Language Selection

புதிய ஜனநாயக மா-லெ கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாணத்தில் சாதி உறவுகள் மற்றும் மோதல்கள் வெவ்வேறு காலங்களில் வேறுபட்ட வடிவங்களை எடுத்துள்ளன. ஒடுக்கப்பட்;ட சாதியினரின் குடியிருப்புகளுக்கு அருகே உயர் சாதியினரின் மயானங்கள் அமைக்கப்படுவதன் காரணமாக ஏற்பட்ட மோதலின் விளைவாக மே, 13ல் யாழ்ப்பாண பஸ்நிலையத்துக்கு முன்பாக ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. புத்தூரில் உள்ள கலைமதி கிராமம் வரலாற்று ரீதியாகவே யாழ்ப்பாணத்தில் ஒரு கம்யுனிஸ்ட் கோட்டையாக திகழ்ந்து வருகிறது, அவர்களின் கிராமத்தின் மத்தியில் உள்ள ஒரு மயானத்தின் காரணமாக ஒரு தீவிரமான போராட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 23 கிராமவாசிகள் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார்கள் மற்றும் 11 பெண்கள் உட்பட 30 பேர் பிணையில் வெளியே வந்துள்ளார்கள். மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள அனைத்து மயானங்களையும் அகற்றக் கோரி இப்போது கலைமதி கிராமத்தில் ஒரு சத்தியாக்கிரகப் போராட்டம் பல வாரங்களாக நடைபெற்று வருகிறது. வேறு ஒடுக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த  சாதியினரும் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார்கள், வேறு பலரும் தங்கள் ஒற்றுமையைக் காட்டுவதற்காக இங்கு வருகை தருகிறார்கள். இந்த சமீபத்தைய மோதல் பற்றி, புதிய ஜனநாயக மார்க்சிய லெனிசக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.கே செந்திவேல் தனது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார், யாழ்ப்பாணத்தில் சாதி விரோத போராட்ட வரலாறு தொடர்பாக  அவர்களது வேலை கலைமதி கிராமத்தில் கடந்த நான்கு தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது.

கேள்வி: புத்தூருடன் உங்களுக்கு ஒரு நீண்ட தொடர்பு உள்ளது மற்றும் குறிப்பாக கலைமதி கிராமம் இன்று போராட்டத்தின் மையமாக உள்ளது. இந்த மோதல் பற்றி விளக்க முடியுமா?

பதில்: 700 குடும்பங்களைச் சேர்ந்த 4,500 பேரைச் சனத்தொகையாகக் கொண்ட கலைமதி கிராம மக்கள், சமூக நீதி வெகுஜன அமைப்பின் ஆதரவுடன் ஒரு சத்தியாக்கிரக போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள மயானங்கள் யாவும் அகற்றப்பட வேண்டும் என்பதாகும், புத்தூர் கலைமதி கிராமத்தின் பெரும் பகுதி மக்கள்  இதில் இரவு பகலாக பங்கேற்பதுடன் ஒரு சக்திவாய்ந்த மனச்சாட்சிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.இந்த மக்கள் கூட்டாக ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். அவர்கள் தங்கள் தினக்கூலி வேலைகளைத் தொடர்ந்து செய்து வரும் அதேவேளை வெவ்வேறு ஆட்கள் அந்த நாட்களில் வேலைகளில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்வதில் தங்கள் சக்தியை பங்களிப்புச் செய்து வருகிறார்கள்.

 

இந்தப் போராட்டத்தை அவதானிப்பவர்கள், கிராமத்தின் பாரம்பரிய வழக்கம் மற்றும் வரலாறு உட்பட, இந்தப் போராட்டத்துக்கான கிராம மக்களின் அர்ப்பணிப்பைக் கண்டு அதிசயப்படுகிறார்கள். மற்றைய கிராமங்களுடன் ஒப்பிடுகையில் உண்மையில் இது ஒரு வித்தியாசமான  செயற்பாடாகும். அதேவேளை இந்தக் கிராமத்தில் உள்ள சனசமூக நிலையம், மாதர் சங்கம், விளையாட்டுக் கழகம் மற்றும் ஏனைய கிராம நிறுவனங்களுக்காக  ஒரு நிலையான தலைமை உள்ளது, அத்துடன் இந்த மக்களின்  சிந்தனையில் அரசியலும் கலந்துள்ளது. அவர்களின் போராட்டத்தின் அடிப்படையாக இருப்பது, ஒரு நூறு வருட காலமாக இந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வருவதுதான்.

