யாழ் வைத்தியசாலையில் இரத்தம் போதாமைக்கும் சாதிக்கும் தொடர்பு உண்டா என்று பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றிற்கான பதிலானது சாதிய சமூகம் குறித்து விவாதத்தை உருவாக்கியுள்ளது. பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய வைத்தியர், பத்திரிகையில் வெளிவந்தது போன்று தான் கூறவில்லை என்றும், பத்திரிகையின் கேள்வியாளரின் சொந்த கருத்துக்கு ஏற்ப தனது கருத்தை மாற்றி வெளியிட்டுள்ளதாக கூறியிருக்கின்றார். அதேநேரம் குறித்த பத்திரிகை அந்தக் கருத்தை வாபஸ் பெற இருப்பதான செய்தியும் வெளியாகி இருக்கின்றது. இரத்தம் போதாமைக்கு சாதியமில்லை என்ற காரணத்தை முன்னிறுத்தி, யாழ்ப்பாணத்தில் சாதியுமில்லை கத்தரிக்காயுமில்லை "தமிழ் தேசியம்" தான் உண்டு என்று மறைமுகமாக புரட்டப்படுவதையும் காணமுடிகின்றது.
உண்மையில் பேட்டிகள், மறுப்புகள் என்ன என்பதற்கு அப்பால், இரத்தம் போதாமை ஏற்படுவது ஏன் என்பது குறித்த கேள்விக்கு விடைகாண வேண்டும். குறித்த பத்திரிகைச் செய்தி மீதான எதிர்வினை மீது வெளிப்பட்ட, யாழ் மையவாத சாதிய சிந்தனை குறித்தும் பேசுவது, அவசியமாகின்றது.
யாழ் மருத்துவமனையில் இரத்தம் போதாமைக்கான காரணமென்ன?
இரத்தம் போதாமைக்கு சாதி தான் என்ற வாதம் அடிப்படையில் தவறானது. ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகள் என்று பார்க்கும் போது, எந்த விதிவிலக்கின்றி யாரும் இரத்தத்தை வழங்குவதில்லை என்பது தான் உண்மை.
இரத்தம் வழங்காமைக்கு காரணம், யாழ் சமூகத்தில் சமூகரீதியான சமுதாயக் கண்ணோட்டம் கிடையாது என்பதே இதற்கான காரணமாகும். யுத்தம் நடந்த காலத்திலும் கூட இரத்ததானம் என்பது, சமுதாய ரீதியான மனித உணர்வாக இருந்ததில்லை.
யுத்தத்துக்கு முன்பு யாழ் வைத்தியசாலைக்கு முன்னால், இரத்தம் விற்கின்ற மனிதர்களை சார்ந்தே, இரத்தம் ஈடுகட்டப்பட்டது. யுத்த காலத்தில் பெருமளவில் இராணுவத்தினரது இரத்தமும், தெற்கில் இருந்து கொண்டு வரப்பட்ட இரத்தமுமே பயன்பாட்டில் இருந்து இருக்கின்றது. யுத்தத்தின் பின் இது தான் எதார்த்தமாக இருக்கின்றது.
யாழ் சமூகத்தில் பெருபாலானவர்களின் இரத்தமானது, "தேசியம்" யாரை எதிரி என்று கூறியதோ, அந்த "சிங்களவர்களுடையது" என்பதே உண்மையாகும். "தேசிய மற்றும் சாதிய" கற்பிதங்களுக்கு அப்பால், மனித உடலும் உடல் கூறுகளும் எல்லாம் கலந்திருக்கின்றது.
இரத்தம் தேவை என்பது இன்று புதிய பிரச்சனை. யுத்தத்துக்கு முந்தைய காலத்தில் இரத்தம் மிகக் குறைந்தளவில் தேவைப்பட்டது. இரத்தக் காயங்கள் குறைந்த வாழ்க்கைமுறையைக் கொண்டிருந்தோம். அதேநேரம் வைத்தியசாலை இன்று போல் அறுவை சிகிச்சை வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. இன்று வாழ்க்கைமுறை அதிக விபத்துக்களை கொண்டதாக மாறியுள்ளது. வைத்தியசாலை நவீன அறுவைச் சிகிச்சைமுறைகளை கொண்டதாக மாறியுள்ளது.
பெரியளவில் இரத்தம் தேவைப்படுகின்றது. ஆனால் அதை ஈடுசெய்யும் அளவுக்கு, யாழ் மக்கள் சமுதாயக் கண்ணோட்;டத்தை கொண்டு இருப்பதில்லை. இது தான் இதில் உள்ள அடிப்படைப் பிரச்சனையாகும். வைத்தியர்கள் தொடங்கி இரத்தம் வரை, அந்த மண்ணைச் சேர்ந்தவர்களிடம் இருந்து சமூகத்துக்கு முழுமையாக கிடைப்பதில்லை.
