பல்வேறு அவலங்களுக்கு மத்தியில் ஏங்கித் தவிக்கும் மக்களே, வேதனையிலும் விரக்தியிலும் மூழ்கியுள்ள மக்களே, ஒன்றுமே நடக்கவில்லை என்பதை போன்று அடுத்தநாள் எல்லாவற்றையும் மறந்துவிடும் மக்களே! இது எமது கண்ணில் படாத அல்லது நாங்களாகவே மறந்துவிட்ட எமது தோழர்களினதும் தோழிகளினதும் பரிதாப நிலையாகும்.
மஸ்கெலியாவைச் சேர்ந்த வசந்தகுமாரின் மனைவி பீ.கே. தர்ஷனீ தோட்டத் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை பராமரிக்கப் போதாமையால் வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக சவூதிக்கு செல்ல தீர்மானித்தார். நாளொன்றிற்கு 600 ரூபா சம்பளத்திற்கு கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களின் வாழ்வில் சொத்து சுகம் என்ற வார்த்தை எட்டிக் கூட பார்ப்பதில்லையல்லவா. இந்த நிலைதான் தர்ஷனிக்கும். ஒரு பிள்ளையின் தாயான தர்ஷனீ அடிமைத் தொழிலுக்குச் சென்று சீல் வைக்கப்பட்ட பெட்டியில் வெறும் எலும்புக் கூடாக இந்நாட்டிற்கு வர நேருமென்று குடும்பத்தவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதுதான் நடந்தது. தான் கர்ப்பமுற்றிருந்த சமயத்தி;ல் கணவன் பட்ட கடனை திருப்பிச் செலுத்த முடியாமையாலும், தோட்டத் தொழிலாளியான அவரது கணவருக்கு கிடைக்கும் சொச்ச சம்பளத்தைக் கொண்டு குடும்ப செலவீனங்களை பூர்த்திசெய்ய முடியாமையினாலும் குடும்பத்தை சுமப்பதற்கு ஓரளவாவது ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவர் பணிப்பெண்ணாக சவூதிக்குச் சென்றார்.
பணம் கடனாகக் கொடுத்திருந்த அப்பகுதியை சேர்ந்த வெளிநாட்டு முகவர்களின் தரகர்கள் அவரிடமிருந்து கடனை எப்படியாவது வசூலிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் வசந்தகுமாரின் மனைவியான தர்ஷ னியை வெளிநாட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டனர். அதற்குத் தேவையான ஆவணங்களையும் அவர்களே தயாரித்தனர். பிறந்து ஆறு மாதமேயான மகளை இங்கு தனியாக விட்டுவிட்ட தர்ஷனி பொருளாதாரச் சிக்கலிலிருந்து ஓரளவாவது மீள்வதற்கும் பட்ட கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் சவூதிக்குச் செல்ல முடிவு செய்தார். 2013 மார்சி 11ம் திகதி அவர் வெளிநாட்டுக்குச் சென்றதோடு, இரண்டரை வருடங்களுக்குப் பின்பு 2014 பெப்ரவரி 17ம் திகதி அவரது உயிரற்ற உடல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மரண சான்றிதழின்படி மாரடைப்பினால் இறந்ததாகக் கூறப்பட்டாலும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் முன்வந்து நடத்திய மரணவிசாரணையில் அவரைப் பட்டினி போட்டு சாகடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் ஒரு விவசாய நிலத்தில் பாழடைந்த கொட்டகைக்கு அருகில் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக சவூதி பொலிஸ் கூறுகின்றது. அவருக்கு நடந்த கொடுமைக்கு நீதி இதுவரை கிடைக்கவில்லை. அவரைப் பட்டினியால் சாகச் செய்தவர் யார்? வீட்டின் உரிமையாளரா? சவூதி அரசாங்கமா? இந்நாட்டு அரசாங்கமோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இந்தப் பிரச்சினை குறித்து சவூதி அரசாங்கத்திடம் விசாரிக்காதது ஏன்?
அதேபோன்று தர்ஷனி வசித்த வீட்டிற்கு பக்கத்தில் வாழ்ந்த 38 வயதான ராமச்சந்திரன் ராஜேஸ்வரி 2014 நவம்பர் மாதம் வெளிநாடு சென்றார். சுமார் ஒரு வருடம் அவர் சவூதியில் வேலை செய்தார். மூன்று மாதத்திற்கும் மேலாக தனது வீட்டாரோடு தொடர்பு கொண்டு "தான் வேலை செய்யும் வீட்டில் தனக்கு பிரச்சினை என்றும் தன்னை இலங்கைக்கு வரவழைத்து கொள்ளுமாறும்" தனது மூத்த மகனாகிய சேகரிடம் கூறியுள்ளார். ஆனால், 2015 டிசம்பர் 12ம் திகதி அவர் இறந்து விட்டார்.
