Language Selection

மணலைமைந்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"கானல் நீரினைக் கண்டிட்ட கலைமானெனத் தவித்திருந்தேன்" 

இவ்வரிகள் பிரபலமான கிறீஸ்தவப் பாடலொன்றில் உள்ளதாக நினைவு. இன்றுள்ள சர்வதேச அரசியற்பரப்பில் இடதுசாரிய அரசியலை முன்னெடுக்கும் எமக்கும் இவ்வரிகள் பொருத்தமானதாக அமைகின்றன. முதலாளித்துவம் என்றுமில்லா வகையில் உலகெங்கும் மிக உறுதியான வகையிற் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.

 

முன்னிலை சோசலிசக் கட்சி, மாசி.2017 2.வது காங்கிரஸ் அறிக்கையில்:

“பொருளாதார முரண்பாடு வரலாற்றில் என்றுமில்லாதவாறு அதிகரித்து வருகின்றது. தோமஸ் பிகடி (Thomas Piketi) தனதுபுதிய நூலில் குறிப்பிட்டுள்ளவாறு, 

“2012 ஆகும்போது உலக மக்கள் தொகையில் மிக வறுமை நிலையிலுள்ள பாதிப்பேர் அல்லது 3700 மில்லியன் பேர்கள் பெறும் வருமானத்தின் கூட்டுத்தொகைக்கு சமமான வருமானத்தை, 85 மிகப்பெரும் பணமுதலைகள் பெறுகின்றன. அந்த செல்வம் ஏற்கனவே 65 பேரிடம் குவிந்துள்ளது. 2014 புள்ளிவிபரங்களின்படி உலகின் மொத்த செல்வங்களில் 12.8 விகிதத்தினை உலக சனத்தொகையில் 0.004 விகிதத்தினர் அநுபவிக்கின்றனர். உலக செல்வத்தில் 22 வீதம் உலக சனத்தொகையில் 0.03 விகிதத்தினரின் கையில் உள்ளது. உலக சனத்தொகையில் 1 விகிதம் பேரிடம் உள்ள செல்வம் உலக சனத்தொகையில் பாதிப் பேரின் செல்வத்திற்கு சமமாகும். இந்த முரண்பாட்டினால் மக்கள் மத்தியில் விரக்தியும் மன உளைச்சலும் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, சமூகத்தில் உழைக்கும் மக்களின் வாழ்நிலைகள் நாளுக்குநாள் நலிவடைந்து வருகின்றன."   

“....................”சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தை முன்வைத்து அதிகாரத்திற்கு வந்த அரசாங்கங்கள் தொடர்பில் நம்பிக்கை இழந்த, ஏமாற்றப்பட்ட மக்கள், மாற்றீடை கேட்டு நிற்பதை உலகம் பூராவும் காண முடியும். மக்களுக்கான மாற்றீடொன்றை முன்வைப்பதாயின், இடதுசாரிய மாற்றீட்டையே முன் வைக்க வேண்டும். அல்லது வலதுசாரிய இனவாத மாற்றீட்டையே முன்வைக்க வேண்டும். 

அதேவேளை, சர்வதேசிய இடதுசாரிய இயக்கமானது 1989 திற்குப் பின் முதுகெலும்பு முறிக்கப்பட்ட  நிலையில், படுக்கையில் கிடந்தபடி வாய்ச்சவடால் விடும் முன்னாள் வீரனைப்போலவே  செயற்படுகிறது. கொஞ்சம் "புரட்சிகரமாக" கதைப்பவர்களிடமெல்லாம் உலகப் புரட்சிக்கான தலைமையை எதிர்பார்க்கிறது. 2000-ஆம்  ஆண்டு தொடக்கம் சர்வதேச இடதுசாரிய இயக்கம் எதிர்பார்த்த "புரட்சியாளர்" வரிசையைப் பார்ப்போமாகில், ஹ_கோ சாவேஸ்(வெனிசுவேலா), ஏவோ மொராலெஸ்(பொலிவியா), லூலா டீ சில்வா (பிரேசில்), பேர்னி சண்டர்ஸ்(USA), ஜெரமி கோபின்(UK), ஸிரிசா(Syriza) இயக்கமும் அதன் தலைவர்களும்(கிரீஸ்), போடெமோஸ் (Podemos) இயக்கமும் அதன் தலைவர்களும் எனத் தொடர்கிறது. 