 

கேள்வி: மக்கள் அகற்றப்பட வேண்டும் என விரும்பும் இந்த மயானத்தின் வரலாற்றைப் பற்றி கூற முடியுமா?

பதில்: இந்த மயானம் மிகவும் பழமை வாய்ந்தது. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு அருகே குடியிருப்புகள் இருக்கவில்லை. அதற்கு அருகிலிருந்த நிலங்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப் படாமல் புதர்கள்; வளர்ந்து கிடந்தன. ஆனால் சில தசாப்தங்களுக்கு முன்னர், அங்கு ஒரு அரசாங்க குடியேற்றத் திட்டம் ஒன்று மயானத்துக்குச் சொந்தமான சுமார் 15 லாச்சம் (150 பேர்ச்) நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டு சில கிராமத்தவர்களைக் குடியமர்த்தியது. அதைத் தொடர்ந்து காணிக்குப் பற்றாக்குறை நிலவியதால்  வேறு கிராமத்தவர்களும்கூட எல்லைகள் இல்லாமல் இருந்த மயானத்துக்குச் சொந்தமான காணியில் வீடுகளைக் கட்ட ஆரம்பித்தார்கள்,

மக்கள் மயானத்துக்கு அருகே குடியேறியதால், 2000 ஆண்டளவில் சில நடைமுறைச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் வரத் தொடங்கின. சடலங்கள் மயானத்தில் எரிக்கப்பட்டதால் புகையும் சாம்பலும் மக்களுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தன. பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலங்களை மிருகங்கள் சூழத் தொடங்கின. மக்கள் மயானம் அங்கு இருப்பதை எதிர்க்கத் தொடங்கினார்கள், மற்றும் 2010ம் ஆண்டளவில் மயானத்துக்கு எதிராக பரந்த அளவில் எதிர்ப்புக் கிளம்பியது. அங்கு கடைசியாக சடலம் எரிக்கப்பட்டது மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு ஆகும். இந்த வருட ஆரம்பத்தில் ஒரு சடலம் கொண்டு வரப்பட்டபோது அது கிராமத்தவர்களால் திருப்பி அனுப்பப்பட்டது, அந்தச் சடலத்தை மக்கள் குடியிருப்புக்குத் தொலைவில் உள்ள மற்றொரு மயானத்தில் கொண்டு சென்று எரிக்கும்படி கிராமத்தவர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினார்கள். அது ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரின் சடலம், அதைத் திருப்பி அனுப்பியது சிலரைத் தொந்தரவுக்கு உட்படுத்தியது. அவர்கள் ஒரு விஷயத்தை நிரூபிக்க விரும்பினார்கள். அடுத்ததாக மற்றொரு குடும்பத்தினர் ஒரு சடலத்தைக் கொண்டுவர விரும்பினார்கள், இது ஒரு ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவரது சடலம், ஆனால் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் அதற்குப் பின்துணை வழங்கியிருந்தார்கள், மற்றும் இது மோதலாக மாறியது. காவல்துறையும் மற்றும் நீதிமன்றமும் தலையிடவேண்டி ஏற்பட்டது. சடலங்களை எரிக்கும் வாயு அறையுடன் கூடிய ஒரு உயரமான மதிலை மயானத்தில் அமைக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதனால் மோதல் விரிவடைந்தது. கிராமத்தவர்களின் எதிர்ப்பை மீறி மயானத்தைச் சுற்றிக் கட்டப்பட்டு வந்த மதில் சுவரை பாதியிலேயே கிராமவாசிகள் உடைத்தெறிந்தார்கள், இதனால் பதட்டம் உருவாகியதுடன் மேலும் காவல்துறையின் நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

 

கேள்வி: இந்தக் கிராமத்தில் உள்ளவர்களின் கல்வியறிவின் நிலை என்ன மற்றும் தங்கள் வாழ்வாதாரத்தை அவர்கள் எப்படி உழைக்கிறார்கள்?

