அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 27 ஆம் திகதி முதல் தமது வழக்குகளை
மீளவும் வவுனியா நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி மூன்று தமிழ் அரசியல்
கைதிகள் முன்னெடுத்து வரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும்
நியாயமானதாகும். உயிராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இம் மூன்று
அரசியல் கைதிகளையும் அரசாங்கமும் ஜனாதியும் பாதுகாக்க வேண்டும். இவ்
அரசியல் கைதிகளின் உயிர்கள் பறிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும்
ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டபூர்வமாகவும், நியாயத்தின் அடிப்படையிலும், மனித உரிமைகளின்
அடிப்படையிலும் இம் மூன்று தமிழ் அரசியல் கைதிகளினதும் உணவுத்
தவிர்ப்புப் போராட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டியது அவசியம்.
எனவே, இப்பிரச்சனையை ஆளும் வர்க்க பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து
நோக்காது, சட்டம், நீதி, மனிதாபிமான அடிப்படையில் அணுகித்
தீர்க்கப்படவேண்டும் என்பதை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
வலியுறுத்துகின்றது.
இவ்வாறு, இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உணவுத் தவிர்ப்புப்
போராட்டத்தை ஆதரித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அரசியல்
குழுவின் சார்பாக பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில், ஜனாதிபதி வடக்கு வரும்போது நியாயமாக
நடந்துகொள்பவர் போன்று பேசிக்கொள்கின்றார். ஆனால், கொழும்பு
திரும்பியதும் அரசாங்கத்திற்குள்ளும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலும்
இருக்கும் பேரினவாத கடும்போக்காளர்களுக்கு முகம்கொடுக்க முடியாது
பின்வாங்கிக்கொள்கின்றார். இதன்மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும்,
பேரினவாதிகளுக்கு வேறொரு முகத்தையும் காட்டவேண்டிய நிலையில் நிறைவேற்று
அதிகாரமுள்ளவரான ஜனாதிபதி இருந்து வருவதைக் காணமுடிகின்றது.
எனவே, அரசியல் கைதிகளின் விடயத்தில் சரியானதும் உறுதியானதுமான முடிவினை
மேற்கொண்டு, உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல்
கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என எமது கட்சி
வலியுறுத்துகின்றது.
அத்துடன், எமது கட்சி தனித்தும் ஏனைய அமைப்புகளுடன் இணைந்தும் நீண்ட
காலமாக வலியுறுத்தி வருகின்ற அனைத்து அரசியல் கைதிகளையும்
பொதுமன்னிப்பில் விடுதலை செய்யவேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை
விலக்கிக்கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும்
24.10.2017 செவ்வாய்க்கிழமை மு.ப. 10 மணியளவில் யாழ். பிரதான பேருந்து
நிலையத்திற்கு முன்னால் மேற்கொள்ளவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் சமூக
அக்கறையுள்ள முற்போக்கு சக்திகள் அனைவரையும் அணிதிரளுமாறு அழைத்து
நிற்கின்றோம். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.