Language Selection

இதழ் 29
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அனைவருக்கும் நுவரெலியா என்ற பெயரைக் கேட்டவுடன் நினைவில் வருவது சுத்தமான அழகிய பசுமையான இயற்கை வளங்கள் நிறைந்த தூய நீரினால் நிரம்பிய வனப்பான பிரதேசமாகும். அதைப்போலவே பறவைகளின் கீச்சிடும் ஒலிகளும் பல்வேறு மிருகங்களும் நிறையப் பெற்ற இயற்கைச் சூழலாகும். இவ்வாறான இயற்கை எழில் நிறைந்த பிரதேசமாக நுவரெலியா காணப்பட்ட போதும் அதற்குள்ளே மறைந்திருக்கும் உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 

ஆங்கிலேயர் இலங்கையை கைப்பற்றிய பின்னர் பெருந்தோட்டத்துறையை மையமாகக் கொண்டு வர்த்தகத்தை ஆரம்பித்த பின் இயற்கைச் சூழல் பெருமளவு மாற்றத்திற்குள்ளானது. அதாவது இங்கு காணப்பட்ட காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களையும் தேயிலைத் தொழிற்சாலைகளையும் அமைத்தனர். இத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நெருக்கமான லயன் வீடுகளும் அமைக்கப்பட்டன. இவை யாவும் பொருளாதார ரீதியில் பலமாற்றங்களை ஏற்படுத்தியது. இவ்வாறான தேயிலைத்தோட்ட தொழிலாளர்களும் நிர்வாகத்தினரும் பிரயாணிக்க தேவையான ரயில் போக்குவரத்து பாதைகளும், பிரதான வீதிகளும் அமைக்கப்பட்டன.

அதன் பின் முன்னோட்டமாக மரக்கறி பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டதுடன் அப்பிரதேசங்களில் தங்கி வாழ சொகுசு மனைகளும் அமைக்கப்பட்டன. அக்காலத்தில் தொடங்கப்பட்ட முதலாளித்துவவாதம் பல தசாப்தங்களாகவே இன்றுவரையில் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. நவீன முதலாளித்துவத்தின் இரண்டாவது கட்டம் தொடங்கி இன்றுவரையில் நுவரெலியா பிரதேசம் கூடுதலான அளவு மாற்றத்திற்குள்ளாகி உள்ளது. ஆனால் முதலாளிதுவத்திற்காக பாடுபட்ட மக்கள இன்றும்; அதே வறிய நிலையிலேயே காணப்படுகின்றனர்.

தேயிலைத் தோட்டங்கள் நிறையப்பெற்ற, தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் அதிகளவு காணப்படும் பிரதேசமே நுவரெலியாவாகும். ஆனால் இம் மக்கள் அன்று வாழ்ந்த அதே வறுமையான நிலைமையிலேயே இன்றும் வாழ்கின்றனர். இவ்வாறு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த இம்மக்களுக்கு அந்நிலமும் சொந்தமில்லை, அவர்களுக்கான முகவரியும் கூட இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கடினமாகப் பாடுபட்டு உழைக்கும் இவர்களுக்கான சம்பளம் கிடைக்கப்பெறுவதில்லை. முறையான வாழ்க்கை நிலையில்லாமல் காணப்படும் இவர்களை பணயமாக வைத்து இலாபம் ஈட்டும் முதலாளித்துவ வர்க்கத்தினரையே காண முடிகின்றது. இவ்வாறான நிலைமையில் எதிர்காலத்தையும் திட்டமிட முடியாமல் ஒவ்வொரு நாளையும் எதிர்பார்ப்பின்றி கழித்து கொண்டிருக்கின்றனர். ஏமாற்றப்பட்ட, பாதிக்கப்பட்ட தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் மூன்று, நான்கு தசாப்தங்களாகவே இன்னும் அதேநிலையில் காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமே ஆகும். 