அவர் இறந்த செய்தியை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமே வீட்டாருக்கு அறிவித்தது. பொலிஸின் ஊடாக தகவல் கிடைத்ததாக அவரது மூத்த மகன் கூறினார். மகன் சேகரனுக்கும் மகள்களான உமாவிற்கும் ரஞசனிக்கும் இப்போது அம்மா இல்லை. அவர் குளியறையில் தூ க்குப் போட்டு இறந்துவிட்டார் என வீட்டு உரிமையாளரும் சவூதி பொலிஸாரும் கூறுகின்றனர். ஆனால் அவரது தலையில் காயம் இருந்ததாக குடும்பத்தவர்கள் கூறுகின்றனர். ராமச்சந்திரன் ராஜேஸ்வரி வெளிநாடு செல்வதற்கு முன்பு பிரவ்ன்ஸவிக் தோட்டத்தில் கொழுந்து பறிப்பவராக வேலை செய்தார். மூன்று பிள்ளைகளின் தாயான அவரால் குழந்தைகளுக்காக செலவிடவும், படிப்பிக்கவும், வசிப்பதற்கு ஒரு வீட்டையும் கட்டிக்கொள்ள இயலாமையால் அவர் பணிப்பெண்ணாக சவூதிக்கு சென்ற போதிலும் பிணமாகவே வீடு வந்து சேர்ந்தார். தந்தையால் கைவிடப்பட்ட பிள்ளைகள் இப்போது தாயையும் பறிகொடுத்து தவிக்கின்றனர்.
இந்நாட்டு பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை செலுத்தும் தோட்டத் தொழிலாளிகளான பெண்கள் மத்திய கிழக்கு அடிமைத் தொழிலுக்கு சென்ற பின்பு பெரும்பாலும் பிணமாகவே திரும்பி வருகின்றனர். அதற்கு பொறுப்புக் கூற ஒரு நிறுவனமோ, மக்கள் பிரதிநிதியோ கிடையாது. தேயிலைக் கொழுந்து பறித்து வாழ்வைச் சரிக்கட்டிக்கொள்ள முடியாத ஒடுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதா சாவதா என்ற போராட்டத்தில் தடுமாறுகின்றனர்.
இது பரமசிவத்தின் விசும்பல். பணிப்பெண்ணாகச் சென்ற தனது சகோதரி கற்பகவல்லியின் உடலை இந்நாட்டிற்கு வரவழைத்துக் கொள்வதற்காக வீட்டிலுள்ள நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் அடகுவைக்க வேண்டிய நிலை பரமசிவத்திற்கு ஏற்பட்டது.
மஸ்கெலிய ஸ்டெத்ஸ்பி தோட்ட லெட்புரூக்லியில் வசித்த 41 வயதான பழனியாண்டி கற்பகவள்ளி மூன்று பிள்ளைகளின் தாயாராவார். தன்னையும் பிள்ளைகளையும் கணவர் கைவிட்டுச் சென்றதால் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதியே அவர் வெளிநாடு சென்றார்.
வெளிநாடு செல்லும்போது அவருக்கு வயது 38. பத்து வருடகாலம் தோட்டத் தொழிலாளியாக வேலை செய்த கற்பகவல்லி 1 வருடமும் 1 மாதமும் சவூதி வீட்டில் பணியாற்றியிருந்தார். முதல் 6 மாத சம்பளத்தை வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.
அதன் பின்பு அவரைப் பற்றிய எந்த செய்தியும் குடும்பத்தாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் 2016 செப்டம்பர் 1ம் திகதி அவர் இறந்துவிட்ட செய்தி ரியாத் ஒலேயா தடுப்பு முகாமிலிருந்த வவுனியா கரடிக் குளத்தை சேர்ந்த முத்துசாமி ஜெயசுந்தரி என்பர் மூலமாக கிடைத்தது.
