Language Selection

இதழ் 29
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நம் நாட்டில் கடந்த 2015 சனவரி 8ந் திகதி முதல் சனநாயகம் மீட்கப்பட்டு குடிமக்களுக்கு சுதந்திர சுபீட்ச நல்வாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  2015 செப்டம்பர் முதல் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நாடு முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவதாகவும் இவற்றைச் சர்வதேச சமூகம் பாராட்டியுள்ளதாகவும் ஆட்சியாளர்கள் அண்மையில் அறிக்கை விடுத்துள்ளனர்.  

பண பலம் - அரசியல் செல்வாக்கு – அரச அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட அறிவுப்புக்களும் ஆட்சியாளர்களின் உரைகளும் பொருந்துகிறதே ஒழிய குடிமக்களுக்கும் அதற்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாக நாட்டின் இன்றைய நடைமுறைகள் சிறிதளவேனும் வெளிப்படுத்தவில்லை.

இவர்கள் கூறும் இன்றைய சனநாயக ஆட்சியில்:-                                         

-குடிமக்களின் பறித்தெடுக்கப்பட்ட காணிகள் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை.

-அநீதியாக சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.

-கடத்தப்பட்டடோர் காணாமல் ஆக்கப்பட்டடோர் ஆகியோரின் உறவுகளின் அங்கலாய்ப்புக்கள் ஆற்றுப்படுத்தப்படவில்லை.

-குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படவில்லை.

-போதைவஸ்துக் கடத்தல்கள் தடுக்கப்படவில்லை.

-வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

-வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

-இலவசக் கல்வி பாதுகாக்கப்படவில்லை.

-சுகாதார சேவைகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

-இனவிரோத செயற்பாடுகள் முறியடிக்கப்படவில்லை.

-சுதந்திர ஆணைக் குழுக்கள் சுயமாக இயங்க அனுமதிக்கப்படவில்லை.

-ஊழல் வழக்குகள் உரியமுறையில் முன்னெடுக்கப்படவில்லை.

-குற்றம் புரிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஒரு நாட்டில் சனநாயகத்தை பாதுகாப்பது சுதந்திரமான நீதித்துறையாகும். அதன் கண்காணிப்பில்தான் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இலங்கையில் அது சுதந்திரத்தை இழந்து அரசியல்வாதிகளின் அராஜகங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நிறுவனமாக செயற்படத் தொடங்கி பல சகாப்தங்களாகின்றன. அண்மையில் வெளியான த.தே.கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

இன்று நாட்டின் சகல திணைக்களங்களும் அரச சம்பளத்தில் அரசியல் ஆசான்களுக்கு சேவகம் செய்ய இயங்குகிறதே ஒழிய குடிமக்களுக்கு சேவை செய்வதற்கு அல்ல. குடிமக்களை அவர்கள் அடிமைகளாகவே நடாத்துகிறார்கள். அரச இயந்திரங்கள் யாவும் ஊழலினால் துருப்பிடித்துப் போய் கிடக்கின்றன. நல்லாட்சியினர் இவற்றைக் கணக்கில்   கொள்ளாமல்,  தவறுகளைச் சீர்ப்படுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் “நான் செய்தது - நீ செய்தது – ஆட்சியை மாற்றுகிறேன் - முடிந்தால் மாற்றிப் பார்” என நாளும் பொழுதும் விவாதங்கள் நடாத்தி சவால்கள் விட்டபடி உள்ளனர்.  

இந்த இலட்சணத்தில்தான் நாட்டின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவென எமது மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் யாப்பு வரையப் புறப்பட்டுள்ளனர் எந்த விதமான யாப்பு எழுதப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய, செயற்படுத்தக் கூடிய, கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு கொண்ட அரச கட்டமைப்பும்,  நிர்வாகமும் இல்லாவிட்டால் புதிய யாப்பினால் எதுவும் மாறப் போவதில்லை.  

“ஒரு வருடத்தில் தீர்வு கிடைக்கும்” என கடந்த ஆண்டில் உறுதி வழங்கிய எதிர்க் கட்சித்தலைவர் “நாம் வாய் திறந்தால் நல்லாட்சிக்கு குந்தகம் விளையும். அதனால் விமர்சனம் செய்யாமல் புதிய யாப்பை ஆதரிப்போம்” எனக் கூறியுள்ளார். எனவே 1972ல் வரையப்பட்டது போல் அல்லது 1978ல் எழுதப்பட்டது போல் ஒரு யாப்பு எழுதப்படும். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். இந்த தடவை தமிழர் தரப்பினரின் ஆதரவுடன் அது தயாரிக்கப்படுகிறது.  

