Language Selection

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒடுக்கும் பார்ப்பனிய சாதிய தனிவுடமைச் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து வளர்ந்த ஏழைக் குழந்தையின் நீண்ட கனவுகள் சிதைக்கப்பட்ட போது, அனிதா கொல்லப்படுகின்றார். அதாவது தற்கொலை செய்யுமாறு தூண்டப்படுகின்றார். 

பார்ப்பனிய சாதிய மனுதர்மங்கள் காலாகாலமாக ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு கல்வியை மறுத்து வரும் பின்னணியில், அனைவருக்குமான இலவசக் கல்வி என்ற அரசின் கல்விக் கொள்கை ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு கல்வி கற்கும் ஒரு சூழலை உருவாக்கியது. இப்படி கல்வி கற்கத் தொடங்கிய முதல் தலைமுறையின் கற்கும் உரிமையை, தனியார்மயம் மூலம் மீள மறுக்கத் தொடங்கி இருக்கின்றது அரசு. இதன் பலிக்கடா தான் அனிதா.

 

அனிதாவை கொன்றவர்கள் யார்? உண்மையான கொலைகாரன் யார் என்பதை அடையாளம் காண்பதில், பொதுக் குழப்பம் காணப்படுகின்றது. மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றம், இந்துத்துவா, பார்ப்பனியம், இனம், நிறம்.. என்று ஆளுக்கு ஆள் வேறுபட்ட கொலைகாரர்களை  அடையாளம் காட்டினாலும், இதன் பின்னால் எவற்றையும் இயக்குவது தனியார் மயம் என்ற அடிப்படைக் கல்விக் கொள்கைதான்.

கல்வியில் உலக மில்லியனர்களை உருவாக்க முனையும் உலகவங்கியின் கல்விக்கொள்கையே, இன்று நீட் தேர்வு முறையை முன்வைத்திருக்கிறது. இதன் பின்னாலேயே மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றம், இந்துத்துவா, பார்ப்பனியம், இனம், நிறம், ஊடகவியல் .. என்று எல்லாம் காவடி எடுத்தாடுகின்றது. நீட் தேர்வையும் - அரசு தேர்வு முறையையும் ஒன்;றுக்கு ஒன்று முரணாக முன்னிறுத்தி, மக்களை ஏய்க்க நாடகமாடுகினறனர். தரம், தரமின்மை பற்றி பூசாரிகள் கூச்சமின்றி நா கூச வசைபாடுகின்றனர். சாதிய தனியுடமை கட்சிகள், தங்கள் அரசியல் நிகழ்ச்சிக்கு ஏற்ப வளைத்து திரிக்கின்றனர்.     

கல்வி என்பது விற்பதற்கான சரக்கானவுடன், அனைவருக்குமான இலவசக் கல்வியுரிமை என்ற  சமுதாய அறங்களுக்கு இடமில்லாமல் போகின்றது. இது தான் ஆளும் வர்க்கங்களினதும், ஆதிக்க சக்திகளினதும், அதன் எடுபிடி அரசுகளின் கல்விக் கொள்கையாகி விடுகின்றது. 

சட்டம், நீதிமன்றம், பொலிஸ், ஊடக சுதந்திரம்.. எல்லாம், தனியார்மயக் கல்வியை பாதுகாக்கும் கருவியாகி விடுகின்றது. 

கல்வியின் எல்லா சமூகக் கூறுகளையும் தனியார் மயமாக்கிவிட எது தேவையோ, அதை அரசுகள் செய்கின்றன. அனிதாவை மருத்துவத் துறைக்கு தேர்ந்தெடுத்த இலவசமான அரசு கல்விமுறையை செல்லாதாக்குகின்றது. தனியார் கல்வி முறையாக உள்ள நீட் தேர்வு முறையைக் கொண்டு, அரசு தேர்வையே மறுதளிக்கின்றது. அதை நீதிமன்றம் வழிமொழிகின்றது. 

தனியார் நீட் தேர்வு கூட ஒரே கல்வி முறையையோ,

பொதுப் பரீட்சைப் பேப்பரை கொண்டு நடத்தப்படவில்லை. இந்துத்துவா, பார்ப்பனியம், இனம், நிறம்.. சமூக ஆதிக்க நிலைக்கு ஏற்ப, வெவ்வேறு பிரதேசத்துக்கு வெவ்வேறு பரீட்சை தாள்கள். நீட் கல்வியை கற்காத தமிழ் நாட்டில், கற்ற கல்விக்கு வெளியில் பரீட்சைத் தாள். நாடு முழுக்க அனைருக்கும் ஒரே சமச்சீரான கல்வியை வழங்க முடியாத அரசு, பரீட்சை அனைவருக்கும் ஒன்று என்று கூறுவது  எவ்வளவு பெரிய பித்தலாட்டம். சாதி-சமய வழி வந்த தனியார்மய ஆட்சியாளர்களால் மட்டுமே, இப்படி பில்லி சூனியங்களை செய்து காட்ட முடிகின்றது.     

இப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் ஆயிரம் மோசடிகள். சமூக ரீதியான ஆதிக்க சக்திகளின் நலன்களை, ஆளும் வர்க்கங்கள் தங்கள் அரசுகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் திணித்து விடுகின்றனர். 

மூட்டை தூக்கி வாழ வைக்கும் சாதிய சமூக அமைப்பில், கிடைக்கும் அற்ப கூலியில் தன் சமூகத்தின் கனவை நனவாக்க முனைந்த சமூகத்தின் நலன், நலமடிக்கப்பட்டு இருக்கின்றது. ஏழை எளிய ஒடுக்கப்பட்ட சமூகங்கள் கல்வி மூலம் முன்னேற முடியும் என்ற அற்ப கனவு கூட இனிக் காணக் கூடாது என்பதை, சாதிய தனியுடமை சமூக அமைப்பு அனிதா வழி உணர்த்தியிருக்கின்றது.        

அனித்தா நம்பிய நீதிமன்றம் கூட கைவிட்ட ஒரு நிலையில், சாதிய தனியுடமை சமூகம் தனக்காக போராடத் தயாராக இருக்காத ஒரு நிலையில், மடிந்து போகின்றார். சாதிய தனியுடமை சமூகம், எந்த நம்பிக்கையையும் அனிதாவுக்கு கொடுக்கவில்லை என்பதே உண்மை. 

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தற்கொலை மூலம் தன் தீர்ப்பை எழுதிய அனிதா, தொடர்ந்து தனித்து போராடும் ஆத்ம பலத்தை சாதிய தனியுடமை சமூகத்தில் இருந்து பெறமுடியவில்லை. இதுதான் இதில் உள்ள உண்மை. எந்த சாதிய தனியுடமை சமூக அமைப்பு முறையை ஆதரிக்கின்;றோமோ, அது தான் அனித்தாவைக் கொன்று போட்டது. 

இந்த தனியுடமை சாதிய சமூக அமைப்பு முறையை தூக்கியெறியப் போராடாத வரை, அனிதா போன்றவர்களின் (தற்)கொலைக்கு ஒவ்வொருவரும் உடந்தையாக வாழ்கின்றனர் என்பதே உண்மை.