jan_07.jpg

ஒவ்வொரு "இந்து'க் கோயிலுமே, சாதிப் பாகுபாடுகள் நிலவுவதைப் பறை சாற்றும் மையங்களாகத் தான் இருந்து வருகின்றன. ஒரிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டத்திலுள்ள கேரேதகடா கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம், இந்த உண்மையை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.

 

இந்தக் கிராமத்தில் உள்ள ஜகந்நாதர் ஆலயத்தினுள் தாழ்த்தப்பட்டோர் சென்று இறைவனை வழிபடுவதைத் தடை செய்யும் தீண்டாமைக் கொடுமை, கடந்த 300 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் சுற்றுப்புறச் சுவரில் போடப்பட்டிருக்கும் ஒன்பது துளைகளின் வழியாகப் பார்த்துதான் இறைவனை வழிபட வேண்டிய கட்டாயத்தில் தாழ்த்தப்பட்டோர் வைக்கப்பட்டிருந்தனர்.

 

இந்நிலையில், ஓராண்டுக்கு முன்பு நவ. 2005இல் நான்கு தாழ்த்தப்பட்ட பெண்கள் இத்தீண்டாமையை மீறி கோவிலுக்குள் நுழைந்ததால், அப்பெண்கள் மேல்சாதி வெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டுத் துரத்தப்பட்டனர். இத்தாக்குதலையடுத்து, அம்பேத்கர் லோகியா விசார் மன்ச் என்ற அமைப்பு ஜகந்நாதர் கோயிலில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராக ஒரிசா உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து, ஆலய நுழைவுக்கு ஆதரவாகத் தீர்ப்புப் பெற்றது.

 

இத்தீர்ப்பு வழக்கம் போலவே ஒரு கண்துடைப்பு நாடகமாக அதிகார வர்க்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அக்கிராமத்தைச் சேர்ந்த நான்கு தாழ்த்தப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த டிச. 14 அன்று அவர்களைப் பாதுகாப்போடு கோவிலுக்குள் அழைத்துச் சென்று, இப்பிரச்சினைக்கு மங்களம் பாடியது, அதிகார வர்க்கம். எனினும், யாருமே எதிர்பாராத வண்ணம், அக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் கோவிலுக்குள் நுழைந்து, தங்களின் உரிமையை நிலைநாட்டினர்.

 

இந்தக் கலகத்தால் ஆடிப் போன பார்ப்பன பூசாரிகள், உடனடியாக ஆலயத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். மேல்சாதி வெறியர்கள் சாதிக் கூட்டம் போட்டு, தீண்டாமையை இன்னும் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தீர்மானம் போட்டனர். ஜகந்நாதர் கோவில் தீட்டுப்பட்டு விட்டதால், சிறப்பு பூஜை செய்து, ஆலயத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றது பார்ப்பனக் கும்பல். தாழ்த்தப்பட்டோரின் ஆலய நுழைவை எதிர்க்கும் முகமாக சுற்று வட்டார கிராமக் கோவில்களில் பூசைகள் நிறுத்தப்பட்டன. மேலும், உண்ணாவிரதம், ஊர்வலம் என நடத்தி, மேல்சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைப் பீதியில் ஆழ்த்தினர்.

 

இப்படி வெளிப்படையாகவே தீண்டாமையைக் கக்கிய மேல்சாதி வெறியர்கள் அனைவரையுமே, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், அரசோ ஆதிக்க சாதி வெறியர்களைக் காப்பாற்றும் முகமாக சமாதானக் கூட்டம் போட்டது. இக்கூட்டத்தில், தாழ்த்தப்பட்டோர் இக் கோவிலுக்குள் நுழைவதை இனி தடை செய்ய மாட்டோம் என மேல்சாதிவெறியர்கள் ஒத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சமாதானக் கூட்டத்தின் இந்த முடிவு ஒரு நாள் கூத்தா, இல்லையா என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.

 

கேரேதகடா சம்பவம் விதிவிலக்கானதல்ல; நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகும் கூட, கண்டதேவி கோவில் தேரின் வடத்தைத் தொடுவதற்குத் தாழ்த்தப்பட்டோரை, மேல்சாதி வெறியர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். கர்நாடகாவில் உள்ள பதனவாலு கிராமத் தாழ்த்தப்பட்டோர் ஆலயம் நுழையும் உரிமை கேட்டுப் போராடியதால், மேல்சாதி வெறியர்களால் தாக்கப்பட்டு, மூன்று பேர் கொல்லப்பட்டனர். இவை வெளியுலகுக்குத் தெரிந்த சம்பவங்கள். கிராமங்களுக்குள்ளேயே புதையுண்டு போனவை எத்தனையோ?

 

""உனக்குக் கடவுள், மதம் வேண்டும் என்றால், உன்னை இழிவுபடுத்தும் இந்து மதத்தில் இருக்காதே'' என்றார், பெரியார். அம்பேத்கர் இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தைத் தழுவினார். தங்களை ஒதுக்கி வைக்கும் பார்ப்பன சநாதன "இந்து' மதத்தை, தாழ்த்தப்பட்டோர் புறக்கணிப்பதை தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களுள் ஒன்றாகப் பயன்படுத்த முடியும். இப்புறக்கணிப்பை, மத உரிமை இழப்பாகப் பார்க்க முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு தீண்டாமைத் தாக்குதலும், ""இந்து'' என்பது ஒரு மதமல்ல. அதுவொரு சாதிப்படி நிலை அமைப்பு என்பதைத்தான் திரும்ப திரும்ப எடுத்துக்காட்டுகிறது!