நாட்டின்  பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேயிலை உற்பத்தி காணப்பட, நுவரெலியா பிரதேசத்தின் முதன்மையான உற்பத்தியாக மரக்கறி பயிர்ச்செய்கை முன்னிலையை அடைந்துள்ளது. ஆனாலும் இவ் மரக்கறி உற்பத்தியும் மோசமான நிலைக்கு உட்பட்டிருப்பதை காணக்கூடியதாய் உள்ளது. மரக்கறி உற்பத்திக்கு தேவையான மருந்துப்பொருட்கள், களை நாசினிகள், விதையினங்கள் போன்றவை மிகவும் விலை அதிகரித்து வருவதுடன் அதனை அதேவிலையில் வாங்க கூடிய துர்ப்பாக்கிய நிலமைக்கு பாமர கமக்காரர்கள் ஆளாகியுள்ளனர். அதுபோலவே மாட்டு உரம் ஒரு லொறி 16000 ரூபாவிற்கும் விதை கிழங்கு ஒரு அந்தர் 16000 ரூபாவிற்கும் வாங்க வேண்டிய நிலையிலேயே மக்கள் காணப்படுகின்றனர். இவ்வாறாக மேலதிகமான பணத்துடன் தமது உழைப்பையும் சேர்த்து பாடுபட்டு பயிர் செய்யும் உற்பத்திகளை சிறுவிலைக்கு விற்று நஷ்டத்தையே எதிர் கொள்கின்றனர். இதற்காக செலவிட்ட மூலதனம் கூட இவர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை. விவசாயத்தை மேற்கொள்ள விவசாய கடனை வங்கிகளிடமிருந்து பெற்று நஷ்டத்தை எதிர் கொள்கின்றனர். ஆனாலும் வங்கிகளின் கடனை அடைப்பதற்காக மீண்டும் விவசாயத்தையே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறாக மரக்கறி உற்பத்தியிலும் பாதிப்படைந்த மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த வேறுவழியை தேட வேண்டிய அவசியம் உருவானது. அதனால் சமீபகாலமாக உல்லாச பிரயாணத்துறை நுவரெலியாவில் அதிகரித்த போக்கினை காட்டுவதனால் வரும் உல்லாச பிரயாணிகளுக்கு தங்குமிட வசதிகளையும் சொகுசு சேவைகளையும் வழங்கி மக்கள் அதன் மூலம் வருமானத்தை ஈட்டுகின்றனர். அதாவது உல்லாச பிரயாணிகளுக்கு ஏதாவது உற்பத்தி செய்து அதனை விற்றல், தங்குமிட வசதிகளை அமைத்துக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்குமிட வசதிகளுக்காக வார நாட்களில் ஒரு இரவிற்கு 2000- 20000 ரூபா வரையான பணத்தை அறவிடுகின்றனர். வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் இத்தொகை மேலும் அதிகரிக்கின்றது. தனது வீட்டில் ஒரு அறையில் நெருக்கமான வாழ்க்கையை அனைவரும் வாழ்ந்து கொண்டு வருகை தருவோருக்காக வீட்டினை வழங்கும் நிலையே காணப்படுகின்றது. வருடத்தின் 365 நாளும் கஷ்டப்பட்டு உழைத்து இளைப்பாற மாற்றம் ஒன்றிற்காக நுவரெலியாவிற்கு வந்து 2 நாட்களில் அனைத்து பணத்தையும் செலவிட்டு செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஒரு நன்மையும் கிடைப்பதில்லை. 

இவ்வாறாக வருகை தருவோருக்குத்தான் இந்நிலை எனப்பார்த்தால் இங்குவாழும் மக்களும் அதே நிலையிலேயே வாழ்கின்றனர் என்பது புலனாகின்றது. அதாவது உல்லாச பிரயாணிகளை ஈர்க்க மற்றும் அவர்களுக்கான சேவைகளை வழங்க மரங்களினால் சூழப்பட்ட அழகிய பகுதிகள் அழிக்கப்பட்டு பார்க்கும் இடமெல்லாம் சீமெந்தினால் ஆன கொங்கிரீட் அடுக்கு மாடிகளையே காணக்கூடியதாய் உள்ளது. இவ்வாறாக இயற்iயான காடுகள் அழிக்கப்படுவதினால் அதிகளவான பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக நுவரெலியாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் வேறுபகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இயற்கை சூழலுக்கு எது நடந்தாலும் பரவாயில்லை ஏதாவது செய்து கொள்வோம் என வாழும் அற்பர்களுக்கு நுவரெலியா அடிமைப்பட்டு கிடக்கின்றது. நுவரெலியாவில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள வீடுகள், அடுக்கு மாடித் தொடர்கள், கடைத்தொகுதிகள், செயற்கை பூங்காக்கள் போன்றவை (உல்லாச பிரயாணிகளுக்கு மட்டுமல்லாமல் வாழும் மக்களையும்) உங்களை நாங்கள் சூறையாடப் போகின்றோம் எனக் குறிப்பிடும் வகையில் அமைந்துக் காணப்படுகின்றது.