ஒரேயடியாக இதனை நம்பமுடியாத பரமசிவம் ஒலேயா தடுப்புமுகாமிலிருந்த ஜெயசுந்தரியிட மிருந்து தகவல்களைப் பெற்றுக் கொண்டார். நெஞ்சிலும் தலையிலும் கடுமையாக தாக்கப்பட்டதினால் அவர் மரணித்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இவரைப் போன்று இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த இந்நாட்டு பெண்களை தடுத்து வைத்திருக்கும் மேற்படி முகாம்களின் நிலை மி;க மோசமாகும். கற்பகவள்ளியின் உடல் மார்ச் 27ம் திகதியே கிடைத்தது. மார்ச் 28ம் திகதி இறுதிக் கிரியைகள் நடந்தன. கிரிசாந்தினி, மோகனப்பிரியா மற்றும் ஹரிசாந்த் ஆகிய அவரது பிள்ளைகள் தமது தாய் வெளிநாட்டிலிருந்து வீடு வரும்வரை காத்திருந்தனர். ஆனால், சீல் வைத்த பெட்டியில் அவரது உயிரற்ற உடல்தான் வீட்டுக்கு வந்தது,
இதைத் தவிர முனியாண்டி செல்வகுமாருக்கு ஏற்பட்ட கதியையும் நீங்கள் அறிந்திட வேண்டும். 2014 யூன் 5ம் திகதி வாகன உதவியாளராக மத்திய கிழக்கின் கட்டார் ராச்சியத்திற்கு சென்றுள்ளார். வெளிநாடு சென்ற 23 நாட்களுக்குப் பின்பு அவர் சென்ற வாகனத்திலிருந்து இறங்கும்போது கன்டெய்னரொன்றில் மோதி உயிரிழந்துள்ளார். அவர் மரணித்து மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும், அவரது மரணம் சம்பந்தமான வழக்கு அந்நாட்டில் விசாரிக்கப்படுவதால் அதற்காக 3000 ரியால்கள் அவரது மனைவி கவிதாவால் செலுத்தப்பட வேண்டுமென பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். அதிகாரிகளுடனோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனோ பேசுவதற்கு அறிந்திராக கவிதா தான் என்ன செய்வதென தெரியாது அழுத கண்ணீரோடு கேட்கிறார்.
பிரவ்ன்ஸ்விக் தோட்டத்தில் வசிக்கும் சிவகுமார் தனது உறவினருக்கு ஏற்பட்ட கதி சம்பந்தமாக தகவல்களை எமக்குக் கூறினார். இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன்பு வெளிநாடு சென்ற அவர் கடந்த டிசம்பரில் தொலைபேசி மூலமாக தன்னை இலங்கைக்கு வரவழைத்துக் கொள்ளுமாறு உறவினர்களிடம் மன்றாடியுள்ளார். ஆனால் அன்றிலிருந்து அவரைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை வீட்டாருக்கு கிடைக்கவில்லை.
பெயாலன் தோட்டத்தில் வசித்த எஸ். சமுத்ரா 2013 ஆகஸ்ட் 31ம் திகதி வெளிநாடு சென்றுள்ளார். அவரது அநுபவங்களை எங்களோடு இவ்வாறு பகிர்ந்து கொண்டார். "ஒப்பந்தத்தின்படி ஒன்றரை வருடங்கள் நான் வேலை செய்தேன். சில காலம் சென்ற பின்பு வீட்டு எஜமான் என்னை இன்னொரு ஏஜென்ஸிக்கு விற்றுவிட்டார். இரண்டு மாத சம்பளம் கிடைக்கவில்லை. வீட்டுக்கு தகவல் அனுப்பவும் விடவில்லை. நான் 25000 ரியால்களுக்கு விற்கப்பட்டிருந்தேன். இரண்டாவது வீட்டிலும் எனக்கு பிரச்சினைகள் இருந்தன. அந்த வீட்டிலும் ஒன்றரை வருடங்கள் வேலை செய்தேன். என்னை விற்றவர் ஒன்றரை வருடங்கள் கழிந்த பின்பு என்னை அழைத்து சென்று தனது இரண்டாவது மனைவியின் வீட்டில் விட்டார். இரண்டு மாதங்கள் அந்த வீட்டில் தங்குமாறும் பாஸ்போட் செய்து அனுப்புவதாகவும் கூறினார். இரண்டாவது வீட்டில் கிடைத்த சம்பளத்தை இரண்டாவது மனைவியிடம் அவர் கொடுத்துவிட்டார். எனக்கு எவ்வித சம்பளமும் தரவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பின்பு விமானநிலையத்தில் கொண்டுவந்து விட்டார். ஏஜென்ஸியில் என்னை 7 மாதங்கள் வைத்திருந்தனர். டிக்கட் செய்ய என்னிடம் 45000 ரூபா கேட்டார்கள்".
