Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழரை தமிழர் ஆண்டால் எல்லாப் பிரச்சனகளும் தீர்ந்து விடும் என்று தமிழின வெறியர்கள் உளறுவார்கள். தமிழரை தமிழர் ஆண்டால் என்ன நடக்குமோ இல்லையோ தமிழரைத் தமிழச்சி ஆண்டால் தமிழ்நாடே இல்லாமல் போய் விடும். மன்னார்குடி கொள்ளைக் கூட்டத்தின் தலைவி சசிகலா மாண்புமிகு மாபியா ஆகினால் மன்னிக்கவும், மாண்புமிகு முதலமைச்சர் ஆகினால் தமிழ்நாடே வரைபடத்தில் இருந்து காணாமல் போய் விடும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர்களை மாண்பு மிகு மாபியா என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களின் கோடிக் கணக்கான சொத்துக்களிற்கு எதாவது கணக்கை பூதக் கண்ணாடி வைத்து தேடினாலும் காட்ட முடியுமா? அல்லது ஜெயலலிதாவின் சொத்து முப்பது ஆயிரம் கோடி என்று சொல்கிறார்களே; அந்த முப்பது ஆயிரம் கோடிக்கு முப்பதிற்கு பக்கத்திலே எத்தனை வட்டம் போட வேண்டும் என்று நமது சிற்றறிவிற்கு தெரிகிறதா? இடைக்கால மாண்புமிகு பன்னீர்செல்வத்திற்கே சொத்துகள் பற் பல கோடிகளாக பல்கிப் பெருகிப் போயிருக்கின்றன என்பது தெரிந்தால் மாபியாக்களே தொழிலை மாற்றி அரசியல்வாதிகள் ஆகி விடுவார்கள்.

இந்த மாபியாக்களின் வரிசையில் மன்னார்குடி கொள்ளைக்கூட்டத் தலை சசிகலா முதல் அமைச்சராக வரக் கூடும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரசியல்வாதிகள் தொடக்கம் பொதுமக்கள் பலரும் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் அதிகாரத்தில் இருந்த அயோக்கியர்களிற்கும், இந்த மாபியா சசிகலாவிற்கும் எதாவது வேறுபாடுகள் இருக்கிறதா? ஒரேயொரு வேறுபாடு தான் இருக்கிறது மற்றவர்கள் பதவிக்கு வந்த பின்பு கொள்ளையடித்தார்கள் என்றால் இந்த மாபியா பதவி எதிலும் இல்லாமலே பயங்கரமாக கொள்ளை அடித்து வைத்திருக்கிறது.

இந்த சசிகலா பொது வாழ்க்கையில் என்ன செய்திருக்கிறது; அரசியலில் அ, ஆ கூடத் தெரியாதே; இதெல்லாம் எப்படி முதலமைச்சர் ஆகலாம் என்று கேட்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கு என்ன தகுதி இருந்தது? தமிழ்ச் சினிமாவில் முகத்திற்கு அரை அடிக்கு பவுடரும், உதட்டிற்கு சிவப்பு சாயமும் பூசிக் கொண்டு முட்டாள்தனமான படங்களில் சலனமே இல்லாமல் ஓடித் திரிந்து கலையைக் கொலை செய்ததற்காக சாகும் வரை முதல் அமைச்சராக தமிழர்கள் நன்றிக் கடன் செலுத்தவில்லையா? தன் லூசுப் படங்களில் கன்னத்தில் ஒரு கறுப்பு மருவை வைத்துக் கொண்டு மாறு வேடத்தில் வருவது போல மூகாம்பிகை அம்மனின் பக்தன்; ஈரோட்டு ராமசாமி, அண்ணாத்துரை வழி வந்த திராவிட இயக்க பகுத்தறிவாளன் என்று இரட்டை வேடத்தில் வந்த போது நாம் விசில் அடித்து மகிழவில்லையா?

ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆரோடு இருந்த தொடர்பிற்காகவே முதல் அமைச்சர் பதவியைக் கொடுத்த தமிழர்கள் சசிகலாவின் தகுதியைப் பற்றிக் கவலைப்படலாமா? பார்ப்பனியத்தின் பல்லைப் பிடுங்கிய தமிழ் மண்ணில் "நான் பாப்பாத்தி தான்" என்று ஊளையிட்ட ஒரு பார்ப்பனிய வெறி பிடித்தவளை முதல் அமைச்சராக மூன்று முறை தெரிவு செய்யவில்லையா? சாராயக் கடைகளை மூடச் சொல்லி போராடிய குழந்தைகள், பெண்களைக் கூட சிறையிட்டவரை "அம்மா" என்று அடி பணியவில்லையா?