பதில்: சமீப காலமாகத்தான் மாணவர்கள் சாதாரண தரம் மற்றும் உயர் தரக் கல்வியை கற்க ஆரம்பித்துள்ளார்கள், அது இந்தக் கிராமத்தின் கல்வியறிவு பின்தங்கியுள்ளதை பிரதிபலிக்கிறது. 1975ம் ஆண்டுவரை அவர்களால் அரை கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரிக்குக் கூடச் செல்ல முடியாமல் இருந்தது. அதனால் அவர்களது கல்விக்கான பாதை குறைவான நிலையிலேயே அடைபட்டுக் கிடந்தது. அவர்கள் பெரும்பாலும் தங்கள் கல்வியை ஐந்தாம் தரத்துடன் நிறுத்திக் கொண்டார்கள், ஆனால் இப்போது கலைமதிக் கிராமத்தில் இருந்து ஒரு இளம்பெண் தனது பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்துள்ளார். இப்போது அந்தக் கிராமத்தில் கல்விக்கான ஒரு தாகம் காணப்படுகிறது.

கிராமத்தில் உள்ளவர்கள் பல வகையான தினசரி கூலிப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வலிகாமம் கிழக்கின் ஒரு சுவராஸ்யமான குணாதிசயம் அது ஒரு செம்மண் பிரதேசம். ஆனால் அந்த மண்ணின் மேல் பகுதியில் கற்கள் காணப்படுகின்றன, இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு அல்லது ஐந்து பேர்களைக் கொண்ட குழுக்களாகச் சென்று அந்த கற்களை அகற்றி அந்த மண்ணை விவசாயத்துக்கு எற்ற நிலமாகத் தயார் செய்கிறார்கள். அத்துடன் அங்கு மரம் ஏறும் வேலைகளும் உள்ளன. தற்சமயம் அங்கு நூற்றுக்கும் மேலான ஆண்கள் மிதி வண்டிகளில் மீனைச் சந்தைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் வருமானத்தைப் பெறுவதற்கு  இப்படியான சரீர உழைப்புகளில்தான் தங்கியுள்ளார்கள். இந்தக் கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் செம்மண் பிரதேசங்களான அச்சுவேலி  மற்றும் வளலாய் பகுதிகளுக்கு நாட் கூலி வேலைகளுக்குச் செல்வதை நாம் காண்கிறோம்.

 

கேள்வி: பெண்கள் குழுக்களாக அத்தகைய பண்ணைகளுக்கு வேலை செய்வதற்குச் செல்வதை நான் கண்டிருக்கிறேன். தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை என்ன மற்றும் அவர்களின் சம்பளம் எப்படி?

பதில்: பெண்களுக்கு விவசாய வேலை அவசியமானது, ஏனென்றால் அவர்கள் தங்கள் ஆண்களின் வேதனத்தில் மட்டும் தங்கள் குடும்பத்தினை தக்க வைத்துக்கொள்ள முடியாது. பெண்கள் நடவு மற்றும் வெங்காய அறுவடை போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். எனினும் ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் வழங்கப்படும் சம்பளத்தில் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. ஒரு ஆண் நாளொன்றுக்கு சுமார் 900 ரூபா சம்பளமாகப் பெற்றால் பெண்ணொருவர் அதில் பாதியையே தனத சம்பளமாகப் பெறுகிறார்.

இந்தக் கிராமத்தின் முக்கியமான பிரச்சினை இவர்களுக்கு காணிகள் இல்லாமைதான். மற்றும் நிலம் இல்லாமை, சாதீய ஒடுக்குமுறை மற்றும் பொருளாதார இழப்பு என்பன குறைவான ஊதியம் உட்பட வர்க்கீய அடக்குமுறைகளுக்கு வழி வகுக்கின்றது.