இவர்களில், ஹ_கோ சாவேஸ், ஏவோ மொராலெஸ்(பொலிவியா), லூலா டீ சில்வா (பிரேசில்), மற்றும் ஸிரிசா (Syriza) இயக்கமும் அதன் தலைவர்களும் அரசு அதிகாரத்துக்கு வந்தனர். ஆனால் சர்வதேச இடதுசாரிய இயக்கம் எதிர்பார்த்ததைப்போல எந்தவித புரட்சியோ – குறைந்தபட்ச அரசியல் மாற்றமோ அவர்களின் நாடுகளில் நடைபெறவில்லை. 

ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க எதிர்ப்பு, சர்வதேச நிதியத்துக்கு (IMF)க்கு எதிராக குரல்கொடுத்தல், முதலாளித்துவத்துக்கு மாற்றாக சிஸ்டம் ஒன்றை உருவாக்குதல் என கூறிப் பிரபலமான இவர்கள், அதிகாரத்துக்கு வந்த பின்னர் உலக முதலாளித்துவத்துக்கு சேவை செய்யும் அடியாட்களாகவே மாறினர். ஸிரிசா (Syriza) இயக்கமும் அதன் தலைவர்களும் இதற்கான உதாரணமாகிறார்கள். இவர்களால், முதலாளித்துவத்தின் விதிகளுக்குட்பட்டு வெகு சில மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டுவர முடிந்ததே ஒழிய, இவர்களின் நாட்டின் பொருளாதாரத்தை - சிஸ்டத்தை எந்தவிதத்திலும் மாற்ற முடியவில்லை. மேற்கூறியவர்களிற் சிலர் லஞ்சலாவண்யத்தில் கைதேர்த்தவர்கள் ஆனார்கள். உதாரணமாக, லூலா டீ சில்வா (பிரேசில்) லஞ்ச ஊழல் புரிந்ததன்  மூலம் இன்று பிரேசில் மக்களால் எதிர்க்கப்படுபவராகவுள்ளார். 

அமெரிக்காவின் பெர்னி சாண்டர்ஸ், ஜனாதிபதியாகும் வாய்ப்பு இழக்கும் நிலையில், திருமதி. ஹிலாரி கிளிண்டனுக்கு சாமரம் வீசினார். அதேபோன்று தற்போது "வரலாறு காணாத" வெற்றியைப் பெற்ற   ஜெரமி கோபின், வலுவான எதிர்க்கட்சியாக இருந்து இங்கிலாந்தின் "பாரம்பரிய" ஜனநாயகத்தைக் காக்கப்போவதாக அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏன், ஜெரமி கோபின் பதவிக்கு வந்தாலும் கூட எந்தவித புரட்சிகர அரசியல் அதிசயங்களும் நடந்துவிடப்போவதில்லை.

இவ்வாறு, இடதுசாரிய இயக்கம் நம்பிக்கை வைத்த "தலைவர்கள்" எல்லோருமே கானல் நீராகிப்போகும் வரலாறு தொடர்கிறது. பிரபலமான தனிமனிதர்களிடமும், இடது-சந்தர்ப்பவாத  போப்புலிச (Populist) அரசியல்வாதிகளிடமும்- அவர்களின் "மக்கள் இயக்கங்களிடமும்"  மாற்றத்துக்கான தலைமையை எதிர்பார்த்தால் ஏமாற்றத்தைத் தவிர வேறென்ன கிடைக்கும்? 

"இந்த நிலையைத் தோற்கடிப்பதற்காக தேசிய மற்றும் சர்வதேசிய அடிப்படையிலான சரியான பாட்டாளி வர்க்கக் கோட்பாட்டினால் வழிகாட்டப்படும், உறுதியான இடதுசாரிய வேலைத்திட்டத்தை உருவாக்குவதே இன்றயை காலத்தில் - சகல இடதுசாரிச் சக்திகளின் முக்கிய கடமையாக இருக்கமுடியும்."  (முன்னிலை சோசலிசக் கட்சி, 2.வது காங்கிரஸ் முன்மொழிவு.1 மாசி.2017 )