கடந்த ஞாயிறு (09) இரவு ஐபிவோகோம, பூஞ்சிக்களமவை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய வர்த்தகரை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றுள்ளனர். T-56 மற்றும் பிஸ்டல் ஆயுதங்களுடன் வெள்ளை வானில் சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை பண்டாரவளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரியப்படுத்தி இரவு 7 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்து தனது கணவன் புஸ்பகுமார பியகமவுடன் அரை மணிநேரத்திற்கு மேலாக கதைத்து கொண்டிருந்து விட்டு, தன்னை தண்ணீர் தரும்படி கேட்டதாகவும், தான் தண்ணீர் கொண்டு வர சென்ற போது தனது கணவனை வெள்ளை வானில் ஏற்றி சென்று விட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு தனது கணவன் எங்கே என அறியத்தரும்படி கேட்டுள்ளார்.
இந்த கடத்தல் தொடர்பாக பல முறைப்பாடுகள் தீவிலுள்ள பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த கடத்தப்பட்ட வர்த்தகரை பண்டாரவளை பொலிசார் கூட்டிச் செல்லவில்லை என்பது விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது என உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஐபிவோகோம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கணவரை வெள்ளை வானில் கடத்தி சென்ற பின்னர் வீட்டிற்குள் நுழைந்த இன்னொரு குழுவினர் வீட்டில் பொருத்தி இருந்த CCTV கமராக்களின் பதிவை பொண்ட ரைக்கோடரை தம்முடன் எடுத்து சென்றுள்ளதாகவும் கடத்தப்பட்ட வர்த்தகரின் மனைவி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மகிந்தாவின் பாசிச ஆட்சியில் வெள்ளைவான் கடத்தல்கள்- கொலைகள், ஜனநாயக மறுப்பு, சர்வாதிகாரம், கொலை அச்சுறுத்தல்கள் என பாசிசம் அதன் உச்சத்திற்கு தலை விரித்தாடியதை முன்வைத்து, நல்லாட்சி வழங்குவதாக வாக்குறுதி வழங்கியே இன்று ஆட்சியில் இருப்பவர்கள் பதவிக்கு வந்தனர்.
ஆனால் இன்றுள்ள உண்மை நிலவரம் மகிந்த ஆட்சியை விட கொடுரமானதாக மாறி வருகின்றது.
முகத்தை மாற்றி பிரச்சனைகளிற்கு தீர்வு கிடையாது. அமைப்பை மாற்றினால் தான் வாழ்வு உண்டு.