Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நந்தினி கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டன் என்னும் ரவுடி அந்த அபலைப் பெண்ணை காதலிப்பது போல் நடித்து கருத் தரிக்க வைத்திருக்கிறான். வீட்டை விட்டு இந்த ரவுடியைத் தேடிப் போன நந்தினியை மணிகண்டனும் அவனது இந்து முன்னணி காடையர் கூட்டமும் சேர்ந்து பாலியல் வன்முறை செய்து விட்டு வயிற்றைக் கிழித்து நந்தினியைக் கொலை செய்து ஆறு மாத கருவை வெளியே எடுத்திருக்கிறார்கள்.

நந்தினி காணாமல் போன உடனேயே அவளது தாயார் காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருக்கிறார். நந்தினியின் குடும்பம் தந்தையில்லாத ஏழைக் குடும்பம். இந்து மதம் என்னும் கொடிய அமைப்பின் சாதி என்னும் அயோக்கியத்தனத்தின் படி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஏழை சொல்லே அம்பலம் ஏறாது என்னும் போது தாழ்த்தப்பட்ட ஏழைத் தாயின் சொல் எப்படி அம்பலம் ஏறும். அந்த ஏழைத் தாயின் முறைப்பாட்டை தமிழ்நாட்டு காவல் துறையினர் என்னும் அயோக்கியர்கள் காதிலே வாங்காமலே துரத்தி விட்டிருக்கின்றனர்.

நந்தினியின் தோழியான தேவி என்பவர் நந்தினியின் குடும்பத்தினருடன் காவல் நிலையம் சென்று இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டனை நந்தினி காதலித்ததையும், அதன் பின் கருவுற்றதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள மணிகண்டனைக் கேட்ட போது அவன் கூட்டிச் சென்றதையும் சாட்சியமாக அளித்திருக்கின்றார். அந்த சாட்சியத்திற்குப் பிறகும் கொலைகாரன் மணிகண்டனை விசாரித்து விட்டு பிணையில் செல்ல அநுமதி கொடுத்திருக்கிறது அப்பாவிகளை கூட சிறையில் போடும் தமிழ்நாட்டு பொலிசு.

பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற அமைப்புகள் நந்தினி காணாமல் போனதற்கு நீதி கேட்டு போராட தொடங்கிய பின்பும், நந்தினி குடும்பத்தினர் பலமுறை காவல் நிலையம் சென்று முறைப்பாடு செய்த பின்பும் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. மார்கழி மாதம் இருபத்தொன்பதாம் திகதி காணாமல் போன நந்தினியின் உடல் இரண்டு வாரங்களிற்கும் பிறகு தை மாதம் பதின்நான்காம் திகதி அன்று தான் காவல்துறை கண்டெடுக்கிறது. இருபது நாட்களிற்குப் பிறகு தான் கொலைகாரன் மணிகண்டனை கைது செய்திருக்கிறார்கள்.

இந்து முன்னணி, ஆர். எஸ்.எஸ் என்பன மதவெறிக் கும்பல்கள் மட்டுமல்ல. அவைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் எல்லாம் காடையர் கூட்டங்கள். நந்தினியின் கிராமமான சிறுகடம்பூர் இருக்கும் அரியலூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவனான ராஜசேகரன் என்பவன் ஒரு காடையன். அவன் மணிகண்டன் போன்ற ரவுடிகளை வைத்துக் கொண்டு தான் சிறுபான்மை மதத்தவரை அச்சுறுத்துவது, மதவெறியர்களிற்கு எதிரான திராவிடர் கழகம் மற்றும் பொதுவுடமை அமைப்பினருக்கு கொலை மிரட்டல் விடுவது போன்ற காடைத்தனங்களை செய்து வருகிறான். இந்தக் காடைத்தனங்கள் தந்த வெறியினால் தான் மணிகண்டன் என்னும் மிருகம் நந்தினியை படுகொலை செய்திருக்கிறது.

நந்தினி ஒரு தாழ்த்தப்பட்ட சுமுகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் என்பதினால் ஊடகங்களோ, சமுகப் பிரபலங்களோ அவளின் கொலையை கண்டு கொள்ளவில்லை. அதை விடக் கொடுமையாக நிர்மலா பெரியசாமி என்னும் அ.தி.மு.க வின் அடிமை "நந்தினியின் வளர்ப்பு சரியில்லை" என்று தன் நாற வாயைத் திறந்து ஊளையிட்டிருக்கிறது. ஜெயலலிதா, சசிகலா என்னும் "மாதர் குல மாணிக்கங்களின்" காலை நக்கும் இந்த அற்பம் வளர்ப்பைப் பற்றிப் குரைக்கிறது. நந்தினியின் வளர்ப்பைப் பற்றி சொன்னது கொலைகாரன் மணிகண்டனின் வளர்ப்பைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதில் இருக்கிறது தமிழ்ச் சமுதாயத்தில் ஊறிப் போயிருக்கும் பெண்ணடிமைத்தனம்.

மதவாதிகள், இனவாதிகள், சாதிவெறியர்கள் என்பவர்கள் கொலைகாரர்கள், மக்கள் விரோதிகள் என்பதைத் தான் நந்தினியின் கொலை நமக்கு முகத்தில் அறைந்து சொல்கிறது. ஒரு தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த அபலை ஏழைப்பெண் என்பதற்காக கேட்பார் யாருமில்லை என்ற ஆணவத்தோடு கொலை செய்த காடையன் மணிகண்டனையும், அவனிற்கு அந்த ஆணவத்தைக் கொடுத்த அரியலூர் இந்து முன்னணிக் கும்பலையும், அவர்களிற்கு துணை நின்ற காவல்துறை கயவர்களையும் கூண்டில் ஏற்ற தமிழ் நாட்டின் முற்போக்கு சக்திகள் தொடர்ந்து போராட வேண்டும்.

மதவாதிகள் என்னும் மடையர்கள் பரப்பும் பெண்ணடிமைத்தனங்களை மண்ணோடு மண்ணாகப் புதைக்கும் போதே ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானம் என்னும் சமத்துவம் மிக்க சமுதாயம் மலரும். கோணேஸ்வரி, கிரிசாந்தி, இசைப்பிரியா, வித்தியா, பிரேமாவதி மன்னம்பெரி, நந்தினி போன்ற நம் சகோதரிகளிற்கு நாம் செய்யும் அஞ்சலிகளாக அது மலரும்.