன்றைய நிலைக்கு தக்க மாதிரி மாற்றிக் கேட்டு மக்களை முட்டாளாக்கி தங்கள் பிழைப்பினை தக்கவைத்துக் கொள்வார்கள். மக்களுக்கும் ஏமாற்றம் பழக்கப்பட்டு போனதால் மக்கள் எதையும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுவார்கள். மக்களின் இந்த மௌன நிலை தான் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களிற்கும் கிடைத்திருக்கும் பெருங்கொடை.

 

எஸ்.ஜே.வி.செல்வாநாயகத்தினால் தமிழரசுக் கட்சி சார்பில் முன் வைக்கப்பட்ட சமஷ்டித் தீர்வினை இப்போது பதவியில் இருக்கும் இரண்டு கட்சிகளும் தான் கிழித்தெறிந்தன. இப்போது மாறி இருப்பது முகம் மட்டும் தான், அரசியற் கொள்கை ஒன்று தான். தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வு வேண்டும் என்பதை சிங்கள மக்கள் மத்தியில் சொல்ல திராணியற்ற இந்த அரசு சமஷ்டி, அதிகார பகிர்வு பற்றி வாய் திறக்குமா..? இது கூட்டமைப்பு அரசியல் தலைவர்கட்கு நன்றாகவே தெரியும். மக்களை ஏமாற்றுவதற்கெனவே படித்து பட்டம் பெற்ற எங்கள் தமிழ்த் தலைவர்களுக்கு இது புரியாதிருக்குமா? வாக்குப் பிச்சைக்கு மட்டும் தான் தமிழ் மக்கள் தேவை. பதவி வந்ததும் அதிகாரத்தில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளை சிறு கீறல் கூட ஏற்படாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வார்கள்.

மக்கள் போராடிப் பெற்ற ஒருபகுதி நிலத்தினைக் கூட தங்கள் வற்புறுத்துதலால் விடுவிக்கப்பட்டதென்று உரிமை பாராட்டுகிறார்கள். இதற்கு ஆதரவு கொடுத்து முன்னின்று நடாத்திய முற்போக்கு அமைப்புகள் கூட இதற்கு உரிமை கொண்டாடவில்லை. புத்தூர் மக்களின் பிரச்சனையும் இதே போன்றது தான். காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியற் கைதிகள் போராட்டத்தினை, ஆட்சியாளர்களின் தூண்டுதலில் இடையிற் புகுந்து குழப்பியடித்து இன்று அந்த அப்பாவி மக்களை கண்ணீரோடு நடுத்தெருவில் விட்டுள்ளார்கள் கூட்டமைப்பு அரசியல்வாதிகள். இன்று அதே மக்களிடம் வாக்குப் பொறுக்கித் திரிகிறார்கள். அது பற்றி கேட்டால், அதற்காக ஆணையாளர்கள் ஏழு பேர் நியமிக்கப்பட்டு விட்டதாம், 1400 மில்லியன் ஒதுக்கியுள்ளார்களாம், விசாரிக்க வெளிநாட்டு நிபுணர்கள் விசாரணைக்காக வரவுள்ளார்கள்; சரணடைந்தோர் பற்றி 16ஆயிரம் பேரின் தகவல் செஞ்சிலுவை சங்கத்திடம் இருக்கிறது, அவர்களும் இதற்கு ஆதரவு தர சம்மதித்துள்ளாhர்கள் என்பது சுமந்திரனின் கூற்று. சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் அதிகம் என்பதும் சுமந்திரனின் கருத்துத் தான்.

சிங்கள மக்களோடு தமிழ் அரசியற் கைதிகள் பற்றி பேசுவதற்கு தயங்கும் அரசு, தமிழ் மக்களுக்கு சமஷ்டி தீர்வு பற்றி பேச பயப்படும் அரசு எப்படி தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப் போகின்றது? ஆட்சி கவிழ்ந்துவிடும், மகிந்தா மீண்டும் ஆட்சியினைக் கைப்பற்றி விடுவார் என்றால் கைப்பற்றிவிட்டு போகட்டுமே. இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லாத போது, இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டால் என்ன எல்லாம் ஒன்று தானே. அரசிற்கு தனது பொருளாதாரக் கொள்ளையினை விரைவில் அமுல்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனை, அரசியற் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர், காணிப் பிரச்சனை எதைப் பற்றியும் அரசிற்கு அக்கறை கிடையாது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது நாட்டை அடகு வைப்பதும், தனிப்பெரும் பண முதலைகளுக்கு சகல துறைகளையும் கையளிப்பது இதனால் தாங்களும் கத்தைகத்தையாக பணத்தினை சுருட்டிக் கொண்டு உழைப்பவனை எதுவும் இல்லாமல் கோவணத்தோடு அலையவிடுவதே அரசினுடைய செயற்பாடாக உள்ளது. நாட்டை சிங்கப்பூராக்குவது மக்களை இருக்க குடிசையும் இல்லாத ஆண்டிகளாக்குவது. ஏற்கனவே நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்த நிலையில் தான் வாழ்கிறார்கள்.  அரசினுடைய இந்தப் பொருளாதார கொள்கையினை செயற்படுத்த அதற்கு உறுதுணையாக நிற்கும் காவலாளிகள் தான் இந்த கூட்டமைப்பு தலைவர்கள். வாக்குக்காக இன்று தமிழ் மக்களை வலம் வருகின்றார்கள்.

இந்த அரசோ கூட்டமைப்போ எதையுமே மாற்றியமைக்கப் போவதில்லை. கடந்த மாணவர்கள் போராட்டத்தினை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக பொய்யுரைத்து மீண்டும் ஏமாற்றியுள்ளது இந்த அரசு. அரசின் இந்த நேர்மையற்ற போக்கு எப்படி நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களின் கண்களுக்கு தெரியாது போயிற்று? இது போதாதா கூட்டமைப்பின் பொய் முகத்தினை புரிந்து கொள்ள? இவர்கள் மேடையிலும் ஊடகங்களிலும் பேசுவதை நம்பி வாக்குகளை போட்டு விட்டு மக்கள் வழமை போல கனவில் வாழ வேண்டியது தான். 

போராட்டம் மட்டுமே மாற்றத்தினை உருவாக்கும்..!