தமிழ் மக்களே தங்களது ஆட்சியாளர்களின் தகுதி பற்றிக் கவலை கொள்ளாமல் அயோக்கியர்களைத் தெரிவு செய்யும் போது கடைந்தெடுத்த கயவர்களான அரசியல்வாதிகள் ஏன் அலட்டிக் கொள்ளப் போகிறார்கள்? ஜெயலலிதா கொள்ளை அடித்த பணமும், ஜெயலலிதாவின் நெருக்கத்தை வைத்து மன்னார்குடிக் கும்பல் அடித்த கொள்ளைப் பணமும் சேர்ந்து இருக்கும் போது சட்டசபை உறுப்பினர்கள் சசிகலாவின் காலில் தானே விழுவார்கள்.

மலையகத் தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கிய, அவர்களின் உழைப்பைச் சுரண்டும் இலங்கையின் இரு இனவாதக் கட்சிகளின் கூட்டான மைத்திரி-ரணில் கும்பலை ஆதரித்து அமைச்சராகிய மனோ கணேசன் அண்மையில் உதிர்த்த முத்து ஒன்று இந்தப் பொறுக்கித்தனமான சந்தர்ப்பவாத அரசியலிற்கு ஒரு உதாரணம். "தமிழ்நாட்டில் இருந்து பலர் எழுதுகிறார்கள் என்று, திருமதி சசிகலா நடராஜன் அவர்களை கலாய்த்து நீங்களும் விமர்சிக்காதீர்கள். இலங்கை வாழ் தமிழர்கள் சமூக ஊடகங்களில் அவரை கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்ற பெயரை ஏற்படுத்தி விடாதீர்கள். முதல்வர் என்பது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை. அவர்கள் அதை பார்த்துக்கொள்ளட்டும். நமக்கு யாரோ, எவரோ, அவர் 9ம் திகதிக்கு பிறகு தமிழ்நாட்டு மாநில முதலமைச்சர். அதிகாரப்பூர்வ தமிழக முதல்வரின் ஆதரவு நிலைப்பாடு எமக்கு அவசியம்".

ஆனால் அண்ணன் மனோ கணேசன் அமெரிக்க அரசியலை அலசி ஆராய்கிறார். "வேகம் அதிகரிக்கும் போது விவேகத்தை (ட்ரம்ப்) இழக்கும் அபாயம் ஏற்படலாம். "குற்றப்பிரேரணை ஒன்றின் மூலம் பதவியிழக்கும் அபாயத்தை ட்ரம்ப் எதிர் கொள்ளலாம்". இவை அண்ணன் மனோ கணேசனின் முகநூல் அமெரிக்க அரசியல் ஆய்வுகள். ட்ரம்ப்பைப் பற்றி பேசுபவர் சசிகலாவைப் பற்றி ஏன் தானும் வாய் பொத்தி மற்றவர்களையும் ஏன் பொத்தச் சொல்கிறார்?

ஏனென்றால் "அதிகாரப்பூர்வ தமிழக முதல்வரின் ஆதரவு நிலைப்பாடு எமக்கு அவசியம்" என்று அவர் சொல்கிறார். எமக்கு என்பது அவருக்குத் தான். தமிழ்நாட்டில் அண்ணனிற்கு வியாபாரங்கள், சொத்துக்கள் இருக்கலாம்; அதனால் தான் வாயைப் பொத்துகிறார். அமெரிக்காவில் வியாபாரங்கள் எதுவும் இல்லாததால் வீறு கொண்டு ஜனநாயகக் கடமை ஆற்றுகிறார். அரசியல்வாதிகள் என்னும் அற்பர்கள் எங்கும் எப்போதும் இப்படித் தான் இருப்பார்கள். இலங்கையில் இருக்கும் அண்ணன் மனோ கணேசனே லாபங்களிற்காக இப்படிப் பம்மும் போது தமிழ்நாட்டின் அயோக்கிய கும்பல்கள் அதிகாரங்களிற்கு அடி பணிவதில் அதிசயம் என்ன இருக்கிறது.

சசிகலா முதல் அமைச்சர் ஆனால் காவேரி இருக்காது. வைகை இருக்காது. மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகள் இருக்காது. கடற்கரை எங்கும் இரசாயனக் கழிவுகள் கரை ஒதுங்கும். தஞ்சைப் பெரிய கோவில் "சசி நிலையம்" என்று பெயர் மாற்றப்பட்டு பத்திரப் பதிவு செய்யப்பட்டு இருக்கும். மெரினா கடற்கரையில் உழைப்பாளிகளின் சிலையை உடைத்து நடராசன் என்னும் நாய்க்கு சிலை வைக்கப்படும்.

"தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவன் அயோக்கியன் எனில், தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அர்த்தம்" சாகும் வரை அயோக்கியர்களையும், அயோக்கியத்தனங்களையும் எதிர்த்துப் போராடிய ஒரு ஈரோட்டுக் கிழவன்.