எது எப்படி ஆயினும் ஒரு நாட்டின் அரசியல் யாப்பை மதித்து அதன்படி செயற்பட வேண்டியது குடிமக்களின் கடமையாகும். யாப்பின் விதிகளை நடைமுறைப்படுத்துவது அந்த நாட்டின் அரச கட்டமைப்பின் பாரிய பொறுப்பாகும். அந்தக் கட்டமைப்பு விரிசல்களுடனும் - இடிபாடுகளுடனும் இருக்க அதில் பூண்டு-புழு-பூச்சி-காளான்-பாம்பு-எலி-பெருச்சாளி குடியிருந்தால் ஒழுங்கான-நேர்மையான நிர்வாகம் நடக்காது.

இதனை விளங்கிக் கொள்வதற்கு ஒரேயொரு உதாரணம் போதும். தற்போது நடைமுறையில் உள்ள யாப்பின் பிரகாரம் (அரசியல் அமைப்பு சட்டத்தின் IV வது ஷரத்து, 12(2)வது அத்தியாயம்,  'தேசிய மொழிகளான தமிழ் சிங்களம் இரண்டும் அரச கரும மொழிகளாகும். ஆங்கிலம் தொடர்பு மொழியாகும் என வரையறுத்துள்ளது'அரச நிர்வாகத் தொடர்புகள் அனைத்தும் சிங்களம்-தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைந்திருக்க வேண்டும். அன்று முதல் இன்று வரை பாராளுமன்றப் பதிவேடு(கான்சாட்) இந்த மூன்று மொழிகளிலும் ஒழுங்காக அச்சிடப்பட்டு வெளிவருகிறது. இது போன்று அரச நிர்வாகமும் செயற்பட்டிருந்தால்  பயங்கரவாதச் சட்டம்-இன யுத்தம்-வன்னிப் பேரழிவு-சர்வாதிகார ஆட்சி-நல்லாட்சி என்ற சொற் பதங்களை நாம் இன்று பயன்படுத்த வேண்டிய தேவை வந்திருக்காது.

அரசியல் யாப்பின் கூற்றுப்படி நாட்டின் நிர்வாக செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதுதான் சனநாயகத் தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்படும் அரசாங்கத்தின் பொறுப்பான கடமையாகும். இதற்காகத்தான் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்கிறார்கள். இந்த நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தும் அரச கட்டமைப்பை மக்களுக்கு பயன்படும் வகையில் நெறிப்படுத்தி அதனை வழிப்படுத்திக் கண்காணிக்க வேண்டிய "மக்கள் பிரதிநிதிகளால்" உருவாகும் அரசாங்கத்தின் 'ஊழல்களும்,  சட்ட மீறல்களும், அநியாயங்களும், அடக்குமுறைகளும் தான் ஒரு நாட்டுக்குள்ளேயே பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றன.  

இன்று பதவியிலுள்ள அரசியல் வாதிகளுக்கு மக்களைப் பற்றிய அக்கறையும் பொறுப்புணர்வும் இருந்திருக்குமானால் இவர்கள் முதலில் அரச நிர்வாக இயந்திரங்களை பழுது பார்த்து திருத்தியிருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக முதலில் நீதித்துறையைச் செப்பனிட்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்திற்கோ அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கோ அதற்கான ஆர்வமும் இல்லை. அப்படியான தேவையும் கிடையாது.

1970ல் அதிக வாக்குறுதிகளுடன் மக்களின் பேராதரவைப் பெற்று அமோக வெற்றியுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தான் அளித்த வாக்குறுதிகளை மீறியதனால் ஏற்பட்ட எதிர் விளைவே அன்று தென்னிலங்கையில் இடம் பெற்ற இளைஞர்களின் கிளர்ச்சியாகும். அன்றைய படித்த இளைஞர்களின் விரக்தியும் அப்பிராந்திய கிராமப்புற (குறிப்பாக விவசாய)மக்களின் கொடிய வறுமையும் தான் அந்தக் கிளர்ச்சிக்கு தூண்டுகோல்களாக அமைந்திருந்தன.

வட கிழக்கில் ஏற்பட்ட ஆயுதப் போராட்டத்திற்கும் அன்றைய படித்த இளைஞர்களின் இருள் மயமான எதிர்கால நோக்கும் மக்களின் பின் தங்கிய பொருளாதார அபிவிருத்தியுமே அடிப்படைக் காரணிகளாக அமைந்திருந்தன.

இன்று வரை எமது மக்கள் பிரதிநிதிகள் செய்வது என்ன? தாங்கள் மாறி மாறி அதிகாரத்தை தக்க வைக்கவும் கோடி கோடியாக கொள்ளையடிக்கவும் ஏற்ற விதமாகவே செயற்படுகிறார்கள். அதற்கேற்ற வகையில் பிரச்சனைகளை வளர்க்கிறார்கள். குடிமக்களை வகை வகையாகப் பிளவுபடுத்துகிறார்கள்.