இந்தப் பின்னணியில் 1979ல் சாதி வன்முறையில் ஒரு தீவிரமான சம்பவம் இடம்பெற்றது. உயர்சாதிக் குண்டர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்கள் கிணறுகளில் இருந்து நீரை இறைத்ததுடன் தங்களை இரக்கமின்றி அடித்துவிட்டதாக கூறினார்கள்

ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தார்கள், ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் நாங்கள் அவாகள் நிலங்களில் வேலை செய்கிறோம், நாங்கள் அவர்களின் மரங்களின் கீழ் வாழ்கிறோம் எங்களால் அவர்களை எதிர்க்க முடியாது என்று சொன்னார்கள்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் எங்கள் கட்சி அந்தக் கிராமத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலமானவர்களும் சாதி விரோத கண்ணோட்டமும் உள்ள பன்னிரண்டு இளைஞர்கள் தங்கள்  இக்கட்டான நிலையைப்பற்றி எங்களிடம் வந்து பேசினார்கள். சாத்தியமான முயற்சிகள் பற்றி நாங்கள் அவர்களுக்கு எடுத்துரைத்தோம், அவர்களின் கிராமத்தில் உள்ள அதிகமான மக்களின் ஆதரவு இன்றி எங்களால் எதுவும் செய்ய முடியாது, சாதி அடக்குமுறைகளை எங்களால் எதிர்க்க முடியாது, எங்களால் நிலங்களைப் பெற்றுத்தர முடியாது, எங்களால் ஊதியத்தை உயர்த்த முடியாது என்று அவர்களுக்கு விளக்கினோம்.

அவர்கள் வேலைகளுக்குச் செல்லும்போது, அவர்களுக்கு பாணும் தேனீரும் வழங்கப்பட்டது, ஆனால் தேனீர் சிரட்டைகளிலோ அல்லது பாதி அறுக்கப்பட்ட போத்தல்களில்தான் வழங்கப்பட்டது. ஆனால் ஒரே தரத்திலேயே மக்கள் இந்தப் பழக்கங்களை எதிர்க்கவில்லை. முதலில் நாங்கள் தீர்க்கமான இளைஞர்களை ஏற்பாடு செய்து வேலை செய்தோம் மற்றும் ஒரு சன சமூக நிலையத்தை ஆரம்பிக்கும்படி நாங்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம். அந்த இளைஞர்கள் அதற்குச் சம்மதித்தார்கள் அவர்கள் ஒரு இளைஞர் குழுவை அமைத்து எங்களுடன் வேலை செய்தார்கள். சனசமூக நிலையம் திறமையாக செயற்பட அரம்பித்தது, மற்றும் கட்சியில் இணைந்துள்ள இளைஞர்கள் அதேபோல கிராமத்தில் உள்ள மற்றவர்கள் ஆகிய இருபகுதியினரின் ஒத்தழைப்புடனும் அது செயற்பட்டது.

 

கேள்வி: என்ன மாதிரியான போராட்டங்கள் முதலில் இந்தக் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டன?

பதில்: அந்த நேரத்தில் அந்தக் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் இருந்தன மற்றும் அவர்களது கிராமத்துக்கு ஒரு பாதை தேவையாக இருப்பதை நாங்கள் கண்டோம். ஒரு நோயாளியோ அல்லது ஒரு காப்பிணிப் பெண்ணையோ வைத்தியசாலைக்கு கொண்டு போகவேண்டி இருந்தால், வாகனத்தை அடைவதற்கு முன்பு அவர்களை மக்களின் தோட்டங்களுக்கு ஊடாக உள்ள நடைபாதை வழியாகச் சுமந்து செல்ல வேண்டியிருந்தது. காணிச் சொந்தக் காரர்களிடம் பாதை கேட்டோம், நாங்கள் அரசாங்க அதிகாரிகளிடமும் கூடக் கேட்டோம், நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அவாகளிடம் கூடக் கேட்டோம், ஆனால் அவர்கள் எல்லோருமே எதுவுமே செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