காசு, பணமே முக்கியம் என்று வாழும் இவ்வுலகில் நுவரெலியாவிற்கு வரும் உல்லாச பிரயாணிகளுக்கு கிடைக்கப்பெறுவது என்ன என நோக்கும் போது கம்பளையிலிருந்து பலவங்குகளை கடந்து தேயிலை தோட்டங்களின் ஊடாக வரும் மக்கள் இறம்பொட நீர்வீழ்ச்சி, கெரண்டிய நீர்வீழ்ச்சியை கண்டு களித்து நுவரெலியாவிற்கு வருகை தந்து கூடுதலான அளவு பணத்தை கொடுத்து தங்குமிடங்களை பெற்று தங்கி மறுநாள் ஹட்டன் சமவெளி, தேயிலை தொழிற்சாலைகள், விக்டோரியா பூங்கா, கிரகரி ஏரி போன்றவற்றை கண்டு களிப்பர். மேலும் புதியது என நினைத்து இரசாயன மருந்து நிரம்பப்பெற்ற மரக்கறிகளை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு நீரின் அளவு குறைந்துள்ள சென்.கிளயர், டெவோன் போன்றவற்றை பார்த்து அவர்களின் இடங்களுக்கு அப்படியே செல்கின்றனர். அதன் பின் “நாங்கள் நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றோம்” என சொல்லித்திரிவர். அங்கு சென்று என்ன சந்தோஷத்தை பெற்றுக் கொண்டோம் என்ற பிரச்சினை ஒருபுறம் இருக்க, எதிர்வரும் நாட்களை கடத்த செலவு செய்ய பணத்திற்கு என்ன செய்யப் போகின்றோம் என்பது அவர்களின் இன்னொரு பிரச்சினையாகும்.

நுவரெலியாவிற்கு நேர்ந்தமாசு இயற்கை சூழல் அழிவடைந்துள்ளது. நகரிற்கு அருகே காணப்பட்ட நீர்வீழ்ச்சி இரண்டுமே அழிவடையும் நிலையில் காணப்படுகின்றமை சூழல் அழிவடைந்தமையை தெளிவாகப் புலப்படுத்துகின்றது. நுவரெலியாவிற்கு வருகைதரும் மக்கள் மாத்திரம் அன்றி இங்கு வாழும் மக்களும் அசுத்தமான நீரினையே பெற்றுக் கொள்கின்றனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நீர் மாதிரி பரிசோதனைகளின் முடிவானது நுவரெலியாவின் குடிநீரானது பாவனைக்கு உகந்தது இல்லை எனக் குறிப்பிடுகின்றது. இந்நீரினுள் மலம் கலந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பிரச்சினை வெளிவருவதும் இல்லை இதற்கான தீர்வுகள் எட்டப்படுவதும் இல்லை.

நுவரெலியா தொடர்பில் எக்கருத்து காணப்பட்டாலும் நுவரெலியாவிற்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது அழிவடைந்துள்ள சூழலும் மாசடைந்த நீருமே. சகலதும் நல்லது எனக் கூறும் வர்த்தகத்தில் மாசடைந்த நீருக்கு பதிலாக போத்தலில் அடைக்கப்பட்;ட நீரினை வழங்கல் அல்லது வடிகட்டிகளை (Filters) வழங்குவதே நோக்கமாகும்.

நுவரெலியாவில் வாழும் மக்களின் பிரதான பிரச்சினை அவர்களின் வாழ்க்கைக்கு ஏற்ற நிலமானது காணப்படாமை ஆகும். இப் பிரச்சினை தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல் இங்கு வாழும் அனைவருக்கும் உரிய பிரச்சினையாகும். வாழும் இடத்திற்கு கூட முறையான காணி உரிமைப்பத்திரம் இன்றியே பல ஆண்டுகளாக வாழ்கின்றனர். இவ்வாறான நிலையில் வாழ்க்கையை வெறுத்து பல ஆண்டுகளாக வாழ்ந்த இடங்களை விற்று வெளியேறியுள்ளனர் மேலும் சிலர் பலாத்காரமாக அனுப்பப்படவுள்ளனர் (எதிர் காலத்தில் அமைக்கப்படவிருக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் ரேஸ் கோர்ஸ் மத்தியில் வாழும் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது). நடப்பவை யாவும் அமைதியாக நடக்க நுவரெலியாவை வண்ண மயப்படுத்த அருகில் அமைந்திருக்கும் சிறு வீடுகளை அகற்றுவது இந்நிலையில் அவசியமாயுள்ளது. (கொழும்பு நகரத்தை அழகிய நகராக மாற்றுவோம் என தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தி அங்கு வாழ்ந்த பாமர மக்களை அங்கிருந்து பலாத்காரமாக அகற்றினர்).

அப்படியானால் நாங்கள் இந்நிலைக்கு என்ன செய்வது? வாழ்வதற்கு இடமற்ற பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களினை வெளியேற்றி முதலாளித்துவ பலம் கொண்ட ஒரு குழுவினர் மாத்திரம் பலம் படைத்தவர்களாக காணப்படுகின்றனர். இதற்கு சார்பானஅரசியல் பின்னணியும் இவர்களை மேலும் பலப்படுத்துகின்றது. இந்நிலையே தொடர்ந்தால் இன்னும் சிலகாலங்களில் நுவரெலியாவில் வசிப்பதும் வருகை தருவதும் பணபலம் படைத்தவர்கள் மாத்திரமே என்பது புலனாகின்றது.