Language Selection

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

இனவொடுக்குமுறைக்குள்ளான இனம், தொடர்ந்து இனவொடுக்குமுறைக்கு உள்ளாகும் சூழலில், அதன் காயங்கள் மீது எண்ணை ஊற்றி கொழுத்திவிடும் ஒரு இனவாத அரசியல் நிகழ்ச்சியே இந்தத் தகனம். ஒடுக்கும் தங்கள் இனவாத அதிகாரங்கள் மூலம், சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிரானதாக மாற்றும், பிரித்தாளும் அரசியல் செயற்பாட்டையே இந்த அரசு இதன் மூலம் மீண்டும் அரங்கேற்றியுள்ளது.

வேடிக்கை என்னவென்றால் இனவாதத் தீயை வைக்கப் போவதை, தேர்தல் மூலம் தமிழ் தலைவர்களாவர்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததுடன், அவர்களின் ஒப்புதலுடனேயே மக்களைப் பிளக்கும் இனவாத நாடகத்தை அரசு நடத்தியது.

அதேநேரம் தேர்தல் மூலம் பதவி கிடைக்காத கூட்டமைப்பின் அரசியல் எதிரிகள், மரணமடைந்த நாகவிகாரை விகாராதிபதியின் உடல் எங்கே தகனம் செய்வது என்ற சர்ச்சைகள் முன்கூட்டியே தெரிந்து இருந்தும், இறுதி வரை மௌனமாக இருந்து, அதை தமது சுயநலத்திற்கு ஏற்ப இறுதியில் தமது அரசியலாக்கினர்.

யாழ் நீதிமன்றத்தில் தடை செய்யக் கோரி வழக்கு தாக்குதல் செய்து நடத்திய அரசியல் பித்தலாட்டத்தின் பின்னணியில் இருப்பவர்கள் வேறு யாருமல்ல, வர இருக்கும் யாழ் மாநகர சபையில் தேர்தலில் மேயர் பதவிக்கு களமிறங்கியுள்ளவர்களே. தமது தேர்தல் அரசியலில் வாக்கு வேட்டையை நடத்துவதற்;காக, "புனிதம், பண்பாடு.." குறித்து பேசி நடத்திய நாடகம் தேர்தலில் வாக்கு பெறுவதை தங்கள் இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. இப்படி வழக்குபோட்ட சாதிவெறி பிடித்த இந்த வெள்ளாளிய அரசியல்வாதிகள்தான், வேள்வித் தடைக்கு எதிராகவும் வழக்கு போட்டு, அதை தடைக்குள்ளாக்கியவர்கள். இதன் மூலம் தம்மை ஒடுக்கும் இந்துத்துவ சாதியவாதிகளாக, வெள்ளாளிய சிந்தனையிலான சமூகத்தின் முன் தம்மை முன்னிறுத்தியவர்கள். இன்று வாக்கு வேட்டைக்கு கிளம்பி இருக்கின்றனர்.

யாழ் வெள்ளாளிய இந்துப் பன்னாடைகளின் சமூக சிந்தனை குறித்து!?

வெள்ளாளியப் பன்னாடைகளே பண்பாடு - கலாச்சாரம் குறித்தும், கோயில்கள் - புனிதங்கள் குறித்தும் பேசுகின்றனர். தமிழ் மக்களை சாதிப் பண்பாடுகள் மூலம் ஒடுக்கும் வெள்ளாளியச் சிந்தனைமுறையைக் கொண்ட தங்கள் சாதிப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு, சாதி இந்துத்துவ புனிதங்களை நிலைநிறுத்த முனைகின்ற பின்னணியிலேயே, யாழ் முற்றவெளியில் பிணத்தை எரிப்பதை எதிர்த்து அரசியலாக்கினர்.

இதற்கு மாறாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சார்ந்து, இனவொடுக்குமுறையை எதிர்த்து அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நின்று இதை எதிர்ப்பவராக இருந்தால், வடக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள சாதியச் சுடலைகளை அகற்றும் போராட்டத்தை முன்னின்று, பொதுமைப்படுத்திப் போராடுபவராக தம்மை அரசியல்ரீதியாக முன்னிறுத்தியவராக இருப்பார்கள். அண்மையில் புத்தூரில் மக்கள் மத்தியில் இருந்த சுடலையை அகற்ற நடத்திய போராட்டத்தை எதிர்த்த வெள்ளாளிய சிந்தனையைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளே, இன்று முற்றவெளியில் பிணத்தை எரிப்பதை எதிர்ப்பது என்பது, வெள்ளாளிய சாதிய அதிகாரத்தை நிலைநிறுத்துவதையே தோலுரிக்கின்றது.

இந்த வெள்ளாளிய பன்னாடைகள் கடந்தகாலத்தில் பொது இடங்களில் முன்னின்று செய்த பிண எரிப்புகளை மூடிமறைத்துவிட்டே நாடகமாடுகின்றனர். யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் அமிர்தலிங்கத்தின் பிணத்தை எரித்த போது வராத புனிதமும், பண்பாடும் இப்போது வருகின்றது. புலிகள் ரெலோ இயக்கத்தை சேர்ந்தவர்களைச் சுட்டு, அரை உயிர்களுடன் வீதிகளில் போட்டு கொழுத்திய போது கொக்கோகோலா கொடுத்தவர்களும், கொடுத்தவர்களின் அரசியல் வாரிசுகளும், முற்றவெளி தகனம் குறித்து பேசுவதற்கு என்ன அரசியல் தகுதி இருக்கின்றது.

வெள்ளாளியச் சாதிப் பிணத்தை ஓடுக்கப்பட்டவர்களின் குடியிருப்புகளில் கொழுத்துவதே எங்கள் சாதிப் பண்பாடு என்று பெருமையாகப் பீற்றிக் கொள்ளும் சாதி வெறிபிடித்த நாய்கள், அதை ஆதரித்து அதற்காக காலைத் தூக்கி மூத்திரம் பெய்யும் சாதிப் பண்பாட்டு வெறியர்கள், நாகவிகாரை விகாராதிபதியின் உடல் எரிப்பது பற்றி பேச என்ன தகுதி இருக்கின்றது? இப்படி பேசுவது சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மேலான, தங்கள் வெள்ளாளிய அதிகாரத்தை தக்கவைக்கும் வாக்குகளை தரும்படியே கோருகின்றனர்.

ஒடுக்கும் இனவாதத்தை தங்கள் வெள்ளாளியச் சாதிய ஒடுக்குமுறை அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக பயன்படுத்துகின்றவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் விரோதிகளாகவே தொடர்ந்து இருக்கின்றனர்.

மக்கள் வாழ்கின்ற பொது இடங்களில் பிணங்களை எரிப்பதை எதிர்த்து போராட மறுக்கின்ற நயவஞ்சகமான போலியான வெள்ளாளிய சிந்தனையிலான அரசியல் மூலம், மக்களை ஏமாற்றி வாக்குப்பெறுவதையே தங்கள் அரசியலாக்குவதற்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வதையே வரலாறு எம்மிடம் கோரி நிற்கின்றது.