"சைட்டத்தை தடை செய்” இப்பொழுது நாடு முழுவதும் கேட்கக்கூடியதாகவும், காணக்கூடியதாகவும் உள்ள கதையாகும். மாலம்பே சைட்டம் பட்டக்கடையை தடை செய்யக்கோரி மாணவர்கள் நீண்ட நாட்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சைட்டம் பட்டக்கடைக்கு ஏன் நீங்களும், நாங்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?
இந்த நிறுவனத்தில் மருத்துவ பட்டம் உட்பட இன்னும் ஏராளமான பட்டங்கள் பணத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன. சிறிய தொகைக்கு அல்ல, 120 இலட்சத்திற்கு மருத்துவ பட்டம் விற்பனை செய்யப்படுகிறது. அப்படியானால் மிக தெளிவாக தெரிகிறது இந்த நாட்டின் விவசாயிகளின், ஆடைத்தொழிற்சாலை தொழிலார்களின், அரச சேவையாளர்களின், தனியார்துறை சேவையாளர்களின், தோட்டத்தொழிலார்களின், மீனவர்களின் குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு இதற்கு செல்ல முடியாது என்பதே. மொத்த சனத்தொகையில் ஒன்று அல்லது இரண்டு சதவீதத்தினருக்கே இதற்கு செல்ல முடியும்.
சைட்டம் மட்டுமல்ல நாடு முழுக்க இன்னும் பட்டக்கடைகளை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்கள். பட்டக்கடைகள் உருவானதன் பின் அரச பல்கலைக்கழகங்கள் படுகுழிக்குள் தள்ளப்படும். இப்போது அரச பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசாங்கம் பாரிய அளவு குறைத்துள்ளது. இந்த நிலைமையை நாம் மாற்றாவிட்டால், இலங்கை போக்குவரத்து சபைக்கு, அரச வைத்தியசாலைகளுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான நிலைமையே பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்படும். தொடர்ந்து பாடசாலைகளுக்கும் இந்த நோய் பரவிவிடும். இப்போது ஓரளவுக்கு நடந்தேறியுள்ளது.
பணம் இல்லை, அதனால் அரச பல்கலைக்கழகங்களை விரிவு படுத்த முடியாது என்று அரசாங்கம் சொல்லுகின்றது. ஆனால் யுத்தம் இருந்த காலத்தை விட தற்போது யுத்தத்திற்கான செலவு அதிகம். அந்த காலத்தில் யுத்தத்தினால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து இருந்ததாக கூறினர். தற்போதைய வரவு-செலவு திட்டத்தின் போதும் அதையே கூறுகின்றனர். அப்படியானால் தற்போது பணம் எங்கே? மற்றது தாம் திருட்டை நிறுத்தி நாட்டை சொர்க்கபுரியாக மாற்றுவோம் என்றனர். திருட்டை நிறுத்துவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் என்னவெல்லாம் செய்யப்போகிறோம் என்று தம்பட்டம் வேறு அடித்தனர். தற்போது களவும் நின்றபாடில்லை, மீதப்படுத்தப்பட்ட பணமுமில்லை. எந்த அளவுக்கு வரி அறவிடப்பட முடியுமோ அதை எம்மிடமே அறவிடுகிறார்கள். அப்படியானால் ஏன் அந்த வரிப்பணத்தில் எமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்க முடியாது. நாங்கள் இலவச கல்வியை கேட்பது புண்ணியத்திற்காக அல்ல. மேலும் அரச வருமானம் குறைவு என்றால், கொம்பனிக்காரர்களிடம் இருந்து கூடுதல் வரியை அறவிட்டு ஏழைகளின் தேவையை நிறைவேற்ற வேண்டும். அரச பல்கலைக்கழங்களை விரிவுபடுத்த வேண்டும். உண்மையில் இந்த ஆட்சியாளர்களின் நோக்கம் கல்வியை விற்பனை செய்வதும், அதில் லாபத்தை தேடுவதுமே.
அரசாங்கம் அரச பாடசாலைகளுக்கு பதிலாக தனியார் பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. அப்படியானால் வறுமையான, வசதிகள் குறைந்த பாடசாலைகள் மூடப்படும். இறுதியில் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவதற்காக செலவிடப்படும் எமது பணம் 10, 12 மடங்கு அதிகரிக்கும். அந்த பணத்தை தேடுவதற்கு இன்னும் எம்மை கசக்கி பிழிய வேண்டும். எமது வாழ்விலொன்றும் மிஞ்சப்போவதில்லை. கல்வி, சுகாதாரம் இரண்டையும் விற்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது.
சைட்டம் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது கடந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்திலேயே. இப்படியாக எந்த அரசாங்கமும் கொண்டிருப்பது இந்த கொள்கைகளையே. இதனால் கல்வியை விற்பனை செய்யும், கல்விக்கான நிதியை வெட்டும் கொள்கையினை நாம் தோற்கடிக்க வேண்டும்.
இந்த நிலைமையை பார்த்துக்கொண்டிருப்பதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. நாங்கள் வீதியில் இறங்க வேண்டும். போராட வேண்டும். நாள்தோறும் பாடசாலைகளில் அறவிடப்படும் பணம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றதல்லவா? டியூஷன் வகுப்புகளுக்கு போகாமலும் இருக்க முடியாது. அவற்றின் விலையை பார்க்கும் போது தலை சுற்றுகிறது. பல்கலைக்கழகங்களும் இந்த நிலைமைக்கு உட்படுமானால், பிள்ளைகள் இருவர் உள்ள பெற்றோருக்கு ஒருவருக்கு மாத்திரமே படிப்பிக்க முடியும்.
இந்த அநியாயங்களை இன்னும் பொறுத்துக்கொள்ள முடியாது. பொறுமையாக இருக்க, இருக்க காலில் போட்டு மிதிப்பதையே இந்த ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். இதனை எதிர்க்க எழுவோம்! குரல் கொடுப்போம். பாடசாலைகளில், வேலைத்தளங்களில் இதற்காக மக்கள் கருத்தை, ஆதரவை கட்டியெழுப்புவோம்.
இலவச கல்வியை, இலவச சுகாதாரத்தை காத்திட முன்வாருங்கள். அதற்காக போராடுங்கள்.
கல்வி வியாபார பண்டம் அல்ல. கல்வியின் சம அந்தஸ்திற்காக போராடுவோம்!
மாணவர் மீதான அடக்கு முறையை நிறுத்து! சைட்டத்தை தடை செய்!
பொது மக்களின் பிள்ளைகளின் கல்வியை இல்லாதொழிக்கும் சகல பட்டக்கடைகளையும் தடை செய்!
பாடசாலையில் பணம் அறவிடுவதை நிறுத்து!