தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண மகிந்த தலைமையில் முகமாற்ற ஆட்சி வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூறியிருக்;கின்றார். சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிலுள்ள அதிருப்தியாளர்களும், கூட்டமைப்பில் இடம் கிடைக்காதவர்களும், தமிழ் அரசியல் விமர்சகர்களும் "மாற்றுத் தலைமை" வேண்டும் என்கின்றனர். நவதாராளவாத நாணயத்தின் இருபக்கங்கள் இவை.
முகமாற்ற ஆட்சிமாற்றம் மூலம் அதிகாரத்துக்கு வந்த நவதாராளவாத "நல்லாட்சி" அரசு, மக்களுக்காக எதையும் முன்வைக்க முடியாது அம்பலமாகி வருகின்றது. "நல்லாட்சி" அரசுடன் கூடிக் குலாவி தேன்நிலவை நடத்திய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் முன் கோவணத்துடன் காட்சியளிக்கின்றனர். நல்லூரில் கோவணத்தை தரிசிக்க திரளும் பக்தர்களால், கூட்டமைப்பின் கோவணத்தை துதிபாட முடியாதளவுக்கு நாறுகின்றது.
மூன்று வருடங்களுக்கு முன்பு அமெரிக்க ஆதரவு "நல்லாட்சி" மூலம் தமிழர்களின் துன்ப துயரங்களுக்கு தீர்வு காணமுடியும் என்று கூறியே, மைத்திரி-ரணிலை முகமாற்ற ஆட்சியை கொண்டு வந்தவர்கள் கூட்டமைப்பு. இதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நவதாராளவாதத்தை இலங்கையில் பலப்படுத்தும் "மாமா" வேலையை கூட்டமைப்புச் செய்தது. கூட்டமைப்பு இனத்தில் பெயரில் இனவாத வாக்குகளை பெற்றதன் மூலம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்தே அரசுடன் உறவாடினர். தங்கள் மூன்றாண்டு கால இந்த தேன்நிலவைத் தொடர முடியாத அளவுக்கு, "மாற்றுத் தலைமை" என்ற பிசாசு தலைவிரி கோலமாக தமிழ்மக்கள் மத்தியில் உலாவுகின்றது.
இந்தப் பிசாசைக் கட்டிப் போட, கூட்டமைப்பு பேயை நாடுகின்றது. மகிந்த என்ற பேயை ஆட்சிக்கு மீளக் கொண்டு வருவதன் மூலம், பிசாசுகளுக்கு சமாதி கட்டலாம் என்று கூட்டமைப்பு கணக்கு போடுகின்றது. மகிந்த "சமவுரிமை" அடிப்படையில் தமிழ்மக்களுக்கு தீர்வு தருவதில், ஒரு புதிய விடிவெள்ளியாக ஒளிர்வதாக சம்பந்தன் கூறியிருப்பதன் பின்னணி இது தான். மீண்டும் மகிந்த என்ற முகமாற்றம் மூலம், தமிழர்களுக்கு தீர்வு என்கின்றனர்.
கடந்தகாலத்தில் மகிந்த அரசு நாட்டை இராணுவமயமாக்கி நவதாராளவாதத்தை முன்னெடுத்த போது, ஜனநாயகத்தின் மூச்சுக்குக் கூட இடமிருக்கவில்லை. வடகிழக்கில் சிவில் கட்டமைப்பற்ற ஆட்சி மூலம், ஒட்டுமொத்த மக்களும் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள்.
இந்த ஒடுக்குமுறையின் எதிர்வினையே, பெருமளவில் மகிந்தாவுக்கு எதிரான வாக்களிப்பாக மாறியது. பெரும்பான்மை சிங்கள மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து மகிந்தாவை தோற்கடித்தனர்.
இப்படி தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து தோற்கடித்தவரை, மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்று சம்பந்தன் கூறுவது, அவதியுற்று வரும் தமிழ் மக்களை மீண்டும் நெருக்கடிக்குள்ளாக்கி தோற்கடிப்பதே.
போடு புள்ளடி என்று தமிழ் மக்களுக்கு சொன்னால், அதை கண்ணை மூடிக் கொண்டு செய்யும் முட்டாள்களே தமிழ் மக்கள் என்ற கடந்தகால கூட்டமைப்பின் அனுபவமே, மீண்டும் மகிந்தாவை தேர்ந்தெடுக்க தமிழ்மக்களிடம் கோருகின்றது.
மக்களை மந்தைகளாகவே தொடர்ந்து வாக்குபோடக் கோரும் கூட்டமைப்பினாலும், அதே கொள்கையைக் கொண்ட "மாற்றுத் தலைமையையும்" அரசியல் ரீதியாக தோற்கடிக்காத வரை, மகிந்த, மைத்திரி, ரணில்.. என்ற முகமாற்றத்தை முன்வைத்து, அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதைத் தாண்டி எதுவும் நடக்காது. பகுத்தறிவுபூர்வமாக சிந்திக்காத சமூகத்தின் தலைவிதி, இனவாத தலைவர்களின் சுயநலத்துக்கே பயன்படுகின்றது. இனவாத-நவதாராளவாத அரசியல் தோற்கடிக்கப்படாத வரை, மக்கள் மந்தைகளாகவே வாக்களிக்க வைக்கப்படுவார்கள்.