கிடைக்கப்பெற்ற புதிய தகவலின்படி, 2016 நவம்பரில் சவூதிக்குச் சென்ற நாமலீ பெரேரா இறந்துவிட்ட செய்தி டிசம்பர் 1ம் திகதி கிடைக்கின்றது. கொழும்பு கொடிகாவத்தையில் குடியிருந்த அவரின் மரணம் மாடியிலிருந்து விழுந்தமையால் ஏற்பட்டதாக அந்நாட்டு மரண விசாரணை அறிக்கை கூறுகின்றது. ஆனால், தலையின் முன்பகுதியில் ஏற்பட்டுள்ள நசுங்கிய அடையாளமும், உடலின் மேற்பகுதியின் முன்பக்கமும் பின்பக்கமும் எலும்புகள் முறிந்து காணப்பட்டமையாலும் இது திட்டமிட்ட கொலை என்பது உறுதியாகின்றது. இது உண்மையா இல்லையா என்பது கொலைஞனுக்கும் இறந்த நாமலி பெரேராவிற்கும் மட்டுமே வெளிச்சம்.
வெளிநாட்டு அடிமைத் தொழிலுக்குச் செல்லும் உழைப்பாளியின் உரிமைகள் மற்றும் அவனது பிரச்சினைகள் விடயத்தில் எந்த அதிகாரியும் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை. மொழி தெரியாத, குறைந்த கல்வியறிவுடன், தமது உரிமைகளுக்காகவும் அநீதிக்காகவும் குரல் கொடுக்கத் தெரியாத எப்போதும் அடிமைகளாக நடத்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலான இப்பிரச்சினை இன்னொரு அவலமாக மாறியுள்ளது. ஒரே தோட்டப் பகுதியில் வசித்த நான்கு பெண்கள் வெளிநாட்டு வேலைக்குச் சென்று மரணத்தைத் தழுவிய சம்பவங்கள் 6 மாதங்களுக்குள் நடந்துள்ளது. அது மட்டுமல்ல, மரணத்திலிருந்து தப்பி தற்செயலாக உயிர் பிழைத்தவர்களின் அனுபவங்களும் மரணத்தைப் போன்றே வேதனைமிக்கவையாகும். சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு பெண்கள் இரையாவதையும் தடுக்க முடியாத நிலைதான் காணப்படுகின்றது.
யுத்தம் போன்ற நிலைமைகளின் கீழ் மக்கள் மரணிப்பதும், சித்திரவதைகளுக்கு இரையாவதும் அனைவருக்கும் தெரியும். என்றாலும், வெளிநாட்டு அடிமைத் தொழில் என்பது அவ்வாறான சுற்றுச்சூழல் இல்லாத தருணத்திலும் மனித உயிர்களை பலி கொள்வது சர்வசாதாரணமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வாழ்க்கையில் துன்பத்தை மட்டுமே அநுபவிக்கும் தொலை தூர கிராமங்களில் வசிக்கும் இலங்கைப் பெண்கள், தேயிலைக் கொழுந்திற்கு வாழ்க்கையை கரைத்துவிடும் பெண்கள் மற்றும் கொழும்பு நகர்புறத்தை அண்டி வாழும் பெண்களும் இதுதான் வாழ்க்கையெனக் கருதி இன்னொரு அடிமைத் தொழிலுக்கே செல்கின்றனர். அந்த அடிமை முகாமில் சிறைப்படும் அவர்கள் துன்பப்பட்டு வதைபட்டு வேதனையோடே இந்நாட்டில் மீண்டும் கால் வைக்கின்றனர். பாலியல் வன்புணர்விற்கு பலியாகி கையில் தந்தை பெயர் தெரியாத குழந்தையுடனேயே திரும்பி வருகின்றனர். அல்லது சீல் வைத்த பெட்டியில அவர்களது உடல் இங்கு கொண்டுவரப்படுகின்றது. அதேபோன்று, முகாம்களில் அடைபட்டு இந்நாட்டுக்கு திரும்பிவர முடியாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சம்பளம் கிடைக்காமல் வீட்டுக்கு வீடு விற்கப்படும் பெண்கள் எத்தனை பேர்.? இதன்படி பார்த்தால் கௌரவமான வாழ்வோ கௌரவமான மரணமோ வெளிநாட்டு உழைப்பாளிகளுக்குக் கிடையாது. மத்திய கிழக்கு அடிமைத் தொழில் என்பது கொலைகார வியாபாரமாகும்.
ஆகவே, இலாப உழைப்பிற்காக இலங்கைப் பெண்களை வெளிநாட்டு அடிமைத் தொழிலுக்கு ஏற்றுமதி செய்வதை பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பான தொழிலை இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டும். அதற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள், புத்திஜீவிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூகநீதியை எதிர்பார்க்கும் சகலரும் பங்கேற்க வேண்டும்.
சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு