Language Selection

புதிய ஜனநாயகம் 2007

jan_07.jpg

ஒரு பெண் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவள் ஒரு பெண்ணாக இருக்கிறாள் என்பதற்காகவே அவளுக்கு எதிராக வன்முறைகிரிமினல் குற்றம் ஏவிவிடப்படுகிறது. பெண் அவள் கருவிலிருக்கும்போதே படுகொலை செய்யப்படுகிறாள். பெண் ஒரு உயிரற்ற பொருளைப் போல விற்கப்படுகிறாள். பெண் ஒரு

 ஆட்டின், ஒரு மாட்டின் சதையை வாங்குவதைப் போல விலைக்கு வாங்கப்படுகிறாள். பெண் அவள் நிர்வாணப்படுத்தப் பட்டு கலையின் பெயரால் வியாபாரம் செய்யப்படுகிறாள். சாதி, மத, இனச் சண்டையா முதல் பலி, பெரும்பலி பெண்தான்!

 

""நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகிரிமினல் குற்றங்கள் மேலும் மேலும் பெருகி வருகின்றன. பல வழக்குகள் விசாரணைக்குட்படுத்தப்படுவதுமில்லை. வெளியே சொல்லப்படுவதுமில்லை'' என்கிறார் பெண்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினரான நிர்மலா வெங்கடேசு.

 

இங்கே ""பெண்களுக்கு எதிரான வன்முறைகிரிமினல் குற்றங்கள்'' என்று குறிப்பிடப்படுவன, வீட்டுக்குள்ளேயும், பணியிடங்கள் மற்றும் பொது இடங்கள் உட்பட வெளியேயும் மற்றவர் கண்ணுக்குப் புலப்படக் கூடியவை தாம். இவைதவிர வெளிப்படையாக கண்ணுக்குப் புலப்படாத கொடுமைகள் ஏராளமாகப் பணியிடங்களிலும், குடும்பத்திலும் பெண்களுக்கு எதிராக அன்றாடம் இழைக்கப்படுகின்றன.

 

தமிழகத்தில் மட்டும் கடந்த 2005ஆம் ஆண்டில் 571 பாலியல் வன்முறைகள், 783 கடத்தல்கள், 215 வரதட்சிணைக் கொலைகள், 1650 குடும்ப வன்முறைக் குற்றங்கள் நடந்திருப்பதாக தேசியக் குற்றப்பிரிவு ஆணையம் தெரிவிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதில் தமிழகம் 12வது இடம் வகிக்கிறது. நாடு முழுவதும் எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு எதிரான கிரிமினல் குற்றங்கள் என்று ஆண்டுதோறும் 1.5 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

 

அவற்றில் பெரும்பாலானவற்றில் பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை. சமூகத்தில் மட்டுமல்ல, போலீசு நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் ஆணாதிக்கம் நிலவுவதுதான் இதற்குக் காரணம். பிரபலமான பல பாலியல் வன்முறை வழக்குகளில், குற்றவாளிகளை விடுதலை செய்து "நீதிபதிகள்' தெரிவித்த கருத்துக்கள் வெட்கக்கேடான ஆணாதிக்க வெறியை வெளிப்படுத்துகின்றன. ""பாதிக்கப்பட்ட பெண்களின் நடைஉடைதான் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் உணர்வைத் தூண்டிவிட்டன'' என்றும் ""மேல்சாதிக்காரர், தாழ்ந்த சாதிப் பெண்ணைத் தீண்டி பாலியல் உறவு கொண்டிருக்க மாட்டார்கள்'' என்றும் அருவெறுக்கத்தக்க முறையில் தீர்ப்புக் கூறப்பட்ட வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட வக்கிரமான சிந்தனை கொண்டவர்கள் நீதிபதிகளாக உள்ள நாட்டில் பெண்ணுரிமை நீதி என்பது எல்லாம் கானல்நீரே!