பின்னர் நாங்கள் நிலமையை கிராம மக்களிடம் எடுத்துரைத்தோம், நாங்கள் பாதைக்காக சாத்தியமான ஒரு வரைபடத்தை வரைந்தோம். மனிதாபிமான எண்ணம் கொண்ட சிலர் அந்தப் பாதையின் சில பகுதியை விட்டுக் கொடுத்தார்கள். பின்னர் ஒரு இரவில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 1,000 பேர்கள் முழு இரவும் வேலை செய்தார்கள். நாங்கள் பத்து ட்ராக்டர் மண்ணுக்கு ஏற்பாடு செய்தோம் மற்றும் ஒரே இரவில் பாதையை போட்டு முடித்தோம், மக்களின் உதவியுடன் காணிச் சொந்தக்காரர்களின் காணிகளில் மண்ணைப் பரவினோம்.

மறுநாள் காணிச் சொந்தக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் மற்றும் அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அவர்கள் காவல்துறையை வரவழைத்தார்கள். சின்னம்மா என்று அழைக்கப்படும் பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள், ஆனால் கிராமத்தில் இருந்த பெண்கள் பொறுப்புணர்வோடு இன்னும் அதிகமாக ஈடுபட்டார்கள். இறுதியில் காணி உரிமையாளர்களால் எதுவும் செய்ய முடியவில்லை, நாங்கள் வீதியைத் திறந்து கிராமத்துக்கு கலைமதி எனப் பெயர் சூட்டினோம்.

அடுத்த போராட்டம் கிராமத்தில் ஒரு கூட்டுறவுக் கடையை ஆரம்பிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது, ஏனென்றால் பெரும்பாலான கிராத்தவர்கள் உணவு விநியோக முத்திiர்களைப் பயன்படுத்தினார்கள், அதைப் பல்வேறு கடைகளிலும் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் கூட்டுறவு அதிகாரிகள் ஒரு கூட்டுறவுக் கடையை ஆரம்பிக்க மறுத்துவிட்டார்கள். இறுதியாக அந்த நேரம் அரசாங்க அதிபராக இருந்த தேவநேசன் நேசையாவை அணுகினோம். அவர் அரச அங்கீகாரம் பெற்ற வியாபாரியின் கடை ஒன்றை உருவாக்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்வதாகச் சொன்னார். எனவே நாங்கள் அரச அங்கீகாரம் பெற்ற வியாபாரியின் கடையை உருவாக்கினோம் மற்றும் கிராமத்தவர்கள் தங்கள் எல்லா உணவு முத்திரைகளையும் இந்தக் கடைக்கே கொண்டு வந்தார்கள். இரவு நேரத்தில் வீடு திரும்பும் வேலையாட்களுக்கும் சேவை புரிவதற்காக அந்தக் கடை நாள் முழுவதும் செயற்பட்டது.

பாதை மற்றும் கூட்டுறவுக்கடை என்பனவற்றுக்காக நடத்திய போராட்டங்கள் வெற்றி பெற்றது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. கட்சியின் உதவி மற்றும் வழிகாட்டுதலுடன் மற்றும் மக்களின் ஒற்றுமையுடனும் இந்த இளைஞர்களின் தலைமையின் கீழ் தாங்கள் எதையும் அடையலாம் என்று அவாகள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்கள். அதுதான் எங்கள் பெரிய வெற்றியாக இருந்தது.

 

கேள்வி: காணிக்காக அங்கு என்ன மாதிரியான போராட்டம் நடைபெற்றது? மற்றும் எப்படி மற்றும் எப்போது கலைமதியில் அவர்கள் தங்கள் வீட்டுக்கான காணியை பெற்றுக் கொண்டார்கள்?