பொதுவாகவே யாழ் மையவாத சாதியச் சிந்தனைமுறை என்பது, பொது நலனுக்கு எதிரான குறுகிய கண்ணோட்டத்தைக்; கொண்டது. சாதியச் சிந்தனைமுறைக்குள் வாழ்கின்ற, ஆட்பட்டிருக்கின்ற எந்த சாதியாயினும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. அதாவது தன்னை முதன்மைப்படுத்திய குறுகிய சிந்தனை முறையே, யாழ் வைத்திய சாலையில் இரத்தம் போதாமைக்கான அடிப்படைக் காரணமாக இருக்கின்றது.
சாதி மற்றும் சாதியச் சிந்தனை முறை குறித்து!
சாதி காரணமில்லை, சாதியச்சிந்தனை காரணமாக இருக்கின்றது. அதாவது இரத்தம் போதாமைக்கு குறிப்பிட்ட எந்தச் சாதியுமல்ல, யாழ் மையவாத சாதிய சிந்தனையிலான சமுதாயக் கண்ணோட்டமே காரணமாகும். இவ்விடயத்தில் எந்த சாதிக்கும் விதிவிலக்கல்ல.
"கண்ட கண்ட சாதிக்கு நான் ஏன் இரத்தம் கொடுக்க வேண்டும்" என்ற கூறுகின்ற குறுகிய மனநிலை கொண்ட யாழ்மையவாத சாதியச் சிந்தனைமுறை என்பது, எல்லாச் சாதியிலும் காண முடியும். சமுதாய நோக்கற்ற குறுகிய மனப்பாங்கு கொண்ட யாழ் வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொது விளைவாகும். இதற்கு மாறாக எந்த ஒரு சாதியின் சிறப்பான "குணமல்ல".
"வெள்ளாள" சாதியே இரத்தம் வழங்க மறுப்பதான குறுகிய கண்ணோட்டமும், அப்படி "வெள்ளாள" சாதி செய்வதில்லை என்று மறுக்க முனைகின்ற வெள்ளாள சாதிய சிந்தனையிலான கண்ணோட்டமாகட்டும், இவை அனைத்தும், சாதிய சிந்தனை முறையிலானது. இரத்தம் போதாமைக்கான காரணத்தை விட்டுவிட்டு, சாதியின் இன்றைய நிலை குறித்த பொது உண்மைகளை கைவிட்டுவிட்டு, சாதியாக இதை விளக்குவதும் - மறுப்பதும், சாதியச் சிந்தனைமுறையால் மட்டும் தான் முடியும்;.
யாழ்ப்பாணத்தில் இன்று "வெள்ளாளர்களின்" எண்ணிக்கையை விட, பிற சாதிகள் எண்ணிக்கை அளவில் அதிகமாக இருப்பதுடன், எந்தப் பகுதியில் இருந்தும் இரத்தம் கிடைப்பதில்லை என்பதே உண்மை. இங்கு எங்கே சாதி செயற்படுகின்றது?
யாழ் மருத்துவமனை சாதி அடிப்படையில் இரத்தம் சேகரிப்பது இல்லை. குறித்த சாதிக்கு, அந்தந்த சாதி இரத்தத்தை ஏற்றுவதுமில்லை. இதற்கு மாறான எந்தத் தகவலையும் வைத்தியசாலை முன்வைக்கவில்லை. இங்கு ஒடுக்கும், ஒடுக்கப்பட்ட சாதிகள் அடிப்படையில் இரத்தம் சேகரிக்கப்படுவதுமில்லை, ஏற்றப்படுவதுமில்லை. இங்கு எப்படி சாதி இருக்க முடியும்?
இப்படி உண்மை இருக்க சாதியே இதற்கு அடிப்படைக் காரணம் என்று கூறுவது கற்பிதமாகும். சாதியைக் கொண்டு இரத்தம் போதாமையை விளக்குவது, கருத்து ரீதியான வங்குரோத்தனமாகும்.
சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்சனைக்கான காரணத்தை களைவதற்கு மறுக்கின்ற, நடைமுறையில் மக்கள் மத்தியில் செய்யவேண்டிய வேலையை மறுக்கின்ற சாரமே இதை சாதியாகத் திரித்துக் காட்டி விடுகின்றது.
இரத்தம் போதாமைக்கு சாதி காரணமில்லை என்ற அடிப்படையைக் கொண்டு, "தமிழ் தேசியத்திலும் - யாழ் சமூகத்திலும்" சாதியமேயில்லை என்று காட்ட முற்படுவதன் பின்னால் இயங்குவது, யாழ் வெள்ளாளிய சாதிய சிந்தனைமுறையாகும். இந்தச் சாதிய சிந்தனை முறையிலான தனிமனித சுயநலம் தான், சமுதாய ரீதியான இரத்தத் தேவையை மறுக்கின்றது என்பதே இதன் பின்னுள்ள அடிப்படை உண்மையாகும்.