 

நாட்டின் தலைநகர் புதுதில்லியில், தன் ஆசைக்கு இணங்க மறுத்த சட்டக்கல்லூரி மாணவி பிரியதர்சினி மட்டூவை அதே கல்லூரியின் மூத்த மாணவனும், மாநில இணை போலீசு ஆணையரின் மகனுமான சந்தோஷ் குமார் சிங் என்பவன், அவளது வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்முறை செய்து கோரமான முறையில் கொன்றான். அதேநகரில், விடுதி விருந்து முடிந்து, சாராய விற்பனை முடிந்த பிறகு, சாராயம் பரிமாற மறுத்த ""மாடல்'' பெண் ஜெசிகாலால் என்பவரை சுட்டுக் கொன்றான், அரியானா அமைச்சரின் தறுதலைப் பிள்ளை மனுசர்மா. செய்தி ஊடகத்தில் பிரபலமாக அடிபட்ட இந்த இரு வழக்குகளிலுமே, சாட்சியங்களைப் போலீசும், சி.பி.ஐ.யும் மூடி மறைத்ததை அறிந்திருந்தும் தில்லி அமர்வு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்தது. செய்தி ஊடகம் மற்றும் அறிவுஜீவிகள் அலறிக் கூச்சல் போட்ட பிறகு, தில்லி உச்சநீதி மன்றத்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். நீதித்துறையின் மீதே நடுத்தர வர்க்கம் நம்பிக்கை இழந்துவிடும் என்ற பீதியில்தான் இத்தகைய தீர்ப்புகள் வந்தன. நாடே அறிந்த பிரபலமான வழக்குகளுக்கே இதுதான் கதி என்கிறபோது, சாதாரண அபலைப் பெண்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம், பெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்புச் சட்டங்கள், பெண்கள் பணிப் பாதுகாப்புச் சட்டங்கள், இந்தியத் தண்டனை சட்டம்


498 அவின் கீழ் பல பிரிவுகள் என்று பெண்களுக்காகவே பல சட்டங்கள் ஏற்கெனவே இருந்தும், இந்த நாட்டில் பெண்களின் நிலைமை இன்னமும் அதலபாதாளத்தில்தான் கிடக்கிறது.

 

பெண்கள் மீதான கொடுமைகளைத் தடுப்பதற்கானவை என்று கொண்டு வரப்பட்ட சட்டங்களே பெண்களை மேலும் வதைப்பனவாக உள்ளன. அதனாலேயே தங்களுக்கு எதிராகக் கொடுமைகள் இழைக்கப்படும்போதெல்லாம், சட்டத்தின் துணை கொண்டு நீதி நியாயத்தை பெற்றுவிட முடியும் என்று பெரும்பாலான பெண்கள் நம்புவதில்லை. பல குற்றங்களையும் வெளியே சொல்லாது அவர்கள் தாங்களே சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். அதற்கு முன்பாக குற்றங்களுக்கு இலக்கான பெண்களையே இழிவாகக் கருதும் சமூக நோக்கு அவர்களை ஒடுக்கி வைத்திருக்கிறது.

 

அதையும் மீறி, துணிவு கொண்டு சட்டம், போலீசு, நீதித்துறையை அணுகினால், விட்டால் போதும் என்று தாங்களே வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும் வகையில், மேலும் பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, பாலியல் வன்முறைக்குப் பலியான பெண்கள் அருவெறுக்கத்தக்க வக்கிரமான பல சோதனைகளையும் கேள்விகளையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. விபச்சாரத்திற்குத் தள்ளப்படும் பெண்களைத் தண்டிக்கும் வகையில்தான் விபச்சாரத் தடுப்புச் சட்டம் உள்ளது. பெண்களோடு விபச்சாரத்தில் ஈடுபடும், ஈடுபடவைக்கும் ஆண்கள் தண்டிக்கப்படுவதில்லை. பாலியல் வன்முறைக்குப் பலியாகும் பெண்கள் மீது விபச்சாரப் பட்டம் கட்டி குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வது; தப்பித்துக் கொள்ள எத்தணிப்பது பெரும்பாலான வழக்குகளில் வழக்கமாக உள்ளது. உச்சநீதி மன்றத்தின் மூத்த பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம்ஜெத் மலானி, ஜெசிகா லால் கொலை வழக்கில் இந்தக் கோணத்தில் வாதாடித்தான் குற்றவாளிக்கு விடுதலை வாங்கித்தர எத்தணித்தார்.

 

பெண்கள் மீதான கொடுமைகளைத் தடுப்பதற்கானவை என்று சில சட்டங்கள் இருப்பதைப் போலவே, அவற்றின் நோக்கங்களை முறியடிக்கும் வகையில் வேறு பிற சட்டங்கள் உள்ளன. முக்கியமாக, இந்த நாட்டின் மண உறவு சட்டங்கள் எல்லாமே, இந்து திருமணச் சட்டம், இசுலாமியத் திருமணச் சட்டம் (ஷரியத்), மற்றும் கிறித்துவத் திருமணச் சட்டம் என்று மத ரீதியிலானவையாகவே உள்ளன. மண உறவுகளில் பெண்களை அடிமைப்ப டுத்தி அநீதி அளிக்கும் வகையிலே இந்தச் சட்டங்கள் உள்ளன. மதரீதியிலான மணஉறவுச் சட்டங்களை இரத்து செய்வதற்குப் பதில், அவற்றோடு பொருந்தாத வகையில் சில கண்துடைப்பு, ""உரிமை பாதுகாப்பு''ச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

 

1960களில் கொண்டு வரப்பட்ட வரதட்சணைத் தடுப்புச் சட்டமும், 1980களில் கொண்டு வரப்பட்ட வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டமும், 2005இல் கொண்டு வரப்பட்ட இந்து பரம்பரை சொத்துரிமைச் சட்டமும் இத்தகையவைதாம். இந்து திருமணச் சட்டமும், இசுலாமிய (ஷரியத்) திருமணச் சட்டமும் இப்புதிய சட்டங்களைச் செயல்படவிடாமல் தடுத்து விடுகின்றன. மணவாழ்க்கை உரிமை கோரும் சட்டப்பிரிவின் கீழ் ஆந்திராவிலிருந்து ஒரு ""மன நோயாளி'' பிரபல நடிகைகள் சிறீதேவியையும் ஜெயப்பிரதாவையும் வழக்குப் போட்டுத் தொல்லைப்படுத்திய கேலிக் கூத்தையும் பார்த்திருக்கிறோம். இந்த வழக்குகளில் இருந்து பணபலம், அரசியல் செல்வாக்கை வைத்து அந்த நடிகைகள் தப்பித்துக் கொள்ள முடிந்தது. ஆனால், சாதாரண அபலைப் பெண்களால் முடியுமா? அதுவும் குடும்ப வழக்கு மன்றங்களும், அனைத்து மகளிர் போலீசு நிலையங்களும் கட்டைப் பஞ்சாயத்துக்களாக நடத்தப்படும்போது, மண வாழ்க்கை உரிமை கோரும் சட்டப்பிரிவுகள் பெண்களை வீழ்த்துவதற்கான ஆயுதங்களாகவே உள்ளன.

 

பெண்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் ஏற்கெனவே உள்ள சட்டங்கள் போதாது என்று கருதும் தேசிய மகளிர் ஆணையமும், வேறு பல பெண்கள் அமைப்புகளும் மேலும் சில சட்டங்களும் ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று கோருகின்றன.