இன்றைய புதிய அரசியல் யாப்பு வரையும் விடயத்தில் மிக முக்கியமாகப் சர்ச்சைக்கு உட்பட்டிருக்கும் சொற் பதங்கள் “பௌத்தம்” – “ஒற்றையாட்சி” – “சமஸ்டி” – “13வது திருத்தச் சட்டம்” “அதிகாரப் பரவலாக்கம்” என்பவையாகும். 1947ல் தெரிவான அரசாங்கம் முதற் கொண்டு இன்று தெரிவான அரசாங்கம்   வரை இந்தச் சொற்களை வைத்து குடிமக்களை பிளவுபடுத்தி, மோத விட்டு தங்கள் ஆட்சி அதிகாரத்தைத் தொடர்ந்து மாறி மாறிக் கைப்பற்றி – காப்பாற்றி வருகிறார்கள்.  கட்சிகளும் அதனை வைத்தே தங்கள் தங்கள் வாக்கு வங்கிகளை பெருப்பித்துக் கொள்கின்றன.

இன்றைய புதிய யாப்பு வரைவில் முஸ்லீம் மக்கள் தொடர்பான இவர்களின் அணுகுமுறையை வைத்தே இவர்களின் இந்த அரசியல் சூட்சுமத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். வரையப்படும் புதிய யாப்பில் பெண்கள் - சிறுமிகள் மீதான ஒடுக்குமுறையை இல்லாதொழித்து அவர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் வரைவு எழுதப்பட வேண்டுமென முஸ்லீம் பெண்கள் அமைப்புக்கள்-சமூக செயற்பாட்டாளர்கள்-மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியிருந்தன. அவற்றில் குறிப்பாக முஸ்லீம் பெண்களின் சிறு வயதுக் கட்டாயத் திருமணத்தை தடை செய்யும் வகையில் திருமண வயது 18 என வரையப்படல் வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமானது. ஆனால் இப்போது அதில் தலையிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அவதானிக்கும் போது அதிகாரத்திற்கு வருவதற்கான தேர்தல் வாக்குகளை கருத்தில் வைத்தே முடிவுகள் எடுக்கப்படுகிறதே ஒழிய நீதியான ஆட்சி முறைமைக்காக அல்ல என்பது நன்கு புலனாகிறது.  (முஸ்லீம் நாடுகளான அல்ஜீரியா பங்களாதேஸ் ஈராக் மொரொக்கோ ஜோர்டான் மலேசியா துனிசியா நாடுகளில் பெண்களுக்கான திருமண வயது 18 என்பது நீண்ட காலமாக சட்ட அமுலில் உள்ளது).

1994ல் பதவிக்கு வந்த அன்றைய சனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் தென்னிலங்கை மக்கள் மத்தியில் “யுத்தம்-சமாதானம்” தொடர்பாக ஒரு கருத்து கணிப்புக் கணக்கெடுப்பொன்றை நடாத்தியதன் பின்னர் “வெண்தாமரை” என்ற பெயரில் சமாதான திட்டம் ஒன்றை உருவாக்கி பெரும்பான்மையின மக்கள் மத்தியில் சமாதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையான செயற்பாட்டை முன்னெடுத்திருந்தார். அதே வேளையில் ஒரு புதிய அரசியல் யாப்பு வரைவையும் தயாரித்திருந்தார். அதனை சர்வசன வாக்கெடுப்புக்கு விடும்போது பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவு அவசியம் என்பதனையும் அவர்களுடன் தமிழ் மக்களின் ஆதரவும் இணையும் என்பதையும் உணர்ந்தே அவர் அந்த “வெண்தாமரை” என்ற சமாதான செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்தார். ஆனால் அப்போது பதவியில் இருந்த ஐ.தே.கட்சி அரசாங்கம் மட்டுமல்ல 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த த.தே.கூட்டணியும் சேர்ந்தே அந்த யாப்பை நிராகரித்திருந்தன.

அந்த யாப்பில் பல விடயங்கள் நாட்டின் சகல குடிமக்களுக்கும் பயனுடையதாக குறிப்பாக தமிழ் மக்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது மட்டுமல்லாது யாப்பின் வரைவு முன் கூட்டியே பிரசுரிக்கப்பட்டு பார்வைக்கும்-பரிசீலனைக்கும் சகலருக்கும் வழங்கப்பட்டும் இருந்தது. அன்றைய நெருக்கடியான சூழலில் அந்தப் புதிய யாப்பை நிராகரித்த அதே அரசியல் பிரமுகர்கள் தான் இன்று நாட்டில் இன-மத-சாதி-பால்-பிராந்திய-வர்க்க பிளவுகளுக்கான அரசியல் செயற்பாடுகளுக்கு உரமிட்டு நீர் ஊற்றி வளர்த்தபடி ஒரு புதிய யாப்புக்கான சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப் போவதாக கதை அளந்து கொண்டிருக்கின்றனர்.  

எத்தைகைய யாப்புக்களையும் எத்தனை தடவை மாற்றி எழுதி நிறைவேற்றினாலும் குடிமக்கள் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்று புதியதொரு அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பாத வரை நாட்டில் அநியாயங்களும் - அக்கிரமங்களும் - அழிவுகளும் - அவலங்களும் வழமை போல் தொடர்வது தவிர்க்க முடியாததாகும்.