பதில்: மக்களுக்குச் சுத்தமாக சொந்த நிலம் கிடையாது. பெரும்பாலான காணி மழவராயன் என அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்தது. அவர்களின் காணியில் குந்திக் கொண்டிருந்த மக்கள் ஒரு சிறிய தொகையை சேமிப்பாகக் கொண்டிருந்தாலும்கூட, ஒரு சிறிய சீமெந்து வீட்டை என்றாலும் கட்ட வேண்டும் என விரும்பினார்கள், காணி உரிமையாளர்களால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 1990களில் காணிப் பிரச்சினைக்காக கிராமமே அணி திரண்டது, ஆனால் அதை எப்படி அணுகுவது என்பதில் பல்வேறு முன்னோக்குகள் இருந்தன. இறுதியாக காணி உறுதிகள் யாவும் காணி உரிமையாளர்களுக்குச் சொந்தமாக இருந்தது. எனவே மக்களுக்கு காணிகளை கொள்வனவு செய்வதற்கான தெரிவை வழங்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. காணி உரிமையாளர்களும் மக்கள் ஒழுங்குகளைச் செய்திருப்பதையும் அதிலிருந்து தங்களால் மீள முடியாது என்பதையும் கண்டு கொண்டார்கள். எனவே காணிகளை ஒரு சிறிய விலைக்கு விற்பதற்கு அவர்கள் சம்மதித்தார்கள். ஒரு குடும்பத்துக்கு இரண்டு லாச்சம் படி அந்தக் காணி வாங்கப்பட வேண்டும் என்று கட்சி பரிந்துரைத்தது, அதன்படி அந்தக் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் வீட்டுக் காணி பெற முடிந்தது.

அந்தக் கிராமம் அதிகமான குடிப்பழக்கம் மற்றும் வேறு தவறான பொருட்களின் பழக்கம் என்பனவற்றைக்  கொண்டிருப்பதற்கான பெயரைச் சம்பாதித்திருந்தது. பல்வேறு செயற்பாடுகள் ஊடாக கிராமத்தை நல்வழிப்படுத்த நாங்கள் முயற்சி செய்தோம். நாங்கள் ஒரு பெரிய வழியில் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தினோம், குறிப்பாக உதை பந்தாட்டம் மற்றும் கர பந்தாட்டம் என்பனவற்றை. வயது வந்தவர்களுக்கு கல்வியறிவூட்டும் வகுப்புக்களையும் நாங்கள் ஆரம்பித்தோம். அத்தகைய நாளாந்த செயற்பாடுகள் ஊடாக கிராமம் மாற்றம் பெற்றது.

 

கேள்வி: கம்யுனிஸ்ட் கட்சி கோவில் நுழைவு மற்றும் சம ஆசனம் போன்ற பல பாரிய சாதி எதிர்ப்பு போராட்டங்களை 1960 மற்றும் 1970களின் ஆரம்பங்களில் தலைமையேற்று நடத்தியது. அத்தகைய போராட்டங்கள் பல கிராமங்களில் இடம்பெற்றன ஆனால் சாதி எதிர்ப்பு மற்றும் முற்போக்கான அணி திரள்கை என்பன அந்தக் கிராமங்கள் பலவற்றிலும் தொடரவில்லை. அதேவேளை உங்கள் கட்சி புத்தூரில் ஒரு அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது, மற்றைய கிராமங்களில் இடதுசாரியின் சரிவுக்கு காரணம் என்ன?

பதில்: நாங்கள் புத்தூரில் பணியாற்றுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, கம்யுனிஸ்ட் கட்சி சாதி எதிர்ப்பு பிரச்சாரத்தை ஒக்ரோபர் 1966ல் ஆரம்பித்தது. பல்வேறு கிராமங்களைச் சோந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டார்கள். சங்கானை, மட்டுவில், கரவெட்டி, நெல்லியடி, அல்வாய், பருத்தித்துறை, மந்துவில் மற்றும் பொலிகண்டி போன்ற கிரமங்களில் இருக்கும் மக்கள் எங்கள் கட்சியுடன் இணைப்புக்களைக் கொண்டிருக்கிறார்கள். 1966 மற்றும் 1971ல் இடம் பெற்ற போராட்டங்களில்  கிட்டத்தட்ட 15 பேர்கள் வரை இறந்துள்ளார்கள். அந்தப் போராட்டங்களில் பெற்ற வலிமை காரணமாகத்தான் கட்சி பெரிய காணிப் போராட்டங்கள நடத்தியது, நிலமற்றவர்களுக்கு நிலம் மற்றும் வாழ்வாதாரங்கள் கிடைக்கவேண்டும் என கட்சி விரும்புகிறது.