 

""தற்போது ஆணையத்தின் முன்பு, 13,000 வழக்குகள் உள்ளன; அவற்றில் பெரும்பாலானவை குடும்ப வன்முறைகள் சம்பந்தப்பட்டவை. இவைதவிர, வேலையிடங்களில் பாலியல் கொடுமைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மின்னணுவியல், தகவல் தொழில் நுட்பம், உணவு பதனிடுதல், விவசாயம் மற்றும் துணி ஆலைத் தொழில்கள் போன்றவைகளில் தகுந்த தொழிலாளர் சட்டங்களும், சமூகப் பாதுகாப்புகளும் செய்யப்பட வேண்டும். கால் சென்டர் ஊழியர்களின் பாதுகாப்புக் குறித்து அரசாங்கமும் கூட்டுப்பங்குக் கழகங்களும் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்கிறார், நிர்மலா வெங்கடேசு.

 

நீண்ட நாள் இழுத்தடிப்பிற்குப் பிறகு கடந்த அக்டோபர் 25ஆம் நாளிலிருந்து குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டம் என்று புதிதாக ஒரு சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. இது இதுவரை இல்லாத மாபெரும் ""புரட்சிச் சட்டம்'' என்று போலி கம்யூனிஸ்டுகள் முதல் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வரை போலி முற்போக்குகள் குதூகலிக்கின்றன. அதேவேளையில் பணியிடங்களில் பாலியல் கொடுமைகள் தொல்லைகளைத் தடுப்பதற்கான மேலும் ஒரு சட்டம் கொண்டு வரும்படி மேற்படி அமைப்புகள் கோருகின்றன.

 

""மண உறவுகளிலும், குடும்பங்களிலும் உள்ளுறையும் அந்தரங்க விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையில் இதுவரை எந்தச் சட்டமும் வரவில்லை. இதுவரையிலான சட்டங்கள் எல்லாம் வீட்டுக் கதவுவரை போய் நின்றுவிட்டன. இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் வீட்டுக்குள்ளேயே புகுந்து, பெண்களுக்கு எதிரான இரகசியமான, உடல் ரீதியிலான கொடுமைகளை மட்டுமல்ல; மனரீதியிலான துன்புறுத்தல்களையும் குற்றமாகக் கருதித் தண்டிக்கிறது'' என்று போலி கம்யூனிஸ்டுகளும் போலி முற்போக்குகளும் வரவேற்கின்றனர்.

 

""இந்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள பெண்கள் மீதான குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் முறைப்படி மணம் செய்து கொண்ட மனைவியை மட்டுமல்லாது, திருமணம் செய்து கொள்ளாது இணைந்து வாழும் பெண்ணுக்கும், விதவைகள், சகோதரிகள், தாய்மார்களுக்கும் கூட ஆண்களின் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு வழங்குவதாகக் கூறப்படுகிறது. மனைவியை அடித்துத் துன்புறுத்துவது, வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவது, பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்துவது, ஆபாசப் படம் பார்க்கக் கட்டாயப்படுத்துவது ஆகியவை குற்றமாகக் கருதப்படுகிறது. மனைவியோ, இணைந்து வாழும் பெண்ணோ வேலை செய்வதற்குத் தடை ஏற்படுத்துவது குற்றமாகக் கருதப்படும். குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுபவர், பாதிக்கப்பட்ட பெண் பணிபுரியும் இடம், வசிக்குமிடம், அடிக்கடி நடமாடும் இடங்களுக்குச் செல்வது கூடத் தடை செய்யப்படும். பாதிக்கப்பட்ட பெண்களின் வசிப்பிடம்பொருளாதார உதவிக்கும் சட்டம் வழிவகுக்கும்'' என்கிறார்கள்.

 

இதுவரை பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக இந்தியக் கிரிமினல் சட்டம் 498அ பிரிவின் கீழ் போலீசிடம் மட்டுமே புகார் கொடுத்து, கிரிமினல் குற்றத் தடுப்பு தண்டனை நடவடிக்கை எடுக்க முடியும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டுகள் சிறையும் அபராதத் தொகையும் அதிகபட்சமாக விதிக்க முடியும். ஆனால் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் ஒரு சிவில் சட்டம்தான். இதன்படி பாதிக்கப்படும் பெண் கீழ்நிலை நடுவர் நீதிமன்றத்திலோ, போலீசிடமோ மட்டுமின்றி இச்சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் அமலாக்க அதிகாரிகளிடமும், அங்கீகரிக்கப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் புகார் கொடுத்து நீதியும், நிவாரணமும் பெறமுடியும்.

