Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை. தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை... பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம்.

 

 

 

ஆங்கிலேயர்கள் சூழலைத் தனதாக்கிக்கொண்டார்கள். இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களுடைய ஆட்கள் நடத்திய காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு ஏழைத் தமிழர்களைக் குறிவைத்தனர். கங்காணிகள் மூலம் நடத்தப்பட்ட வேட்டை இது. ஒரு ஊரில் நுழைவது. நல்ல வேலை, நல்ல சாப்பாடு, நல்ல கூலி என்று ஆசை காட்டுவது. கொஞ்சம் பணத்தை முன்பணமாகக் கொடுத்து ஆட்களைக் கூட்டிச் செல்வது. தனுஷ்கோடி வரை கால் நடையாகவே நடத்திச் செல்லப்பட்ட இவர்கள் அங்கிருந்து தோணிகள் மூலம் கடல் கடந்து, மீண்டும் கால்நடையாகவே இலங்கையின் தோட்டங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர்.

 

 

நடைப்பயணத்தின் போதே பலர் இறந்தனர். பணத் தாசையின் காரணமாக, கங்காணிகள் 100 பேரை ஏற்ற வேண்டிய தோணிகளில் 500 பேர், 1,000 பேர் வரை ஏற்றிச் சென்றதால், பல தோணிகளை ஆழி தின்றது. இப்படித்தான் ஆயிரக் கணக்கான ஏழைத் தமிழர்களுடன் பயணித்த ‘ஆதிலட்சுமி' கப்பலும் கரைசேர்வதற்கு முன்பாகவே கடலில் மூழ்கியது. 1841-49-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் இப்படிப் பலியானதைப் பதிவுசெய்திருக்கிறது ‘கொழும்பு ஒப்சர்வர்' பத்திரிகை. இங்கிருந்து சென்றவர்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, புஸல்லாவ, நுவரேலியா எனப் பல்வேறு இடங்களிலும் அடர்வனங்களைத் திருத்திப் பெருந் தோட்டங்களாக மாற்றினார்கள். மலைகளில் சாலைகளை உருவாக்கினார்கள். சுரங்கங்களை வெட்டி ரயில் பாதை உருவாக்கினார்கள். கடுங்குளிரிலும் பனியிலும் ஓயாத மழையிலும் அட்டை, பூரான் கடிக்கு மத்தியில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை உழைத்தார்கள். ஆனால், இவர்கள் வாழ்நிலையோ குரூரமான கொத்தடிமைகளின் நிலையிலேயே இருந்தது.

 

மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கிச் சுமந்தனர். இலங்கையர்களோ கள்ளத்தோணி, தோட்டக் காட்டான், வடக்கத்தியான், பறத்தமிழன், என்று பல வசைச் சொற்களைச் சொல்லி இழிவு படுத்தினார்கள். இந்திய வம்சாவளித் தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று பேசினார்கள். இந்திய வம்சாவளித் தமிழர்கள் 1935 காலகட்டத்தில் அநீதிகளை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர். தஞ்சாவூரிலிருந்து ஹட்டனில் குடியேறிய கோ. நடேசய்யர், மலையக மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். சி.வி. வேலுப்பிள்ளை, இளஞ்செழியன், இர. சிவலிங்கம் என அடுத்தடுத்துப் பல தலைவர்கள் மலையக மக்களின் அரசியலை முன்னெடுத்தனர். இலங்கையிலிருந்து மலையகத் தமிழர்களைத் துரத்துவதில் முனைப்பாக இருந்த அரசு, ஒருகட்டத்தில் 10 லட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கியது. ஏறத்தாழ 130 ஆண்டுகளாக இலங்கைக்காக உழைத்தவர்கள் அநாதைகளாக ஆக்கப்பட்டார்கள். இந்த 10 லட்சம் பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப முயன்றது இலங்கை. இந்தியாவோ ஏற்க மறுத்தது. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல், கிட்டத்தட்ட ஆளுக்குப் பாதி என்பதுபோல, இரு அரசுகளும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தன. இதன்படி 5.25 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். 1964-ல் இலங்கை அதிபர் சிறீமாவும், இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் செய்துகொண்ட ஒப்பந்தம் நேற்றோடு 50 ஆண்டுகளை நிறைவுசெய்தது. உறவுகளை, உடைமைகளை, உரிமைகளை என இடைப்பட்ட 130 ஆண்டுகளில் கொஞ்சநஞ்சம் கிடைத்தவற்றையும் பறிகொடுத்து இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர் மலையகத் தமிழர்கள்.

இலங்கை 1948, பிப்ரவரி 4-ல் சுதந்திரம் அடைந்தது. டி.எஸ். சேனநாயகா அதிபர் ஆனார். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்ட மசோதாவை அவர் கொண்டுவந்தார். அதை ஆதரித்த 53 உறுப்பினர்களில் சுந்தரலிங்கம், எஸ். மகாதேவன் உள்ளிட்டவர்களும் அடக்கம். ஆனால், ஈழத்தந்தை செல்வநாயகம், “இன்று இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவலம், நாளை ஈழத் தமிழர்களுக்கும் ஏற்படும்” என்று அன்றே எச்சரித்ததோடு, அதை எதிர்த்தும் வாக்களித்தார். இலங்கையின் பூர்விகத் தமிழர்களால் இவர்களுக்கு ஆதாயங்கள் இல்லை என்றாலும், தீமைகள் காத்திருந்தன. சிங்கள இனவெறி எப்போதெல்லாம் பூர்விகத் தமிழர்களைக் குறிவைத்ததோ, அப்போதெல்லாம் இவர்களையும் குறிவைத்தது. சிங்களவர்களின் கைக்கெட்டும் தூரத்திலிருந்த இவர்களது வீடுகளும் வணிகக் கூடங்களும் உயிர்களும் அவர்களின் வன்முறைக்கு இலக்காயின. வளர வளரக் கவாத்து செய்யப்படும் தேயிலை மரங்களைப் போல இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களும் வரலாறு நெடுகிலும் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர் என்ற காரணத்தாலும் சாதியாலும் ஒவ்வொரு கணமும் ஒதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாகச் சிலுவை சுமப்பது போல இலங்கையைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான இடம் இலங்கை அரசியலில் இன்னமும் விளிம்பு நிலையிலேயே இருக்கிறது.