ஆனால் 1971 ஜேவிபி கிளர்ச்சியின் விளைவாக எங்கள் கட்சிக்கு பாரிய அடக்குமுறைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. எங்கள் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள் மற்றும் எங்களில் பலர் ஒரு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாகச் சென்றார்கள். தரப்படத்தல் மற்றும் தமிழ் மாணவர் இயக்கங்களின் எழுச்சி என்பனவற்றால் தமிழ் தேசியவாதம்கூட 1970களில் எழுச்சி பெற்றிருந்தது. அடுத்ததாக அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் நாகநாதன் போன்ற பல பிற்போக்கான தமிழ் தேசியவாதிகள் 1970 தேர்தலில் தோல்வியடைந்திருந்தார்கள்.

அதன் திருப்பமாக அவர்கள் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்தார்கள். அவர்கள் ஒரு குறுகிய இனவாத அரசியலை முன்தள்ளவும், அத்தகைய அழைப்பின் மூலம் இடதுசாரிகளையும் தோற்கடிக்கவும் விரும்பினார்கள். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியபோது ஏற்கனவே போராளிக் குணம் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள் இடது சாரி சுலோகங்களை முன்வைத்த ஆயுதக் குழுக்களில் இணைந்தார்கள். திறந்த பொருளாதாரக் கொள்கைகளினால் கிராமங்களில் இருந்துகூட பலபேர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தார்கள். அரசியல் இடைவெளி சுருங்கியதால் எங்ளால் முடிந்த இடைவெளியை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். புத்தூரில் எங்கள் பணி மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தவதும் மற்றும் எங்கள் ஆதரவினை மக்களுக்கு வழங்குவதும் ஆகும். கிராம மக்களும் கூட எங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே தங்களின் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள்.

 

கேள்வி: எந்த வகையான ஒற்றுமையை மற்றைய சமூகங்கள் மற்றும் தென்பகுதி என்பனவற்றிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: நாங்கள் ஒரு இடது கட்சி மற்றும் தென்பகுதியில் உள்ள இடதுசாரிக் கட்சிகளுடன் நாங்கள் தொடர்புகளைக் கொண்டுள்ளோம். எங்கள் போராட்டங்கள் பற்றி நாங்கள் அவர்களுக்கு அறிவித்து வருகிறோம். நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள முற்போக்கான போராட்டங்களுக்கு சாதாரணமாக நாங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறோம், அவர்கள் எங்களின் இந்த மயானப் போராட்டத்தைப் பார்த்து அதற்கு ஆதரவு தரவேண்டும் எனவும் விரும்புகிறோம். இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்தி மத்திய அரசாங்கத்துக்கு அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

இது நியாயமான ஒரு ஜனநாயகப் போராட்டம். வெறுமே ஒரு கிராமத்துக்கு மட்டுமல்ல ஆனால் பல்வேறு வகைகளில் சாதியினால் ஒடுக்கப்படும் அனைவருக்கும் இழைக்கப்படும் அநீதி.

இது மக்களின் தினசரி வாழ்க்கையைப் பற்றியது மற்றும் இந்தக் கிராமத்திலுள்ள மக்கள் முற்போக்கான போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குகிறார்கள். அத்தகைய ஒரு போராட்டத்தில் மக்கள் இருக்கும்போது, இடதுசாரிகள், விவசாயிகளுடன் வேலை செய்பவர்கள் மற்றும் அனைத்து முற்போக்குவாதிகள் ஆகிய அனைவரும் இந்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய மிகப் பாரிய பொறுப்பைக் கொண்டுள்ளார்கள்.

 

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்றி - தேனீ