 

498அ பிரிவின் கீழ் கணவனுக்கு எதிராகக் கிரிமினல் வழக்குத் தொடுத்தல், மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பின்றிப் போய்விடும் என்று அஞ்சுவதால், பல பெண்கள் புகார் கொடுக்க இவ்வளவு காலமும் கொடுமையைகுடும்ப வன்முறையைச் சகித்துக் கொண்டிருந்தனர். பெண்களுக்கு எதிரான வன்முறையையும் தடுத்திட வேண்டும்; அதேசமயம் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பும் இருக்கவேண்டும்; அதற்கு இந்த குடும்ப வன்முறைத் தடுப்பு சிவில் சட்டம் உதவும் என்று தொண்டு நிறுவனங்களும், பெண்களுக்கான வழக்கறிஞர் அமைப்புகளும் வாதிட்டு வந்தனர். இப்போது அது கிட்டிவிட்டதாக வரவேற்கின்றனர்.

 

ஆணாதிக்க குடும்ப சமூக அமைப்புமுறையும், சட்ட நீதி அமலாக்க நிறுவனங்களும் நீடிக்கும்போது இப்படிப்பட்ட சீர்திருத்தச் சட்டங்கள் குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் கொண்டு வந்துவிட முடியாது. ஆனால், நமது நாட்டின் பாரம்பரியத்தையும் குடும்ப உறவுகளையும் சிதைத்து விடும் என்று இந்தியக் குடும்ப ஃபவுண்டேசன் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. பாசிச அமைப்புகளும் வாதிடுகின்றனர். பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இந்துத்துவ ஆணாதிக்க சிவில் சட்டத்தைத் திணிப்பதற்காக எப்போதும் முயன்று வரும் அக்கும்பல், தற்போதுள்ள மதரீதியிலான திருமணச் சட்டத்தைப் பாதிக்கும் சிறு சிறு சீர்திருத்தங்களையும், கிறித்துவமயமாக்கும் முயற்சி என்று எதிர்க்கின்றனர். அருண் ஜெட்லி, சோ, குருமூர்த்தி போன்ற இந்து சனாதன ஆணாதிக்கவாதிகள், இக்குடும்ப வன்முறைச் சட்டத்தைப் பெண்கள் ஆண்களுக்கு எதிராக கேடாகப் பயன்படுத்தி விடுவார்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்.

 

""இம்மாதிரியான குற்றங்களுக்கான காரணம் மிகையான மக்கட்தொகை, வேலையின்மை, சட்டங்கள் அமலாக்கப்படுவது குறித்துப் போதிய அறிவின்மை மற்றும் விசாரணைகள் நடவடிக்கைகள் மந்த கதியில் செய்யப்படுவது ஆகியவைதாம்'' என்று தேசிய மகளிர் ஆணையம் கூறுகிறது. இதுவே மேலோட்டமான, முதலாளிய நோக்கிலான கண்ணோட்டம்தான். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சி எதுவுமின்றி வெறுமனே புண்ணுக்குப் புணுகு தடவுவதுபோல குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

 

தற்போதுள்ள ஆணாதிக்க இந்து, இசுலாமிய (ஷரியத்), கிறித்தவ மதவாத அடிப்படையிலான திருமண சட்டங்களை விட, ஐரோப்பிய முதலாளிய சிவில் சட்டம் ஓரளவு மேலானதுதான். ஆனால், அரசியல் புரட்சியைத் தொடர்ந்து வரும் சமூக, பண்பாட்டு, பொருளாதாரப் புரட்சி மாற்றங்களின்றி பெண்கள் விடுதலை பெறுவது, உரிமைகளும் சமத்துவமும் பெறுவது சாத்தியமே இல்லை.


(தொடரும்)