12_2006.jpg

கோவை மாவட்டம் உடுமலை வட்டத்திலுள்ள புக்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் "சிக் குன் குனியா'' நோய் தாக்கி பலர் வேதனைப்பட்டு வருகின்றனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிப் பிரதிநிதிகளிடம்

 இதுபற்றி முறையிட்டும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இப்பகுதியில் இயங்கிவரும் பு.ஜ.தொ.மு., சிக் குன் குனியா நோய் தடுப்பு மற்றும் இலவச சிகிச்சை முகாமை கடந்த 8.11.06 அன்று புக்குளம் கிராமத்தில் நடத்தியது.

 

கோவைசூலூரிலுள்ள ஆர்.வி.எஸ். ஹோமியோ மருத்துவமனையுடன் இணைந்து பு.ஜ.தொ.மு. ஏற்பாடு செய்து நடத்திய இச்சிகிச்சை முகாமிற்கு, பஞ்சாயத்து அல்லது பள்ளி வளாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூட அனுமதி மறுத்து அதிகார வர்க்கம் இழுத்தடித்தது. ஊர்ப் பொதுக்கோயிலான மாரியம்மன் கோயில் மடத்தில் முகாம் நடத்த இடம் கேட்டபோது, பொறுப்பிலுள்ள ஆதிக்க சாதிக்காரர் அனுமதி தர மறுத்தார். தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டு, இக்கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக ஒரு தலித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், ""கண்டவனெல்லாம் கோயிலுக்கு வந்தா, கோயில் தீட்டுப் பட்டுவிடும்'' என்று தீண்டாமையை வெளிப்படையாகவே கக்கினார், சின்னதம்பி என்ற அந்தச் சாதிவெறியர்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சித் தலைவர்களுக்கு, இலவச சிகிச்சை முகாம் நடத்த இடம் ஏற்பாடு செய்து தரக்கூட அதிகாரமில்லாத அவலத்தையும், அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தையும், சாதிவெறியர்களின் திமிர்த்தனத்தையும் மக்களிடம் பிரச்சாரம் செய்த பு.ஜ.தொ.மு., மக்கள் ஆதரவோடு ஒரு வீட்டுத் திண்ணையை ஒட்டி சாலையிலேயே இச்சிகிச்சை முகாமை நடத்தியது. இச்சிகிச்சை முகாம் நிகழ்ச்சியானது, அதிகார வர்க்கம் மற்றும் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளின் யோக்கியதையையும் சாதிவெறியர்களின் திமிரையும் உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள உதவுவதாக அமைந்தது.

 

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
உடுமலை வட்டம்.