முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டத்திற்கு முன்னிலை சோசலிசக் கட்சி முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்தாவது; யுத்தகாலத்தில் சுவீகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மீள அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். ஆனால் யுத்தம் முடிடைந்து பல வருடங்களாகியும் காணி விடுவிப்பானது மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றது. இது தவறான அணுகுமுறையாகும்.
மக்களுக்குரிய காணிகள் அவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். கேப்பாபுலவு மக்கள் விடயத்தில் கொழும்பு அரசு செயற்படும் விதத்தைப் பார்க்கும் போது மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாகத் தெரிகின்றது.
எது எப்படி ஆயினும் கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு உடன் நீதி கிடைக்க வேண்டும். அவர்களின் போராட்டத்திற்கு எமது கட்சி முழு ஆதரவையும் வழங்குகின்றது என்று குறிப்பிட்டார்.